மசுரு – உசுரு



கடந்த இரண்டு நாட்களாக வலையுலகை சுற்றிவரும் இந்த காணொளிக்காக பதிவர்கள் கொதித்துப்போயுள்ளதை பல்வேறு இடுகைகள் காட்டுகின்றன.

அதிலும் குறிப்பாக கோவி அண்ணன், ஒரு நிதர்சனத்தை கொஞ்சம் அதிகமாகவே கூறியுள்ளதாகவே கருதுகிறேன். நாம் நாம் வலையுலகை நம்முடைய சொந்த மனவெளிப்பாட்டிற்கான இடமாகத்தான் பாவித்துக் கொண்டிருக்கிறோம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

இலங்கைத் தமிழர்களுக்கு கடந்த ஒரு வருடமாக நேர்ந்து கொண்டிருக்கும் உச்சபட்ச அவலத்தை வலையுலகில் கூவிக்கூவி கூறினாலும், அது சென்றடைந்தது தரையிலிருந்து பத்தடி உயரத்தில் அண்டவெளியில் வாழும் பதிவர்களுக்கு மட்டுமே.

சுயவிருப்பம் இல்லாமல் கூட, இன்றய சமுதாய ஓட்டத்திற்கு ஈடுகொடுக்கவேண்டி சொந்த ஊரிலிருந்து பிடி மண்கூட இல்லாமல் ஏதோ ஒரு ஊரிலோ, நாட்டிலோ பணி செய்து அண்டிப் பிழைத்து வருகிறோம்.

உணவு, உடை, உறைவிடம் போன்ற மனித அடிப்படைத் தேவையைக் கூட தன் சொந்த உழைப்பில்லாமல் பெற்றுவாழும் ஒட்டுண்ணி வாழ்க்கையை வாழபழகி அதில் இன்புற்று வாழ்ந்து வருகிறோம்.

இனி, இனம், மொழி, சமூகத்திற்காக களத்தில் இறங்கி, மாற்று கருத்துடையோர், அரசு இயந்திரம், அரசின் கொள்கைகளை எதிர்த்து பணியாற்றத் துணிவோர் எண்ணிக்கை, விரல்களின் எண்ணிக்கையைத் தாண்டுமா என்பது சந்தேகமே!

ஆனால், அதே சுகவாசி பதிவுலகம் தான் தனி மனிதனின் உடல்நிலையை மேம்படுத்த தன்னாலான உதவியை தாராளமாக வழங்கியது என்பதும் கண்கூடு. தேனீக்கள் கூடிக்கட்டிய தேன்கூடு.

மொத்த தொகையை முதலில் கேட்டதும், அதிர்ச்சியடைந்த தனியுள்ளங்கள் கூட தன்னாலான சிறுதுளிகளை சேகரிக்க ஆரம்பித்ததும், அதே சிறு சிறு துளிகளே இரண்டே வாரத்தில் பெரும் வெள்ளமானதையும் கண்டோம். இதை நிறைவேற்றியதில் பெரும் பங்கு பதிவர்களே சொந்தம்.

ஆக, இந்த இரண்டு சம்பவங்களையும், பதிவர்களின் செயற்பாட்டையும் ஒப்பு நோக்குகையில் தானாக ஒரு உண்மை வெளிவரும். அது,

ஆழமான, நீளமான கடலாக இருந்தாலும் நீந்தி கடக்க பதிவர்கள் தயார் தான். ஆனால், அதிலிருக்கும் திமிங்களங்களும், சுறாக்களும் தன்னை சூறையாடாது என்ற குறைந்தபட்ச உயிர் உத்திரவாதத்தினை எதிர்பார்க்கிறார்கள் நம் பதிவர்கள்.

இதை தவறெனக் கூற எந்த முகாந்திரமும் இல்லை. ஒரு கொடூர நிகழ்ச்சியால் தன் இனம் அழிவதைக் கண்டு கொதிக்கும் நண்பர்கள், அடுத்தவரில் உதவியை எதிர்பார்க்கும் முன், தான் களத்தில் இறங்கிய பின் மற்றவர்களை அழைத்தால் தான் அந்த போராட்டம் வெற்றியை நோக்கி நகரும்.

அது இல்லாத பட்சத்தில் வார்த்தைப் போருக்கு குறைவேதும் இராது!!!

கொடைக்கு – கொடையா?

வரிசைக்கு ஐந்தான படுக்கை

வரிசையில் நேரெதிர் படுக்கையில்

கால்களுக்கு போர்த்தியிருந்த யுவதியும்,

காலாட்டிக்கொண்டிருந்த யுவனையும், தாண்டி

இன்னும் கொஞ்சநாளில் தள்ளாடப்போகும்

பாட்டியும் இடம் பிடித்திருந்தார்!



