எண்ண வித்யாசம்?


ஒரு கண்டத்திலிருந்து
கிளம்பிய கூட்டத்தில்
ஒருவன் அமெரிக்காவை கண்டான்,
ஒருவன் ஐஸ்லாந்தைக் கண்டான்,
ஒருவன் அம்புலியைக் கண்டான்.

ஒரு குண்டின் வெடிப்பிலிருந்து
கிளம்பிய ஆணிகளில்
ஒன்று எதிர் கமெண்டரின் காலைத்துளைத்து,
ஒன்று பள்ளிப் பேருந்தின் ஓட்டுனரைத் துளைத்தது,
ஒன்று குடும்பத் தலைவனைத் துளைத்தது.

திசைகள் வேறாயிணும்,
குறிகள் வேறாயிணும்,
வெற்றியும், வீழ்ச்சியும்
ஒன்றுக்கொன்று வேறுயில்லை.
ஒன்றுக்கொன்று சளைத்ததில்லை!

ஆனால், ஒரு குடும்பத்தில்
ஒருவன் விவசாயியானால்,
ஒருவன் அரசு அதிகாரியானால்.
ஒருவன் கணிணி பொறியாளனானால்
வெற்றியும் மகிழ்ச்சியும்
ஒத்ததாக்க மனம் ஒப்புமா???

இதில்
என்ன வித்தியாசம்?
எண்ண வித்தியாசம்!!

புதுசு + சுவாரசியம்



புது டெம்ப்ளேட் மாற்றியாயிற்று. பதிவெழுத ஆரம்பித்து எட்டு மாதங்களுக்குப் பின் டெம்ப்ளேட்டை மாற்றியுள்ளேன். கலர்ஃபுல்லாக ஆகவேண்டும் என்பதற்காகவே சட்டையை மாற்றியுள்ளேன். ஆனால், முகத்தை மாற்ற மாட்டேன்(காரணம் அடுத்து வருகிறது) . நான் யார்?, என் அடையாளம் என்பது தெள்ளத்தெளிவாக எனது நண்பர்களிடம் பதிந்துவிட்டது. மாற்றமாட்டேன். மாற்றமுடியாது.

டெம்ப்ளேட் மாற்றத்தில் வருகைப் பதிவை (ஹிட்ஸ் கவுண்ட்) எடுத்துவிட்டேன். ஏதாவது ஒரு பெரிய தலைப்பைத் தொட்டு எழுதும் போதும், இரு சாரரும் கடைசியாக “நீ ஹிட்ஸ்க்காக எழுதுகிறாய்” என மட்டமான குற்றச்சாட்டைச் சொல்கிறார்கள். இதில் எனக்கு உடன்பாடில்லாததால் எனது பதிவில் இருந்த ஹிட்ஸ் கவுண்டரைத் தூக்கிவிட்டேன். (இப்ப மனசுக்கு சரின்னு பட்டதை எந்த தயக்கமும் இல்லாம எழுதுவோம்ல)

********************

இன்றய வலைச்சர தொகுப்பில் அண்ணன் ஞானசேகரன், எனது வலைப்பூவை மிக உயர்வாக எழுதியுள்ளார்.

“இவர் தமிழ் ஆர்வமும் முற்போக்கு சிந்தனையும் கொண்ட நண்பர், சிங்கபூரில் வேலை செய்கின்றார். இவரை சிங்கை பதிவர் சந்திப்பில் பார்த்தும் பேசியும் இருக்கின்றேன். இவரின் எழுத்துகளில் தமிழ்பால் கொண்ட அன்பும் மதிப்பும் தெரிகின்றது. அவர்தான் அப்பாவி முருகேசன், இவரின் தளம் அப்பாவி. இவரின் தளத்தைப் பார்க்க படத்தின் மேல் தட்டவும்...அவரின் சில இடுக்கைகள் பார்வைக்கு...

1.புறடையாளங்கள் !
2.கழுதை, நாய், குரங்கு சேர்ந்தது தான் மனிதன்!!
3.கவிஞர் தாமரைக்கு கடும் கண்டனம்!!
4.பிரபாகரனை கொன்னது சரிதானா?


இதுவரை சமூகம் பற்றிய இடுகைகளையே எழுதி வந்துள்ளேன். நான் வந்த பாதை சரிதான் என்பதற்கான சான்றிதழாலவே அண்ணன் ஞானசேகரின் வார்த்தைகளை பார்க்கிறேன். ஆக, பாதை மாறாமலேயே பயணிக்கலாம்….


*******************************

பதிவுலகில் இருக்கும் நுண்ணரசியலுக்கு மத்தியில், பதிவுலகை சாந்தம் பண்ணும் விதமாக விருதுகளை பெற்று பகிர்ந்து கொள்ளும் விளையாட்டும் ஓடிக்கொண்டிருக்கிறது. எல்லோருக்கும் பிடித்தமான விளையாட்டு ஆரம்பித்து வைத்த செந்தழல் ரவி அவர்களுக்கு நன்றி.

இந்த சுவாரசிய பதிவர் விளையாட்டில் இரண்டு பேர் என்னைத் தொட்டு சுவாரசிய பதிவர் எனும் விருதைக் கொடுத்துள்ளனர். தம்பி சுரேஸ் குமார் (எழுவது எல்லாம் எழுத்தல்ல) , அவர்கள் மட்டுமல்லாது, எதிர்பாராவிதமாக அண்ணன் அறிவிலி (கிறுக்கித் தள்ளு) அவர்களும் கொடுத்துள்ளார்.


