வெள்ளிக்கிழமை

செங்கொண்டைச் சேவல் கூவி ஆரம்பித்து வைக்கும் நாள், வெய்யக்காலத்தில் மட்டும் நீண்டு நெடியதாகத் தானிருக்கும். சேவலில் குரலைக் கேட்டு சோம்பல் முறிக்கும் பட்சிகள் மெல்ல மெல்ல கீச்சுக் கீச்சுவாகி மெதுவாய் கரைதலாக மாறும் வேளையில், தலைக்கணமேறி நிற்கும் வாலிப மனம் சிறிதாய் விழிப்பைப் பெறும். காலையில் தான் கடன்கள், பிரம்மத்திற்கில்லை என சோம்பல் மெல்ல, மெல்ல தன்வசத்திற்கு மனதைத் திருப்ப, காதலின் பால் கூட்டிச் செல்லும்.

நீண்டிருந்த உடலோ குறுகி, அணைப்பிற்கில்லாமையை வெளிக்காட்டாமல், போர்வையில் முடங்கி தன் காதலை அல்லது காதலின் தேடலை வெளிச்சொல்லும். ஏங்கி நிற்கும் எண்ணமெல்லாம், தப்பிநிற்கும் வரிசையில் மூளையின் திரையைத் தொட்டுத் தொட்டுச் செல்லும். கண்ட காட்சிகளெல்லாம் கனவாக நினைவலைப் பெட்டியில் பாதுகாப்பாக
பதுக்கி வைக்கப்படும். பதுக்கப் பதுக்க சொர்கமாக தெரியும் கனவுகளெல்லாம் இதழில் புன்னகையாக வெளியேறி விடுமோ, என்னவோ.

காகத்தில் கரைதலுக்கு, தூக்கமில்லா கனவான்களின் நடையோசைக்கும் அசையாத மனம், அந்த சல்,சல்,சல் என்று தெளிக்கும் நீரின் ஓசைக்கு மட்டும் இசைந்தா கொடுக்கும். அசைந்தும் கொடுக்காது, இசந்தும் கொடுக்காத மனதை அடுத்துவரும் சர்,சர்,சர் எனும் பெருக்கும் ஒலியோசை மட்டும் சலனப்படுத்தத் தான் முடியுமா?

ஒவ்வொரு கவிதையும், காதலும் கனவாக வெளிப்பட்டு காற்றில் கரைந்து காணாமற் போகும் போதும், உடலோ இழந்ததை தேடாது, இருக்கு இன்னும் பல என புரண்டு படுத்தே அடுத்ததைத் தேடும். வெட்கமில்லாத அவனிடம், வெட்கமே இல்லாத கனவும் தன் காதலின் அடுத்த பாகத்தை காட்ட ஆரம்பிக்கும். மனமொன்றி காதற்காட்சியில் கனவைக் நினைவாக்கிக் கொள்கையில், நாசிவழி வரும் காற்று சவ்வூடுபரவலில் தகவலாய் மாறி மூளையை எட்டும் போதுதான் தெரியும், அது சாணத்தின் மணமென்று! கூரிய மூக்கை அழுத்தித் துடைத்து, விலகிய போர்வையை முழுக்கப் பொத்தி விட்டதைத் தொடும் போது, கண்ட இன்பத்தில் பாதியைக் காணோம்.

வேதாளத்திடம் சிக்கிய விக்கிரமாதித்யன் இன்புற்றானோ?, துன்புற்றானோ? எனக்கென்ன? கனவுகளில் சிக்கி உழலும் நான் கண்டதெல்லாம் இன்பம், இன்பம், இன்பம் என மனம் கொக்கரிக்கும் வேளையில் சுள்ளென்று சிறு நீர்த் துளி குறிதவறாமல் முகத்தில் விழும்போது வரும் கோவம், மடைதிறந்த வெள்ளம் தான்.

என் இன்பத்தை தொலைப்பதில் யாருக்குப் புண்ணியமென நோக்க, போர்வை விளக்கி, முகத்தைத் துடைத்து, கண்ணைக் கசக்கிப் பார்த்தால் “வெள்ளிக் கிழமையும் அதுவுமா, எருமை மாடு எப்பிடி தூங்குது பாரு” எனச் சொல்லிக் கொண்டே அடுத்த மூலையில் பசுவின் கோமியத்தை தெளித்துக் கொண்டிருந்தால் வாயாடி அக்கா.

