என்ன தலைவா, அம்புட்டு தானா ஓம் பவரூ???

இன்னதை நாளா, நம்ம தாத்தா பலே கில்லாடி, நினைச்சத முடிக்கக் கூடியவரு, மனசுல பட்டதைச் சரியா செஞ்சு முடிப்பாரு., அவருக்கு வேணும்கிறத அடைஞ்சே தீருவாரு., நல்லவரு – வல்லவரு.,

தண்டவாளத்துல தலைய வச்சு படுத்துக்கிட்டே இந்தி -ய ஏத்திகிட்டு வந்த ரயில தமிழ்நாட்டுக்குள்ள வரவிடாம தடுத்து, தமிழயும் – தமிழ்நாட்டையும் பெரிய அழிவுல இருந்து காப்பாத்துனவரு., இந்த தடவை மேலையும் – கீழையும் கூட்டணிக் கட்சியோட மைனாரிட்டி ஆட்சி பண்ணுனாலும் தமிழ மறக்காம `செம்மொழி` யாக்கினதால தான் இன்னிக்கும் நம்ம தமிழ் உசுரோட இருக்குது, இன்னிக்கி பிளாக்கு தமிழ்ல எழுதுறதுக்கே நம்ம தாத்தா தமுழ செம்மொழி ஆக்கினதால தான்னு வேற பேசிக்கிறாக,அடுத்து ராசாசி – பெரியாரு (1), அண்ணா – காமராசரு – இந்திரா காந்தி (2), எம். சி. யாரு – நெடுஞ்செழியன் (3)., ராசிவ் காந்தி - ஜெயலலிதா – வைக்கோ – ராமதாசு – சோனியா காந்தி (4)., விசயகாந்து – சரத்குமாரு(5) இப்பிடி அஞ்சு தலைமுறை ஆளுகளோட `அரசியல்` பண்ணி அப்பப்ப செயிப்பாருல்ல,
கடந்த பாஞ்சு வருசமாவே டில்லில இவருக்கு நல்ல பவரு இருக்கு – இவரு சொல்லுற ஆளு பிரதமராக முடியுமோ இல்லீயோ, இவருக்கு பிடிக்காத ஆளு நிச்சியமா பிரதமரா ஆக முடியாதுல்ல!,
அடுத்து டில்லிக்கி பிளைட்டெடுத்து போனாருன்னா அவரோட தம்பிகளுக்கு வேணும்ற அமைச்சரு பதவிய அள்ளிக்கிட்டுத்தான் வருவாரு, மயங்களுக்கும் – பேரைங்களுக்கும் சண்டை வந்து அடிச்சிகிட்டு சொக்கப்பனை கொளுத்தி விளையாடினாலும் ஒரு ராத்திரியில கூப்பிட்டு, பேரம் பேசி பஞ்சாயத்தை முடிச்சிருவாரு, அதைப் பாத்து நமக்கெல்லாம் `கண்கள் பனிக்கும் – நெஞ்சம் இனிக்கும்ல`
அப்புறம் பாத்தீங்கன்னா, கட்சிக்கு கூட்டணி சேக்கனும்ன்னா நல்ல உணர்ச்சியைத் தூண்டுற மாதிரியா கவிதை எழுதுவாரு, இல்லை இருக்குற கூட்டணியை ஒடைக்கனும்ன்னா `நாய் கவிதை` மாதிரி எழுதி கூட்டணி ஆளுக்கள செல்லாமக் கொள்ளாம ஓட விட்டிருவாருல.
எம்புட்டு பெரிய பிரச்சனையும் ஒன்னாலதான்னு போய் கேட்டமுன்னா., `இல்லை இது அவரு அன்னிக்கி இப்பிடி நடந்துகிட்டதால தான் இன்னிக்கி இப்பிடி ஆயிப்போச்சு` ன்னு பிரச்சனைய தெச திருப்பீருவாரு.
என்ன தலைவா, அரநா உண்ணாவிரதமிருந்து இலங்கையில சண்டைய நிப்பாட்டுனீங்களே, அவிய்ங்க இன்னும் குண்டு போடுறத நிப்பாட்டலையேன்னு கேட்டா, `மழ விட்டும் , தூவானம் விடலைன்னு` எதுக – மோனையா பேசியே நம்ம கவலையெல்லாம் மறக்குற மாதிரி, இனிக்க - இனிக்க பேசுரத கேக்குற நமக்கெல்லாம் உச்சி குளுந்து போகும்ல.

என்னா தலைவரே, கருத்து கணிப்பெல்லாம் நமக்கு சாதகமா இல்லீயேன்னு கேட்டா, `நாங் கருத்துக் கணிப்பெல்லாம் நம்புறதில்லை` ன்னு சொல்லீட்டு, இருட்டோட, இருட்டா `அரசியல்` பண்ணியே செயிச்சிருவரு.,
இம்புட்டு பெரிய தலைவரு, முந்தாநேத்து சொந்தக்காரங்களையெல்லாம் கூட்டிக்கிட்டு டில்லிக்கி போறதப் பாத்ததும், ஆகா, நம்ம அண்ணனுக்கு உள்துறை மந்திரியா கேபினட்டை, அக்காவுக்கு இளைஞர் நலத்தையும் வாங்கீட்ட்டு தான் வருவாருன்னு காத்திருந்தா., பேரம் படியலைன்னு சும்மா வந்திட்டியே தலைவா??
ஓம் பவரு அம்புட்டு தானா? நீயி பெரியாளுன்னு நாங்க தான் தப்பா நினைச்சுக்கிட்டு இருக்கோமா???

பிரபாகரனைக் கொன்னது சரி தானா?

