இப்ப மெரட்டு பார்க்கலாம்.

மிகச்சமீபத்தில் ஆறுமாதங்களுக்கு முன் சொந்த ஊருக்குப் போயிருந்த போது நடந்த ஒரு சுவையான நிகழ்ச்சி இது.

அவர் வேணு மாமா. எனது வீட்டின் சுற்றிலும் அவர்தம் சொந்தங்களோடு வசித்து வருபவர். என் முன்னோர் என்பது வருடங்களுக்கு முன் அவர்களுக்கு சொந்தமான ஒரு வீட்டை விலைக்கு வாங்கி குடியிருந்து வருகிறோம், எண்பது வருடங்களாக. இரத்த சொந்தமில்லை, அனால் குடும்ப அளவில் உறவு முறை சொல்லி பழகும் அளவுக்கு நெருக்கம்.

சின்ன வயதில் தெருவளவுக்கு நானொரு சண்டியர். அம்மாவால் அடித்தோ, மிரட்டியோ, கொஞ்சியோ பணியவைக்க முடியாது. அதென்னமோ அம்மாவின் மிரட்டல்கள் எல்லாம் பாடல்களாவும், அடிகளெல்லாம் உடம்பை இதமாக பிடித்து விட்டது போலவே இருக்கும்.

சாதாரணமாகவே எட்டடி பாயும் புலிக்குட்டி, பாட்டும் – மிதமான பிடித்துவிடுதலும் நடந்தால் பதினாறடியை மிகச் சாதாரணமாகத் தாவிக்காட்டுமே, அதுதான் நான். அம்மாதிரியான சூழ்நிலையின் எனதம்மாவுக்கு உதவுவது வேணுமாமா தான்.



அவரின் வீட்டு வாசலில் தச்சுவேலை பார்த்துக் கொண்டிருக்கும் வேணுமாமாவிடம் என்னைத்தூக்கிக் கொண்டு போய் பஞ்சாயத்தை அம்மா ஆரம்பித்ததும், அவர் செய்து கொண்டிருக்கும் வேலையை போட்டுவிட்டு என்னை அப்படியே அள்ளிக் கொள்வார்.

பாசத்தாலல்ல, பயங்காட்ட. முதலில் அவரின் வைத்தியம் ஆட்காட்டி விரலை கத்திபோல் நீட்டி, “வயித்தைக் காட்டு குடலை எடுக்குறேன்” என ஆரம்பிப்பார். நான் ஓடி அம்மாவின் பின் ஒளிந்தாலும் விடாமல் துரத்தி, தூக்கி மீண்டும் மிரட்டி “சொன்ன பேச்சை கேக்குறயா? இல்லை குடலை எடுக்கட்டா?” என மிரட்டுவார். ஆனாலும் நான் உடலை முறுக்கி அவரிடமிருந்து தப்பிக்கத்தான் பார்ப்பேனே ஒழிந்து ”சொன்ன பேச்சை கேட்கிறேன்” என ஒப்புதல் வாக்குமூலம் மட்டும் தரமாட்டேன்.

அடுத்ததாக, அப்படியே தூக்கி குட்டையான அவரின் வீட்டு ஓட்டின் மேல் உட்கார வைத்துவிடுவார். ஐந்தடி உயரமேயானாலும் அந்த வயதை பயங்கொள்ள வைக்க அது போதுமே. அதனால பயத்தால் வாயில் அழுகையும், கண்ணில் நீர் எட்டிப்பார்க்கும் போதும் அவரின் கேள்வியும், எனது பதிலும் சப்பாணியைப் போலவே இருக்குமே தவிர “சொன்ன பேச்சை கேக்குறேன்” என தோல்வியை அடையமாட்டேனாக்கும்.

இது அவரின் தன்மானத்திற்கும் அந்த தெருவிலிருக்கும் அத்தனை குழந்தைகளை அவர்களின் அம்மாக்களுக்காக ”ஒட்டு மொத்தமான பூச்சாண்டி காட்டும் கௌரவ”த்திற்கும் இழுக்காக மாறிவிடும் போல இருப்பதால் தனது பிரம்மாஸ்திரத்தை எடுக்க எத்தனிப்பார். அது.,