இதை நான் ஆறு பதிவுலக நண்பர்களுக்கு பிரித்துக் கொடுக்க வேண்டும். சட்டதிட்டங்களை மீறாமல் எனக்குத் தெரிந்த, எனக்கு சுவாரசியமான அறுவரை தொடுக்கிறேன்…
1) பழமைபேசி
2) வால்பையன்
3) தீப்பெட்டி
4) சோம்பேறி
5) வாழ்க்கை பயணம்
6) வேடிக்கை மனிதன்

என்னால் முடிந்தளவுக்கு சுவாரசியமானவர்களைத் தொகுத்துவிட்டேன். அவர்களும் சுவாரசியம் குன்றாமல் தொகுப்பார்கள் எனவே நம்புகிறேன்.

குறைந்து வருகிறதா தேசிய உணர்வு?


வெளிநாட்டிலிருந்தும், இராணுவத்திலிருந்தும் விடுமுறை அல்லது ஓய்வு பெற்று வருபர்களிடம் ஒரு நல்ல பழக்கமிருக்கும்!?, அது, நான் அங்க ஒழுக்கமா இருப்பேன், அமைதியாய் இருப்பேன், காலையில நாலு மணிக்கெல்லாம் எந்திருச்சுருவேன், ஆனா இங்க நீங்க அப்படி இருக்கிறதில்லை. இது தப்பு இதை மாத்தணும், நீங்களெல்லாம் திருந்தணும் என்று விடாமல் நாள்கணக்கில் பேசிக்கொண்டே இருப்பார்கள்.


இப்படி இருக்கும் கலாச்சார சூழ்நிலையில், மும்பையில் பணிபுரிந்து விடுமுறைக்காக வந்திருக்கும் ஒரு மத்திய பாதுகாப்பு படை வீரரும் (A REAL HERO), சிங்கையிலிருந்து விடுமுறைக்காக சொந்த ஊர் வந்திருக்கும் வாய்சொல் வீரரும் சந்த்தித்தால், உடனிருந்தவர்களின் நிலை?


அவர் நமது நாள்பட்ட நண்பனின் தங்கையின் கணவன். அவர்களின் திருமணத்தின் போது சிங்கையிலிருந்ததால், அவருடன் நேரடி பழக்கமில்லை. அவர் என்னுடய ஊருக்கு வந்திருப்பது தெரிந்ததும் நேற்று அவர்க்காகவே நண்பனின் வீட்டிற்க்கு சென்று, சுயஅறிமுகம் செய்துகொண்டோம். மாமா நல்ல உடல்வாகு, பார்த்தாலே “ஏட்டய்யா” (ஒசந்த அதிகாரி ) என்பது தெரிகிறது.


தங்கையின் முகத்தில் குடிகொண்டிருக்கும் சந்தோசத்திலேயே மாமா எவ்வளவு நல்லவர் என்பதை உணர்ந்துகொண்டேன். வழக்கமான குசல விசாரிப்புகளுக்கு பின், நமது தனிப்பட்ட கேள்வி தொகுப்பிலிருந்து பல கேள்வி கணைகள் பாதுகாப்பு படை வீரரை நோக்கி பாய்ந்த்து.


தற்போது நாட்டு நடப்பு எப்படி இருக்கிறது?


இப்ப, நாட்டுமக்கள்கிட்ட விழிப்புணர்வு சுத்தமா இல்லை. என்ன தான் பாதுகாப்புக்கு போலீசை குவிச்சுவைச்சாலும் மக்களோட ஒத்துழைப்பில்லாமல், மக்களிடமிருந்து தகவல் இல்லாம போலீசால ஒண்ணும் பண்ண முடியாதுன்னு தெரியமாட்டேங்குது.


மக்கள் நடமாட்டம் அதிகமான ரயில்வே ஸ்டேசன், கடைதெரு, கோவில்களுக்குப் போற மக்கள், அவுங்க பாட்டுக்கு கோவிலுக்கோ, கடைக்கோ கூட்டத்தோட கூட்டமா உள்ள போயிட்டு வெளிய வந்திடுறாங்க. சுத்துமட்டத்துல, என்ன நடக்குதுன்னு பாக்குறதே இல்லை, யாராவது வித்தியாசமா நடந்துகிட்டாக் கூட அதைப் பத்தி எந்த விழிப்பும் இல்லாத்தால, போலீசுக்கு தகவல் சொல்லாம அந்த இடத்தை விட்டு வந்திடுறாங்க.


அப்புறம் ஏதாவது நடந்த பின்னாடி, போலீஸ் சரியில்லை, போலீஸ் சரியா வேலைசெய்றதில்லைன்னு சொல்லுறாங்க. என்னதான் போலீஸ் பவரோட இருந்தாலும், எந்த முன் தகவலும் இல்லாம எப்படி கெட்ட சம்பவங்களை நூத்துக்கு நூறும் தடுக்க முடியும்? அடுத்த கேள்வி,


இப்ப ராணுவத்தில் சேர்வது குறைந்திருக்கிறதா?


அதெல்லாம் ஒண்ணுமில்லை. அந்தந்த பிராந்தியத்துக்கு எவ்வளவு ஆள் எடுக்கணுமோ, அது சிப்பாயிலிருந்து – ஆபிசர்க்கு ஆளெடுக்கும் போதும் ஒவ்வொரு முறையும் நிறைஞ்சுடுது. ராணுவத்துக்கும், போலீசுக்கும் ஆள் வர்ரது எள்ளவும் குறையவேயில்லை.


ஆனா ஒரு சிலர் டாக்டர், எஞ்சினியர், சாஃப்ட்வேர் வேலையில்லாம் நாட்டுக்குள்ள செஞ்சாத்தான் நல்லாஇருக்கும்முனு நினைச்சுக்கிட்டு இருக்காங்க. ஆனா உண்மையில, மெடிசின், எஞ்சினீரிங், சாப்ட்வேர் எல்லாத்திலும், புது கண்டுபிடிப்புகள் மிலிடரில்ல பயன்படுத்துன பின்னாடிதான் நாட்டுக்குள்ள வருது என்பதை மறந்துடுங்றாங்க. அப்ப உண்மையான “challenging job, thrilling life” எங்கே இருக்குன்னு தெரிஞ்சுக்கங்க.