சொந்த ஊருக்கு டைட் செட்யூலில் லீவுக்கு வந்திருக்கும் போதும், இந்திய, இலங்கை பிரச்சனையைப் பார்த்து மனசு மட்டும் அப்பப்ப நொந்து போயிருது. வந்தன்னிக்கே பார்லிமெண்ட் எலெக்சன் ரிசல்டைக் கேட்டதும் கொஞ்சம் ஷாக் தான். இருக்காதே பின்னே, இலங்கையில இன அழிப்பு நடந்துக்கிட்டு இருக்கு, அங்க இருக்குற அரசாங்கமே மக்கள் மேல ஊருல - உலகத்துல தடைப் பண்ணுன கெமிக்கல் பாமை போட்டு கெமிக்கல் அலிக்கு அடுத்த எடத்தை நம்ம ராசபக்சே அண்ணாச்சி எடுத்துகிட்டு இருக்காரு, நம்ம நாட்டுல ஆளுங்கட்சிகளோ `நாங்கல்லாம் ஆயுதமெல்லாம் தரலைன்னு` சொல்லுது, தாத்தாவோ உடநிலையைக் கருத்தில் கொண்டு, உண்ணாவிரதத்தை அரைநாளிலேயே முடிச்சிக்கிட்டாரு. அம்மா சொல்லுறதெல்லாம் சும்மான்னு விவரமில்லாதவன் மொதக்கொண்டு எல்லாத்துக்கும் தெரியும்!

இருக்குற கடைசி நம்பிக்கை மக்களோட ஓட்டுப் போடுற `கை` மட்டும் தான். இது தான் ஈழத்துல இருக்கிறவங்களுக்கு நல்ல வழியைக் காட்டப் போகுதுன்னு காத்துக்கிட்டு இருந்தா, எல்லாமே நிராசையாப் போச்சு. மக்கள் `கை`யை மேல தூக்கிவிட்ட உடனே, அங்க இலங்கையில இயக்கத்தோட கடைசி மூச்சையும் கரெக்ட்டா நசுக்கிப்புட்டாங்க. எல்லாமே சொல்லிவச்ச மாதிரி நடக்குது. கேட்டா `இல்லவே இல்லைன்னு மஞ்சள் துண்டைப் போட்டு தாண்டுவாய்ங்க`. அதனால கேக்குறதுல புரயோசனமே இல்லை.

ஏதோ, நம்ம தாத்தாவோட புண்ணியத்துல, `பிரபாகரன் உயிரோடவோ இல்லை பிணமாகவோ கிடைத்தால், அலெக்சாண்டர் – போரஸை நடத்தியபடி நடத்த வேண்டும்`ன்னு கேட்டுக்கிட்டதால, பிரபாகரன் பொணத்தை ஏதோ மரியாதையா காமிக்கிராய்ங்க. தாத்தா மட்டும் கேக்கலைன்னா `அம்மனமாக்கி அவமானப்படுத்திருப்பாய்ங்க`. இதுல இருந்தே தாத்தாவோட கணிப்புக்கு - வாய்ஸ்க்கு, ராசபக்சே கிட்ட எவ்வ்ளோ ரியாக்சன்னு நமக்கு புரிஞ்சிருக்கும்!?எல்லாம் தான் முடிஞ்சி போச்சே, காசை வாங்கிட்டு ஓட்டுப் போட்ட மக்கள்கிட்ட பிரபாகரனை கொன்னதாச்சு தெரியுமான்னு கேக்கலாமுன்னு ஊருக்குள்ள ஒரு ரவுண்டு விட்டு பாக்குறப்ப, மீசைய முறுக்குனபடி வெறப்பா நம்ம சொந்தக்கார பெருசு டீக்கடையில ஒக்காந்து இருக்கிறதப் பாத்ததும், நமக்கொரு டீய ஆடர் பண்ணிட்டு, `என்னா பெருசு நல்லா இருக்கியா?, டியெம்கே கூட்டணி செயிச்சிருச்சு போலிருக்கு` ன்னு கேட்டதும்,


பாக்கனுமே அழகை!?, வாயெல்லாம் பல்லாவுல்ல இருந்துச்சு, `ஆமாமா, எங்கிட்டோ வேலை செஞ்சாங்க, செயிச்சாங்க`ன்னுச்சு பெருசு. `எது, எலெக்சனுக்கு மொதனா ராத்திரி ஏழுமணிக்கு கரண்டை ஆப்பண்ணிட்டு வீட்டு, வீட்டுக்கு நல்ல சப்ளையாமே அதா?` எனக் கேட்டதும், `ஆமா, எல்லா வீட்டையும் பாத்துட்டாங்கல்ல` என சந்தோசமாக சொன்ன பெருசுக்கிட்ட,


அது இருக்கட்டும் பெருசு, இலங்கையில பிரபாகரனைக் கொன்னுட்டாங்க தெரியுமா? அதுக்கு காங்கிரஸ் கூட்டணி ஆளுகதான் காரணமுன்னு தெரியுமா?` எனக் கேட்டதும், கொஞ்சம் உக்கிரமாக `மாப்ள, கட்சித் தலைவன்னா – தேர்தல் தோல்விக்கி கவலைப்படக்கூடாது, அதே மாதிரி துப்பாக்கி தூக்கி சண்டை போடுறவனா இருந்தா- - சாவுக்கு தயங்கக்கூடாது` என சொல்லிய பெருசு மூச்சு விடாமல்


`இப்ப எல்டிடியே எடுத்துக்க நம்ம அமைதிப் படை போனப்ப, அவுங்கட்ட இருந்த பெரிய ஆயுதம் கொரிலா தாக்குதல், அந்த கொரில்லா தாக்குதலைத் தாங்க முடியாம செத்த இந்திய ராணுவத்துக்காரனுங்க எத்தனைன்னு தெரியுமா? இது எல்டிடியி மூலமா இந்தியாவுக்கு வந்த மொத அவமானம்,

`அடுத்து கரும்புலிகள்ன்னு வச்சுக்கிட்டு தற்கொலையை பெரிய ஆயுதமாக்குனாங்க. அதைவச்சு ஒரு முன்னாள் இந்திய பிரதமரை, பிரச்சனைக்காகவோ – காசுக்காகவோ தமிழ்நாட்டுல வச்சுக் கொன்னா தமிழ்நாட்டுக்காரய்ங்களுக்கு சிக்கலேன்னு கூட யோசிக்காமலேயே கொன்னாங்க. எல்டிடியி ஆளுக தமிழ்நாட்டைப் பத்தி கவலைப்படாதப்ப, நாம தமிழ்நாட்டு ஆளுக மட்டும் ஏன் அவுகளைப் பத்தி கவலைப்படணும்?


