5S படிசீங்களே, 5C தெரியுமா? 5B தெரியுமா?நம்ம நண்பர் தாமிரா, புத்திசாலித் தனமா வேலை செய்ய 5S பத்தி தெளிவா சொல்லிக் கொடுத்தார்.,


ஆனால், இங்க நல்ல அழகான., புத்திசாலியான பொண்ணை கல்யாணம் பண்ணனும்னா உங்கட்ட 5C இருக்கணும்னு பொண்ணுங்க எதிர்பார்த்தாங்க, சரி நமக்கு தான் கல்யாணத்துக்கு பொண்ணு தேடுறன்ங்களே, சீக்கிரம் இந்த 5C - யை ரெடி பண்ணுவோம்முனு தேடிக்கிட்டுஇருந்தேன். அது என்னன்னா..


1. Car.,

2. Condo.,

3. Cash.,

4. Career.,

5. Credit Card ( Gold)


இதுகளை தேடி ஓடிக்கிட்டு இருக்கயில, தலையில இடி எறங்குன மாதிரி ஒன்ன சொன்னாங்க பாருங்க., இந்த பொண்ணுங்க 5C- ல இருந்து 5B- க்கு அப்- கிரேட் பண்ணிக்கிட்டங்கலாம். அது என்னன்னா...1. BMW., (சாதா கார் இல்லையாம், BMW தான் வேணுமாம்)2. BUNGALOW.,( காண்டோ வீடு பத்தாதாம், தனி பங்களா வேணுமாம்)3. BANK.,( பணம் பத்தாதாம், பாங்கே வேணுமாம்)4. BOSS.,( கேரியர் மட்டும் பத்தாதாம். மொதலாளி தான் வேணுமாம்)5. BILLIONAIRE...( கடன் அட்டை எல்லாம் பத்தாதாம், பில்லியனர் தான்

வேணுமாம்)இந்த 5B யை தாண்டி எனக்கெல்லாம் எங்கங்க கல்யாணமெல்லாம்...


நண்பர் தாமிரா-விடம் தான் ஐடியா கேட்கணும்...

ஒரு ஊருல... ஒரு மரம் இருந்துச்சாம்..

இன்னைக்கு நான் உங்களுக்கெல்லாம் ஒரு கதை சொல்லப் போறேன், இந்தக் கதை எங்க பாட்டி எனக்கு சொன்னது.

ஒரு ஊருல ஒரு மரம் இருந்துச்சாம், அந்த மரத்துல சிங்கம், புலி, குதிரை, மலைப்பாம்பு, குரங்கு, நரி,காண்டாமிருகம், முதலை, நண்டு, சிலந்தி பூச்சின்னு எல்லாம் ஒன்ன குடி இருந்துச்சாம்....

டாய... மரத்துல எப்படிடா முதலை, குதிரை, நரி, காண்டாமிருகமேல்லாம் இருக்கும்முனு நீங்க கேட்கிறது எனக்கு புரியுது, என் பேச்சை நம்பாதவங்க அப்படியே கீழ பாருங்க....

இதுதான் அந்த மரம்,

இந்த மரத்தில் உள்ள இந்த மிருக உருவங்கள் இயற்கையாக வந்தது என்று அந்த கிராமத்து மக்கள் சொல்கிறார்கள்.

ராஜிவ் காந்தி கொலையும், நாங்களும்...

மே 21, 1991 நள்ளிரவுக்கு மேல் இந்தியா மட்டுமல்லாது அருகாமையில் இருக்கும் நாடுகளும் அதிர்ந்து போனது... இந்தியாவில் குடியரசு தலைவர் ஆட்சியும், தமிழ்நாட்டில் ஆளுநர் ஆட்சியும் நடந்து கொண்டிருந்ததால் அதிகாரிகள் உடனடியாக முடிவெடுத்து அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
மாநிலம் முழுவதும் சோதனை சாவடிகள் அமைத்து போக்குவரத்து முழுமையாக தடைபட்டது.

அதே நேரம், தமிழகத்தின் மத்தியல் இருக்கும் ஒரு சின்ன ஊரில்...
ஆண்களும், பெண்களுமாக நான்கைந்துபேர், வீட்டிலிருக்கும் சிறுவர்களில் நால்வருக்கு தேவையான பொருள்களை பைகளில் எடுத்து வைத்துக்கொண்டு இருந்தனர்.

நள்ளிரவை தாண்டிய பொழுது, மெதுவாக கட்சிகாரர்களுக்கு தகவல், தொலைபேசி வழியாகவும், இல்லாதவர்களுக்கு மனித தொடர் மூலமாகவும் மெதுவாக பரவிக்கொண்டு இருந்துதகவல் கிடைத்தவர்கள் நம்ப முடியாமலும், தகவலில் இருந்த விஷயம் மிக பெரியதாக இருந்ததால் மேற்கொண்டு தூங்கவும் முடியாமல், உறுதிப்படுத்தவும் முடியாமல், உறுதிப்படுத்த குறைந்த பட்சம் வானொலியில் ஒலிபரப்பு ஆரம்பிக்க வேண்டும், அதற்க்கு இன்னும் இரண்டு மூன்று மணிநேரம் இருக்கிறது. மனதில் தோன்றிய படபடப்பையும், பிரம்ம முகூர்த்தத்தின் குளிரையும் மீறி உடலில் தோன்றிய வியர்வையும் அடக்க வழியில்லாமல், கிழக்கே வரும் உதய சூரியனுக்காக எல்லோரும் காத்திருக்க ஆரம்பித்தனர்.

அதே நேரத்தில்(அதிகாலை மணி மூணு), அந்த வீட்டிலிருந்த பெண்களில் மூவர் மட்டும் எழுந்து, கடைசி கட்ட ஆயத்த பணிகளில் இடுபட ஆரம்பித்தனர். முதல் வேளையாக மூன்று கல்லினை கூட்டி அடுப்பு பற்றவைத்தனர் சமையல் செய்ய.

பின்ன பழனில பெரியவனுக்கும், சின்னவனுக்கும் மொட்டை எடுத்திட்டு வரவழியில எங்க சாப்புடுறது. கடையில எல்லாம் சாப்பாடு நல்லாயிருக்குமோ என்னவோ? ஏய், அடுப்புல அரிசியப போட்டுட்டேன், ராத்திரி செய்ஞ்ச கத்திரிக்கா புளிக்காய அந்த தூக்குவாளியில மொதல்ல எடுத்துவயி" ன்னு எங்கம்மா, எங்கத்தையிட்ட சொன்னாக.

