எத்துனை இ(து)ன்பம்

அன்றைய வேலையை அதற்கு முந்தய நள்ளிரவே தீர்மானித்து விட்டது. ”உன்னுடைய இயந்திரத்தில் தொந்தரவு. காலையில் வரவும்” என்ற வாடிக்கையாளரின் குறுந்தகவல் அடுத்த நாள் முழுவதையும் ஆக்கிரமிக்கக்கப் போவதை மின்னலான எண்ணத்தின் மூலம் உணர்ந்து கொண்டவனாய் தூங்கப்போனேன்.

கட்டுப்பாட்டு அறைக்கு(அலுவலகம்) போகாமல் நேரடியாக வாடிக்கையாளரின் இடத்துக்கு குறித்த நேரத்துக்கு புன்னகையோடு(!?) போய்ச்சேர்ந்தேன். பலியாட்டிற்கான முழுமரியாதையையும் கொடுத்து வேலையை பாழ்பண்ணும் இயந்திரத்திடம் அழைத்துச் சொன்றனர். இன்றைய பொழுது இயந்திரத்தோடுதானென்பது எனது கண்களுக்குத் தெரிய ஆரம்பித்தது. பின்னே தொந்தரவு என உணரப்பட்டதாவது தேவையான வெப்ப நிலைக்கு மிக மெல்லிய வேறுபாட்டோடு நிற்கும் இயந்திரத்தின் வெப்பமே.

இதை சரிசெய்ய பெரிய வேலையிருக்காது, ஆனால், இயந்திரத்தின் கணிணியோடு சின்னச்சின்ன பின்ன விளையாட்டுகளோடு விளைவுகளை கண்கொட்டாமல் கண்டபடியே இருக்கவேண்டும். சாதகமானால் ஆர்ப்பாட்டமாய் கைகுலுக்கி புன்னகையோடு விடைபெறலாம். பாதகமாகவே இருந்தால் சீன கெட்டவார்த்தைகளை பேசி, கேட்டு வரவேண்டியிருக்கும்.


பத்துமணிக்கு பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்த ஃபைன் ட்யூனிங் பண்ணிரெண்டு மணிவரை கண்ணாமூச்சி விளையாட்டாகவே போனது. குறுக்கும், மறுக்குமாக (அ) மேலும், கீழுமாக (அ) எண்ணிக்கையை ஏற்றலும், இறக்கலுமாக ஏதேதோ செய்தும், ஆங்கிலத் தேர்வின் விடைத்தாள் போல பல்லிளித்துப் போனது.


மதியச் சாப்பாட்டிற்காக கால்கடுக்க நடந்து போய் உண்டாலும் உள்ளம் நிறையவில்லை. காரணம் தான் தெரியுமே. மீண்டுமொரு மின்னல் வேக நடையில் இயந்திரத்தை அடைந்து தோன்றிய யோசனைகளெயெல்லாம் அடுத்தடுத்து அமல்படுத்தியதில் மூன்றாம் யோசனையே கைகொடுத்தது. ஃபைன் டியூனிங் ஃபைனாக வேலை செய்ய ஆரம்பித்தது. அப்பாடா என்ற வார்த்தையையும் பெருமூச்சையும் விடுத்து மனம் நிம்மதியடையத் துவங்குகையில் தான் அடுத்த தொல்லையின் அத்யாயம் துவங்கியது.

செய்த மாற்றம் சரியாக வேலைசெய்கிறதா என முழு இயந்திரத்தையும் இரண்டு மணிநேரம் ஓட(?)விட்டு சரிபார்க்க வேண்டும். இயந்திரம் ஓடிக்கொண்டிருந்த ஒரு மணிநேரமும் அந்த அடர்ந்த இயந்திரக்காட்டில் வரைமுறைக்குட்பட்ட ஆனால் அயற்சியைக் கொடுக்கும் இரைசலினை உணரத் துவங்கினேன். எப்பவே கடந்து போகும் யாரோ ஒரு மனிதனைத் தவிர வேலையேதுமற்ற நிலையில், கட்டாயம் இருந்தே ஆகவேண்டிய சூழ்நிலையில், என்ன செய்வது?


சரியென்று மகிழ்ந்த இயந்திர பிழை திருத்தமே மனதிற்கு இம்சையாகிப் போனதே! அலப்பரையில்லாமல் அதுபாட்டுக்கு நல்ல(இயந்திர)பிள்ளையாக ஓடுகின்றது. எப்போதும் இடைக்கால வெற்றியை முழு வெற்றியென கொண்டாட முடியாததென்பதால் காலம் கடந்து போகும் வரை தனிமையை இரைச்சலோடு கொண்டாட வேண்டியிருந்ததே.

தனிமையில் எரிச்சல்படும் மனதிற்கு ஆறுதல் சொல்ல எதை அழைப்பது?, யாரை நாடுவது?

 
©2009 அப்பாவி | by TNB