அப்போ...அப்போ... முகத்தில் பட்டது, பசு மாட்டின் ___________?(கோடிட்ட இடங்களை நிரப்புக)

தீபாவளி இன் மலேய்சியா!!!




நான் எப்பவும் தீபாவளியைப் பெரிதாக கொண்டாடியதாக ஞாபகம் இல்லை. அது ஏனோ தெரியலை சின்ன வயசுல இருந்தே அது அப்படித்தான். புது ட்ரெஸ் கண்டிப்பா போட்டிடுவேன், இல்லையானா வழியில் கேக்குறவங்களுக்கு பதில் சொல்ல முடியாது. என்னோட தீபாவளி எல்லாம் பெரும்பாலும் நண்பர்கள்...நண்பர்கள்...நண்பர்கள் தான்.


இங்க சிங்கப்பூர் வந்து இது ஆறாவது தீபாவளி. அதில் இது இரண்டாவது மறக்க முடியாத தீபாவளி. முதல் தீபாவளி எதுன்னா? என்னோட சிங்கையில் ரெண்டாவது தீபாவளி(2005) தான் அந்த முதல் தீபாவளி. நடுத்தரமான சம்பளத்தில் வந்து, கூடுதல் வேலை பெரும்பாலும் இல்லாது, வீட்டு வாடகை, சாப்பாடு, மின் - தண்ணீர் கட்டணம், கணிணி - கேபிள் இணைப்பு கட்டணத்திற்கு வாங்கும் சம்பளத்தில் பாதிக்கும் சற்று மேலேயே செலவாகும். கைச் செலவிற்கு கட்டாயம் கொஞ்சம் வேண்டும். திடிரென வரும் உல்லாச பயணம், கூட்டங்களுக்கு (உடன் பணியாற்றும் சீன, மலேய அத்தை, மாமா, பிகர்களுடன்) என கொஞ்சம் போக மிக, மிக சொச்சமே ஊருக்கு அனுப்பிய பொன்னான காலகட்டம் அது.

அப்போதைய தீபாவளியை மிகவும் சிறப்பாக கொண்டாடுவது என அறை நண்பர்களுடன் முடிவெடுத்து(எடுத்து தான் ஆகணும், ஏன்னா? ஒரு முழுவாரம் தீபாவளிக்கு கம்பேனி ஷட் டவுன்) (கார்க்கிக்கும் ஞாபகம் இருக்கலாம்) கொண்டாட்டத்தை ஆரம்பித்தோம். எப்படி தெரியுமா? தீபாவளிக்கு முந்தைய சனிக்கிழமை முஸ்தபா பேரங்காடிக்குப் போய் முன்னூறு சிங்கை வெள்ளிக்கு சிறப்பு உணவு பதார்த்தங்களுக்கான மூலப் பொருள்களின் தீபாவளி பர்சேஸ். எல்லாம் கட்டிக் கொண்டு கடைவாசலில் டேக்ஸி பிடித்து, “அங்கிள் பிளீஸ் ஒபென் த ட்ரன்க் டோர். ஐ நீட் டூ லோட் மை திங்ஸ்” எனக் கூறவும், டிரைவிங் சீட்டில் இருந்தபடியே கதவை திறந்துவிட்ட அங்கிள் வந்து பார்க்குமுன்னே எல்லாப் பைகளையும் லோட் பண்ணீட்டோம்.

வண்டியை பூன்லேக்கு செலுத்தச் சொன்னது, அங்கிளும் படுலாவகமாக கூட்டத்திலிருந்து இருபது நிமிடத்தில் வெளியேறி பெருவிரைவுச் சாலையைத் தொட்டு கூச்சமே இல்லாமல் 110 கிமீ வேகத்தில் வண்டியைச் செலுத்தினார். நாங்கள் மூன்று பேரும் கை, கால்களுக்கு வேலையில்லாத போது வாய்க்கு வேலை என தமிழரின் அறிய, அறிய கண்டுபிடிப்பின் படி உரை”ஆடி” க் கொண்டிருந்த வேலையில் அங்கிள் வண்டியை வேகமாக ஓரங்கட்டினார்.