நாளைக்கி பழனிக்கி போரோம்முனு ராத்திரி பூரா தூக்கமே இல்லை எனக்கு, சத்தங் கேட்டு மெதுவா எந்திரிச்சு வந்ததை பார்த்த எங்கம்மா, ஏன்டா நீ முழிக்கிற இன்னும் ரெண்டுமணிநேரமிருக்கு போயி படு, இங்கிருந்து அடுப்புல தொந்தரவு பண்ணாத. அம்மா மெரட்டுராக, சரி சும்மாவாச்சும் போயி படுப்போம்-இன்னு நானும் பாயிக்கு போயிட்டேன்.

என்னடா இது, எப்பவும் வெரசா விடியிற வானம் இன்னக்கீன்னு விடிய மாட்டேங்கிது. சரி எதுக்கும் ரேடியோவ போட்டு சரி பார்த்துக்கலாம், அதுவேற சனியன் நீசுக்கு போடுறப்ப வேலசெய்யாம போயிரப்போது. டிக்...ங்கி...ங்கி..., ஐய்யயோ சத்தம் முழுசா வல்லையே. கட்ட தீந்து போச்சா? ஈ...ன்னு தலைய சொரிஞ்சிட்டு , சரி மூல கடையில பேப்பர் வந்திருச்சான்னு போயி பாத்திட்டு வருவோம். காலைல இந்தாளுக்கு என்னாச்சுன்னு மாடு சத்தத்தை கேட்டு மெரண்டு பாக்குது.

டே... முருகா.. எந்திரிடா., அவிங்களையும், உங்கப்பாவையும் எழுப்பிவிடுடா... இது அம்மா.நான்தான் தூங்கவே இல்லையே... பெரியவனையும், சின்னவனையும் காலுல எத்திவிட்டுடு... நேரா போயி சட்டிய பாத்தா... ஏழு எட்டு பேத்துக்கு வார மாதிரி புளிசோறு- தயிர் சோறும் இருந்துச்சு. சின்ன வாளியில கத்திரிக்காய் புளிக்காய் (தொட்டு நக்கி பாத்தா சுர்ருன்னு இருக்கு) (பல்லுல படாம ஏன்னா பல்லு வேலக்கலைல) பக்கத்துல மிச்சரும் , வாழை இலை கட்டும் இருக்குது. சாப்புடுரப்ப அன்க எங்கயாச்சும் ஆமைவடை வாங்கிக்கலாம்- இது அத்தை. இன்னைக்கி நல்ல வேட்டை, ஊரு சுத்தலாம், கையில எப்படியும் கொஞ்சம் காசும் கிடைக்கும்- இது மனசுக்குள்ள நானா நெனைச்சுக்கிட்டு குளிக்க போயிட்டேன்.

ஏம்ப்பா... பேப்பர் எப்ப வரும்? டீயா?.. காப்பியா?... ஆமா இன்னைக்கி என்ன இந்நேரம், அதுவும் பேப்பர கேட்டுகிட்டு... ஒரு விஷயம்...சரி பார்க்கணும்.. டீகடைகாரன்- நாலுமணி பஸ்சு வல்ல, அதனால பேப்பர் வல்ல. திரும்பவும் தலைய சொரிஞ்சிட்டு, சரி ஊருக்குள்ள அண்ணே வீட்டுக்கு போவோம், அண்ணுக்கு உறுதியா தெரியும், இல்லைனா மாவட்டத்துக்கு போனு போட்டு கேட்ருவோம்.

ஊருக்குள்ள வாரப்பவே, தெரு பூரா ஆம்பளைங்க நடமாட்டமா இருக்கு, அதுலயும் எட்டு மணிவரைக்கும் தூங்கும் மு.க. முத்தையன் கூட ஆறு மணிக்கே வெளியில திரியிறான். அப்ப.. அப்ப...அது உண்மைதானா? மனமுடைந்தார் காங்கிரஸ் கட்சி சின்ன பெரியப்பா தவசி.

அதே ஆறுமணிக்கு, புது டவுசர்-சட்டை போட்டுக்கிட்டு மிலிட்டரிகாரன் மாதிரி நிக்கிறேன் நானு, அப்ப அத்தையோட, மாமியா ஒடிவது எங்கப்பாட்ட, "ஏம்ப்பா ராத்திரி ராசிவ் காந்திய கொன்னுபுட்டங்கலாமே, நீங்க எப்படி பழனிக்கு போகப் போறீங்க?" .உடனே எங்கப்பா "என்னது ராஜிவ் காந்திய கொன்னுட்டாங்களா, ரேடியோவுளையும் ஆறேமுக்காலுக்கு தான் நீஸ், டாய முருகா, நீ போயி பஸ்ஸ்டாண்டுல என்னனு பாத்துட்டு வா" . என்னடா மதுரைக்கி வந்த சோதனை-ன்னு மனசுக்குள்ள நொந்துகிட்டு, நடக்கயில நம்ம மாமா (தி.மு,கட்சி காரர்) வீட்டு வாசல்ல பத்திருபது பேரு நிக்கிறாங்க, செவுத்துக்குள்ள கொஞ்சம் விறகு குச்சி கெடக்குது, அதுல்ல ஒருத்தர், இங்க யாரும் வந்தாங்கன்னா பாத்துக்கங்கப்பான்னு விறகு குச்சிய பாத்தாரு. அங்க
இருந்த பக்கத்து வீட்டு பெரிசு, டாய, எங்கடா போற-ன்னாரு. "இல்ல பெரீப்பா, அத்த மகன்களுக்கு காதுகுத்துக்கு மொட்டை எடுக்க எல்லோரு பழனிக்கி போறோம்". டாய, ராத்திரி ராஜிவ் காந்திய வெடிகுண்டு வச்சு கொன்னுட்டாங்க, அதனால பசெல்லாம் ஓடாது, போயி கொப்பகிட்ட சொல்லு-ன்னாரு.போச்சுடா, பழனியுமில்ல, பாஞ்சாமிருதமுமில்ல - நு மனசுக்குள்ள நினைச்சுகிட்டு வீட்டுல போயி சொல்லுறேன்.


எல்லோரும், பசங்களையும், பாத்திரத்தையும் மாத்தி, மாத்தி பாத்தாங்க.
கெளவி உடனே எங்கப்பாவிடம், ஏம்ப்பா நாளன்னைக்கு காதுகுத்து, இன்னைக்கி மொட்டை எடுக்கணும், கோயமுத்தூருக்கு பத்திரிக்க வைக்கப போன இவிங்க அப்பன் வேற வரணும் , எப்படி வரப்போறான்?