அடுத்து ராணுவத்துல சேர்ந்தா உயிருக்கு உத்திரவாதமில்லைன்னு படிச்சவங்க மத்தியில நினைச்சுக்கிட்டு இருக்காங்க. இன்னைக்கு நிலையில இது முட்டாள்தனமாயிடுச்சு. எப்படின்னா, சமீபத்துல நடந்த தீவிரவாதி தாக்குதல் எங்க நடந்துச்சுன்னு யோசிச்சு பாருங்க,பெங்களூருல்ல சாஃப்ட்வேர் கம்பனிகளை குறிவச்சும், பாம்பேல பொது மக்கள் புழங்குற ரயில்வே ஸ்டேசன்லயும்- பெரிய மனுசனுங்க புழங்குற தாஜ் ஹோட்டலையும், அடுத்து காயம் பட்டு அரை குறை உசுரோட வர்ற மக்களை குறிவச்சு ஆஸ்பத்திரிகளிலும் தானே குண்டு வச்சாங்க.


தீவிரவாதிகளுக்கு எந்த சட்ட திட்டமில்லாததால, பொதுமக்களுக்கு எங்கேயும் நூறு சதவீத பாதுகாப்பில்லை என்பதே உண்மை. தீவிரவாதத்தால ராணுவத்துல சாகுறவுங்க சதவீதமும், பொதுமக்கள் சாகுறதோட சதவீதமும் சமமாகிட்டு இருக்கு.


இதனால திறமைசாலிகள், அவுங்களோட திறமை அவுங்க வீட்டுமட்டுமில்லாது, நாட்டுக்கும் பயன்படனும்ன்னு நினைக்கணும்.அடுத்த முக்கிய கேள்வி,


மக்களிடையே தேசிய உணர்வு குறைந்து வருகிறதா?


நீண்ட யோசனைக்குப் பின் அவர் சொன்னது“இந்தியாவில் சுகந்திரமடைந்த போதிருந்த தேசிய உணர்வு இன்றும் வடக்கில் குறையவில்லை, ஆனால் தெற்க்கில் குறைந்துவிட்டது (கவனிக்கவும் கடந்த காலம்)”எனக்கூறி அவர் முடித்துக் கொண்டார்,


ஆனால் எனக்குள் பத்திக்கொண்டது?


உண்மையா?

சித்திரம் பேசுதடி...


முன்னொரு காலத்தில், இருங்க, இருங்க ரொம்பப் பின்னாடி போயிராதீங்க, மார்ச் 2006 போல நடந்த சுவாரசியமான சம்பவம். சிங்கையில 1000பேர் வேலைசெய்யும் ஒரு பெரிய கம்பெனிக்கு வேலைக்கு வந்து கிட்டத்தட்ட ரெண்டு வருசமாச்சு. மொத மொத வந்தன்னிக்கி எப்பிடி இருந்தோமோ, அப்பிடியே இருந்தோம். போரடிக்க ஆரம்பிச்சுருச்சு. வாழ்க்கையில இன்னும் முன்னேறனுங்கிற வேட்கை கொழுந்து விட்டு எரிய ஆரம்பிச்சு, சூடு தாங்க முடியாமல் பார்ட் டைம் கோர்ஸ் எடுத்து படிக்க ஆரம்பிச்சோம்.



ஏப்ரல் மாசம் கோர்ஸ் முடிந்து, மூன்று நாட்களுக்கு பரிச்சை. முதல் நாள் தியரி. சூஸ் த பெஸ்ட் ஆன்சரிலிருந்து, ரைட் த ஆன்ஸர் வித் சர்க்யூட் டைகிரம், பத்து மார்க் கேள்வி வரை மூணு மணிநேரம் எழுத வேண்டிய பரிச்சை. படிக்கணும், பாசாகணும். படிக்கணும், பாசாகணும்ன்னு மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்லித் திரிந்தாலும், படிக்க நேரமே கிடைக்கலை.


ஏன்னா, எப்பவாவது பிக்கப் ஆகி சக்கை போடு போடும் செமிகண்டக்டர்(வேஃபர்) பிஸினஸ், அந்த ஜனவரி – மார்ச் குவாட்டரில் படு பயங்கர ஆர்டர். காலை எட்டு மணிக்கு உள்ளே போனா ராத்திரி பதினோரு மணிவரைக்கும் வேலை பார்த்தே ஆகணும். வேலை பார்த்துக்கிட்டு இருக்கப்பவே சூப்பர்வைசரிலிருந்து, என்ஜினியர், புரொடெக்சன் இன்சார்ஜ், டிபார்மெண்ட் மேனேஜர் வரை யாரவது புரொடெக்சன் ஸ்டேடஸ் கேட்டுக்கிட்டே இருப்பாங்க. அவங்களையும் எண்டெர்டெயின் பண்ணி குஷியாக்கிட்டே இருக்கணும்.


இந்த லச்சணத்துல இன்னும் இருபது நாள்ல பரிச்சை, எலெக்ட்ரானிக்ஸ் பாடத்துல! படிக்கணும், ஆனா ராத்திரி பதினோரு மணிவரைக்கும் முடியலை. ஆனா, வேற வழி இல்லை, அதுக்கப்புறமாச்சும் ஒக்காந்து படிக்கணும். மூணு பேரா சேந்து குரூப்பா படிக்க ஆரம்பிச்சோம். பத்து நிமிச படிப்பிலேயே எலெக்ட்ரானிக்ஸ் பாடத்துல வர்ர எலெக்ட்ரானெல்லாம் சாதா கண்ணுக்கேத் தெரிய ஆரம்பிச்சுடும். இதை இதோட விடக்கூடாது, புரோட்டானையும், நியூட்ரானையும் பாத்திட்டு தான் தூங்கணும்ன்னு ஒரு வெறி,


ஆனாலும் வேட்கை தான் கொழுந்துவிட்டு எறியுதே, அதனால ராத்திரி 11.15க்கு வந்ததும், மசாலாப் பால் போட்டு குடிச்சோம்ன்னா அடுத்த ஒரு மணிநேரத்துக்கு தூக்கம் வராது, எப்பிடி வரும்?. மஞ்சள், மிளகு, சக்கரைப் போட்டு கலந்த மசாலாப்பால் வயித்துக்குள்ள எறியுறது, வேட்கையா மாறி புத்தியில இருக்கும்.