“அங்கிள், வாட் ஹேப்பண்ட்?” என நம் தத்துபித்து கேட்க, “110 கிமீ வேகத்துல வந்தா? டி.பி ஓரங்கட்டியிருப்பாரு” என அடுத்த நண்பர் சொன்னது, நாங்கள் நகைத்தோம். ஆனால், அங்கிள் பதிலேதும் கூறாமல் வாகனத்தின் நான்கு டயர்களையும் சிறு கல்லை வைத்து தட்டிப்பார்த்தவர், திடீரென எங்களிடம் வந்து “ஹவ் மெனி கிலோஸ் யூ லோடேட் பிகைண்ட்?” எனக்க் கேட்டார். நான் உடனே “மே பி 50 – 60 கேஜி ஒன்லி அங்கிள்” எனவும், “ஓ, தட்ஸ் ஒய், ஐ ஃபீல் வேவி” எனச் சொல்லிவிட்டு வண்டியை செலுத்த ஆரம்பிதார். “உடனே, தத்துபித்து, “நல்ல வேளை, உள்ள அரிசியே ஐம்பது கிலோ இருக்குன்னு சொல்லை, சொல்லியிருந்தா, இடையிலேயே இறக்கிவிட்டிருப்பாரு” என தமிழில் சொல்லவும் எல்லோரும் சிரித்தபடி வீடு வந்து சேர்ந்தோம்.

தீபாவளிக்கு முந்தையநாள் மாலையிலேயே அடுப்பை பத்தவைத்தாயிற்று. முறுக்கு - மூணு கிலோ, சுழியம் – ரெண்டு கிலோ தத்துபித்துவின் பொறுப்பு. தனியாக ஒரு பர்னர் அவருக்கு, யாரும் தொந்தரவு படுத்தக்கூடாது, அதான் அவரின் கண்டிசன். அடுத்து, குளொப் ஜாமுன் மீடியம் சைஸ் – 150 உருண்டைகள் வெளியிலிருந்து அழைத்துவரப்பட்ட நண்பரின் (வெள்ளாடு, பலியாடு எனவெல்லாம் சொல்லக்கூடாது, ஏனென்றால் அவர் என் நண்பர்) மிக்சர் மூணுகிலோ கடையில் வாங்கியாயிற்று, அவசரத் தேவைக்கு கடைக்குப் போய்வர இரண்டுபேர், இரவு சாப்பாடு மற்றும் தேவையான பானங்களை கவனித்துக் கொள்ள இரண்டுபேர், மேலும் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் முழுபொறுப்பும் அடியேனுடையது.


முறுக்கை எப்படியோ முடித்து, சுழியத்திற்கான ஈரமாவை வைத்து அதிகாலை ரெண்டுமணி வரை ஏதோ செய்து கொண்டிருந்த தத்துபித்துவை, அன்பாக, அரவணைப்பாக வாயில் வந்தபடி வசைபாடி பின், “என்னடா, உன் பிரச்சனை?” என கேட்டதும், ”இல்லை, மாவு ரொம்ப ஈரமா இருக்கு, காஞ்ச மாவும் மிச்சம் இல்லை, என்ன செய்யுறதுன்னு தெரியலை” என்றதும்,
வீட்டில் இருந்த ஏழு பேரும் இடைவெளியில்லாமல் திட்டினோம். பின், சமையல்கலை நிபுணர்களான நாங்கள் ஆறுபேரும் சேர்ந்து, ஆனது ஆச்சு ஈரம் குறையுமளவுக்கு மட்டும் கடலைமாவைச் சேர்த்து சுழியத்தை சுட்டுடலாம் என்ற கூட்டு அறிக்கையின் படி சுழியத்தை சுத்தமாக முடித்தோம். கிட்டத்தட்ட மொத்தம் 200 துண்டங்கள், 20 நாட்கள் கழித்து போய் சேர்ந்த இடம்....., சரி வேண்டாம் விடுங்கள் படித்தால் தத்துபித்துவின் மனம் புண்படும்.