பத்திரிகை அடிச்சு எல்லோருக்கும் கொடுத்தாச்சு, பந்தல் போட்டாச்சு, இப்ப என்ன செய்றதுன்னு எல்லோரும் முளிச்சாங்க. எனக்கு பஞ்சாமிருதம் போச்சேங்கிற கவலை மனசைவிட்டு போகல...


பின் குறிப்பு:-

கோயமுத்தூரிலிருந்து மாமா வரமல்லே, உள்ளூரிலே மொட்டை எடுத்து (முடிய தனிய கட்டிவச்சு பின்னர் பழனியில் சேர்த்தாயிற்று), வந்த உள்ளூர் மக்களுக்கு மத்தியின் பெரியவனுக்கும், சின்னவனுக்கும் காது குத்து சிறப்பாக( பலருக்கு வெறுப்பாக) நடந்து முடிந்தது.

பாதி பேர் வராததால், வசூல் எதிர்பார்த்தபடி இல்லை. அதனால் அத்தை இரண்டு வருடங்கள் கழித்து ஒரு பிரச்சனை இல்லாத நன்நாளில் கிடாய்வெட்டு வைத்து வசூலை நிரப்பினார்கள். என் அப்பா இரண்டுமுறையும் கலங்காமல் கல்லாவை நிரப்பினார்.

பின் குறிப்பு(2) :-

கருப்பு எழுத்திளிருப்பது உண்மை கதை, பச்சை எழுத்திளிருப்பது கதையின் சுவாரசியத்திற்காக... ஹீ...ஹீ...
பின் குறிப்பு(3):-

தலைப்பு சும்மா, அன்று நான் பட்ட கஷ்டத்தை சொல்வதற்கு மட்டுமே. தயவு செய்து யாரும் C.B.I, க்கு தகவல் கொடுத்து அவர்களின் நேரத்தை வீணடிக்க வேண்டாம்.

நானெல்லாம் உளவு துறை அளவுக்கு ஒர்த் இல்லாதவன்.

எது நாகரீகம்?மொத்தத்தில் ஊருக்குள் என்ன நடக்குதுன்னு ஒன்னும்மே புரியல...அதுலயும் மக்களோட உடுப்புளையும், நடவடிக்கைளையும் எது சரி, எது தப்புன்னு புரிஞ்சுக்கவே முடியலை...

இங்க கணுக்கால் வரை தழைய., தழைய வெள்ளை வேட்டிஅதுலயும் குறிப்பா கைலி கட்டிக்கிட்டு வெளிய வந்தா தப்புன்னுசொல்பவர்கள், மேல் பனியன் மறைக்கும் அளவுக்கு டவுசர் போட்டுக்கிட்டு வர்ற பொண்ண ஒன்னும் சொல்லுறது இல்லை...


எஸ்காலேட்டேர் முதல்ல இருந்து கடைசி வரைக்கும் உதட்டு முத்தம் கொடுத்துகிட்டே வர்ற 13-14 வயசுபையனையும்-பொண்ணையும் ஒன்னும் சொல்லாதவங்க, பையனும் - பையனும் நட்பா கோர்த்து நடந்து போன தப்பா பேசுறாங்க.,இங்க, சார்ன்னு கூப்பிட்டா, சூடு பட்டமாதிரி துடிச்சு போறவங்க, பேரைசொல்லி கூப்பிட்டா சந்தோசமா திரும்பி பாக்குறாங்க...
டின்னெர் , பார்ட்டில மொக்க குடிச்சி வாந்தி எடுக்கிரவனை ஒன்னும் சொல்லாதவங்க, எல்லா டிஷ்யும் நல்லா சாப்புடுரவனை கிண்டல் பண்ணுறாங்க..


போன்னுல பிரண்டுகூட( பையன் -பையன்) பேசிக்கிட்டு இருந்தா கிண்டல் பண்ணுறவுங்க, பொண்ணுகூட பேசுறேன்னு சொன்னா சொன்னும் சொல்லுறதுல்ல...

ஆகமொத்ததுல, இந்த ஊரு ஒலகத்துல நாகரீகம்முற பேருள நடக்குரதுல்ல
எது சரி, எது தப்புன்னு ஒன்னுமே புரியல…

