Showing posts with label ஊடகங்கள். Show all posts
Showing posts with label ஊடகங்கள். Show all posts

கவலை தரும் கட்டற்ற சுதந்திரம்!!!





மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தின் மீதான தாக்குதல் வழக்கம் போல், இணையம், தொலைபேசி, அலைபேசி, செய்தித்தாள், மற்றும் பல வழிகளில் தாத்தா, பாட்டி, அப்பா – அம்மா, அத்தை, மற்றும் பக்கத்து வீட்டு அக்காவின் கருவிலிருக்கும் குழந்தைவரை வந்து சேர்ந்துவிட்டது.


அந்த நிகழ்ச்சியைப் பார்த்ததாலோ., கேட்டதாலோ யாருக்கும் எந்த லாபமும் இருந்திருக்காது, ஆனால் கணக்கில்லாமல் காலம் விரயமாகி இருக்கும் நமக்கு. அந்த விரயத்தை பணமாக்கியிருப்பார்கள்., மீடியா முதலைகள். மக்களின் அவசரத்தை ஆதாயமாக்கிவிட்டார்கள். வாழ்க வளமுடன் (வேற என்ன பண்ணமுடியும்).


இந்த சம்பவத்தால் மானம் போனதாகவும், மரியாதை குறைந்துவிட்டதாகவும் குய்யோ முய்யோ என்று கும்பலாக குதிக்கிறார்கள். செய்த பாவமும், தேர்தல்கால பயமும், கண்முன் நிழலாடுகிறது. வினை விதைத்தவன், வினை அறுக்கிறான்.

செய்த தவறுக்கு தண்டனை கொடுக்க முடியாவிட்டாலும், கூட்டத்தில் வைத்து அவமானப் படுத்தியாயிற்று. பாதி கேணி தாண்டிய சந்தோசத்தில் பரிசு பணமெல்லாம் அறிவித்தார்கள்.
இது பழைய சம்பவங்களுக்கு முடிவாகுமா…. இல்லை இது புது சம்பவங்களுக்கோர் பிள்ளையார் சுழியா?… இந்திராகாந்திக்கும், குருநானக்கிற்கும் அடுத்த தலைமுறைக்குமே வெளிச்சம்!


பலபேர் அலசி காயப்போட்ட, இந்த சம்பவத்தை வெவ்வேறு ஆட்கள் மீண்டும், மீண்டும் அலசுவதால் அழுக்கு போகுமோ இல்லையோ கிழிந்து நார், நாராகத் தொங்கப்போவது நிச்சயம். பாவம், பலவண்ணங்களைக் கொண்டும், பல்வேறு வகையான நூல்களைக் கொண்டும், சில இடங்களில் பளபளப்பும், பல இடங்களில் வண்ணம் மங்கியும், கண்ணுக்குத் தெரியாத சிறு பொத்தல்களையும், கிழிசலையும் கொண்ட நீளமான சேலை அது. வேலைப்பாடு அதிகமாக இருந்தாலும், வயதாகிவிட்டதால் கையாளுகையில் கவனம் சிறிது குறைந்தாலும், துண்டு, துண்டாக் கிழிவதற்கு முழு காரணமும் நாமாகிவிடும் அபாயமிருக்கிறது. எச்சரிக்கை எல்லோருக்கும் வேண்டும்!

ஈராக்கில், அமெரிக்க அதிபருக்கு எதிராக கையாளப்பட்ட நூதன அவமானப்படுத்தல், சீனாவைத் தொட்டு இந்தியாவிலும் அடி(!?)யெடுத்து வைத்துள்ளது. ஆனால் அமெரிக்க அதிபர் காட்டிய வேதனையில் துளிக்கூட அமைச்சரின் முகத்தில் இல்லை. அவமானகரமான சூழ்நிலையிலும் அமைதியாய் இருந்தது ஆச்சரியகரமானது. அவமானப்படுத்த நினைத்தவனை, ஆன் த ஸ்பாட்டில் மன்னித்து அழிவில்லாப் புகழ் பெற்றார் அமைச்சர்.