வீட்டின் வடக்குப்புறமிருக்கும் இருபதடி ஆழமிருக்கும் தண்ணியில்லாத மொட்டைக்கேணிக்கு தூக்கிச் சென்று அவரின் இடுப்புயர கைப்பிடிக்கும் உள்ளே, கேணிக்குள் என்னை நீட்டி “இப்ப சொல், சொன்ன பேச்சை கேக்குறயா? இல்லையா?” என மிரட்டிக் கேட்ப்பார். அழுகையோடு, பயம் உச்சத்தை எட்டுவதால் கையை, காலை உதறி அழுது கண்ணீர் விட்டாலும் வாயிலிருந்து ”கேக்குறேன்” என்ற வார்த்தை மட்டும் வராது. ஆனாலும் அவரும் விடமாட்டார். அப்படியே வளைந்து கேணிக்குள் என்னை இறக்கி ”இப்ப என்ன சொல்ற?” எனக் கேப்பார். கண்ணுக்கு அவரைத் தவிர ஆகாசம் மட்டும் கொஞ்சமாய் தெரியும் கொடூர சூழல் அது. என்ன உதறினாலும், அழுதாலும் சரி விடமாட்டார். வானமே பாதியாகிப் போச்சு மானத்துக்கென்ன, ”சரி, அம்மா சொல்றதைக் கேக்குறேன்” என தனியே தோல்வியை ஒப்புக்கொண்டதும் தான் வெளியே எடுப்பார். உள்ளே போகும் போது ரெண்டு மூன்றாக இருக்கும் தலைகணக்கு வெளியே வரும் போது பத்து இருவதாகியிருக்கும். ஆனாலும், துக்கியபடியே எல்லோர் முன்னாலும் மீண்டும் ” அம்மா சொல்றதைக் கேக்குறேன்” எனச் சொன்னதும் தான் இறக்கி தரையில் விடுவார். அவமானமாக இருக்கும்.

ஒரு முறை வேணு மாமாவை வைத்து என்னை மிரட்டியதற்காக மூன்று மணி நேரம் தேம்பித் தேம்பி அழுததும், பின்னர் அப்பா வந்து ஆறுதல் + வடை, பஜ்ஜி வாங்கித்தந்த பின்னரே சமாதானம் ஆனதும் இன்னும் நினைவில் உள்ளது.

இப்பிடியாக ஆறாத வடுவுடனிருக்கும் அடிபட்ட புலி ஊருக்குப் போயிருந்த போது ஒருநாள், அதே வேணு மாமா அவரின் வீட்டுமுன் தச்சு வேலை பார்த்துக் கொண்டிருந்தார். வேண்டுமெனவே செருப்பு சர சரக்க நடந்து போய் அவரின் முன் நின்றுகொண்டு, “சின்ன வயசுல என்னய எப்பிடியெல்லாம் மிரட்டுன. எங்க இப்ப மெரட்டு பார்க்கலாம். எங்க தூக்கி ஓட்டுமேல வையி பாக்கலாம். கேணியும் இன்னும் மூடம தான் இருக்கு தூக்கி கேணியில போடு பார்க்கலாம். வா மாமா. என்னைய மெரட்டு பாக்கலாம்” என அவரின் கையைப் பிடித்து வேலைசெய்ய விடாமல் செய்யவும். “வம்பிழுக்காத மாப்புள, வேலை செய்யவிடு. அர்ஜண்டு வேலை” என் கூறியவரை நான் விடவே இல்லை. “அதெல்லாம் முடியாது. என்னைய பயங்காட்டு, நீதான் பயங்கரமா மெரட்டுவேல. என்னை இன்னைக்கு மெரட்டு பாப்போம்” என தொடர்ந்து வம்பிழுக்கவும், அவர் எனது சத்தமாக என் அக்காவின் பேரைச் சொல்லி கூப்பிடவும், வீட்டிலிருந்து அக்காவும், அம்மாவும் வந்து சேர்ந்தனர். அம்மா, “என்ன பண்ணிக்கிட்டு இருக்க நீ?” எனக்கேட்ட அம்மாவுக்கு பதில் சொல்லாமல்., அக்கா பக்கமாக திரும்பி, “சின்ன வயசுல நம்மயெல்லாம் மெரட்டுவார்ல, எங்க இப்ப என்னை மெரட்டச் சொல்லு பார்க்கலாம்” என அதே பல்லவியை நான் ஆரப்பிக்கவும், அக்கா எனக்கு சாதகமானார்.

இப்போ வேணு மாமா நிலைமை மிகுந்த மோசமானது. என் அம்மா சிரித்துக் கொண்டே ”டேய்., விடுடா பாவம் வேலை செய்யட்டும்” என்ற போதும் நான் அவரின் கைகளை விடவில்லை. அதே நேரத்தில் வேணுமாமாவின் மனைவியும் வெளியே வந்து நடக்கும் கூத்தை பார்த்து சிரிக்கலானார்களே ஒழிய அவரை விடச்சொல்லவில்லை. அய்யோ பாவம்.