ஒங்களுக்கு எதாவது தெரிஞ்சா எனக்கு விளக்குங்களே…

M. G. R the Real BOSS

வாழ்ந்தவர் கோடி,
மறைந்தவர் கோடி,
மக்களின் மனதினில்
நிற்ப்பவர் யார்?என்னை கவர்ந்த தலைவர் M. G. R
இன்றும் தமிழ்நாட்டு மக்களை கட்டிப்போட்டு வைத்திருக்கும் முதல் மூன்றெழுத்து மந்திரம் எம்.ஜி.ஆர்., (மருதூர் கோபாலமேனன் ராமச்சந்திரன்)
(தோற்றம் 17/01/1917- மறைவு 24/12/1987) மறைந்த போது வயது 70எம்.ஜி.ஆரைப் பற்றி அறிமுகம், விளக்கம் யாருக்கும் ஏதும் தேவை இருக்காது. எனவே எனக்கு அவரிடம் பிடித்த விசயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்
பின்னணி ஏதும் இல்லாது, தன்னிடையே உள்ள வெறும் நாடக திர்றமை, வசீகர முகம், வாளிப்பான உடற்கட்டு...என தன்னைமட்டும் நம்பி, அண்ணனின் வழிகாட்டுதலில் தமிழ் சினிமா உலகில் நுழைந்து முதல் படத்தில் நடித்த போது அவருடைய வயது பத்தொன்பது.(வருடம் 1936) சதிலீலாவதி(வருடம் 1947)தான் எம்.ஜி.ஆருக்கு முதலில் பெரும் பேரினை பெற்றுத்தந்து. பின் தொட்டது எல்லாம் அவரின் மனம் போலே வெற்றிதான்...சாதாரண நடிகராக இருந்தபோதே தனக்கென தனி பாதை வகுத்துக் கொண்டு, முடிந்தளவு அதைவிட்டு வெளிவராமல் நடித்தவர்.திரையிலும், வெளியிலும் அவரது கொள்கைகள்* தாயிடம் (கண்ணம்மாள், பண்டரிபாய்...) மிகுந்த பாசம், தாயின் சொல்லை தட்டதாதவராகவே நடிப்பார்.
*நல்ல சுறுசுறுப்பும், துறுதுறுப்பும் கொண்டவராக இருப்பார்.*ஒவ்வொரு படத்திலும் குறைந்தது ஒரு பகுத்தறிவு பாடலாவது இருக்கும்.( பாடலாசிரியர் பாடல் எழுதும் போது உடனிருந்து வார்த்தைகளை மிகமிக கவனமாக தேர்ந்தேடுத்துக்கொள்வார் )
*மது அருந்தும்படி நடிக்க மாட்டார். ( ஒளிவிளக்கில் மட்டும் மது அருந்தியவராக ஒரு பாட்டு மட்டும்)
* இ பிடித்தபடி நடிக்க மாட்டார் ( இரண்டு படங்களில் மட்டும் புகையுடன் தோற்றம்)
*எல்லா படங்களிலும் நல்லவனாக வந்து ஊருக்கு தொண்டு செய்வார்.
*கெட்டவனாக(anti hero roll) நடிக்கவே மாட்டார்,இரட்டை வேடத்தில் மட்டும் ஒருவர் நல்லவர், மற்றவர் கேட்டவர் அல்லது பயந்தவராக வந்து பின்னர் திருந்துவதாக)
*பெரும்பாலும் காதலித்தே திருமணம், (காதலித்தப் பெண்ணுடன் மிக நெருக்கமாக பாடல்கள்).
*காதலியை தவிர மற்ற பெண்களை, தாயாக, சகோதரியாக மட்டுமே பார்ப்பார்.( ஒளிவிளக்கில் மட்டும் குடி போதையில், விதவை சவுக்கார் ஜானகியை கெடுத்துவிடுவார்)
*கடவுள் மறுப்பு இயக்கத்தில் இருந்தாலும், எங்கும் கடவுள் மறுப்பை பேசவில்லை, பிரசாரமாக பரப்பவில்லை.*படம் முழுக்க நேரான சிந்தனை மட்டுமே, அழுகாச்சி கட்சிகள் பெரும்பாலும்இருக்காது
*படத்தின் வில்லனை முடிந்தளவு பேசி திருத்தப் பார்ப்பார், கேட்கவில்லை என்றால் சரணாகதி ஆகும் வரை அடிதான்...


*தப்பு செய்துவிட்டால் மிக வருந்துவார்.(தாளம் பூ என்ற படத்தில், அண்ணன் அசோகன் தப்பு செய்து போலீஸ்க்கும், மக்களுக்கும் பயந்து தலைமறைவாக வீட்டுக்கு வந்து போவார், பலன் அண்ணி கற்பம். ஊர் மக்கள் வந்து அதை சொல்லி அசோகனை கேட்பார், எம். ஜி. ஆர்., அண்ணனை காப்பற்ற வேறுவழிஇல்லாமல் அண்ணியின் கற்பத்திற்கு நானே காரணம் என்று சொல்லிவிடுவார். பின்னர் ஓடி வந்து அண்ணியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்பார்)^ வெளியில் எல்லோருக்கும் பெரும் வள்ளலாகவே திகழ்ந்தார், இன்றும் தேர்தலின் போது அண்ணா.தி.மு.காவிற்கு ஓட்டு வாங்கி தரும் வள்ளல் அவர்தானே.

^ சத்யா மூவீஸ், ஆர். எம். வீரப்பன், எம். ஜி. ஆர்., மறையும் வரை மாதம் நூறு ரூபாய் எம்.ஜி.ஆரின்., கையில் பெறுவதை வழக்கமாக வைத்திருந்தார்.

^1967 தேர்தலைப பற்றி காமராஜர், "நான் படுத்துக் கொண்டே ஜெயிப்பேன்" என்று கூறினார். ஆனால் அன்று நடந்தது வேறு.எம்.ஜி.ஆர், உடல்நலம் இல்லாமல் அமெரிக்காவில் இருதபோது நடந்த தேர்தலில் உண்மையில் படுத்துக் கொண்டே ஜெயித்தார்!எல்லா படத்திலும் இது போன்ற கடுமையாக உழைக்கும் கட்சி ஒன்றாவது இருக்கும்.
நடிகர் திலகத்துடன் இணைந்து நடித்த ஒரே படம் "கூண்டு கிளி"
ஆஸ்தான வில்லன் நடிகர் நம்பியாருடன்
"உன் முகத்தை காட்டு மூன்று கோடிஓட்டு வாங்குகிறேன், உன் நகத்தை காட்டு நான்கு கோடி ஓட்டு வாங்குகிறேன்" என்று சொன்ன அண்ணா, மற்றும் கலைஞருடன்.
நாவலர், கலைஞருடன் எம்.ஜி.ஆர். ( இந்த படம் எடுத்த போது யார் முதல்வர் என்று தெரியவில்லை)எம். ஆர். ராதாவால் கழுத்தில் சுடப்பட்டு மருத்துவமனையில்.


எம்.ஜி.ஆர் இறுதிவரை பயன்படுத்திய கார். இந்த நம்பர் ஒரு சிறப்பு வாய்ந்தது. எம்.ஜி.ஆர், முதன் முதலில் முதலமைச்சராக பதவி ஏற்றது 4.7.77 .

குழந்தைகள் மேல் மிகுந்த பாசம் கொண்டவர்.பிரபகாரனுடன், எம்.ஜி.ஆர் இன்னும் சில ஆண்டுகள் உயிரோடு இருந்திதிருந்தால் இவரின் இன்றைய நிலைமை வேறு.

மதர் தேரசாவுடன், கடவுள் மறுப்பு கொள்கையுடயவராயினும் யாரையும் வார்த்தையால் காயப்படுத்தியதில்லை.
எதிரியும் விரும்பாத அந்தநாள்


இன்றும் தெற்கிலிருந்து வருபவர்கள் பார்க்கவிரும்பும் இடம்.