புத்தகத்தை எடுத்து பிரிச்சு பத்து நிமிசம் ஒழுங்காப் போகும், அப்ப நம்ம தத்துபித்து மெதுவா சன் டி.வி –யைப் போடுவாரு, ஏன்னா, ராத்த்ரி 11.30க்கு அவங்க ஊர் பொண்ணு ஹேமா, சன் மியூசிக்கில் காம்பயரிங் பண்ணும் லைவ் புரோகிராம் வந்துடும். சவுண்டு கம்மியா வச்சு பாத்துக்கிட்டே படிக்கலாம்னு நினைச்சால், அடுத்த பத்து நிமிசம் நல்லாத்தானிருக்கும், பாட்டுக் கேட்டுக்கிட்டே படிக்கிறதுக்கு.


அப்ப புரோகிராம் பாத்துக்கிட்டு இருக்கிற எங்களுக்கு ஒரு திடீர் பரபரப்பு வந்திடும். நாங்க எதிர்ப் பார்த்த அந்தப் பாட்டு வந்திட்டா, உடனே போனெடுத்து நம்ம நண்பருக்கெல்லாம் போன் பண்ணி சொல்லணும், “மாமா பாட்டு வன்ந்திடுச்சு”, “மச்சான் நம்ம பாட்டு போட்டுட்டாணுங்க”, “சித்தப்பா, இன்னேரமே தூங்கி அசிங்கப்படுத்துறீயே, நம்ம பாட்டு போட்டுட்டாங்க பாத்துட்டு தூங்கு” ன்னு, கூட வேலை செய்யும் எல்லா தமிழ் நண்பர்களுக்கும் போன் பண்ணி எழுப்பிவிட வேண்டியது, பாடம் படிக்கிற எங்களது கடமை ஆக்கிட்டாங்க நம்ம நண்பர்கள்.


ஊருல இருக்குற ஆளுகளையெல்லாம் நாங்க எழுப்பிவிட்டா, எங்க வீட்டுல தூங்குற மத்த மூணுபேரை, அவிய்ங்க போனடிச்சு எழுப்பி விட்டுருவாங்க. நாம் நேர எழுப்பினா, மூஞ்சியக் உர்ருன்னு காமிச்சிறக் கூடாதுன்னு அடுத்தாளை வச்சி எழுப்பிவிடுறது!. எப்பூடி!!!


அடுத்த வந்த நாளுலயெல்லாம் பசங்களுக்கு போன் அடிச்சா லைன் கிடைக்காம பிஸி டோன் கேக்கும், அப்பிடின்னா, வேற யாரோ போனடிச்சு சொல்லுறாங்கன்னு அர்த்தம். எப்பிடியோ, எங்க கம்பெனியில வேலை செஞ்ச 40 தமிழ் பசங்களுக்கும் போன் போட்டு எழுப்பி அந்த குறிப்பிட்ட பாட்டை பார்க்க வைக்கிறத ஒரு பொழுது போக்காகவே செஞ்சோம்.


அடுத்த நாள் டீ பிரேக் டைமில் பாக்கும் போது ஹேமாவை பத்தி பேசிட்டு அந்தப் பாட்டைப் பத்தி பேசுறதுக்குத்தான் நேரமிருக்கும். அதுவே தனி எனர்ஜி குடுக்கும், ஏன்னா? அந்தப் பாட்டும், அதுல் வரும் மியூசிக்கும், வரிகளும், குறிப்பா அதுல ஆடும் அந்தப் பிள்ளையோட ஆட்டமும் ஒரே குஷியா எனெர்ஜிடிக்கா இருக்கும்ல.


சரி, சரி அப்பிடி எந்த பாட்டடா பாத்தீங்கன்னு கேக்குறது, கடல் தாண்டியும் கேக்குது, அந்தப் பாட்டு “சித்திரம் பேசுதடி” படத்தில் வரும் வாழமீனுக்கும், விலங்கு மீனுக்கும்’ பாட்டுதான், (நல்ல பாட்டுல்ல!!!)


நண்பர் கார்க்கிக்கும் இந்த அனுபவம் இருந்திருக்கும்ன்னு நினைக்கிறேன். என்ன சகா இருந்திச்சா?

என்னருமைக் காதலியே!!!


என் வாழ்க்கையை
மாற்ற வந்த வசந்தம் நீ...

வண்ணங்களின் வண்ணங்களைக்
எனக்கு முழுதாய்க் காட்டியவள் நீ...

இயற்கையின் அழகுகளை
அள்ளி, அள்ளிக் கொடுத்தவள் நீ...

உலகத்தை மிக நெருக்கத்தில்
காட்டியவள் நீ...

உறவுகளின் உணர்ச்சிகளை
உண்மையாகக் காட்டியவள் நீ...

திரையின் பிம்பங்களையும் மிகத்
தெளிவாகக் காட்டியவள் நீ...

வைகரையின் அழகினையும், அந்தி வசந்தத்தையும்
விளிம்பு வரைக் காட்டியவள் நீ...

என் அருமைக் கண்ணாடியே.,
உன்னைப் பெற எத்துனைப்
புண்ணியம் செய்தேனோ நான்!!!



.