எனக்கே சிரிப்பு தாளாமல் “ஏய் மாமா ஊருல இருந்து வந்திருக்கும் உம்மக வந்து, உன்னைய விடச் சொல்லட்டும் நான் விடுறேன்” எனச் சொல்லவும் அவரின் மனைவி அவர்களின் மகளை வெளியே அழைத்தார்கள். தன்னப்பனின் போதாத காலத்தை கண்ட அவரின் மகள், “ஏய் முருகா எங்கப்பாவை விடு” என உரிமையோடு பேரைச் சொல்லி விடச்சொன்ன போது, மனதுக்குள் எழுந்த எண்ண அலைகளால் எத்துனை இன்பம். ம்ம்ம்ம்கும்., கல்யாணம் ஆகி இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாகியிருந்தாலும் மாமன் மகள்களின் குரல்களுக்கென ஒரு இனிமை உண்டு.

இதற்கும் மேல் சொல்ல ஒன்னுமில்லை.... அதனால் எல்லாரும் வீட்டுக்குப் போகலாம்...

ஆயாக்களின் உலகம்

”கண்ணா, சூதாடலைன்னா சீனன் செத்துடுவான்,பேசலைன்னா தமிழன் செத்துடுவான்” என்றே ஒரு வரி புழக்கம் திரையில் கேட்டதாக ஞாபகம். அதில் தமிழனைப்பற்றிய வரி மிகச்சரி எனபதற்க்கு மிகப்பெரும் உதாரணம் பலஉண்டு. அதில் எனக்கும் ஒரு பங்குண்டு. ஆனால் சீனனைப் பற்றிய வரியை சமீபத்தில் தான் கண்டுணர்ந்தேன், பல லச்சங்களின் செலவில்.
பணியினினடிப்பையில் மலேயா தலைநகரத்தில் ஒரு வாரம் டாப் அடிக்கவேண்டியிருந்தது. சனிக்கிழமை வரை வேலைப் பார்த்தாயிற்று. ஞாயிறு வேலைகொடுப்பவர் வேலைக்கு வரமாட்டேன் என்றதும், சனியிரவு – ஞாயிறு எனும் பெரும்பொழுதை மன சஞ்சரங்களில்லாமல் கழிக்க வேண்டுமே. என்ன தான் நவீன நகரங்களில் ஒன்றாகயிருந்தாலும், சென்னை தோற்கும், நெரிசலில். அதைக்காரணமாக்கி உடனிருக்கும் அதிகாரிகள் ஊருக்குள் உலாவர பயங்கொண்டு, ஊருக்கு வெளியே குறைந்த தூரத்தில் எங்காவது போய்வரலாம், நம்மிடம் தான் கார் இருக்கிறதே என்றது எங்கள் கூட்டத்தின் பெரும் தலை.


மாலையைத் தாண்டிவிட்டதால், உணவெடுத்ததும் மலையேருவோம், ஒரு மணிநேரப்பயணம் தான் என திட்டம் தீட்டப்பட்டது. எண்ணம் போல் நால்வரும் ஆறுமணிக்குக் கூடி உணவுக்காக ஒரு கொரியன் (”ன்” தானே, இல்லை மரியாதைக்காக ”ர்” வேண்டுமா?) உணவுக்கூடத்தில் கூடி சுட்டுத்தின்னும் கறிவகைகளை பட்டியலிட்டு வாங்கி பல்வேறு சுவைகளை ஒன்றாக மென்று முடித்து ஒன்பதுக்கெல்லாம் கார் கிளம்பியது மலையை நோக்கி. இது, கோலாலம்பூரில் அருள் பாலிக்கும் பத்து மலை முருகன் கோவிலை நோக்கியல்ல, பண வசூலில் திருப்பதிக்கே லட்டு அல்லது அல்வா அல்லது பஞ்சாமிர்தம் தரத்தகுதி வாய்ந்த பெருங்கடவுள். நாளுக்கு ஐய்யாயிரத்திற்கும் மேலான மக்கள் மலையேறி தரிசிக்கும் ஆலயம். அது தான் ”கேசினோ டி ஜெண்டிங்”.


சராசரி நிலபரப்பில் இருக்கும் கோலாலம்பூருக்கு மிக சமீபத்திலேயே இருந்தாலும், பாதி தூரத்துலேயே கண்ணை மறைக்கும் இருட்டு. சாலையில் இருமறுகிலும் விளக்குகள் இருந்தபோதும், வெளிச்சம் போதவில்லை. வாகனத்தை செலுத்தும் நண்பரிடம் பேச்சுக்கொடுத்ததில் தான் தெரிந்தது, சாலையில் ஒட்டப்பட்டிருக்கும் ரிஃப்ளெக்டரின் வரிசையை மட்டும் நம்பி வாகனத்தை ஓட்டிக்கொண்டிருப்பதாகச் சொன்னார். ஆகா, என்ன நம்பிக்கை. மலையேறிக் கொண்டிருக்கும் போதே பேச்சில் வெற்றிபெரும் பெரும் நம்பிக்கைகள் சகுனத்தின் வாயிலாக வெளிப்பட ஆரம்பித்தன. பின்னே இருக்காதா? இரண்டு நிமிட பயணதூரத்தில் 2222, 3333, 4444 என ஒரே எண்களால் பதிவு செய்யப்பட்ட காடிகளைக் கண்ட பின் மனது முழுக்க கெவுளி கத்தத்தானே செய்யும்!