பின் குறிப்பு:-
பொன் மனசெல்வர் எம். ஜி. ஆருக்கு மூன்று திருமண வாழ்விலும் குழந்தை செலவம் இல்லை. இதனால் எல்லோருக்கும் மன வருத்தம் தான்., ஆனால் குழந்தை இல்லாததால் தான் அவர் கடைசிவரை தன் கொள்கை, தயாள குணம் மாறாமல் இருக்க முடிந்தது என்று நான் நினைக்கிறேன்.
அதே போல் அவர் இறந்த அன்று பல பேர், தன் குடும்பத்து துக்க நிகழ்ச்சியாக மொட்டை போட்டுக் கொண்டனர்.சிங்கப்பூர்- புகை சட்டங்கள்!சிங்கப்பூர் நல்ல சிங்கப்பூர் தொடரில் இன்று நான் உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புவது, சிங்கப்பூர்-இல் புகை பிடிப்பவர்கள் கவனிக்க வேண்டிய நடைமுறைகள் பற்றிய சட்டங்கள்.
ஆரம்பத்தில் யாரும், எங்கும் (உணவு விடுதி, சாலை, வீட்டு வாசல், கட்டிடங்களுக்கு அடியில் உள்ள உட்காருமிடம், pub என எங்கும்) புகை பிடிக்கலாம், ஆனால் வெண்குழல் வத்தியின் ( சிகரெட்), கருகிய மொட்டு-வை மட்டும் கவனமாக குப்பை தொட்டியில் மட்டும் போட வேண்டும் ( சும்மா தூக்கிஎல்லாம் போடக் கூடாது, மொத தடவ மாட்டினா- S$ 200 அபராதம், ரெண்டாவது தடவ மாட்டினா கோர்ட் வழியா மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள ஏரியாவுல கூட்டுரவுங்களுக்கான ஸ்பெஷல் டிரஸ்ஐ போட்டு நாம ஏரியாவை ரெண்டு மணிநேரம் சுத்தம் பண்ணனும் )( அதை போட்டோ வேற எடுத்து வச்சிக்குவாங்க )


சுமார் மூன்று வருடங்களுக்கு முன் புதிய நடைமுறையை சட்டமாக்கினார்கள். என்னவென்றால், மூடிய இடங்களில் புகை பிடிக்கக்கூடாது, பள்ளி, பேருந்து நிலையம், தொடர்வண்டி நிலையம் + அவற்றின் எல்லைக்குள் இருக்கும் இடங்களில் புகை பிடிக்கக்கூடாது, காற்றோட்டமான உணவு விடுதியில் மொத்த பரப்பளவில் பத்து சதவீதத்திற்குள் மஞ்சள் கோட்டிற்குள் மட்டுமே புகை பிடிக்கலாம். ஆனால் மற்றகாற்றோட்டமான இடங்களில் பிடிக்கலாம் ஆனால் மொட்டு-வை சரியாக குப்பை தொட்டியில் மட்டும் போடவேண்டும்.


இந்த நேரத்தில், வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் ( மலேசிய உட்பட )ஒரு பெட்டிக்கும் குறைவான பயன் படுத்திய புகை குச்சிகள் ( அதாவது ஒரு பெட்டியில் அதிகபட்சம் இருபது என்றால், பத்தொன்பது புகை குச்சிகள் வரியில்லாமல் கொண்டுவரலாம் ) ( சிங்கப்பூர்-மலேசியா இடையில் ஒவ்வொரு நாளும் ஐன்பதாயிரத்திற்கும் அதிகமான மக்கள் தரைவழியாக இடம்பெயர்கிறார்கள், இவர்களில் பெரும்பாலும் வேலைக்காக சிங்கப்பூர் வருகிறார்கள்)( அப்படியானால் எத்தனை ஆயிரம் புகை குச்சிகள் வரி செலுத்தாமல் சிங்கப்பூர் வருகின்றது என கணக்கிட்டுக் கொள்ளுங்கள்)

சிங்கப்பூர் நல்ல சிங்கப்பூர்
வரும் ஜனவரி முதல் புகைபிடிப்பவர்களுக்கு புதிய நடைமுறை சட்டம் அமலுக்கு வருகின்றது. எளிய முறையில் என்னவென்றால், குறிப்பிட்ட புகைபிடிக்கும் (மஞ்சள் கோட்டுக்குள்-சாம்பல் கிண்ணம் உள்ள) இடத்தில் மட்டுமே புகை பிடிக்கலாம். அதைவிடுத்து வேறெங்கு பிடித்து மாட்டினால் முதல் முறைக்கு S$ 200, அபராதம், மேலும் இனி சிங்கப்பூரில் புகைக்கும் ஒவ்வொரு புகை குச்சியிலும் வரி கட்டியதற்கான வில்லை இருக்க வேண்டும்.அது SDPC- Singapore Duty Paid Cigarette. புகை குச்சியில் எப்படி அச்சிட்டு இருக்க வேண்டுமென்று அறிவுறுத்தல் படமும் கொடுக்கப் பட்டுள்ளது.

பின் குறிப்பு:-

ஒவ்வொரு புகை குச்சி பேட்டியின் மேலும், புகையால் பாதிக்கப் பட்டவர்களின் புகைபடம் அச்சிடப்பட்டிருக்கும். அதில், வாய் புற்று, கழுத்து புற்று, கை மற்றும் காலில் தோல் சம்மந்தம்மான வியாதிகள் மட்டுமல்லது, பெண்களுக்கு கருகளைப்பு நடக்கவும் வாய்ப்புள்ளதால், சில ஒன்றிரண்டு மாதத்தில் குறைபிரசவத்தில் வெளிவந்த குழந்தையின் படங்களும் தாராளமாக பார்க்கலாம், ஆனால் விதிவசத்தால் குறைபிரசவ படம் போட்ட பெட்டிலிருந்து புகை குச்சி எடுத்து புகைக்கும் பெண்களையும் காணலாம்.

பின்குறிப்பு (2):-

சுமார் நான்கு மாதங்களுக்கு முன் இதே படங்கள் போட்ட மலபார் பீடி பெட்டியை சிங்கப்பூரில் நான் பார்த்தேன். அன்புமணி அவர்கள் கேட்டுகொண்டுது இதைத்தான்! ஆனால் நம்முடைய நிரந்தர தலைவலிகளில் ஒன்றான அரசியல்வாதிகள் இடையில் புகுந்து அது நடக்கவிடாமல் செய்துவிட்டனர். ஆனால் அதே பீடி தயாரிப்பாளர் சிங்கபுருக்கு மட்டும் பாதிப்பின் படம் போட்டு அனுப்புகிறார்.
வாழ்க இந்திய ஜனநாயகம்!

போலி சாமியார்களும், போலி பகுத்தறிவுவாதிகளும்!?