அடுத்து உலகத்துல எங்கயிமே இல்லாத ஆசாரமா, பிளைட்டு வச்சி சண்டை போடுற மொத போராட்டக் கூட்டம் இவங்கதான். பிளைட்ட வச்சு இலங்கையில என்ன வேணும்ன்னா செய்யட்டும், ஆனா இந்தியா கவருமெண்டு மேல ஏதாச்சும் கோவம் வந்துச்சுன்னு பிளைட்ட வச்சி கல்பாக்கத்திலோ – கூடங்குளத்திலோ வந்து குணடைப் போட்டா தமிழ்நாட்டோட கதி என்னாகிறது? ஏற்கனவே தமிழ் மக்களைப் பத்தி கவலைப்படாம தமிழ்நாட்டுல வச்சி பெரிய சோலி பாத்தவங்கதானே?அதனால கூட்டிகழிச்சி பாத்தா, ராசிவ் காந்தியைக் கொன்னதுக்கு பலிவாங்குறாங்களோ – இல்லையோ, கவருமெண்ட விட அதிக பலமான போராட்ட கூட்டத்தை கடனை வாங்கியாச்சும் கொல்றதுதான் சரி. அதைத்தான் இலங்கை செஞ்சிருக்கு, அந்த வகையில பிரபாகரனைக் கொன்னது சரிதான்!` என பெரிசு முடித்ததும், எனக்கு மயக்கமே வந்தது.


`காசைக் கொடுத்தவிய்ங்க மக்கள் மனச எப்பிடியெல்லாம் திரிச்சி வச்சிருக்காய்ங்க`

கடைசியாக கிடைத்த போட்டோ

தன்மான தமிழன்!?

சீனாவுடனான போர்களத்திற்கு

சீனியர் நடிகர்களை

அனுப்பிடுவான்.,


கார்கிலில் களேபரமானால்

காத்திராமல் கோடிகள்

கொடுத்திடுவான்.,


இனத்திர்க்கொரு அழிவென்றால்

கட்சிஎனும் போர்வைக்குள்

ஒளிந்திடுவான்,


தன்மான தமிழன்.

*****************************************

ஈழம் வழி, இந்தியாவிலும்

நுழையும்!?

இன அழிப்பு!


தமிழகத்தில், உள்ளம் இருந்த இடத்தில் பெரும் பள்ளம்!!!


`தமிழன் எனுமொரு இனமுண்டு, தனியே அவனுக்கொரு குணமுண்டு`!!!எனும் வாக்கியத்தை – வார்த்தைகளை இதுவரையில் நாம் வெளிப்படுத்தியும், கடைபிடித்தும், சுதந்திர இந்தியாவில் ஒரு தனிக் கூட்டமாகவே தேசியத்தில் ஒட்டாமல் வாழ்ந்துவருகிறோம். பெரியாரால் ஆரம்பித்து வைத்த இந்த இனமான உணர்வு மெல்ல வளர்ந்து, அண்ணாவின் அனல் தெறிக்கும் மேடைப் பேச்சுக்களாலும், கருத்துகள் மிக்க எழுத்துகளாலும், கலைஞரின் களப்பணிகளாலும் கவரப்பட்டு அறுபதுகளில் மிகப் பெரும் மாணவர் புரட்சியாக வெடித்தது, இந்தியாவுக்கு தமிழன் என்பவன் யாரென வெளிச்சம்(தீக்குளிப்புகள் மூலம்) போட்டுக் காட்டின.


தலைநகரின் கருத்துகளுக்கு எதிர்ப்பில் ஆரம்பித்த புரட்சி, தமிழ்நாட்டில் வாழ்ந்த அத்தனை உள்ளங்களிலும் (தமிழ் – தெலுங்கு – கன்னடம் என தாய்மொழி வித்தியாசமில்லாமல்) சிம்மாசனமிட்டு அமர்ந்தது, தமிழன் எனும் உணர்வு. தமிழன் என சொல்லிக் கொள்வதை பெருமையாக நினைத்ததும், தமிழின் முன் உயிரைத் துச்சம் என துறந்ததை செய்து காட்டியதுமே அதற்கு சாட்சி.


இந்த தமிழன் எனும் உணர்வை தூண்டிவிட்டதில் பெரியாருக்கு பெரும் பங்கும், அண்ணா – கலைஞருக்கே மீதிப் பங்கு என்பதில் எள்ளளவும் ஐய்யமில்லை.


திரை கடலோடியும் திரவியம் தேடு எனும் வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டு உலகத்தின் அனைத்து மூலைக்கும் தொழில் - வர்த்தகத்திற்காக சென்ற தமிழர்கள்களுக்கும், வெள்ளையன் ஆட்சிக்குட்ப்பட்ட நாடுகளின் காடு மேடுகளை செப்பனிட அடிமைதளையிட்டு அழைத்துச் செல்லப்பட்ட தமிழர்களுக்கும், மானசீக தலைமையாகவும், அவர்களுக்குதம் தொல்லைகள் வரும் வேளையில் காக்கும் காவலர்களாவும் இதுவரை அவர்கள் நம்பி இருந்தது மொழிகாக்கத் தோன்றிய இயக்கங்களையும், அதன் தலைமையும் தானே!


ஈழதமிழர் சாவுகளுக்கு இலங்கை அரசு தான் காரணமோ, அல்லது அவர்தம் தலைமை தான் காரணமோ, அப்பாவி தமிழர்கள் வெடிகுண்டுகளுக்கு கொத்து கொத்தாய் பலியாவது மட்டுமில்லாது, பசிப்பிணியெனும் கேவலமான சாவுக்கு தமிழன் ஆட்பட்டுக்கொண்டிருக்கும் வேளையில், அதை கை கட்டி, வாய் பொத்தி வேடிக்கை பார்த்த கட்சிகளுக்கு (காங்., தி.மு.க., அ.தி.மு.க) வாக்களித்து மீண்டும் ஆட்சி பீடத்தில் வைத்து அழகுபார்க்கத் துணிந்ததை எண்ணிப் பார்க்கும் போது, பெரியாரும், அண்ணாவும் ஊட்டி வளர்த்த தமிழன் எனும் கூர் உணர்வு இன்றைய அரசியல் அவலங்களில் முன் மழுங்கிப் போய்விட்டதே!