இரவு 10.30க்கெல்லாம், சம்பிரதாயங்களை முடித்து சூதாட்ட மைதானத்தில் ஆளுக்கொரு பக்கம் களம்புகுந்தோம், ஒன்றாக சூதாடினால் சரிவராது என்ற சூதாட்டவிதியின் படி. சீட்டுகட்டினை வைத்தும், தாயக் கட்டைகளை வைத்தும், நவீன தொழில்நுட்டத்தின் படியினால வீடியோ கேம்கள் என ம்ம்ம்ம் எத்துனை வகையான ஆட்டங்கள். அதுவும் மிகக்குறைந்த தொகைலிருந்து, மிகப்பெரும் தொகைவரை.


சுற்றிச்சுற்றி வந்து சூதாட்டத்தின் ஆரம்ப பாடங்களை படித்ததும், மூணு சீட்டு போக்கரின் விதிகளும், ஆட்ட நுணுக்கங்களும் எளிதாக இருப்பதினாலும், நான் துப்புபார்த்த மேசைல் பலர் வெற்றியைக் குவித்துக் கொண்டிருந்த்தாலும், ஏழுபேர் வரை ஆடும் மேசையில் ஒரு இடம் காலியானதாலும் பல லச்சங்களை அள்ளும் ஆவலில் பாய்ந்து இடத்தைப் பிடித்தேன். அடுத்த ஆட்டம் ஆரம்ப்பிப்பதற்குள் 200 ரிங்கிட் (மலேசிய பணம்) கொடுத்ததும், இருப்பத்திஐந்து ரிங்கிட் மதிப்புள்ள வில்லைகள் எட்டினைக் கொடுத்தார்கள். பணத்தை வாங்கி புற ஊதா(அட்ரா வைலட்) விளக்கினை வைத்து சரி பார்ப்பதும், சரியாக இருக்கும் பணத்தினை மேசையிலேயே இருக்கும் மிக்சிறிய நீளமான ஓட்டையின் வழியாக உள்ளே தள்ளும் போதே மனதுக்குள் எதிர் கெவுளி கத்தியது.


ஆனால், சூதாட்ட வில்லைகளை கையில் வைத்து நிமிந்து உட்கார்ந்து “கேசினோ ராயல்ஸ்”- ல் ஆடிய ஆட்டக்காரர்களில் தோரணையில் முகத்தை வைத்துக்கொண்டு நானும் இரண்டு வில்லைகளை வைத்து பெட்டிங்கை ஆரம்பித்தேன். எனக்கு வந்த சீட்டில் 7, 8, Q இருந்தது. ஒரு ஜோடி இருந்தால் வாய்ப்பதிகம், அடுத்ததாக பெரிய மதிப்புள்ள சீட்டிருந்தால் வெல்லும் வாய்ப்புள்ளதால் துணிந்து மேலும் ஒரு வில்லை வைத்து பேங்கரை ஆட அழைத்தேன். ஆடிய எழுவரில் இரண்டுபேர் சீட்டு சரியில்லாததால் ஆடவிருப்பமில்லாமல் சீட்டை வைத்ததும் பேங்கர் மொத்த வில்லைகளையும் எடுத்துக்கொண்டார். ஆனால், என்னிடம் தான் Queen இருக்கிறதே என தைரியமாக இருந்தேன். ஆட்டத்தை தொடர விரும்பும் எல்லோரும் வில்லைகளை வைத்து பேங்கரை ஆட அழைத்ததும், பேங்கர் தனது சீட்டினை திருப்புனார். 6, 2, 9 என மூன்றும் தனித்தனி சீட்டுகள். அப்பாடா, தோல்வி இல்லை ஆனாலும் வெற்றியும் இல்லை. நம்முடைய வில்லையை அப்படியே திரும்பக் கொடுத்துவிட்டார்கள்.