மூவரும் நடக்கும் வேலையில்

முகம் கொடுக்காது,

பாட்டி புத்தகத்திற்கும்,

யுவன் கையடக்க இசை வட்டிற்கும்,

யுவதி கண்ணாடியில் அழகு முகத்தைப் பார்ப்பதிலும்

கவனத்தை பிடித்து வைத்திருந்தனர்.

பறக்கும் ரயிலில் பயணிப்பதாய் நினைப்போ, என்னவோ...



முழுதும் படுக்காமல், சாய்ந்தேஆசுவாசமானேன்.

டக் டக் என்ற சத்தத்துடன்

அருகே வந்தவளுக்கு நாற்பதிருக்கலாம்.

'எல்லாம் தயார்,இடதா? வலதா?’

என்றவளிடம்,வலது வேண்டாம்,

’சோறு தின்ன வேண்டும்’என்றதும்,

க்ளுக் என்று சிரித்ததில்

பயம் பாதியாக குறைந்தது.



இடது கையை பிடித்துக் கொண்டு,

‘Look at the other side’

என்ற கட்டளைக்குபணியாமல், அத்தையையே

பார்த்துக்கொண்டிருக்கும் போது,

தடியான குழலை

கண்ணிமைக்கும் கணத்தில்

கைநரம்பினுள் நுழைத்தாள்.


சுறுக்கென்ற சிறுவலிக்கு

முகம் சுளிக்கும் முன்,

பாவாடையான போர்வையை

விலக்கி யுவதி,

குட்டைப் பாவாடையில்

அன்னநடை பயின்றாள்.

வலி மறந்து, பார்வையால்

வாசல்வரை வழியனுப்பி

திரும்பியதிலொரு சந்தோச

ஊற்று உள்ளமெங்கும் பரவியது.

அதற்குள் கையெங்கும் பிளாஸ்திரி...


எத்தனை குழந்தைகள்,

அதில் எத்தனை பெண்?

என்ற எனது கேள்விக்கு,

’ஒரே பெண், வயது மூன்று’

என புன்முறுவலில் பதிலளித்ததும்

‘அப்போ, இன்னும் பதினைந்து வருடம்

காத்திருக்கணும், நாம் சொந்தமாக’

வார்த்தையைக் கேட்டதும்,

அடுத்த பிளாஸ்டர் வாயிக்குத்தான்

என்பதை கைநடிப்பில் காட்டவும்,

புன்னகை தான் முகங்களெங்கும் பரவியதே...




அடுத்த அவுட்பாஸ் பாட்டிக்கு...

அறுபது வயதிருக்கலாம்

ஆசை விடவில்லைபோலும்!.





எல்லாம் முடிந்து கைக்கட்டுகளை

பிரித்து வெளியேரும் போது

அத்தை மறக்காமல்

ஆளுக்கொரு பரிசு கொடுத்தது.

பிரித்துப் பார்த்தால்,

தங்கமாய் மின்னுது

‘Be positive(B+)’ பதக்கம்.



கொடைக்கு கொடையா?

"குருதி கொடை”க்கு

பதக்கம் கொடையா?




கேள்வியெழுப்பாமல்,

பாட்டிவழி பாரில்

காபி மட்டும் குடித்து

மன நிறைவோடு

வீடு வந்து சேர்ந்தேன்.

சிங்கையில் டாஸ்மாக்-கின் கிளை!?

நண்பர் ஒருவரின் திருமண வரவேற்ப்பு நிகழ்சியில் கலந்து, மிக அருமையான உணவினை உண்டு விழாவினை சிறப்பித்துவிட்டு!? தேக்காவினுள் இருக்கும் ஒவ்வொரு குறுக்குச் சந்தாக சுற்றி வரும்போது கண்ணில் கண்டது தான் இந்த டாஸ்மாக் கடை.





அதே வியாபாரம், அதே சரக்குகள், அப்படியே டிட்டோ. நம்பாதவர்கள் படத்தினை கிளிக்கி பெரிதாக்கி சந்தேகத்தை தீர்த்துக் கொள்ளவும்.





நீ ஏண்டா அந்தக் கடைக்கு போனாய்? என கேட்பவர்களுக்கு நான் என்ன சொன்னாலும் நம்மப் போவதில்லை. அதனால் சுயவிளக்கம் இல்லை.

தமிழ் வலையுலகம்


வலை உலகம், ஒரு
மாய உலகமென்றே
இதுவரை நம்பியிருந்தேன்..