தமிழ் – தமிழன் என்ற உணர்வின் வெளிப்பாட்டால் தேசியத்தோடு ஒட்டாமல் வாழ்த்த தமிழகம் இழந்தது பல, ஆனால் அவற்றையெல்லாம் தமிழ் உணர்வுக்கு ஈடு இல்லை என ஒதுக்கிப் புறந்தள்ளி பெருமையோடு வாழ்ந்து வந்துள்ளோம். ஆனால் அந்த அடிப்படை உணர்வுக்கே ஆபத்தெனும் வேளையில் தமிழகத் தமிழர்களின் தீர்ப்பு, இதுவரை நாம் செய்த தியாகங்களை கேலிக்குரியதாக்கி விட்டதே?

இந்த காமெடிக்கும் காங்கிரஸ் வெற்றிக்கும் தொடர்பில்லை.

http://www.youtube.com/watch?v=YBXO2VjBRe8
இந்த காமெடிக்கும் காங்கிரஸ் வெற்றிக்கும் தொடர்பில்லை. ஆனால் காங்கிரஸ் வெற்றியை ஓபாமா இப்படித்தான் சொல்லிக்கொண்டிருக்கிரார்னு கேள்வி.

வாக்களித்தவர்களுக்கு அப்பாவியின் நன்றி!!!
தேர்தல் 2009-லின் ஐந்தாம் கட்டமாக தமிழகத்தின் 39 தொகுதியில் வாக்களித்த தமிழ் பெரு மக்களுக்கு நன்றி…நன்றி…

பொருளாதார நெருக்கடியின் காரணமாக வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்ததால் வாக்களிக்க முடியாத என்போன்றோர் ஆயிரமாயிரம், கருத்து - கருத்துகணிப்பு, ஒரு கூட்டணிக்கு ஆதரவு, அடுத்த கூட்டணிக்கு எதிர்ப்பு போன்றவற்றை இணையம், தொலைபேசி வழி பரப்பினாலோ அல்லது திணித்தாலோ களத்தில் இறங்கி பணியை – கடமையை – உரிமையை நிலைநாட்டிய லட்சோப லட்ச உள்ளங்களுக்கு கோடான கோடி நன்றிகள்.

என்னதான் உயர் தர உடைகள், பல்வேறு நாட்டு முறைப்படி தயாரிக்கப்பட்ட சிறந்த உணவுகள், வீடு, வாகனம், பணியிடம் என அனைத்து இடத்திலும் குளிர்சாதன வசதியால் சூரியனைப் பார்க்காமல் உடல் வாழ்ந்தாலும், உள்ளம் என்றுமே பிறந்த வீட்டை, தெருவை, நண்பர்களை, ஊரை, தாய்நாட்டைத் தான் சுற்றி, சுற்றி வருகிறது. சாவதற்குள் சொந்த ஊருக்குப் போய் சேரவேண்டும் என்ற ஆழ்மனதின் ஆசையை உடனிருக்கும் வெளிநாட்டவரிடம் சொல்லி லோல் பட்டதை மறக்கமுடியாது, ஆனால் என் ஆசையையும் விட முடியாது என்ற உண்மை தான் எனது தாய் நாட்டுப் பாசம்.

வாங்கிய காசுக்காகவோ அல்லது நேர்மையான குடிமகன் என்ற உணர்விற்காகவோ இனிய விடுமுறையை வீட்டிலிருந்தபடி கழிக்காமல், கொளுத்தும் கத்தரி வெயிலிலும் மைல் நீள வரிசையில் வால் பிடித்து நின்று பணநாயகமோ அல்லது ஜனநாயகமோ வாக்கு எனும் மிகப்பெரிய ஆயுத்ததை வீணாக்காமல் பிரயோகித்தற்கு மீண்டும் ஒரு நன்றி.

ஆனால், மனசாட்சிக்கு உட்பட்டு வாக்களித்து, மேலேற்றிய நபர் – கட்சியின் தவறான நடவடிக்கையால் எதிர்காலத்தில் மனம் நொந்து போனால், விதியை மட்டும் நொந்துகொள்ளவும் அதற்கு என்னைப் பொறுப்பாக்க வேண்டாம்.

214 பேர்களின் வாக்கு யாருக்கு?

இந்தியாவை அடுத்த நிலைக்கு இட்டுச் செல்லும் தேர்தல்,

ஈழப்பிரச்சனையைத் தீர்த்து வைக்கும் தேர்தல்,

உலக நாடுகளின் வளர்ச்சிக்கும் மேலான வளர்ச்சியை இந்தியாவில் உறுதிப்படுத்தும் தேர்தல்,

பொருளாதார மந்த நிலையால் இந்தியா தேங்கிவிடாமல் காக்கவந்த தேர்தல்

எனப் பலவகையிலும் இந்தியா வாழ் இந்தியர்களுக்கும், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும், இந்தியாவை விற்பனை சந்தையாக பாவிக்கும் நாடுகளுக்கும், இந்தியாவை மக்கள் சக்தியாக – உற்பத்திக்கு தோதான இடமாக பார்க்கும் நாடுகளுக்கும் மிக மிக முக்கியமான தேர்தல், தமிழகத்தை தழுவ சில மணிநேரமே உள்ளது. அபாயகரமான அரசியல்வாதிகளின் பிரச்சாரமும் நல்லவேளையாக முடிந்துவிட்டது.