அப்படி ஆரம்பித்த ஆட்டம் மெல்ல, மெல்ல சூடுபிடித்து வெற்றியும், தோல்வியும், கைகாசுமாக அரைமணிநேர ஆட்டத்திற்குப் பின் கையிலிருந்த வில்லையை எண்ணிப் பார்த்தால் 350 மலேசிய பணமாக இருந்தது. அரைகுறை ஆட்ட நுணுக்கத்திலேயே 150 ரிங்கிட் லாபம் பார்த்துவிட்டோமெனும் மிதக்கமும் நானும் ஒரு கேம்ளர் (சூதாடி) எனும் பெருமையும் மெதுவாய் தலைக்கேற, ஆட்ட முறையை தற்காப்பு ஆட்டத்திலிருந்து தாக்குதல் ஆட்டமாக மாற்றி விளையாட ஆரம்பித்தேன். அப்பப்போ பிளாஃப் ஆட்டமுமாக முரட்டுத்தனமாக ஆடிய அரை மணிநேரத்திலேயே கையிலிருந்த 300 ரிங்கிட்டும் போச்சு. ஆவ்வ்வ்வ், மீதமிருக்கும் 50 ரிங்கிட் வில்லையை வைத்து ஆடமுடியாததால், கடந்த ஒரு மணிநேரமாக உடனிருந்த இருக்கையை பிரிய மனமில்லாமல் இருந்தாலும், அதற்கும் மேல் அங்கிருக்க மனமும், மானமும் இடங்கொடுக்காத்தால், மெல்ல நகர்ந்து அப்பெருங் கூடத்தை சுற்ற பார்க்கலானேன்.


மனதின் மயக்கங்கள் கலைந்து போனதாலும், போனது இனி வாராதென்பதாலும் மெல்ல மனதை ஆறுதலடைய ஆரம்பித்தது. இனி கவனத்தை வேறுபக்கமாக்கினால் ஒழிய நேரத்தை கடத்த முடியாது. ஏனெனில் மீண்டும் நண்பர்கள் கூடும் நேரம் காலை மூணோ, நாலோவாகத்தானிருக்கும். அப்பெருமுகலகில் மெல்ல சுற்றிவரும் போதுதான் கவனித்தேன். ஆடும், சூதாடிகளில் பாதிக்கும் சற்றுமேலானோர் பெண்களே. அதுவும், அறுபதுக்கும் மேற்பட்டோரே அதிகம். ஆவல் தூண்ட கவணத்தை முழுக்க முழுக்க அறுபதுக்கும் மேற்பட்ட ஆயாக்களின் மேலே வைக்கலானேன். கைநிறைய வில்லைகளோ, அல்லது மலேசிய பணத்தோடோ ஓடி, ஓடி தேவையான மேசைகளை நிறைத்து பேங்கரோடு சவால்விட்டு ஆடலாகினர். சில ஆட்டங்களில் துணைவிதிகளின் படி, நம் கையிலிருக்கும் சீட்டும், பேங்கரின் சீட்டும் ஒரே பூ, ஒரே நம்பராக இருந்தால் நம் பெட்டிங் பணத்தைவிட பத்து மடங்கு அல்லது இருபது மடங்கோ கிடைக்கும் என்பது போன்ற சூழ்நிலையில், தன் கையிலிருக்கும் சீட்டையே பேங்கரும் திருப்பும் படி பெருங்குரலெடுத்து கத்துவதோடு, அப்படியே வந்துவிட்டால் பெரும் ஆர்ப்பாட்டமே கொள்கிறார்கள்.

பணம் போன துக்கத்தில், தூக்கம் தொலைந்தே போனது. கையிருக்கும் குறைந்த காசுக்கும் தேநீர் வாங்கிக் குடித்து பொழுதைப் போக்கி நாலுமணிக்கு நண்பர்களை தேடிப் பார்த்தால் எல்லோரும் தொங்கிய தலையோடே வெளியேற எத்தனித்தனர். என்ன ஆனதென்ற கேள்விக்கு துக்கமே பதிலானது. ஆழமான விசாரனையின் முடியில், முடிவேதுமில்லாமல் மலையில் அடியை நோக்கி கரும் இருளில் காரில் பாய ஆரம்பித்தோம். சீன நண்பரிடம் ஆயாக்களைப் பற்றி கேட்டதும், பெரும்பாலான ஆயாக்களுக்கு பிள்ளைகள் கொடுக்கும் மாதாந்திர செலவுக்கான பணத்தில் மிச்சத்தை இப்படித்தான் ஆடி விடுவார்கள் என்றார். அடப்பாவி பணத்தை விடுவதற்க்காக மட்டுமே மலையேறுவீர்களோ? வரும் போது பெரும் நம்பிக்கையோடு இருந்தீர்களே என வினவியதில், நம்பிக்கை தானே வாழ்க்கை என்ற பதில் மட்டும் கிடைத்தது. மேலே ஏதும் பேச விரும்பாமல் அமைதியானேன்.

எனக்குப் பிடிக்காதவர்கள்

அண்ணன் பித்தனின் வாக்கு சுதாகர் தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறார். கடந்த நான்கு நாட்களாகவே கடுமையான பணி, இன்னும் இரண்டு வாரங்களுக்கு இதே நெருக்கடி நீடிக்கலாமென வானி(பணி)லை ஆராய்ச்சி கூறுகிறது. சொந்த இடுகை எழுதவும் குறிப்பாய் பெரியோர்களின் இடுகைகளை படிக்கவுமே நேரமில்லை. ஆனால் இந்த தொடர் இடுகையினை எழுதுவது மிகசுலபமாதலால்(ஆமாம், கால காலமாக பிடிக்காதவங்களை சொல்ல என்ன சிரமம்?)உடனடி தொடர் இடுகை.