அடுத்தநாள் அதிகாலையில் ஒன்பது மணிக்கு எழுந்து எண்ணைக் குளியல் எடுத்து புத்தாடைகள் அணிந்து அனைவருமாக சேர்ந்து அருகிலிருக்கும் ஜுராங் ஈஸ்ட் முருகன் கோவிலில் பன்னிரெண்டு மணிக்கு ஆலய பிரவேசம், தரிசனம் முடித்து வீடு திரும்பி காலைப் பசியாற இட்லி சுட்டு உண்டோம். கொடூர பசியில் ஆளுக்கு 10 – 15 இட்லிவரை உண்ண, இட்லி சுட்டு, சுட்டு கைவலி கண்ட கிருத்துவ நண்பர் இதற்காகவே இந்து மதத்திற்கு தாவிவிடப்போவதாக எச்சரிக்கை விட(இந்து பண்டிகையின் போது கோவிலுக்கு போகும் நேரம் மட்டும் சமையல் கிருத்துவ நண்பர்களுடையது, அதே போல் கிருத்துவ பண்டிகைகளில் சமையல் இந்து நண்பர்களுடையது), காலைச் சாப்பாடான இட்லியை மதியம் இரண்டு மணிக்கு உண்டு களித்தோம்.

அன்று இரவுதான் சிறப்பு. ஆம், எங்களின் கம்பெனியில் உடன் வெவ்வேறு துறைகளில் பணியாற்றும் மொத்தம் இருபது நண்பர்களை வீட்டுக்கு அழைத்து விருந்து. சமையல் தடல்புடலாக நடந்த்து, தத்துபித்துவின் தலைமையில். வந்தவர்களுக்கெல்லாம் வயிறார சாப்பாடு. பெரும்பாலானோர், சாப்பிட்ட பின் தான் சாப்பிட்டோம். எல்லோருக்கும் ஒரு சுழியம் மட்டும் கட்டாயம். அதான் பழிவாங்கள்.

சாப்பாடு முடிந்ததும், ஏறியதெல்லாம் இறங்க, குத்தாட்டம் ஆடவேண்டும் என்பது எங்கள் அணியின் சர்வதேச சட்டம். அதனால் வந்திருந்தவர்கள் எல்லோரையும் ஆட அழைக்க, பலர் மறுக்க, அவர்களை வற்புறுத்தாமல் சிலர் மட்டும் ஆட ஆரம்பித்து, சூடேற ஏற ஆடாத ஆட்களையெல்லாம் உள்ளே இழுத்துப் போட்டு சூரியன் சரத்குமார் மாதிரியாவது ஆடவைத்து அனுப்பிக் கொண்டிருக்கையில் வீட்டின் அழைப்பு மணி இரண்டுமுறை அழைத்தது.

வீட்டின் மூத்த உறுப்பினர் என்ற வகையில் போய் கதவைத் திறந்தால், ஆவ்வ்வ்வ்வ்வ்வ்

சீருடையில் போலீஸ், ரெண்டு பேர் வாசலிலும், ரெண்டு பேர் லிஃப்டின் அருகிலும் நின்றிருந்தனர். அதிலொருவர், “ப்ளீஸ் டோண்ட் மேக் நாய்ஸ், யுவர் நெய்பர்ஸ் ஆர் கம்ப்ளைனிங். அண்ட் த டைம் ஆல்சோ 1 ஏ.ம்” என்றது. “இல்லீங்க, ஏட்டைய்யா, தீபாவளி கொண்டாட்டம். இங்கதான் பட்டாசு வெடிக்கக்கூடாதே, அதான் பேசிக்...கிட்டு இருந்தோம், இதோ, இதோ இப்ப படுத்திருவோம். நீங்க போய் வாங்க” என ஆங்கிலத்தில் சொன்னதும். “யெஸ், ப்ளீஸ் ஷட் ஆஃப் எவ்ரிதிங். அண்ட் கிவ் எனி ஒன் ஆஃப் யுவர் ஐ.சி” என்றதும், வேறென்ன செய்ய குடும்ப மூத்த உறுப்பினர் என்ற வகையில், எனது ஐ.சியை எடுத்து கொடுத்ததும், ஏட்டைய்யா, அதை குறிப்பெடுத்துக் கொண்டு திரும்ப கொடுத்துவிட்டார்(இதுவரை ஏழுமுறை, எனது ஐ.சி ஏட்டய்யாக்களிடம் குறிப்புக்காக போய் வந்திருக்கிறது).

அப்புறம் என்ன, நண்பர்களில் பலர் அதிரடியாக அவர்களின் வீட்டுக்கு கிளம்பிவிட்டனர். நாங்கள் அடுப்பை.. ச்சீ..சீ இல்லை விளக்குகளை அணைத்து படுத்துவிட்டோம்.