ஈழத்தமிழர் படும் துன்பத்தை தடுக்கவும், அவர்களுக்கு மருத்துவ உதவிசெய்வது முதல், போரை நிறுத்துவது வரையிலான தமிழக மக்களின் உணர்ச்சிப்பூர்வ மற்றும் மனிதாபிமான கோரிக்கைகளை தமிழக – இந்திய அரசியல்வாதிகள்,

தேர்தல் தேதி அறிவிக்கும் முன் கையாண்ட விதமும்,

தேர்தலின் அனுக்கத்தில் கையாண்ட விதமும்,

தமிழகத் தமிழர்களை குழப்பத்தில் ஆழ்த்தியது மட்டுமல்லாது, அரசியல்வாதிகளின் மேலிருந்த நம்பிக்கையையும் மொத்தமாக இழக்கவைத்துவிட்டது என்றால் மிகையாகாது.


கடந்த பிப்ரவரி 20 தேதியில் நான் எழுதிய
ஓட்டு போடுவீங்களா?, மாட்டீங்களா? இதில் ஒட்டுப்போடுங்க! என்ற இடுகையில் ஆரம்பித்து வைத்த, இலங்கை பிரச்சனையில் உதவாதவர்கள், நாடாளுமன்ற தேர்தலின் நின்று ஓட்டு கேட்டால், உங்கள் வாக்கு யாருக்கு? என்ற கருத்துகணிப்பு வாக்கெடுப்பின் முடிவுகளை வெளியிட வேண்டிய நேரமிது. கருத்தை பகிர்ந்த 210க்கும் மேற்பட்டவர்களுக்கு நன்றி சொல்லி அவர்களின் விருப்பத்தை பார்க்கலாம்!!


முடிவுகளில்,

ஏதாவது ஒரு கொள்ளிக்கு வாக்களிப்பேன் என 20% பேர்கள் தெரிவித்திருந்தனர். அனேகமாக இவர்கள் ஏதாவது ஒரு கட்சிசார்புடையவர்களாகவோ அல்லது ஒரு கட்சியின் தலைமையின் தற்போதைய நடவடிக்கையால் ஈர்க்கப்பட்டவர் அல்லது கட்சித் தலைமையின் நடவடிக்கையால் வெறுப்புற்று, எதிர்கட்சியை ஆதரிக்கும் முடிவை எடுத்தவர்களாக இருக்கலாம். எது எப்படியோ என்னுடைய வாக்கினால்தான் இன்னார் வெற்றி பெற்றார் அல்லது தோல்வி அடைந்தார் என சொல்லிக்கொள்வதில் அலாதி ஆனந்தம் அடைபவர்கள்.


ஓட்டுப் போடபோகாமல் வீட்டிலேயே இருப்பேன்,
என 10 சதவீதத்தினர் தெரிவித்திருந்தனர். உண்மையில் தைரியசாலிகள் தான். நாடும், நாட்டு மக்களும் நாசமாக போனாலும் சரி, எனக்கு கிடைத்த ஒரு நாள் சம்பளத்துடன் கூடிய விடுமுறையை சந்தோசமாக அனுபவிப்பேன் எனும் மனோபாவிகளாக இருந்தால், அபாயம் நாட்டிற்குத் தான்.


போட்டியிடும் யாரையும் தேர்ந்தெடுக்க விருப்பமில்லை என 49 O -விற்க்கு வாக்களிப்பேன், என மீதம் 70 சதவீதத்தினர் தெரிவித்துள்ளனர். இவர்களில் பாதிக்கும் மேலானோர், வெளிநாடுகளில் பொருளாதார தஞ்சம் புகுந்து வாக்களிக்க முடியாத நிலையில் இருக்கும் தமிழர்களாக இருக்கக்கூடும். அதற்கும் மேலாக சொந்த ஊரில் 49 ஓ –வில் வாக்களிக்கும் தைரியம் இருந்து, ஒரு குறிப்பிட்ட சதவீத அளவில் வாக்களித்தால் மட்டுமே இந்தியத் திருநாட்டில்,

தமிழர்கள் இனமான உணர்வு மிக்கவர்கள் தான், ஆனால் அரசியல்வாதிகள் தான் தரம்கெட்ட நிலையில் இருக்கிறார்கள் என்பதை இந்தியாவுக்கும், உலகிற்கும் தமிழர்களாகிய நாம் எழுப்பும் அறைகூவலாகும்!!!

செந்தில் = ஜெயலலிதா!!!

மேலே உள்ள நகைச்சுவைக் காட்சியைத் தெரியாத தமிழர்களே இருக்க முடியாது. வாழைப்பழ கணக்கில் குழம்பிப்போய் இருந்த கவுண்டமணியிடம், ”அண்ணே, நான் திருந்திட்டேன்” என சொல்லி அடுத்து எவ்வளவு நுணுக்கமாக செந்தில் கவுண்டமணியை ஏமாற்றுகிறார் என்பதையும், அதனால் அவர் கடைசியில் கவுண்டமணியிடம் பெற்றது வாய் நிறைய சுண்ணாம்பு மட்டுமே என்பது தமிழ் கூறும் நல்லுலகம் அறியும்.அது திரைப்படம் என்பதால் தண்டனை உடனடியாகக் கொடுக்கப்பட்டது.இந்த காட்சிக்கு இணையாக உள்ளது அரசியலில் நமது ஜெயலலிதாவின் தற்போதைய நடவடிக்கை. அவர் யார்?., அவரின் நடவடிக்கைகள்,

சாந்தமான நேரங்களில் எப்படி நடந்து கொள்வார்!,

கோவமான நேரங்களில் எப்படி நடந்து கொள்வார்!.,

கொள்கையில் எப்படி இருப்பார்!.,

அதற்காக அவரின் நடவடிக்கைகள் எப்படியெல்லாம் இருக்கும் என்பதையும் தமிழ் கூறும் நல்லுலகம் அறியும். (சொல்லக் கேள்வி என்பது குறைவாகவும்,. அவரால் துன்பப்பட்டதே அதிகம், என்பதே தமிழக மக்கள் எல்லோருக்கும் வாழ்வில் பட்ட பாடமாக இருக்கும்!) (அவரை நம்பி வந்த அரசியல்வாதிகளையே என்ன பாடுபடுத்தினார் என்பதை, ஜஸ்வந்த் சிங், ஜார்ஜ் பெர்னாண்டஸ், நல்லகண்ணு போன்றோர் அமர்ந்து காத்திருந்து ஜெயைப் பார்க்க முடியாமல் போன போயஸ் தோட்டத்து நாற்காலிகளையும், தோட்டத்து கதவுகளையும் கேட்டால் பல கண்ணீர் கதைகளைச் சொல்லும்)