அரசியல்வாதிகளைப் பொது இடத்தில் எல்லோர் முன் அவமானப்படுத்தும் தந்திரம் இதுவென நினைத்த அப்பாவி பொதுஜனமோ, அமைச்சரின் நடவடிக்கையால் மனமுடைந்து போவான். ஏனெனில் இந்திய அரசியல்வாதிகள் பயின்ற பாடங்கள் அப்படி. கட்சி கூட்டங்களிலும், சொந்தத் தொகுதிலும் அடிபட்டாலும், மிதிபட்டாலும் வலியை முகத்தில் காட்டாமல் புன்னைகைத்தவர்கள் தானே!!

ஆனால், நடந்த சம்பவங்களையும், நடக்கும் சம்பவங்களையும் நேரடி ஒளிபரப்பில் தொடங்கி, மறு ஒளிபரப்பு வழியாக பார்க்காதவனுக்கு, செய்திகளின் ஊடே ஸ்லோமோசனில் மீண்டும், மீண்டும் காட்டப்படும் காட்சிகளால், தவறுகளைப் பிரித்து ஒதுக்கும் பாமரனுக்கு குழப்பத்தை உண்டாக்கி, தவறான நடவடிக்கைகளைச் சரியென ஆக்கும் வேலையை மிகச்சரியாக ஊடகங்கள் உருவாக்கி வருகின்றன.


அண்டை நாட்டில் நடக்கும் கொடுமையை, களத்தில் பலியான வீர மறத்தாயை, காமுகன் ஆடை களைவதை பார்த்ததும் மார்பு புடைக்க, ரத்தம் கொதிக்க, கைகால்கள் வெடவெடத்து, ஏதும் செய்ய முடியாத கையறு நிலையால், கண்ணில் நீர் வற்றும் வரை அழுத நான், அடுத்து, தலையில்லாத பிஞ்சுகளைப் பார்த்தாலும் சிறு மன இறுக்கத்தோடு அடுத்த வேலைக்கு போகும் படி ஆகிவிட்டது. கண்ணீர்த் துளி கூட இல்லை.

நான் ஏன் மாறிப்போனேன்?, ஏன் என் மனம் மரத்துப் போனது, என எண்ணிப் பார்க்கையில், நான் உணர்ந்த காரணம் தான் என்ன?

இது போன்ற படங்களை, ஊடகங்கள் வழியாக நாள் தோறும் பார்த்ததினால் வந்த பாதிப்பு. ஆனால், மோசமான பாதிப்பு. பிஞ்சுகள் கூட தமிழன் என்ற காரணத்திற்காக பலியாவதை கண்டும், காணாமல் போகுமளவுக்கு என்னுள் வறட்சியை ஏற்படுத்தியுள்ளன இந்த ஊடகங்கள்.


என்னை, என் இயல்பை என் கண்முன்னே மாற்றிவிட்டனர் இந்த ஊடகவியலாளர்கள்.





தப்பான கலாச்சாரத்தைப் பயின்றதால், எல்லா விதத்திலும் இழப்பு என்னவோ அப்பாவிகளுக்கு மட்டுமே!.,

தப்பான கலாச்சாரத்தைப் பயிற்றுவித்ததால், எல்லா விதத்திலும் லாபம் என்னவோ ஊடகங்களுக்கு மட்டுமே!



உண்மையை அறிவீர்!.,

உணர்ச்சிகளை சரியாக, சரியான நேரத்தில் வெளிப்படுத்துவீர்!!

மனிதனாக வாழ்வீர்!!!




பின்குறிப்பு:-

தொலைத்தொடர்பு வளர்சியினால் நாமடைந்த துன்பங்களைப் பற்றி படைக்கு எனது முந்தைய பதிவுக்கு வழிச்சுட்டி---->மீடியா மெஸ்மரைஸம்...

 
©2009 அப்பாவி | by TNB