போவோமா ஊர்கோலம்!!!

1) அரசியல்

பிடித்தவர்(இறந்த காலத்தில் சொல்லும் போதும் ”பிடித்தவர்”ன்னு தானே வரும்?) :- கலைஞர்

பிடிக்காதவர் :- ஜெயலலிதா

2)எழுத்தாளர்

பிடித்தவர் : - பாலகுமாரன்,

பிடிக்காதவர் :- சாரு நிவேதிதா

3)திரைப்பட இயக்குநர்

பிடித்தவர்கள் :- மகேந்திரன், மணிரத்னம், மிஷ்கின், கமல்

பிடிக்காதவர்கள் : - ஷங்கர்

4) நடிகர்

பிடித்தவர் :- பிரகாஷ்ராஜ், கமல்

பிடிக்காதவர் :- விவேக்

5) பாடலாசிரியர்

பிடித்தவர்கள் :- கண்ணதாசன், பட்டுக்கோட்டையார், என்பதுகளில் எழுதிய பலர்

பிடிக்காதவர் :- பேரரசு (ஐய்யொ, ஐய்யோ)

6) திரைப்பட தயாரிப்பாளர்

பிடித்தவர்கள் :- ஷங்கர், பிரகாஷ்ராஜ்

பிடிக்காதவர் :- ஏ.வி.எம்

7) நடிகைகள்

பிடித்தவர் :- யாருமில்லை

பிடிக்காதவர் :- நயன்தாரா

8) காவல்துறை

பிடித்தவர் :- டி. ஜி. பி. நட்ராஜ்

பிடிக்காதவர் :- ஏகப்பட்ட”பேர்”கள்

9) ஆட்சியாளர்கள்

பிடித்தவர் :- நரேஷ் குப்தா

பிடிக்காதவர்கள் :- ஏகப்பட்ட”பேர்”கள்

10) பிடித்த திரைப்படங்கள்

பிடித்த படங்கள்:- கை கொடுக்கும் கை, முள்ளும் மலரும், அன்பேசிவம், விருமாண்டி, அஞ்சாதே, அலைபாயுதே, வசீகரா.


போதும், அவ்வளவுதான். தொடர் சங்கிலி இடுகையை எனக்குத் தெரிந்த அனைவரும் ஏற்கனவே கோர்த்துவிட்டதால் நான் யாரையும் அழைக்கவில்லை.(அண்ணன் மாதவராஜின் ஆசை இங்கே நிறைவேறியிருக்கலாம்)

தீபாவளி இன் மலேய்சியா!!! - பாகம் 2

கடந்த வாரம் வெளிவந்து சக்கைபோடு போட்ட முதல் பாகத்தை படிக்க.

என்னுடைய மலேசிய நண்பர்(முன்னொரு காலத்தில் சிங்கையில் பணிபுரிந்தவர். தற்பொழுது மலேசியாவிலேயே சுயதொழில் செய்து வருபவர்) நீண்டகாலமாக வீட்டுக்கு வரும்படி அழைப்புவிடுத்ததின் பேரில் இந்த தீபாவளியை நண்பரின் குடும்பத்தாருடன் அவருடைய சொந்த ஊரான பிணாங்கு மாகாணத்திலிள்ள கூலிமில் கொண்டாடுவது என முடிவெடுத்து திட்டங்களை செயல்படுத்த ஆரம்பித்தோம், நானும் நண்பர் முத்துவும்.

சனிக்கிழமை தீபாவளிக்கு, வெள்ளிக்கிழமையும் விடுப்பு வாங்கிக்கொண்டு வியாழன் மாலை ஆறுமணிக்கு வீட்டிலிருந்து கிளம்பி சிங்கை- மலேசியா இடையிலான தரைவழி சோதனைச் சாவடிக்கு போகும் போது, ஆத்திகர்கள் காட்டிய அனைத்து கடவுள்களையும், நாத்திகர்கள் சொல்லும் பட்டாம்பூச்சி விளைவினையும் சேர்ந்தொழுகிக்கொண்டே சிங்கையின் சாவடிக்குள் நுழைந்தேன். (ஒழுகக் காரணம், உலகிலேயே அதிகப்படியான மக்கள் தரைவழியாக தினமும் எல்லையைத் தாண்டுவதில் இந்த சோதனைச்சாவடி வழியாகத்தான் எனக் கேள்வி) அதுவும் பெருநாட்களில் சமீபத்திலானால் மைல் நீள வரிசையில் வால்பிடித்து, குறைந்தபட்சம் முக்கால் மணிநேரம் நிற்பது தவிர வேறு வழியிருக்காது.