அறிவாளிகளும், அறிவாளிகளும்
வார்த்தை ஜாலங்களால்
விவாதித்து, களத்தை வெறுமனே
சூடாக்கும் இடமிதுவெனவே எண்ணியிருந்தேன்

நல்ல கருத்துகளுக்கு, கடும் எதிர்ப்பும்,
அஜல்-குஜால் கருத்துகளை
ரத்தின கம்பளத்தோடு வரவேற்கும்
உலகிதுவெனவே வெறுத்திருந்தேன்.

எல்லாம், நேற்றுவரை தான்.
எல்லாம் மாறிற்று. என்
எண்ணங்களும் மாறிற்று.

ஆங்கே ஒருவருக்கு ஆபத்து,
உதவி செய்வோம் வாருங்கள்
என்ற ஒற்றை வரிக்கு,
எத்தனை மடல்கள்?, எத்தனை இடுகைகள்?,
எத்தனை, எத்தனை உதவிக்கரங்கள்!?

உலகமுழுமைக்கும் தமிழில் பரப்பியதும்,
உடனடியாக கூட்டங்கள் நடத்தியதும்,
பணப்பரிவர்த்தனைகளின் விளக்கங்களும்,
இலக்கின் நிர்ணயமும்-நடப்பும்
என அத்தனையும் நடந்தது
ஓர் இரவும், ஓர் பகலுக்குள்.

நம்பிக்கைத் துளிர் விட்டதோடில்லாமல்
கிளை விட்டும் பரவுகிறது.
பரவுவது, பரப்பியதும்,
உதவியதும், உதவி கேட்பதும்
தமிழ் பதிவர்கள் தான்.

என் எண்ணத்தை மாற்றிய
தமிழ் பதிவர்களுக்கு,
நன்றி சொல்வதோடில்லாமல்
நானும் இணைந்தேன், உங்களோடு
என பெருமை கொள்கிறேன்.


உதவ விரும்புவோரின் தொடர்புக்கு:

சிங்கை செந்தில்நாதனுக்காக கூடிய பதிவர்கள் / நண்பர்கள் கூட்ட முடிவுகள்

பதிவர் சிங்கை நாதனுக்கு உதவுங்கள் - Very Urgent


.

சூடான பதிவுலகம்

இன்றய பதிவுலக்கத்தில் சில தலைப்புகளைத் தொட்டாலே போதும் ரெண்டு நாளுக்கு மொத்த பதிவர்களையும் சூடாக்கி சுகமாக குளிர்காயலாம். சும்மா, சாதாரணமாக திரியைக் கொளுத்திப் போட்டால் போதும் அது பாட்டுக்கு பின்னூட்டத்தில் சரஞ்சரமா வெடித்து தூசியைக் கிளப்பி எல்லோர் மேலும் வெறும் புழுதியைப் படியவைக்கலாம். சர்ச்சையின் முடிவில் எழுதியவரோ அல்லது எதிர்த்தவரோ துளியளவுக்கும் மாறியிருக்க மாட்டார்கள்,. என்பதுதான் அதன் தனிப்பெரும் சிறப்பு.

1) கடவுள் நம்பிக்கை சரியா? தவறா?

மனித இனம் தோன்றிய காலம் தொட்டு இருந்து வரும் பழக்கம், இறை தொழல். மொழி தோன்றி எழுதப் படிக்கத் தொடங்கிய காலம் முதல் அதிகாரப்பூர்வமாகவே இருந்து வரும் கேள்வி! லெமூரியா கண்டத்திலிருந்து சிதறி ஓடும் போதும், பிடிமண்ணாக தான் போன பக்கத்திற்கெல்லாம் கொணர்ந்து ஏதேணும் ஒரு கடவுளுக்கு அடிபணிந்தே வாழ்ந்து வருகிறான். கடவுள் நம்பிக்கை இல்லாத கண்டமும் இல்லை, நாகரீகமும் இல்லை, மொழியும் இல்லை என்பதே உண்மை.


பல்லாயிரம் அறிஞர்கள் பல நூற்றாண்டுகளாக வாத, விவாதம் புரிந்தும் முடிவுக்கு வர முடியாமல் நீண்டு கொண்டே இருக்கும் அனகோண்டா தான் இந்த இறை நம்பிக்கை. ஆனால், அவர்களுக்கு கிடைக்காத அற்புதம் ஒன்று இந்த நூற்றாண்டு மனிதனுக்கு கிடைத்துள்ளது. அது ”அறிவியல்”. எனும் தொலைநோக்கு கண்ணாடி.

வெறும் வாத, விவாத்தில் மட்டும் ஈடுபட்டு நேரத்தை வீணடிக்காமல், அறிவியலைக் கொண்டு கடவுளை இருவருமே ஆராயலாமே. வாத, விவாத்தால் மட்டும் கடவுள் நம்பிக்கையை ஒரு சார்பாக மாற்ற முடியாது என்பது வரலாறு. அப்பன், பாட்டனின் தோளில்(அறிவியல்) வசதியாக உட்கார்ந்து கொண்டும் வெறும் பேச்சளவில் மட்டும் இருப்பது, அறிவார்ந்தவர்களுக்கு ஒரு வகையான தோல்வியே!!!