முப்பது வருட அரசியல் வழ்க்கையில் இல்லாத அக்கரை, ஒன்பது வருட முதலமைச்சராக இருந்த போது ஈழத்தமிழர்களுக்கு எதிராக பேசிய பேச்சுக்கள், இரண்டு மாதங்களுக்கு முன், ”போர் என்றால் சில உயிர்கள் பலியாகத்தான் செய்யும், அதற்கு நான் என்ன செய்ய முடியும்” என்ற தோணியில் பேசியது எல்லாம் யாரோ ஒரு சாமியார், படங்களுடன் விளக்கம் கொடுத்ததால் ஓரிரவில் தனி ஈழத்தால் ஈர்க்கப்பட்டவர், அதை தேர்தல் மேடைகளில் பேசி, விளக்கி, வாக்கு சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் அம்மையாருக்கு,தேர்தல் முடிந்த பின் திடீரென கனவில் கடவுள் வந்து காட்சியளிப்பதுடன், ”வேண்டாம் மகளே, ஈழத்தை விட்டுவிடு” என சொன்னால், அவரின் இந்த மாற்றத்தைக் கண்டு வாக்களித்த மக்களின் நிலை???


இலங்கைக்கு இராணுவத்தை அனுப்பி தனி ஈழம் பெற்றுத்தருவேன் என சொல்வதெல்லாம் நாற்பது எம். பி பதவிகளுக்காகத்தான். அவர் கட்சி எம். பி பொம்மைகளை வைத்து ஜெ., கண்டுகொண்டிருக்கும் பிரதமர் ஆசைக் கனவின் வெளிப்பாடே இந்த வார்த்தைகள்.


சட்ட மன்ற உறுப்பினராகக் கூட இல்லாமல், தமிழகத்தின் முதலமைச்சார் ஆகி தமிழகத்தை பீகாருக்கு சவால்விட வைத்ததைப் போல், பாராளுமன்ற உறிப்பினராக இல்லாமலே பிரதமர் ஆகி, இந்தியாவை வைத்து பாக்கிஸ்தானின் அரசியலுக்கு சவால்விடப் பார்க்கிறார் நமது அம்மையார்.
பக்கத்து மாநிலத்திலிருந்து தண்ணீர் பெற்றுத்தர முடியாதவர்கள், தனி ஈழம் பிரித்துக் கொடுப்பார்களாம்!

சபாஷ், அம்மா வழியில் தாத்தாவும் தள்ளாமையையும் தாண்டி தனி ஈழம், தமிழ் ஈழம் என புலம்ப ஆரம்பித்துவிட்டார். இந்த புலம்பலுக்கு தேர்தல் தான் காரணம் என்பதை பத்து நாள் முன் பிறந்த குழந்தையும் அறியும்.

உச்ச நீதி மன்றத்தின் இடைக்கால ஆணை, கடைக்கால ஆணை மற்றும் தீர்ப்பு என எதுவாக இருந்தாலும் சரி அதையெல்லாம் கண் கொண்டு பார்க்கவும் மாட்டேன், காது கொடுத்து கேட்டவும் மாட்டேன், என அடம்பிடித்து (வாழ்ந்து!) வருகின்றன அண்டை மாநிலங்கள். மொத்ததில் நதிநீர் பங்கீட்டு விசயத்தில் தேசிய ஒருமைப்பாடெல்லாம் பார்க்க முடியாது என சொல்லாமல் சொல்லி மார்தட்டி, தோள் துடிக்க தினவெடுத்து விஷ்வரூபம் எடுத்து நிற்கின்றன அண்டை மாநிலங்கள்.

அவர்களுடனான தாவாக்களை வழக்கறிஞர்களுடன் ஆலோசனை, உச்ச நீதி மன்றத்தில் ரிட், அடையாள உண்ணாவிரதம், பிரதமர்- ஜனாதிபதி – உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதி போன்றோருக்கு தந்தி, ஒரு நாள் உண்ணாவிரதம், கடையடைப்பு, ரயில் - விமானங்கள் கூட இயங்கமுடியாத அளவுக்கு அரசுமுறை பந்த் என குண்டுச் சட்டியிலேயெ காலத்தை ஓட்டிவிட்டன ஆளும், ஆண்ட கழகங்கள். இடையில் மறவாமல் மத்திய அரசில் அங்கம்.

இதற்காகத்தானா தனிதமிழ்நாடு கோரிக்கையை விடுத்து, வீடு - ஓடு என தேசிய ஒருமைப்பாடு பேசினாரா அண்ணா?
சென்னையில் குடிக்கத் தண்ணீர் இல்லை, ராமநாதபுரத்தில் @#$# கழுவ தண்ணீரில்லை, காவிரி, வைகை ஆற்று படுகைகளில் விவசாயத்திற்கு தண்ணீரில்லை, பருவ மழை கைகொடுத்து வெள்ளாமை வைத்தால் - அறுப்பு வேலைக்கு ஆளில்லை, கிராமங்களில் இளைஞர்கள் இல்லாததால் அவை இன்று கிராமங்களாகவே இல்லை, நகர் புரங்களில் இருக்க இடமில்லை, சென்னையைத் தாண்டி தெற்கே வர தொழிற்சாலைகளுக்கு மனமில்லை, கற்ற தொழிற்கல்விக்கு தமிழ்நாட்டில் வேலையில்லை, வேலையிருந்தாலும் போதிய சம்பளமில்லை, சம படிப்பு படித்து வெளியேருகிறவர்களுக்கு சமமான சம்பளமில்லை, இல்லை...இல்லை...இல்லை...

