ஐ அம் பேக்...

”இந்த சரித்திரம் நமக்கு சொல்லிக் குடுத்ததைப் பாத்தோம்ன்னா, நாம வாழ்றதுக்காக என்ன வேணும்னாலும் செய்யலாம், எத்தனைப் பேரை வேணும்னாலும் கொல்லலாம். Can… can....” - இது ஒரு திரைப்பட வசனம்.

தமிழ்நாட்டு மக்களின் மனநிலை மேலே படித்த வசனத்துடன் மிக அருகாமையில் ஒத்துப்போகிறது என்றால் மிகையல்ல என்றே நினைக்கிறேன். இந்திய தேர்தலையும், அதன் முடிவுகளையும் பற்றித் துளிகூட கவலையில்லாமலே தனது நாட்களை நகர்த்துகிறார்கள். மத்திய அமைச்சர் ப. சி யின், 100 சி + 400 சி வெற்றியைக்கூட சந்தோசமாகப் பேசி சிலேகித்துத் தான் போனார்கள்.

அருகிலிருக்கும் நாட்டில் நடக்கும் அபாயகரமான அழிவுகளை பெரும்பாலான ஊடகங்கள் உண்மையாக வெளியிடவில்லை. அப்படி வெளியிட்ட ஊடகங்களும் மக்களை உண்மையில் போய் சேரவில்லை. தகவல் கிடைத்த மக்களும் அழிவிற்காக கவலைப்படவும் இல்லை என்பது தேர்தல் முடிவு வெளிச்சம் போட்டு காட்டிவிட்டன.

அடுத்ததாக சாலைப் போக்குவரத்தில் நம் மக்களின் நாசகர நடவடிக்கைகளைப் பார்த்தால் உள்ளம் பதறிப்போகிறது. வெளியூர் பயணங்களுக்கு, பெரும்பாலும் நான் தேர்ந்தெடுத்து கொண்டது அரசு போக்குவரத்து கழக பேருந்துகளையே. ஏனெனில், அப்பேருந்துகளில் வேகம் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளதால் 50-60 கிமீ வேகத்திலேயே பாதுகாப்பாக பயணிக்கின்றன. எல்லோருக்கு அதுதான் தேவையானாலும், உடன் பயணித்தவர்கள் ஒத்துக்கொள்ளவில்லை, அரசு பேருந்து ஓட்டுனர்களை திட்டி தீர்க்கிறார்கள்.

கடைசியாக ஊர் திரும்ப சுமோ காரெடுத்து விமான நிலையம் நோக்கி வரும்வழியில் சுமோ டிரைவர் இடது காலை மடித்து வைத்துக்கொண்டு ஒற்றைக்கால் கிளட்ச்சை பயன்படுத்தாமலேயே 80-120 கிமீ வேகத்தில் வண்டியோட்டினார். அவரை இரண்டு கால்களிலும் வண்டியோட்டச் செய்ய ’கால்’மணி நேரம் மண்டையைக் கழுவ வேண்டியிருந்தது.

இந்த மாதிரியான சம்பவங்களை தொகுத்து மொத்தமாகப் பார்க்கையில், மக்களின் மன ஓட்டத்தை மிக நுட்பமாக கவனித்தே இந்த வசனத்தை எழுதி, படித்து பயன்படுத்தியுள்ளனர். ஆனால் இந்த ஆபத்தான அட்வன்சரிஸ்ட் வாழ்க்கை வாழ்ந்து வயதாகி மடிந்தாலும், பிணத்தைப் புதைக்கையில் போட்டிருக்கும் துணி புதிதாக இருந்தால் அதைக் கிழித்தே புதைப்பார்கள் என்பதை மறந்துவிடுகிறோம். போகும் போது நல்ல துணியோடு கூட போக முடியாத போது தேவையா?, இந்த வீணான அட்வன்சர் வாழ்க்கை?

 
©2009 அப்பாவி | by TNB