ஆனால், நான் கும்பிட்ட கடவுளும், பட்டாம்பூச்சிகளும் என்னை காப்பாற்றினவோ, என்னவோ!!!. இருக்கும் இருபது வரிசையிலும் வரிசைக்கு நான்கைந்து பேர்மட்டுமே இருந்தனர். அழகான வரிசையைத் தேர்ந்தெடுத்து ஐந்தே நிமிடத்தில் சிங்கையைக் கடந்து சர்வதேச எல்லைக்குள் நுழைந்தோம்.(யாரும் சுடமாட்டார்கள், நம்பலாம், பாதுகாப்பான பகுதிதான்). சர்வதேச எல்லை ஐநூறு மீட்டரை பேருந்து மூலம் கடந்து, மலேசிய சாவடிக்குள் நுழைவதற்குள் 20 – 30 நிமிடமாகிவிட்டது, அவ்வளவு வாகனங்கள். மிகபிரமாண்டமான கட்டிடம். மீண்டும் கடவுள்களோ, பூச்சியோ என்னைக் காப்பாற்றியது. பத்தே நிமிடத்தில் சோதனைகளை முடித்து, கட்டிடத்தைச் சுத்திச் சுத்தி நடந்து டேக்ஸி பிடிக்க வெளியேற 20 நிமிடங்கள் ஆகிவிட்டது. அப்பாடா, கைபேசியில் ரோமராக இல்லாததால் மூர்ச்சையானது. இனி அது, மணிகாட்டவோ அல்லது படம் பார்க்கவோ - பிடிக்கவோ அல்லது பாடல் கேட்கவோ மட்டுமே ஆகும். மிகப்பெரும் விடுதலை. எனக்கும், என்னுடைய கைபேசிக்கும்.


பத்து மணி பேருந்துக்கு, ஒன்பது மணிக்கே வந்து இருக்கையின் இருப்பை உறுதிபடுத்துக் கொண்டபின் இரைப்பையின் இருப்பை உறுதிபடுத்துக்கொள்ள வேண்டியிருந்தது. சாம்பார் வாசமடிக்கும் தமிழ் கடை தேடி ஒரு வெங்காய தோசை, ஒரு மசாலா தோசையை நல்லா அகலமா, அகலமா என அழுத்திச் சொல்லி, உண்டுகளித்து பின் மறக்காமல் நீரிறக்கம் முடித்து மிகச்சரியாக பத்துமணிக்கு பேருந்து அருகே வந்து சேர்ந்தால், ஆகா,

ஜோகுர் பாருவிலிருந்து மலேசியாவின் பலபகுதிகளுக்கு போக தயாராக பல மிதவைப் பேருந்துகள் நின்றிருந்தன. எல்லாப் பேருந்தின் அருகிலும் என் மக்கள். தீபாவளியை சிறப்பாக கொண்டாட சொந்த ஊருக்கு சென்று கொண்டிருக்கும் நம் மக்கள். தலையை ஜெல்லி போட்டு சிலிப்பிவிட்டிருக்கும் சிறுவன் முதல் பல அக்காக்களும், அத்தைகளும் அவர்தம் அழகழகான, அழகழகான பெண் குழந்தைகளும் ஒருசில வயதொத்த நண்பர்களுமென முழுக்க முழுக்க தமிழ்நெஞ்சங்களோடு கிளம்பத்தயாரானது பேருந்து.

பேருந்தில் ஏறி என்னிடத்தை நிரப்பிய சிறிது நேரத்துக்கெல்லாம் படபடவென வெடித்துச்சிதறிய சத்தம் கேட்டு எட்டிப்பார்த்தால் பட்டாசே தான். வெடிபோட்டு மக்களை உற்சாகமாக அனுப்பிவைத்தனர் பேருந்தின் முகவர்.


மொத்தம் இருபத்து நான்கே இருக்கை கொண்ட பேருந்து, நகர எல்லையைத் தாண்டி பெருவிரைவுச் சாலையைத் தொட்டதும், சாலை வரி வாங்கும் சாவடி. சுங்கம் செலுத்தி சாலையைத் தொட்டு பேருந்து போய்க்கொண்டிருக்கையில் ”எண்ணூறு கி.மீ போகணுமே, ஏன் மெதுவாய் போகிறார் என எட்டிப்பார்த்தால், ஆவ்வ்வ்வ்வ்வ் பேருந்து 110கி.மீ வேகத்தில் போய்க்கொண்டிருந்தது பேருந்து. சாலையைக் கவனித்தால், மூன்றுவழிச்சாலை கண்ணுக்கெட்டிய தூரம்வரை வளைவுகள் இல்லாது, மேடுபள்ளம் இல்லாததால் பேருந்தின் உள்ளே சிறு குலுங்கள் கூடயில்லை. அறுபதுக்கே அதிரப்போய் தான் பழக்கமென்பதால் வந்த குழப்பமென உணர்ந்து அமைதியானேன். சிங்கையிலும் அந்த அனுபவம் வாய்க்காது, பெரும்பாலும் 70-80 கி.மீ வேகத்தில் தான் வாகனம் ஓட்டுவார்கள். அதற்கும் மேல் வேகமாகப் போனால் முப்பதாவது நிமிடத்தில் கடலில் தான் விழவேண்டியிருக்குமென, வேகிகளை எள்ளி நகைத்துக்கொள்வோம்.