இருப்பாதக் கூறும்போதோ அல்லது இல்லை என்பதைக் கூறும்போதோ தவறான அல்லது கடுமையான ஒரு வார்த்தையைக் கூட புழங்கினாலும் சொல்ல வந்த கருத்தே பாழ்பட்டுவிடும். எதிர் தரப்பினரை திருத்த வேண்டும் என்ற நல்லெண்ணம் உள்ளவராக இருந்தால் பெருமளவில் பொறுமையும், சகிப்புதன்மையும் கொண்டிருக்க வேண்டும். அது இல்லாதவர்கள் வாத, விவாத்தில் ஈடுபடாமல் இருப்பதே மற்றவர்களுக்கு நலம்.

அடுத்து, பதிவுலகத்தில் வாதிப்பவர்கள் இருவருமே ஒரே மொழி மற்றும் கலாச்சார சூழலிலிருந்து வந்தவர்கள் என்பதையும் மறக்கக்கூடாது. மேற்கோள்களும் நமது சூழலை ஒத்ததைக் கொண்டதாக இருப்பதும் முக்கியம். ரத்தமும், சதையும் தந்த அம்மாவிடம் பிணைப்பாக இருப்பதோடு மட்டுமில்லாது, அவர் அறிமுகப்படுத்திய சகோதர – சகோதரிகளிடமும் கடைசிவரை பாசமாக இருக்கும் நாம், இருபது வயதுக்குமேல் பெற்றோரையும் விட்டுவிலகி மனம் போன போக்கில் வாழ்க்கை நடத்தும் மேல்நாட்டவரின் கூற்றுக்களை அப்படியே முழுவதுமாக ஏற்றுக்கொள்ள முடியாது என்பதையும் உணரவேண்டும்.
*******

இடுகையின் நீளம் கருதி, மற்ற தலைப்புகள் பின்வரும் இடுகைகளில் காணலாம்.

எங்கே கடவுள்?

ஆத்தீகனும் தேடுகிறார்,

நாத்தீகனும் தேடுகிறார்.

போற்றியும், திட்டியும்

சகஸ்ரநாமம் பாடுகிறார்.




உள்ளென்றும், இல்லென்றும்

உதவிகள் பல செய்கிறார்,




உள்ளென்றவர் இல்லெனவும்,

இல்லென்றவர் உள்ளெனவும்

உறுத்தலில்லாமல் மாறுகிறார்.



அங்குமில்லாமல், இங்குமில்லாமல்

நடுவில் அப்பாவியாக நின்றாதால்

இருவரும் பெற்ற பெரும்பேர்

எனக்கில்லாமல் போகுமோ?




உள்ளென்பதோ, இல்லென்பதோ

இன்றே தெரிந்தால்,

போற்றியோ, திட்டியோ

சகஸ்ரநாமம் பாட

நானும் தேடுகிறேன்

எங்கே கடவுள்?

காக்கை நேசம்

சோறைப் பங்கிடும் போது
பொங்கிடும் நேசம்,

பீரைப் பங்கிடும் போது
குறைகிறதே நேசம்!?




சிகரெட்டைப் பங்கிடும் போது
பரவிடும் நேசம்,

நான் பார்க்கும் பெண்ணையே, அவனும் பார்க்கும் போது
குறைகிறதே நேசம்!?




கையிலிருக்கும் காசெல்லாம் கொடுத்து பஸ்ஸேத்திவிடும் போது
கலங்கிடும் நேசம்,
கொடுத்த காசைக் கேட்கும்போது
கலங்கிடுதே நேசம்!?




சாதனை புரிந்தான் என் நண்பன் என
மார்தட்டும் நேசம்,

சீரழிந்த பழைய நண்பனைக் கண்டதும்
ஒளிந்திடுதே நேசம்!?




காக்கையும், குருவியும் என் ஜாதி
என்றிடும் நேசம்,
தன் ஜாதிப் பெண்ணைக் காதலித்தால்
அரிவாள் எடுக்கிறதே நேசம்!?




பச்சை வரிகள் மட்டுமே நான்,
என்றிடுமே என் நேசம்.,

சிவப்பு வரிகள் என் நண்பர்களாக் கூடாது
என்றிடுமே என் நேசம்!!!




என் இதயத்தில் நிறைந்திருக்கும் நண்பர்கள் அனைவருக்கும்,

நண்பர்கள் தின வாழ்த்துகள்!!!

 
©2009 அப்பாவி | by TNB