மதம் - இன்றைய நிலையில் மிகுந்த பிரச்சனைக்கு ஆட்படுகின்ற வார்த்தை.மதம்- இந்த வார்த்தையை போலி சாமியார்களாலும், மத பிரசங்கவாதிகளாலும் மற்றும் நம்முடைய இருக்கும் போலி பகுத்தறிவுவாதிகளாலும் இன்று இதற்க்கு போலி முகம் மாட்டப்பட்டுள்ளது


இந்து மதம் தோன்றியது எப்போது?- இதற்கான பதில் ஆன்மீகத்தில் இருப்பவர்கள், வரலாற்று ஆசிரியர்கள் மற்றும் பகுத்தறிவாளர்கள் என யாராலும் கூறமுடியவில்லை. இயற்கையாக மனிதன் தோன்றியதிலிருந்து இந்து மதம் இருப்பதாகவே நான் உணர்கிறேன்

ஐந்தறிவு மிருகத்திற்கும், ஆறறிவு மனிதனுக்கும் இடைப்பட்ட வாழ்கை வாழ்ந்த போதுஏற்பட்ட வெளிஉலக குழப்பங்கள், பயம் ஒழிய மனிதன் இயற்கையை வழிபட ஆரம்பித்து, ஏன் என்ற பகுத்தறிவால் நாகரீகம் தோன்றியது, நாகரீகத்தில் பதில் இல்லாத கேள்விகளுக்கான (மரணம் என்றால் என்ன?, மரணத்தின் பின்னால் என்ன? அமைதியான, அன்பான மனநிலையில் வாழ்வது எப்படி?) விடை காண மதம் தோன்றியது. நாகரீகத்தின் வளர்ச்சியாகத்தான் மதம் தோன்றியது.


மதம் மனிதனிடம் போதித்து என்ன? தனி மனித ஒழுக்கம். அந்த தனிமனித ஒழுக்கத்தை வளர்க்க தியானம், பிரசங்கம், தான தர்மம், எளிய வாழ்க்கை என்றாக்கியது.

இந்த நிலைவரை பகுத்தறிவும், மதமும் ஒன்றாக இணைத்து மிருகத்தை மனிதனாக்கியது. அந்த பகுத்தறிவு மதத்தில் குறை காணவில்லை.
மனிதன் தோன்றியதிலிருந்து இன்றுவரை மனிதக்குள் இருக்கும் மிருகத்தை கட்டுக்குள் வைப்பது மதமன்றி வேறென்ன. உண்மையில் மதங்கள் போதிப்பது அன்பு, அமைதி, சகிப்புத்தன்மை,ஆசையை ஒழிப்பது என்பதே ஆகும்.


ஆனால் மதமே இல்லை என்று தந்தை பெரியார் முழங்க காரணம் என்ன? தமிழ் மக்களிடம் வேரூன்றி இருந்த, இருக்கின்ற ஜாதி வேறுபாட்டை ஒழிக்கவேண்டியே கடவுள் மறுப்பை ஆரம்பித்தார். ஆனால் ஆண்டுகள் பலவாகியும் இந்த ஜாதி அமைப்பை குறைக்கவும் முடியவில்லை- குலைக்கவும் முடியவில்லை. ஆனால் பகுத்தறிவு பகலவனின் வழித்தோன்றல் இன்னும் ஜாதியிளிருக்கும் உட்பிரிவுகளை கண்டுபிடித்து பிரசவம் பார்க்கிறார். இது ஜாதி,மத ஒழிப்பு நடவடிக்கையா?


பெரியார் தன்னுடைய காலத்திலே, அருள் முருக கிருபானந்த வாரியார் என்ற மதவாதிக்கு எந்த எதிர்ப்பும் சொன்னதில்லையே ஏன்?


தந்தையின் எண்ணத்தை(ஜாதி ஒழிப்பு என்பதே மத ஒழிப்பு ஆனதை) , ஆசையை புரிந்து கொள்ளவே இல்லை பின் எப்படி அதை நிறைவேற்றுவது.


தந்தையின் முதல் சீடன் அறிஞர் அண்ணா கடவுள் இல்லை என்றிருந்தவர் "ஒன்றே குலம், ஒருவனே தேவன்" என்று முழங்க என்ன காரணம்? யாரந்த ஒருவன்? மரண படுக்கையிலிருக்கும் போது அன்பர் ஒருவர் அண்ணாவின் நெற்றியில் பூசிய திருநீரை மறுக்கவில்லையே என்ன காரணம்,? அறிஞருக்கு மரண படுக்கையில் ஏன் இந்த மாற்றம்?


இந்து என்றால் திருடன் என்று கூறியவர் கூட மஞ்சள் துண்டணிந்து கொண்டு, சாயிபாபாவை வீட்டிற்கு வரவழைத்து தன்னுடைய அடி பொடிகளுடன் மோதிரம் வாங்கிக்கொள்கிறார்களே என்ன காரணம்?


ஆன்மீகமும், பகுத்தறிவும் ஒரு வயிற்றில் வந்த குழதைகள். இரண்டும் மக்களை முன்னேற்ற பாடுபடவேண்டுமே அன்றி, தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ளக் கூடாது? என்று கலைஞர் வேலூர் தங்க கோவிலில் முழங்க காரணம் என்ன?


மூட நபிக்கைகளை ஒழிக்கவேண்டுமென மேடையில் ஒலிப்பவர்கள் கூட, தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு பின் வாசல் வழியே உள்ளே நுழைகிறார்களே என்ன காரணம்?

நண்பர்களே சிந்தியுங்கள் போலி பகுத்தறிவாளர்களின் பேச்சை கேட்காமல் உங்களுக்குள் ஒழுக்கத்தை கொண்டுவந்து அமைதியை பரப்புங்கள்.


அதே நேரத்தில், கஜினி முஹம்மது, மற்றும் பலர் அணி அணியாக படை எடுத்துவந்து கொலை, கொள்ளை, கோவில்கள் இடித்து உடைத்தபோதும், (அதில் கஜினி முஹம்மது மட்டும் சிறப்பு, ஏனெனில் தன் படை எடுப்பில் ஒருமுறை குஜராத் சோமநாதர் கோவிலுக்கு கொள்ளையடிக்க செல்கையில் தடுத்த ஐம்பதாயிரம் மக்களை வெட்டிக் கொன்றது மட்டுமில்லாது, சிறந்த கட்டிடக்கலை முறைப்படி அந்தரத்தில் மிதக்கும் வண்ணம் அமைக்கப் பட்டிருந்த சிவ லிங்கத்தை, சுற்று சுவர்களை இடித்து லிங்கம் கீழே வந்தவுடன் அதை எடுத்து கோவில் வாசலில் போட்டுடுடைத்தவன்) இந்தியா முழுக்க ஒவ்ரங்கசீப்பின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்த போதும் இல்லாத ஒரு புதிய விஷயம் தற்பொழுது நாடு முழுதும் பரவி வருகிறதே ஏன்?