கழுதை, நாய், குரங்கு சேர்ந்தது தான் மனிதன்!!!

லாங் லாங் அகோ., சோ லாங் அகோ கடவுள் ஒரு அழகிய சாயந்திர வேளையில், நாமளும் வேலையில்லாம சும்மாதான இருக்கோம், இந்த பூமியும் சும்மாதான் இருக்கு. இதை இப்பிடியே விடக்கூடாது, சில பல உசுருகளைப் படைச்சு பூமியில விட்டா, எல்லாருக்கும் போரடிக்காம சுறுசுறுப்பா இருக்கும்ன்னு அதிரடியா முடிவெடுத்து வரிசையா எல்லாத்தையும் படைச்சுக்கிடே வந்தார்.


அமீபா, நண்டு, நரி, யானை, மரம், செடி – கொடி என படைச்சுக்கிட்டு வந்தவரு அடுத்ததா கழுதையைக் கூப்பிட்டு, “கழுதை, கழுதை, நீயும் எத்தினி நாளாத்தான் இங்க என்னைய உதைச்சுக்கிட்டே இருப்ப, நீ போயி பூமிலையும் கொஞ்ச நாளைக்கி இரு. அங்க உனக்கு வேலை என்னன்னா? பொதி சொமக்குறது தான் உனக்கு அங்க வேலை. உனக்கு 60 வருசம் ஆயுள். அதை முடிச்சுட்டு நீயி இங்க வந்து சேர்ந்துக்கலாம். அதனால கெளம்பு, கெளம்புன்னு கெளப்பி விட்டாரு கடவுள்.

அதைக்கேட்ட கழுதை “சாமி, சாமி என்னால 60 வருசமெல்லாம் இருக்க முடியாது. பயங்கரமா போரடிக்கும். அதனால எனக்கு 30 வருச ஆயுளே போதும்” அப்படின்னுச்சு.

உடனே சாமியும் “அப்பிடியா, சரி நீ 30 வருசத்திலையே திரும்பிரு”ன்னு சொல்லீட்டு, அடுத்தா நாயைக் கூப்பிட்டார் கடவுள்.

“நாயி, நாயி. நீ ரொம்ப நல்லவன், என்னோட காலுக்குள்ளயே சுத்திக்கிட்டு இருக்காம, நீ கொஞ்ச நாளைக்கி பூமியில போய் இரு. அங்க மனிசன்னு ஒருத்தன் வருவான். அவங்கூட ப்ரண்டா இருந்து அவனோட வீட்டைக் காவல் காத்து பொழச்சுக்க. உனக்கு 40 வருச ஆயிசு” அப்பிடின்னாரு கடவுள்.

அதைக் கேட்ட நாயி, “சாமி, என்னால மனிசன் கூடயெல்லாம் 40 வருசம் குப்பை கொட்ட முடியாது. அதனால எனக்கு 20 வருசம் போதும்” அப்பிடின்னுச்சு.

அதைக்கேட்ட சாமி “அட, நீ சொல்றதும் சரிதான். மனிசன் ரொம்ப மோசமானவன், உனக்கு 40 வருமெல்லாம் சோறு போடமாட்டான், அதனால நீ 20 வருசம் மட்டும் இருந்துட்டு வந்திரு” வாழ்த்தி அனுப்புனாரு கடவுள்.

அடுத்து குரங்கை கூப்பிட்டு, “குரங்கு, குரங்கு, என்னால உன்னைய வச்சு சமாளிக்க முடியலை. அதனால நீ பூமிக்கு போயி 20 வருசம் வாழ்ந்திட்டு வா” அப்பிடின்னாரு கடவுள்.

அதைக்கேட்டு ஷாக்கான குரங்கு, “சாமி, சாமி என்னால 20 வருமெல்லாம் உங்களை விட்டு பிரிஞ்சு இருக்கமுடியாது. ஏதோ நீங்க சொன்னதால பூமிக்கு போறேன், ஆனா 10 வருசம் போதும் எனக்கு” அப்பிடின்னுச்சு குரங்கு.

அதைகேட்ட கடவுள், “ஆமாம், குரங்கு. என்னாலையும் உன்னை பார்க்காம இருக்க முடியாது. அதனால நீ சீக்கிரமே 10 வருசத்துல வந்திடு” சொல்லி கண்கலங்குன படியே அனுப்பி வச்சாரு கடவுள்.

அடுத்து மனிசனைக் கூப்பிட்டு, “மனிசா, மனிசா. நீ ரொம்ப புத்திசாலி. அதனால பூமிக்குப் போயி இந்த எல்லா மிருகத்தையும் விட நல்லா, சுகமா 20 வருசம் வாழ்ந்திட்டு வந்திடு” அப்பிடின்னார் கடவுள்.

உடனே மனிசன், “சாமி, சாமி. ரொம்ப அழகா இருக்குற பூமியை எனக்கு ரொம்ப பிடிச்சுப்போச்சு. நான் அங்க அதிக நாள் வாழணும்ன்னு ஆசைப்படுறேன். அதனால, கழுதை வேண்டாமுன்னு சொன்ன 30 வருசத்தையும், நாயி வேணாமுன்னு சொன்ன 20 வருசத்தையும், குரங்கு வேணாமுன்னு சொன்ன 10 வருசத்தையும் எனக்கே குடுங்க. நான் அதை வச்சு 75 வருசம் ஜாலியா இருந்துட்டு வர்றேன்” அப்பிடின்னான்.