டிஸ்கி:-

1) என்னாடா, தீபாவளி இன் மலேய்சியான்னு போட்டுட்டு, பழைய கதையைச் சொல்ற? என கேட்பவர்களுக்கு.

இதன் தொடர்சியாக அடுத்த இடுகையில் நீங்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் தீபாவளி இன் மலேய்சியா வருகிறது.

2) அந்த 2005 தீபாவளியின் போது எடுத்த புகைப்படங்கள் மிகச்சிறப்பாக எங்களிடம் இருக்கிறது.(அனைவரும், சட்டையில்லாமல் குத்தவைத்தபடி(போலீஸ் ஸ்டேசன் ஸ்டைலில்) இருக்கும் படம் மிகபிரசித்தி பெற்றது)

ஆனால், சுயநலன் கருதி படம் வெளியிடவில்லை.

3) தீபாவளி பற்றிய தொடர் பதிவுக்கு அழைத்தை ஸ்ரீ அவர்களே., இது தான் அந்த தொடர் இடுகை எனக் கூறிக்கொள்கிறேன்.

தமிழ் தாத்தா

என்பத்தியாறு வயதிலும்,
எத்துனை உழைப்பு! உன்னில்
எத்துனை சிந்தனை!, உன்
எழுத்திற்கும், சொல்லிற்கும்
எத்துனையாயிரம் அர்த்தங்கள்.


நெருப்பாற்றில் நீந்திய நாட்களையும்.,
பாம்புகள் நெளியும் பயணங்களையும்.,
வஞ்சகமும், சூழ்ச்சியும் காற்றாயிருந்த காலங்களையும்
நீ மறந்தாலும் வரலாறு மறக்காது.

இடிபோல் இறங்கிய நாளினில்,
ஏழாமிடமிருந்து,
உம்தனித் திறமையால்
அளப்பறியா ஆற்றலால்
முதலிடமேற்றாய்*.

உன்னால்தான்
இங்கு தமிழ் மணக்கிறது.
உன் உத்திரவால் தான்
அரசு இயந்திரமெங்கும் தமிழுள்ளது**.

நீ வாழும் காலத்தில்
நான் வாழ்வது எனக்கு பெருமை.
உன்மேல் பட்ட தென்றல்
என்மேல் படுவது எனது புண்ணியம்.

பொறுப்புகளை மகனிடத்தே
கொடுத்திருந்தாலும், நீயில்லா
உலகு கற்பனையிலும்
கொடூரமாகவே உள்ளது***.

தனித்தமிழ்
செந்தமிழாகியிருக்கும்
இன்னாளில், பாவாலர் பலரும்
உன்னை மறக்கலாம்,
உன்புகழை மறைக்கலாம்

உன்னால் வாழும் தமிழுக்காக
உன்னை இனி நானழைப்பேன்
என தாத்தாவென
இல்லை இல்லை
எங்கள் இரண்டாம் தமிழ் தாத்தாவெனவே.

வாழ்க நீ பல்லாண்டு.,
வாழிய உன் புகழ் பலநூறாண்டு
வாழ்க வாழ்க
லீ குவான் யூ-வே.,
வாழ்க நீ பல்லாண்டு.



பின்குறிப்பு:-

* - 1965 ஆண்டு மலேசியா, சிங்கப்பூரை திடீரென தனிநாடாக பிரிந்து போக சொன்ன போது முழு பொறுப்புள்ள பிரதம மந்திரி ஆனார்.

** - தமிழ் சிங்கையின் ஆட்சிமொழியாக உள்ளது. இரண்டாவது மொழிப்பாடமாகவும் உள்ளது.

*** - இன்றய சிங்கபூரின் பிரதமர் லீ சியான் லூங், நமது தமிழ்தாத்தாவின் மகனாவார். தற்போதைய அரசாங்கத்தில் லீ குவான் யூ மதியுரை அமைச்சராக எல்லா பொறுப்புகளையும் பார்த்து வருகிறார்.



.

நானே விஷ்ணு!!!






காற்றுபுகா கருவறையில்,
கவலையில்லா நீர்நிலையில்,
உருவைப் பெருக்கும்
உயிர் தேடலில்
மச்சமாக வாழ்ந்திருந்தேனே...


பூவறைத் தாண்டி,
பூகோளம் தீண்டும் வேள்வியில்
ஊடகங்கள் கடக்க
கூர்மமாகவே வந்தேனே...