ஆக, ஆயிரமாயிரம் இல்லைகள் இருக்கும் நாட்டில், இருபது நாட்களுக்கு முன் அம்மாவுக்கு பொங்கிய தனி ஈழப்பிரவாகம் இன்று தாத்தாவிற்கும் பொங்கி உள்ளது. அண்டை மாநிலத்தின் தயவால் காவிரி பொங்குவதைத் தான் பார்க்கமுடிவதில்லை, ஆனாலும், ஈழத்தின் மேல் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுக்கு ஏற்பட்டிருக்கும் இந்த திடீர் பிரவாகத்தை கண் குளிர பார்க்க, ஏனோ முடியவில்லை!

அதற்கு காரண காரிய விளக்கம் தேவையில்லாத அளவுக்கு அந்தர் பல்டிகள் பல அடித்து, உலக தமிழ் மக்கள் மனதில் நீங்காத இடத்தை வெறுப்பால் பெற்றுள்ளனர் இந்திய, தமிழக அரசியல்வாதிகள். தேர்தல் நேரத்தில் அரசியல்வாதிகளுக்குத் தோன்றியிள்ள திடீர் ஈழப்பாசத்தால், வாழ்வாதாரத்தில் வழுக்கி விழாமல் இருக்க வேண்டும். மற்றும், அரசியல்வாதிகளின் தேர்தல் நேர பாசமெல்லாம் வெறும் கூட்டல் – கழித்தல் கணக்கு மட்டுமே என்பதையும் உணர வேண்டும் தமிழ் மக்கள்.

ஈழ விசயத்தில் நேற்று ஒரு பேச்சு –கொள்கை- அறிக்கை, இன்று வேறு பேச்சு – கொள்கை - அறிக்கை என மாற்றி, மாற்றி பேசும் அரசியல்வாதிகளின் போலி முகங்களையும், அவர்கள் தம் விடும் நீலி கண்ணீரையும் நம்பி வாக்களிக்காமல், தமிழ்நாட்டில் வாழ்வாதாரத்தைப் பாதித்துள்ள மேற்கூறிய இல்லைகளை இல்லாமால் செய்யும்!? அரசியல்வாதிகளுக்கு மட்டும் வாக்களிக்க வேண்டுகிறேன்.

ஆனால் இது பகல்கனவு என உள் மனம் கூறுவது, வேதனையாகத் தான் உள்ளது.

போலி சாமியார்களும், போலி பகுத்தறிவுவாதிகளும்!?

மதம் - இன்றைய நிலையில் மிகுந்த பிரச்சனைக்கு ஆட்படுகின்ற வார்த்தை.

மதம்- இந்த வார்த்தையை போலி சாமியார்களாலும், போலி மத பிரசங்கவாதிகளாலும் மற்றும் நம்மிடைய இருக்கும் போலி பகுத்தறிவுவாதிகளாலும் இன்று இதற்க்கு போலி முகம் மாட்டப்பட்டுள்ளது!

இந்து மதம் தோன்றியது எப்போது?- இதற்கான பதில் ஆன்மீகத்தில் இருப்பவர்கள், வரலாற்று ஆசிரியர்கள் மற்றும் பகுத்தறிவாளர்கள் என யாராலும் கூறமுடியவில்லை.

இயற்கையாக மனிதன் தோன்றியதிலிருந்து இந்து மதம் இருப்பதாகவே நான் உணர்கிறேன். ஐந்தறிவு மிருகத்திற்கும், ஆறறிவு மனிதனுக்கும் இடைப்பட்ட வாழ்கை வாழ்ந்த போது ஏற்பட்ட வெளிஉலக குழப்பங்கள் மற்றும் பயம் ஒழிய மனிதன் இயற்கையை வழிபட ஆரம்பித்து,

ஏன் என்ற பகுத்தறிவால் நாகரீகம் தோன்றியது, நாகரீகத்தில் பதில் இல்லாத கேள்விகளுக்கான (மரணம் என்றால் என்ன?, மரணத்தின் பின்னால் என்ன? அமைதியான, அன்பான மனநிலையில் வாழ்வது எப்படி?) விடை கானவே மதம் தோன்றியது.

நாகரீகத்தின் வளர்ச்சியாகத்தான் மதம் தோன்றியது. மதம் மனிதனிடம் போதித்து என்ன? தனி மனித ஒழுக்கம். அந்த தனிமனித ஒழுக்கத்தை வளர்க்க தியானம், பிரசங்கம், தான தர்மம், எளிய வாழ்க்கை என்றாக்கியது.

இந்த நிலைவரை பகுத்தறிவும், மதமும் ஒன்றாக இணைத்து மிருகத்தை மனிதனாக்கியது. அந்த பகுத்தறிவு மதத்தில் குறை காணவில்லை.
மனிதன் தோன்றியதிலிருந்து இன்றுவரை மனிதனுக்குள் இருக்கும் மிருகத்தை கட்டுக்குள் வைப்பது மதமன்றி வேறென்ன?. உண்மையில் மதங்கள் போதிப்பது அன்பு, அமைதி, சகிப்புத்தன்மை,ஆசையை ஒழிப்பது என்பதே ஆகும்.


ஆனால் மதமே இல்லை என்று தந்தை பெரியார் முழங்க காரணம் என்ன?

தமிழ் மக்களிடம் வேரூன்றி இருந்த, இருக்கின்ற ஜாதி வேறுபாட்டை ஒழிக்கவேண்டியே கடவுள் மறுப்பை ஆரம்பித்தார் தந்தை பெரியார்.

ஆனால் ஆண்டுகள் பலவாகியும் இந்த ஜாதி அமைப்பை குறைக்கவும் முடியவில்லை- குலைக்கவும் முடியவில்லை!

ஆனால் பகுத்தறிவு பகலவனின் வழித்தோன்றல் இன்னும் ஜாதியிளிருக்கும் உட்பிரிவுகளை கண்டுபிடித்து பிரசவம் பார்க்கிறார். இது தான் பெரியார் ஆசைப்பட்ட ஜாதி,மத ஒழிப்பு நடவடிக்கைகளா?


பெரியார் தன்னுடைய காலத்திலே, அருள் முருக கிருபானந்த வாரியார் என்ற மதவாதிக்கு எதிர்ப்பும் சொன்னதில்லையே ஏன்?