அதைக் கேட்டதும் கடவுளுக்கு சிரிப்பு வந்திருச்சு. சிரிச்சுக்கிட்டே, “சரி, அப்பிடியே எடுத்துக்க” –ன்னு சொல்லீட்டு, ”முதல் 20 வருசம் எந்தக் கவலையும் இல்லாம, குழந்தையாட்டம் சந்தோசமா இரு, அடுத்த 30 வருசம் உன் குடும்பத்துக்காக கழுதை மாதிரி வேலை செய். அதுக்கடுத்த 20 வருசம் நாய் மாதிரி உன் வீட்டைக் காவல் காக்கப்ப, உன்னோட கடைசி பத்து வருசத்துக்கு உன்னோட குழந்தைகளால, குரங்கு மாதிரி இங்கேயும் – அங்கேயும் மாறிக்கிட்டே இருப்ப. போயி அனுபவிச்சுட்டு வா” சொல்லி சந்தோசமா அனுப்பி வச்சாரு.

இதுதான் மனிசனோட வாழ்க்கை. (எங்கேயோ படிச்சது)
.

புற அடையாளங்கள்!?

மனித உயிர் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தான் இந்த உலகில் பிறவி எடுக்கிறது. அதன் பின்தான் அவனுக்கு இதுதான் உன் ஜாதி என்ற சின்ன வட்டத்திலிருந்து, இனம், மொழி, நாடு என்ற பெரிய, பெரிய வட்டங்கள் வரைந்தது மட்டுமில்லாது அதற்குள் அடைத்தும் வைக்கின்றோம். தானே தேடி எடுத்துக்கொள்ளாத இந்த அடையாளங்களைச் சொல்லிச் சொல்லி எத்தனை, எத்தனை கொடுமைகளை இந்த உலகம் செய்திருக்கிறது, செய்து கொண்டும் தானிருக்கிறது.


அறியாமைக்கும், மத மூடக் கோட்பாடுகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து, மனித குலம் கடந்த காலங்களில் செய்த தவறுகளை வரலாறுகளாகப் படித்து விசனப்பட்ட நாம், மீண்டும் அதே தவறுகளை வர்ணம் பூசிச் செய்யும் காலத்தில் தான் இருக்கிறோம். அன்று அரசன், இன்று அரசாங்கம். அவ்வளவே வித்தியாசம்!


நாகரீகம் வளர்ந்துதான் என்ன பயன்?, கலாச்சாரங்கள் கலந்துதான் என்ன பயன்? விஞ்ஞானம் வளர்ந்துதான் என்ன பயன்? தகவல் தொழில் நுட்பம் வளர்ந்துதான் என்ன பயன்?


மேலே சொன்னவைகளில் மனித குல முன்னேற்றத்திற்கு பயன்பாட்டில் இருப்பது அதிகபட்சம் ஐம்பது சதவீதம் மட்டுமே. மீதமிருக்கும் ஐம்பது சதவீதங்கள் ஆளும் வர்க்கத்தின் கடைசி நேர – அவசரகால முட்டாள் தனத்திற்கும் தான் பயன்படுகிறது.


ஆக்க சக்திகளில் பெரும்பாலும் அழிவு சக்த்திகளாகவே பயன்படுத்தப் படுகின்றன. இதற்கு எந்தத் தவறும் செய்யாத, எந்த கலகத்திலும் ஈடுபடாத அல்லது ஈடுபட முடியாத தனிமனிதனும் செயற்கை அடையாளங்களான ஜாதியின் பெயரைச் சொல்லியோ, இல்லை இனத்தின் பெயரை சொல்லியோ, இல்லை மொழியின் பெயரைச் சொல்லியோ ஒரே ஒரு அப்பாவி மனிதனைக் கூட நசுக்கினாலோ அல்லது அழித்தாலோ அது, நாகரீகங்களின் உச்சத்தில், விஞ்ஞானத்தின் விளிம்பில் வாழும் நாகரீகக் காட்டுமிராண்டிகள் தான், நாம்.


மனிதனை மனிதன் அழிப்பதற்குத்தான் இந்த புற அடையாளங்களா? புற அடையாளங்களைக் கொண்டு மனிதனை எடை போடுவது குறைந்து, அக அடையாளங்களைக் கண்டுணரும் சக்தியை என்று நாகரீகமோ, விஞ்ஞானமோ எல்லோருக்கும் கொடுக்கிறதோ அதுதான் மனிதன் மனிதனாக வாழப்போகும் காலம்!


அந்தக் காலம் நம் தலைமுறைக்குள் வருமா?

.

காலையிலையேவா...

`நாடோடிகள்` படம் ரிலீஸ் ஆகி ஒருவாரத்துக்கும் மேலாகி போச்சு., அம்ம வலையுலக பெரியாளுக எல்லாம் படத்தை, ஆஹா., ஓஹோன்னு நல்லபடியா எழுதியிருக்காங்களே, இந்த வார இறுதிய இந்தப் படத்தைப் பார்த்து சூப்பரா இல்லைன்னாலும் சுமாராவாச்சும் முடிச்சு வச்சிரலாம்ன்னு முடிவெடுத்து, கூட்டாளிகளுக்குத் தகவல் குடுத்தா, ஆளாளுக்கு ஒவ்வொன்னு சொல்றாய்ங்க.


எனக்கு வேலையிருக்குன்னு ரெண்டுபேரு சொல்ராய்ங்க, நான் சனிக்கிழமைக் காலையில(11 மணிக்கி) எந்திரிச்சதும் கோயிலுக்குத்தான் போவேன்னு ஒராளும், காலையிலயேவா....ன்னு ஒராளும் ஆளுக்கொன்னா பேசவும், சரிடா எல்லாத்துக்கும் பொதுவா ராத்திரி 9 மணி ஆட்டத்துக்கே போவோம்ன்னு முடிவெடுத்தாச்சு.