புது புது கோவில்களும், புது புது பழக்க வழக்கங்களும். ஏன் இந்த விரிவாக்கம்?


நமது தமிழ்நாட்டில் எப்பொழுதும் வீடுகளில் ஒரு தனி பூஜை அறை, சின்ன வீடுகளில் ஒரு மூலையில் சிறு படம், அல்லது சுவற்றிலே விளக்கு மாடம் அல்லது ஒரு சானுக்கு ஒரு மஞ்சள் வட்டம் அதில் ஒரு குங்கும பொட்டு வைத்து அதை அமைதியாக, மனமுருக வேண்டிக்கொள்வார்கள். ஊருக்கு ஒன்று அல்லது இரண்டு கோவில் மட்டும் இருந்தது. அப்போது தனி மனிதனிடமும் சரி, வீட்டிலும் சரி, ஊரிலும் சரி அமைதி குடி கொண்டிருந்தது.


ஆனால் இன்று ஒவ்வொரு ஊரிலும் புது புது கோவில்கள், பெரிய பெரிய மண்டபங்கள், ( அதே நேரத்தில் பழமை வாய்த்த கோவில் கட்டிடங்களை காணாமல் விட்டுவிட்டனர்) ஆண்டு தோறும் விநாயகர் ஊர்வலம் என எல்லாம் இருந்து மக்களிடையே மன அமைதி இலையே என்ன காரணம்?நமது மனம் அமைதியடைய கோவில் கட்டுகிரோமா, இல்லை பிறர் மனம் நோக கட்டிகிரோமா?

மனைவியை, காளி தேவியாக பார்த்த ராம கிருஷ்ணர்,
சகோதரர்களே...சகோதரிகளே...என்று சிகாக்கோ மாநாட்டில் முழங்கிய விவேகானந்தர் செய்த மத தொண்டு...

இன்று நீங்கள் புது கோவில் கட்டுவது, விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவது ( சிலையை முழுவதுமாய் கறைப்பதுமில்லை, அடுத்தநாள் கை போன பிள்ளையார், காளி போன பிள்ளையார், தும்பிக்கை இல்லாத பிள்ளையார் என பார்க்கலாம்) என செய்யும் மத தொண்டு,

இதில் எந்த மதத்தொண்டு மக்களை அமைதியாக சந்தோசமாக வாழவைத்தது என்று சிந்தியுங்கள். போலி மததொண்டை விடுங்கள்மிருகத்திலிருந்து மனிதனாக, மனிதனை பண்படுத்தியது பகுத்தறிவும், மதமும், ஆனால் இன்று மனிதனை மீண்டு மிருகமாக்கும் முயற்சிகள் கிட்ட தட்ட வெற்றி கண்டு கொண்டிருக்கிறது போலி பகுத்தறிவும், போலி மதவாதமும்.

இப்படி இருந்தா நான் இந்தியாவை எப்படி காப்பாத்துறது!?

இன்னைக்கி இந்தியாவுல மக்கள் தொகை சுமார் 110 கோடி ( என்னைய விட்டுடீங்கன்னு யாரும் கோவிச்சுக்காதீங்க, சொன்னங்கன்னா சேத்துரலாம்)
அதுல்ல 11 கோடி ரிட்டயர் ஆகி சும்மா இருக்காங்க, இல்லன்னா கெடச்சவனுக்குகெல்லாம் அட்வைஸ் பண்ணுறாங்க...
அடுத்த 34 கோடி பேரு மாநில அரசுகள்ளையும்,


22 கோடிபேறு மத்திய அரசு வேலைள்ள (சும்மா ) இருக்காங்க
ஒரு கோடிபேறு IT -ல வெளிநாட்டு கம்பனிகளுக்காக வேலை செய்றாங்க
25 கோடிபேறு பள்ளியோடதிலும்

அஞ்சு வயசுக்குள்ள ஒரு கோடி பேருமா


வேலையில்லாம 15 கோடி பேருமாஉடம்பு சரிஇல்லாம ஆஸ்பத்திரிலே 1.2 கோடி பேரும்


அதுக்கும்மேல 79,99,998 பேரு ஜெயுலுல இருக்காக


மிச்சமிருக்குறது நீயும்( ஒருமைக்காக தான் மரியாதை குறைவுக்காக அல்ல), நானும் தான்


அதுல நீயி(ஒருமைக்காக தான்) இந்த பதிவ பாத்துகிட்டு டயத்த வேஸ்டு பண்ணிக்கிட்டு இருக்க

இப்ப நா மட்டு போயி எப்படி இந்தியாவ காப்பத்துறது?வாங்கப்பா வந்து கும்மியடிச்சுட்டு போங்க...

பைத்தியங்கள்(தமிழர்கள்) ஒன்று சேர்வதில்லை

பைத்தியங்கள் ஒன்று சேர்வதில்லை - பழமொழி. இன்று அது தமிழர்களாகிய நமக்கு மிக மிக பொருந்தும்.

தமிழர்களால் கடந்த இருபது, முப்பது வருடங்களாக தீர்க்க முடியாத பிரச்சனைகள் எத்தனை, எத்தனை.

காவேரி பிரச்சனை :-

தாய் காவேரி என்று பெருமையுடன் தமிழ்நாட்டில் அழைக்கப் படும் ஆறு, ஏழு மாவட்டங்களில் வாழ்வும், வளமுமாக மக்களுக்கு இரண்டாம் தாயாக இருந்த ஆறு. விவசாயம் மட்டுமின்றி தற்போது பல ஊர்களுக்கு குடிநீர் தேவையை தீர்த்துவைக்கும் ஆறு

கோடைகாலம் வந்தால் வழக்கம் போல, வரிசைகிரமம் தப்பாமல் சில காட்சிகள் நடைபெறும். எதிர்கட்சிகள் முதலில் கண்டனத்தை தெரிவித்து, தனியான உண்ணாவிரதம் இருப்பார், நடிகர்கள் தனியாக உண்ணாவிரதம், பேரணி, பேட்டி, ஆவேசபேச்சு பின்னர் மன்னிப்பு என படிபடியாக சூடு பிடிக்கும் பிரசனை, ஆளும்கட்சி அரசுமுறை பந்த்( விமானம் உட்பட)(வெளிநாடு, வெளிமாநிலத்திலிருந்து வரும் இழிச்சவாய் கூலி தமிழன், அவன் கலயாணத்திற்கு வந்தாலும் சரி- காரியத்துக்கு வந்தாலும் சரி Go Back தான்) ( அரசுமுறை பந்த் என்பது வெளியிலிருப்பவர்களை பாதிக்கவா இல்லை தமிழர்களை பாதிக்கவா என்று இதுவரை புரியவில்லை) நீதிமன்றம் குட்டினால், பின்னர் ஏதாவது செய்து தன்னுடைய இருப்பயையும் உறுதி செய்துவிடுவர். அவ்வளவுதான் காவிரி...