தந்தையின் எண்ணத்தை(ஜாதி ஒழிப்பு என்பதே மத ஒழிப்பு ஆனதை) , ஆசையை புரிந்து கொள்ளவே இல்லை பின் எப்படி அதை நிறைவேற்றுவது.
தந்தையின் முதல் சீடன் அறிஞர் அண்ணா கடவுள் இல்லை என்றிருந்தவர் "ஒன்றே குலம், ஒருவனே தேவன்" என்று முழங்க என்ன காரணம்? யாரந்த ஒருவன்? மரண படுக்கையிலிருக்கும் போது அன்பர் ஒருவர் அண்ணாவின் நெற்றியில் பூசிய திருநீரை மறுக்கவில்லையே என்ன காரணம்,? அறிஞருக்கு மரண படுக்கையில் ஏன் இந்த மாற்றம்?


இந்து என்றால் திருடன் என்று கூறியவர் கூட, மஞ்சள் துண்டணிந்து கொண்டு, சாயிபாபாவை வீட்டிற்கு வரவழைத்து தன்னுடைய அடி பொடிகளுடன் மோதிரம் வாங்கிக்கொள்கிறார்களே என்ன காரணம்?

ஆன்மீகமும், பகுத்தறிவும் ஒரு வயிற்றில் வந்த குழதைகள். இரண்டும் மக்களை முன்னேற்ற பாடுபடவேண்டுமே அன்றி, தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ளக் கூடாது? என்று கலைஞர் வேலூர் தங்க கோவிலில் முழங்க காரணம் என்ன?

மூட நபிக்கைகளை ஒழிக்கவேண்டுமென மேடையில் ஒலிப்பவர்கள் கூட, தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு பின் வாசல் வழியே உள்ளே நுழைகிறார்களே என்ன காரணம்?

நண்பர்களே சிந்தியுங்கள் போலி பகுத்தறிவாளர்களின் பேச்சை கேட்காமல் உங்களுக்குள் ஒழுக்கத்தை கொண்டுவந்து அமைதியை பரப்புங்கள்.


அதே நேரத்தில், கஜினி முஹம்மது, மற்றும் பலர் அணி அணியாக படை எடுத்துவந்து கொலை, கொள்ளை, கோவில்கள் இடித்து உடைத்தபோதும், (அதில் கஜினி முஹம்மது மட்டும் சிறப்பு, ஏனெனில் தன் படை எடுப்பில் ஒருமுறை குஜராத் சோமநாதர் கோவிலுக்கு கொள்ளையடிக்க செல்கையில் தடுத்த ஐம்பதாயிரம் மக்களை வெட்டிக் கொன்றது மட்டுமில்லாது, சிறந்த கட்டிடக்கலை முறைப்படி அந்தரத்தில் மிதக்கும் வண்ணம் அமைக்கப் பட்டிருந்த சிவ லிங்கத்தை, சுற்று சுவர்களை இடித்து லிங்கம் கீழே வந்தவுடன் அதை எடுத்து கோவில் வாசலில் போட்டுடுடைத்தவன்) இந்தியா முழுக்க ஒவ்ரங்கசீப்பின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்த போதும் இல்லாத ஒரு புதிய விஷயம் தற்பொழுது நாடு முழுதும் பரவி வருகிறதே ஏன்?
புது புது கோவில்களும், புது புது பழக்க வழக்கங்களும். ஏன் இந்த விரிவாக்கம்?


நமது தமிழ்நாட்டில் எப்பொழுதும் வீடுகளில் ஒரு தனி பூஜை அறை, சின்ன வீடுகளில் ஒரு மூலையில் சிறு படம், அல்லது சுவற்றிலே விளக்கு மாடம் அல்லது ஒரு சானுக்கு ஒரு மஞ்சள் வட்டம் அதில் ஒரு குங்கும பொட்டு வைத்து அதை அமைதியாக, மனமுருக வேண்டிக்கொள்வார்கள். ஊருக்கு ஒன்று அல்லது இரண்டு கோவில் மட்டும் இருந்தது. அப்போது தனி மனிதனிடமும் சரி, வீட்டிலும் சரி, ஊரிலும் சரி அமைதி குடி கொண்டிருந்தது.

ஆனால் இன்று ஒவ்வொரு ஊரிலும் புது புது கோவில்கள், பெரிய பெரிய மண்டபங்கள், ( அதே நேரத்தில் பழமை வாய்த்த கோவில் கட்டிடங்களை காணாமல் விட்டுவிட்டனர்) ஆண்டு தோறும் விநாயகர் ஊர்வலம் என எல்லாம் இருந்து மக்களிடையே மன அமைதி இலையே என்ன காரணம்?

நமது மனம் அமைதியடைய கோவில் கட்டுகிறோமா, இல்லை பிறர் மனம் நோக கட்டிகிறோமா?

மனைவியை, காளி தேவியாக பார்த்த ராமகிருஷ்ணர்,

சகோதரர்களே...சகோதரிகளே...என்று சிகாக்கோ மாநாட்டில் முழங்கிய விவேகானந்தர்,

போன்றோர் செய்த மத தொண்டு...

இன்று நீங்கள் அரசாங்க இடங்களை ஆக்கிறமித்து புது புது கோவில் கட்டுவது, விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவது ( சிலையை முழுவதுமாய் கரைப்பதுமில்லை, அடுத்தநாள் கை போன பிள்ளையார், கால் போன பிள்ளையார், தும்பிக்கை இல்லாத பிள்ளையார் என பார்க்கலாம்) என செய்யும் மத தொண்டு, இதில் எந்த மதத்தொண்டு மக்களை அமைதியாக சந்தோசமாக வாழவைத்தது, வைக்கிறது என்று சிந்தியுங்கள்.

போலி மததொண்டை விடுங்கள். மிருகத்திலிருந்து மனிதனாக, மனிதனை பண்படுத்தியது பகுத்தறிவும், மதமும்,.

ஆனால் இன்று மனிதனை மீண்டும் மிருகமாக்கும் முயற்சிகள் கிட்ட தட்ட வெற்றி கண்டு கொண்டிருக்கிறது போலி பகுத்தறிவும், போலி மதவாதமும்.

 
©2009 அப்பாவி | by TNB