அன்னையின் அமுதும்,
ஆழ் உறக்கமும் அன்றி
வேறறியா வேளையில்,
அமுதரும் கிண்ணச் சேற்றில்
வராகமாக புரண்டிருந்தேனே...

உலகறியும் ஆவலில்
உலகறியா பிள்ளை.
உள்ளும், வெளியுமில்லாமல்
சிறைபட்ட போது
நரசிம்மம் போலாகியிருந்தேனே…

தமிழ்கூறும் நல்லுலகில்
முதல் முதலாக
மூன்றடி இசைத்த போது
வாமனன் போலாகினேனே…


தந்தையின் அரவணைப்பில்
தொழில் கற்று
வளர்ந்ததில்
பரசுராமன் போலாகினேனே…


வாலைப் பருவம் தேடும்
காளைப் பருவம் எய்ததும்,
பொருள் தேடி வெளிவந்ததில்
இராமன் போலாகினேனே…

சொல்லில் மென்மை,
செயலில் மேன்மை,
அனுபவத்தின் தன்னம்பிக்கையால்
கிருஷ்ணன் போலாகினேனே…

அனுபவத்தின் தழும்புகளாலும்,
காதோரத்தின் நரைகளாலும்,
காலத்தின் கட்டாயத்தாலும்
பலராமன் போலாகுவேனே…

ரௌத்திர பழக்கமும்,
உலகியல் முடுக்கமும்
உள்ளத்தின் புழுக்கமும்
கூடி, வெடிக்கையில்
கல்கியும் நானே தானோ?

முரண்

வாரமுழுவதும் மதுரையில் தனியார் பைனான்ஸ் கன்சல்டண்டிங் கம்பெனியில் வேலை செய்து, இரண்டு பஸ் மாறி வீடு திரும்பிக்கொண்டிருந்த சந்திரன் தெருவுக்குள் நுழைந்ததும், மற்ற தெரு நாய்களை குரைத்து வீதியை விட்டு விரட்டிக் கொண்டிருந்த கருப்பன் ஓடிவந்து சந்திரனிடம் குழைந்தது. பேருக்கு ஏத்தபடி, உடம்பு முழுக்க, முழுக்க கருப்பு மட்டுமே. அதை குட்டியிலிருந்து வளர்த்து வருவது சந்திரன் தான். சில நேரம் சந்திரனின் அப்பாவின் அதட்டலுக்கு கூட அடங்காத கருப்பன், சந்திரனின் ஒரு சிறு விசிலுக்கு அடங்கிவிடும். பின்னே, புதன், ஞாயிற்று கிழமைகளில் தனி எலும்பு வாங்கி வேகவைத்து கொடுப்பவனாச்சே. சந்திரன் வேலைக்கு போனதிலிருந்து தான் எலும்பு ஞாயற்றுகிழமை மட்டுமே என்றாகிப் போச்சு.


கருப்பனை திண்ணையில் உட்கார உத்தரவிட்டு, சுற்றும் முற்றும் பார்த்தவன் வீட்டுக்குள் நுழைந்தது வராண்டாவை தாண்டி முற்றத்துக்கு வருவதற்குள் “கீ…கீ…சந்திரா, சந்திரா…” என பேரைச் செல்லமாகக் கூப்பிட அம்மா, அப்பாவுக்கு அடுத்து உரிமையுள்ள மூன்றாவது ஜீவன் செல்லி(கிளி) தான். அடுப்படியிலிருந்து அம்மா எட்டிப்பார்த்து, “வா சந்த்ரா, சமைச்சுக்கிட்டு இருக்கேன், கொஞ்சம் பொறு அப்பா வந்ததும் சாப்பிடலாம்” என்று பதிலுக்கு காத்திராமல் அடுப்படிக்குள் போய்விட்டார்.




தோள்பையினை முற்றத்து திட்டில் வைத்துவிட்ட, வேகவேகமாக படுக்கை அறை வாசலில் இருக்கும் புஜ்ஜி(முயல்) கூண்டைப் பார்த்ததும் கோபம் தலைக்கேற, “ஏம்மா, கருப்பன், புஜ்ஜி இருக்குற இடத்தை சுத்தம் பண்ணல?” என வீதிக்கு கேக்குமளவுக்கு கத்தினான். சத்தம் கேட்டு வெளியே வந்த அம்மா, “டேய், தேனிக்கு ஒரு கல்யாணத்துக்கு போயிட்டு, இப்ப தான்டா வந்தோம். வந்ததும் உங்கப்பா பசிக்குதுன்னு சொன்னார். அதான் சமைக்கிறேன். அதை முடிச்சிட்டு சுத்தம் பண்ணுவேன்டா. அதுக்கு ஏன், இப்பிடி கத்துற” என பதிலுக்கு ஏற்ற இறக்கத்தோடு பேசி முடித்து மீண்டும் சமையலை கவனிக்கப் போய்விட்டார்.