தூங்கலாமென கண்களை மூடினால், “முருவா, யாரது?” என சற்றுமுன் நண்பரின் அலைபேசியில் கூப்பிட்ட போது தெரியாதது போல் கேட்ட மலேசிய பெரும் பதிவரின் முகம், மனதுக்குள் கோணல்(பளிப்பு) காட்டிக் கொண்டே இருந்ததால் தூங்க முடியவில்லை. சொ.செ.சூ -வாகிவிட்டதே? இதற்கா, அண்ணா, அண்ணாவென நாளிக்கிருமுறை மின்னாடினோம். ஆடியதும் வீண், அழைத்ததும் வீணோ? இருந்தாலும் பரவாயில்லை. விளக்கம் கொடுத்ததும், வீட்டுக்கழைத்த பாங்கு அவரின் அன்பை வெளிப்படுத்தியதால் மன்னித்து விட்டுவிட்டோம். ஆனாலும், தூங்க முடியவில்லை. இந்த வலையுலகத்திற்கு ஏதாவது செய்து நமது பேரை அதிரச்செய்ய வேண்டுமென சபதமேற்றபின்னரே நெஞ்சம், மஞ்சம் காண விளைந்தது. ஆனால் முடியுமோ? பயணிகளுக்கு அப்பப்போ வரும் கர்ணகொடூர அழைப்போசைகளுக்கிடையே தூங்க தனிதிறனிருக்க வேண்டும். எனக்கில்லை...எனக்கில்லை.

ஒளிவெள்ளத்திணூடே பயணிக்கும் பேருந்துக்குள்ளிருந்து, இருமறுகின் அழகை கண்டுகொண்டே மணிகளை கழித்துக்கொண்டிருக்கையில், நள்ளிரவின் குளிர் மெல்ல மெல்ல நெஞ்சத்தை ஆட்ட ஆரம்பிக்கவும், ஜாக்கெட்டில்லாக் குறையை போக்க தோள்பையை நெஞ்சோடு அணைத்துக்கொண்டிருக்கும் வேளையில் இரட்டைக் கோபுரங்கள் கண்களுக்குத் தெரிந்தது.


அருகிலுறங்கும் நண்பனை எழுப்பி, கோபுர தரிசனம் கோடி புண்ணியமென காட்டினால், ”ஓ, கே.எல் வந்தாச்சா? இன்னும் ஐந்து மணிநேரத்தில் கூலிம் போய்விடலாம்” என அனுபவத்தைக் காட்டினார். மலேசியாவில் எடுக்கப்பட்ட திரைபடங்களின் எல்லாக் காட்சியிலும் ஏதேனொரு மூலையில் இந்த கோபுரங்களைக் காட்டியேயிருப்பார்கள். ஏனெனில், அக்கோபுரங்களைச் சுற்றிய பத்து தெருக்கள் மட்டுமே பிரமாண்டமாக இருக்கும். மீதமெல்லால் சென்னைக்கு ஒப்பு என்பது தனிக்கதை.

ஆங்காங்கே கம்பொங் என மலாயில் அழைக்கப்படும் கிராமங்களும், தோட்டங்களும், திடீரென பெரிய கட்டிடங்களும், குறிப்பிட்ட தூரத்திற்கொரு கனரக வாகன நிறுத்துமிடங்களும் என கலந்துகட்டி முழு நாடாக கண்முன் தெரிந்த மலேசியாவைக் கண்ணில் உள்வாங்கியபடியே பயணிக்கையில் அதிகாலை மூன்று மணிக்கு சற்றும்மேல் பேருந்து சாலையோரத்தில் ஓரங்கட்டி மெல்ல நின்றது. ஓட்டுனர் இறங்கி பேருந்தின் இயந்திரத்திற்குள் தலையைவிட்டு பார்த்தவர், அலைபேசியெடுத்து அளவலாகினார். நாயும், பேயும் தூங்கும் நாலுமணிக்கு, திருடனா வரப்போகிறான் என்ற தைரியத்தில் ஓடாத பேருந்தில் குளிர்சாதனத்தின் உறுமலின் ஓசையில் நானும் தூங்க ஆரம்பித்தேன்.

பாகம் பெரிதாக இருப்பதால் தொடர்ச்சி அடுத்த பாகத்தில்.

 
©2009 அப்பாவி | by TNB