ஆனா, படம் நல்லா இருக்குன்னு எல்லாத்துக்கும் தெரிஞ்சி போச்சு, அதனால கூட்டம் கும்மியடிக்கும். சாயந்திரம் சாவகாசமாப் போனால் டிக்கெட் கிடைக்காமக் கூடப் போயிரும். அதனால நாம் போயி ரிசர்வ் டிக்கெட் எடுத்துவாறேன்னு கிளம்பி தியேட்டர் இருக்குற மாலுக்குப் போனா,

மாலுக் கட்டிடத்தை இப்பதான் புதுசா எஸ்டென்ட் எல்லாம் பண்ணியிருக்காய்ங்க, அதனால் தியேட்டருக்குப் போற வழியில கடையெல்லாம் புதுசு, புதுசா...கலர்க் கலரா இருக்கு. வழியத் துலாவிகிட்டே போனா ஒரு எடத்துல கும்பலா ஆளுக வழிய மறிச்சி நிக்கிறாய்ங்க, அப்ப இது தாண்டா தியேட்டருன்னு முடிவெடுத்து நானும் நின்னுட்டேன்.






என்னடா காலையிலையே தியேட்டர் வாசல்ல கூட்டமா, அதுவும் சீன, மலாய் ஆளுகளுக்கு மத்தியில ஒரு வெள்ளக்கார தொரையும் கூட கூட்டத்துல முண்டியடிசிக்கிட்டு நிக்கிது.

ஆஹ்ஹா... தமிழ்ப் சினிமா உலகத்தரத்துக்கு உசந்திருச்சுப் போலிருக்கு, எல்லா பாசைப் பேசுற ஆளுகளும் வந்திருக்காய்ங்களேன்னு கூட்டத்துக்குப் பின்னாடி அமைதியா நின்னுகிட்டேன். நம்மாளுகளா இருந்தா தலைமேல ஏறிப் போயாச்சும் டிக்கெட்டை எடுத்திருவேன் (அப்பிடி இல்லைன்னா மருதைக்காரன்னு சொல்லிக்க முடியாதுல்ல). ஆனா அசலூரு ஆளுகளும் படம்பார்க்க வந்திருக்காய்ங்க அவுகளுக்கு மரியாதைக் குடுப்பமேன்னு தான் பின்னாடி நின்னுக்கிட்டேன்.


மணி காலையில 11 ஆகப்போகுது, உள்ள எல்லா லைட்டையும் போட்டுட்டாய்ங்க. கண்ணாடிக்கதது மெதுவாத் தொறக்கவும், எல்லா ஆளுகளும் திமுதிமுன்னு உள்ளாரக்க ஓடுராய்ங்க. எனக்கு ஆச்சரியமாப் போச்சு, ஏன்டா, சிங்கப்பூருல இருக்குற மனிசன் கூட சினிமான்னா நம்மூருப் போலவே வரிசையில நிக்காம கூட்டங்கூடி உள்ள ஓடுறாய்ங்களேன்னு பின்னாடி தள்ளி நின்னு அவிய்ங்க உள்ளப் போற அழகப் படம் பிடிச்சுக்கிட்டேன்.
எல்லாரும் உள்ளப் போனப் பின்னாடிதான் தெரிஞ்சது, நான் வந்தது சினிமாத் தியேட்டர் இல்ல, லைப்ரரின்னு.

காலையில 11 மணிக்குத்தான் லைப்ரரியைத் தொறப்பாங்க. அதுக்கு முன்னாடியே வந்து வாசல்ல காத்துக்கிடக்கு அப்புட்டு கூட்டமும். ஆனா, நானு சினிமா டிக்கெட் எடுக்குறதுக்காக கூட்டத்துப் பின்னாடி காத்துக்கிடந்தேன்....

பத்தாண்டிற்கொரு பஞ்சம்!!!

பொருளாதார நெருக்கடி தரும் வேதனையைவிட, நெருக்கடி தீரும் வேளைப் பற்றி வரும் சேதிகள் பீதியைக் கிளப்பிய வண்ணமே இருக்கின்றன. இல்லாமல் இருக்குமா?, கடன் அட்டையை தேய்த்தும், எண்களை தட்டியும் வாங்கி, பிறர் புழுங்க, நாம் புழங்கிய பொருள்கள் ஊருக்குள் ஒரு தனி கவனத்தை நம்பக்கம் திருப்பியே இருக்கிறது.

இனி கால் தரையில் பட எங்காவது நடக்கமுடியுமா?, இருசக்கர வாகனத்தில் வந்தாலும், பொது பேருந்தில் வந்தாலும் ஏளனம் செய்ய ஒரு கூட்டம், நம்மிடம் வாங்கிகுடித்தே வாயும்-வயிறும் வளர்த்து காத்திருக்கிறது. மது குடித்தது தப்பா? இல்லை பிறர் குடிக்கக் கொடுத்தது தான் தப்பா? என்ற ஆராய்ச்சிக்கான நேரம் இது இல்லை. காத்திருக்கிறார்கள். சமாளிக்க வேண்டும். ஏனெனில், சாதித்தாலும் – சரிந்தாலும் வாழ்ந்தாக வேண்டுமே.

வேலையிடத்தில் வரும்படியை காரணம் பலகூறி குறைத்தாலும், தாராளமாய் செலவு செய்ய பழகிய மனதை, தடாலடியாக ஓர் இரவினில் மாற்ற முடியவில்லை. கடைத்தொகுதியை கடந்து வருகையில் கடையிலிருக்கும் பெண்களையும் தாண்டி, அவர்கள் தரும் அதிரடி விலைக்குறைப்புகள் சுண்டி இழுக்கின்றன.

பெண்களைப் பார்ப்பதர்க்காக கடைத்தொகுதியை சுற்றி, பணத்திமிரினால் பணப்பையை இளைத்து, கைப்பையை கொழுக்கி வலம் வந்த காலம் போய், முழுவிடுமுறை நாளிலும் முழுகைதியாய் வீட்டுசிறையினில் காத்திருக்கும் காலம் வந்ததே. எப்போதும் உடலினில் ஒரு மினுமினுப்பு, உடையினில் ஒரு பளபளப்பு, கைபேசியோ காலா காலத்திற்கும் புதுசு என சொகுசாய் வாழ்ந்த எங்கள் வாழ்வு, இன்று அரை(றை) இருட்டில், வலைவீச்சிலே(இணையம்) காலம் தள்ளும் படியானதே. வலைவீச்சில் தங்க மீன்கள் சிக்கினாலும், அதற்கு செலவு செய்யவேண்டுமே என்ற எண்ணமே கண்களை மங்க வைக்கிறது.