இலங்கை தமிழர் பிரச்சனை:-

இலங்கை வாழ் தமிழர், விடுதலை புலி என்று இலங்கை பிரச்சனையைப் பற்றி பேசவரவில்லை. இந்தியாவுக்கு அகதியாக வந்த இலங்கை தமிழர் பற்றிய பார்வை. அகதி தமிழர் தேசிய கட்சிகளுக்கு ஒரு பார்வை- மாநில காட்சிகளுக்கு ஒரு பார்வை, ஆளும் கட்சிக்கு ஒரு பார்வை- எதிர்கட்சிக்கு ஒரு பார்வை என யாருமே அவர்களை மனிதனாக பார்க்கவில்லை.மேலும் இலங்கை பிரச்சனயில் மத்திய அரசு அதை செய்ய வேண்டும், மாநில அரசு இதை செய்ய வேண்டும். நான் இதை செய்யப் போகிறேன் என தோள்கள் தினவெடுக்க பேசுபவர்கள் கூட ஏதும் செய்யவில்லை எனபதே உண்மை.

இலங்கையிலிருந்து உலகின் பல்வேறு பகுதிகளுக்கு சிதறி ஓடிய தமிழ் மக்கள் இன்று பொருளாதாரத்திலும், சமூக அமைப்பிலும் பெரிய நிலைக்கு சென்றுவிட்டனர். ஆனால் இந்தியா வந்தவர்களின் நிலை...

முல்லை பெரியாறு:-

முல்லை பெரியாறு மத்திய தமிழ்நாட்டு மக்களின் விவசாய தேவை மட்டுமின்றி மதுரை மாநகர் மற்றும் பல ஊர்களுக்கு குடிநீருக்கும் வைகை ஆற்றை தான் நம்பிஉள்ளோம்.

தேனீ மாவட்ட மக்கள் வருடம் தவறாமல் நன்றி மரியாதையை செலுத்துவது பென்னி குயிக் என்பவரின் சிலைக்கு. யாரந்த பென்னி குயிக்? இந்த மக்களுக்கு மாமனா, மச்சானா? இல்லை ஏதேனும் ஜாதி சங்கத்தை ஆரம்பித்தவரா?

மலைகளின் மேலே வெள்ளை அரசுக்காக ஆணை கட்ட ஆரம்பித்து, ஏற்பட்ட பொருள் செலவால் வெள்ளை அரசு பின்வாங்க இங்கிலாந்தில் உள்ள தன் சொந்த உடமைகளை விற்று வந்த பணத்தில் இந்த பெரியாறு அணையை கட்டிமுடித்தார். ஏன் அவருக்கு இந்த ஆசை? அணைக்கு தன் பெயர் வைக்கவா? இல்லை அந்த பகுதியை வளைத்துப் போடவா? அந்த அணையை கட்டிமுடித்தால் மேற்கே பாய்ந்து வீணாகும் தண்ணீரை அணைகட்டி கிழக்கே தமிழ்நாட்டு பக்கம் திருப்பினால் இந்திய நாட்டிற்கே நல்லது என்ற பொது காரணத்தினால் அன்றி வேறென்ன!

இப்பொழுது புதிதாய் ஒக்கேனக்கல் பிரச்சனை.

இதெல்லாம் தீர்க்க முடியாத பிரச்சனைகளா? இல்லை தீர்க்க மனமில்லையா?

இங்கயே நம் தலைப்பை மீண்டும் பார்ப்போம், இந்தபிரச்சனைகள் தீர்க்க முடியாததுக்கு நாம் (இன, மத, மொழி, கட்சி, கொள்கை மற்றும் தலைமை மேல்) பைத்தியமாக இருப்பதும், அதனால் ஒருங்கிணையாமல் இருப்பதும் தானே அன்றி வேறென்ன.

ஈராயிரமாண்டுகளுக்கு முன்பிருந்தே முறையான பாசனம் செய்தது, உலக நாகரீகங்களுக்கெல்லாம் இணையான தமிழ் நாகரீகத்தை உருவாகிய வைகை, காவிரி ஆற்றங்கரை இன்று ...

தன்னம்பிக்கையின் ஊற்று...

முடியும் என்றால் யாராலும் எதுவும் முடியும் என்பதை மீண்டும், மீண்டும் நிருபிக்க வேண்டும், எல்லோருடைய மனதிலும் ஆழமாக பதிக்க என்ற காரணத்தினாலே எனக்கு கிடைக்கும் நல்ல புகைபடங்களையும், ஒளி தொடர் படத்தையும் இணைத்துள்ளேன்.

முதலில் ஒரு கையை இழந்த பெண்ணும், ஒரு காலை இழந்த ஆணும் ஒரு சிறு குறையும்மில்லாமல் இந்த நடந்ததை எவ்வளவு சிறப்பாக ஆடுகின்றனர் என்று பாருங்கள். அவர்களில் தன்னம்பிக்கைக்கு நமது மனம் நிறைந்த பாராட்டை தெரிவிக்கும் வேளையில், அவர்களிடமிருந்து தெறிக்கும் அந்த தன்னம்பிக்கையின் துளிகளை தவறாமல் பருகுவோம்!
நன்னம்பிக்கை என்பது மனிதர்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல என்று நிருபிக்கும் இந்த ஐந்தறிவு ஜீவனை பாருங்கள். முதல் படத்தில் அந்த சிறுவன் கண்ணில் தெறிக்கும் ஆச்சரியத்தை பாருங்கள்!

உலகில் முதலிடத்தை நோக்கி வளர்ந்துவரும் நோயான, மனதளர்ச்சியை மற்றும் மாமருந்தாக இவர்களை நாம் பயன்படுத்துவோம்.

 
©2009 அப்பாவி | by TNB