”ஆமா, சாப்பாடு ரொம்ப முக்கியம் பாரு. பசின்னா, கடையில வாங்கி சாப்பிட வேண்டியது தானே. இப்பிடி அழுக்கா விட்டு, விட்டு தான் ரெண்டு முயல் செத்துப் போச்சு. உன்னையப் போய் பாத்துக்க சொன்னேன் பாரு” என கத்திவிட்டு, பேண்டை கழட்டாமல், மேலே மடக்கிவிட்டு அதிரடியாக புஜ்ஜியின் இடத்தை சுத்தம் செய்ய ஆரம்பித்தான்.

”டேய், நீ ஏன்டா செய்யுற, கொஞ்சம் பொறு நான் பாத்துக்கிறேன்” என அம்மா சொன்னதைக் காதில் வாங்கிக்கொள்ளாமல், புஜ்ஜி, , கருப்பன், செல்லி இருக்கும் இடம் மற்றும் கூண்டுகளை சுத்தம் செய்து எல்லா இடங்களிலும் டெட்டால் தெளித்த பின்னரே, கைப்பிடி சுவரின் மேலிருந்த தோள்பையை எடுத்து துண்டை எடுத்துக் கொண்டு குளிக்க போனான் சந்திரன்.

”சந்திரன் வந்துட்டானா?” எனக்கேட்ட அப்பாவிடம், அம்மா நடந்ததைச் சொல்வது குளியலறைக்குள் தெளிவாக கேட்டது.
அவரும், “சீக்கிரம் வந்துருவான்னு தெரிஞ்சிருந்தா, நான் கூட சுத்தம் பண்ணியிருப்பேன்” எனச் சொல்வதும் தெளிவாக கேட்டது. ஆனாலும் மனசு அடங்கவில்லை.

ஞாயிறு முழுவதும் வெறுப்பாகவே கழியவே, இருட்ட ஆரம்பித்ததும் சாப்பிட்டுவிட்டு, அம்மாவிடம் ”காலையில சீக்கிரம் வேலைக்குப் போகணும், அதனால இப்ப கிளம்புறேன்” என சொல்லிவிட்டு மதுரைக்கு கிளம்பிவிட்டான். அவன் கோவமாகவே இருப்பது தெரிந்ததும் அம்மாவும் “சரி பார்த்து போயிட்டு வா” என்பதோடு நிறுத்திக்கொண்டார்.

இரண்டு பஸ் ஸாண்டு மாறி, மூன்று பஸ் மாறி வியர்வையும், களைப்புமாக வேலையிடத்துக்கு பக்கத்தில் ஒரு உடன்வேலை செய்யும் நால்வருடன் பங்கிட்டுக் கொள்ளும் தனி வீட்டுக்குள் நுழைந்ததும், கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருந்த நால்வரில் ஒருவன், “என்ன, மாமா ராத்திரியே வந்துட்ட” எனக்கேட்ட ஒருவனிடம், ”காலையில கொஞ்சம் வேலையிருக்கு” எனமட்டும் சொல்லிவிட்டு, குளித்து களைப்பை விரட்டுவதற்காக குளியலறைக்குள் போய் இருபது நிமிடம் கழித்து வெளியே வந்த சந்திரன் மெதுவாக நால்வருக்கு அருகில் வந்து நிதானமாக,

“யேன், டாய்லெட்டை நாந்தான் கழுவனுமா, நீங்கள்ளாம் கழுவமாட்டீங்களா?, அடுத்து நீங்க கழுவலேன்னா, பரவாயில்லை ரெண்டு மாசமானாலும் அப்படியே இருக்கட்டும்” எனச் சொல்லிவிட்டு விருட்டென அறைக்குள் நுழைந்து கதவைச் சாத்திக்கொண்டான்,

.

 
©2009 அப்பாவி | by TNB