எங்கு?, எதனால்?, எப்படி ஆரம்பித்தது?, என்னிடம் எப்படி வந்தது? என எனக்கு தெரியவில்லை, கடைசியில் என்னையும் வந்து தாக்கிவிட்டது, இந்த பாழாய் போன பொருளாதார நெருக்கடி. வாரம் முழுதும் வேலை செய்துகொண்டிருந்தேன், இப்போது மூன்று நாள் வேலை,அடுத்த நான்கு நாட்களுக்கு விடுப்புவிட்டு வீட்டு சிறையில் வைக்கின்றனர்.

கைசமையலை மறந்து, கடைகளில் வாசம்பிடித்து மூக்கிற்கும், நாக்கிற்கும் அடிமையாய், சிறுவயதில் கஷ்ட்டப்பட்டு தேற்றிய நெஞ்சினையும் விட அகலம் அதிகமாகி கொண்டிருந்த வயிற்றை பற்றி கவலையில்லாமல் இருந்த என்னை, மீண்டும் எண்ணை வாசம் வீசும் சமையலைறைக்கு கொண்டுவந்து தள்ளியிருக்கிறது இந்த பொருளாதார நெருக்கடி.

சமைப்பது போரல்ல(Bore), சுவாரஸ்யம் தான். ஆனால், நானே சமைத்து, நானே சாப்பிடுவது என்பது பெரும் முரண் எனக்கூறி விட்டுவந்த சமையலறை, விட்டுப்போன கணவன் வீடு வந்ததைக் கண்ட மனைவிபோல், மீண்டும் பாசமாய் ஒட்டிக்கொண்டது. சொந்த சமையலில் ருசிக்கும் குறைவில்லை, அளவும் மிஞ்சவில்லை, ஹும் தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்.

கையில் காசில்லை என்றாலும், காலத்தை விட மனசில்லை. சுதாகரிக்க வேண்டும், உடம்பையாவது காப்பாற்ற வேண்டும். ஆடும் வரை ஆடியாயிற்று. மார்பளவை விட வயிற்றளவு பெரிதாகிப் போனது. சிக்ஸ் பேக்ஸ் (Packs) போய், சிக்ஸ் பேக்ஸ் (Bags) தொங்கும் உடம்பானது. சொகுசு வாழ்க்கையில் உடலை சிதைத்தாயிற்று.

பத்தாண்டிற்கொரு பஞ்சத்தில் வாழ்ந்த என பாட்டன், பூட்டனுக்கு சொல்லாமலே கொடுத்த கொழுப்பை சேமிக்கும் சூச்சமத்தை, பாழாய் போன சந்ததி சரடு(ஜீன்) என்னிடமும் தந்திரமாய் வைத்திருக்கிறது. என் பாட்டன் தான் பஞ்சத்திலே வாழ்ந்தான், பழுத்திருக்கும் காலத்திலும் நாளுக்கிருவேளைக் கஞ்சி என்றால், பஞ்சம் வந்த காலத்தில்? அவனுக்கு தான் கொழுப்பை சேமிக்கவேண்டும்.

நான் என் பாட்டன் – பூட்டன் போல் இல்லையே!., அன்றாடம் மூன்று வேளை உணவு, தனியே எண்ணையில் பொறித்தவையும் கொறிப்பதற்க்கு உணவில் உண்டு. எனக்குத்தான் பஞ்சம் வராதே, எனக்கேன் கொழுப்பை உடலில் சேகரிக்கும் பழக்கம்? என்றிருந்தேன்.

உணவுக்கு வந்தால் தான் பஞ்சமா? இன்று என் பொருள் ஈட்டலுக்கு வந்ததே பஞ்சம்!. படித்ததில் நல்லவைகளை நடைபடுத்தும் நேரமிது. மீண்டும் நான், நானாகும் நேரமிது. போனதைப் பற்றி பேசியும் பலனில்லை, நடப்பதைக் கண்டு புழம்பியும் பலனில்லை. பொன்னான காலம் கனிந்திருக்கிறது, எனக்கே எனக்காக வாரத்தில் நான்கு நாட்களிருக்கின்றன.

என் உடம்பிற்க்கு, என் சூழலுக்கு எது நல்லதோ, எதை என் சந்ததி சரடு (ஜீன்) ஒத்துக்கொள்ளுமோ, அதை மட்டும் நடைமுறை படுத்த வேண்டும். இந்திய உடலுக்கு ஒவ்வாத இந்த மேற்கத்திய உணவு கலாச்சாரத்தை விடுத்து, ”தேவைக்கேத்த உணவு - சரியான நேரத்தில். தேவையான உடலுழைப்பு, மார்பின் சுற்றுளவை விட சிறிய வயிற்றின் சுற்றளவுக்காக” என்பதை தாரகமாக்கி, உடைக்க முடியாத சூச்சம சரடு உடன் ஒன்றி வாழ்க்கையை இனிமையாக்கிட வேண்டும்.

பழுத்த காலத்தில் ஏறிய கொழுப்பை, இயற்கையாய் வந்த உணவு பஞ்ச காலத்தில் கரைத்த என் பாட்டனைப் போல், நம் உடலில் ஏறியிருக்கும் கொழுப்பை, இந்த பொருளாதார நெருக்கடி காலத்தில் கரைத்தால், வந்திட்ட பஞ்சம் கூட ஒருவகையில் வளமே.

.



 
©2009 அப்பாவி | by TNB