நா(ஸ்)த்தீகம்.




பெரியார், கடவுள் மறுப்பை பேச ஆரம்பித்து நூறு ஆண்டுக்கும் மேல் ஆகிவிட்டது. கடவுளை மறுப்பதாக வெளியே கூறித் திரிந்தாலும், அவரின் முழு நோக்கம் அல்லது மறை பொருள் யாதெனில் தீண்டாமையெனும் தீயை வளர்க்கும் ஜாதியை ஒழித்தலே ஆகும்.


எழுத்தறிவும், சரியான சிந்தனைத் திறனும் இல்லாத அன்றைய மக்களிடையே நேரடியாக ஜாதி வேறுபாடு இல்லை, எல்லா ஜாதி மக்களும் சமம் என பிரச்சாரம் செய்தாலோ அல்லது தாழ்த்தப்பட்ட மக்கள் அதை செவிமடுப்பதாகத் தெரிந்தாலோ பணம் படைத்த கிராம பெரும் தனக்காரர்களால் ஏழை, எளிய தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வேலைவாய்ப்பு மறுப்பின் மூலம் பெரும்நெருக்கடி கொடுத்து அவர்தம் ஜாதி ஒழிப்பு ஆசைகளை அடியோடு அழித்துவிடுவார்கள், அதிகாரம் கொண்டவர்கள் என்பதாலேயே பெரியார் கடவுள் மறுப்பின் மூலம் ஜாதி வேறுபாட்டை ஒழிக்க நினைத்தார்.


அதற்காக இந்து மக்களின் புராண, இதிகாச கதைகளிலும், வாய்வழி தெய்வக் கதைகளிலும் தொடர்ந்து கேள்விகளைக் கேட்டுக் கேட்டு அதில் பல கேள்விகளிக்கு விடை இல்லாததை மக்களுக்கு விளக்கி, குருட்டுத்தனமாக இந்து மதத்தையும், அதில் உள்ள ஜாதி வேறுபாட்டை அகற்றவும் முனைந்து சிறிதளவு வெற்றியும் பெற்றார்.


ஆனால் பெரியார் காலமாகி முப்பத்தி ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னரும் இந்த ஜாதி வேறுபாடுகள் துளியும் அசைவில்லாமல் மக்களின் மனதில் சிம்மாசனம் இட்டு அமர்ந்துள்ளதே என்ன காரணம்? உண்மையிலேயே அதை அழிக்கவே முடியாதா? என கேள்விகளை சுயமாகக் கேட்டுக் கொண்டால் கிடைக்கும் பதில், இன்றய தலைமுறை இளைஞர்களுக்கு பெரியாரின் எழுத்துகள் முழு அளவில் போய்ச் சேராதது தான், முக்கிய காரணமாகும். தமிழ்நாட்டில் உள்ள பொது நூலகங்களிலும் பெரியாரின் எழுத்துகள் அடங்கிய புத்தகங்களைத் தேடினாலும் கிடைக்காத அளவிலேயே உள்ளது.


அடுத்ததாக, பெரியார் சொன்னதற்காக காலமெல்லாம் கருப்புச் சட்டடை அணிந்தவர்களும், ’ஐ’ என்பதை ’அய்’ என்று எழுதுபவர்களும், காலம் காலமாக கடவுள் மறுப்பு பேசியவர்களும் கூட தன் வீட்டு திருமணத்தின் போது சொந்த ஜாதியில் தான் பெண்/ஆண் எடுக்கிறார்கள்.


கடவுள் மறுப்பு வாதம் – விவாதத்தில் ஈடுபடும் கடவுள் மறுப்பாளர்கள், தங்கள் சொந்த நவீனக் கருத்தை முன்வைக்காமல் 1940 - 50களில் பெரியார் சொன்ன வாசகங்களை பகுதி, பகுதியாக பிரித்து சாதாரண மக்களுக்கு புரியாதபடி முன் நிறுத்துகின்றார்கள்.


இப்படிப் போனாதால் தான் கடவுள் மறுப்பு எனும் நாத்தீகம் மெல்ல, மெல்ல நாஸ்தீகம் ஆகி நிற்கிறது. யார் இனி இதை முன்னிருத்தப் போகிறார்? ஜாதியை ஒழிக்கப் போவது யார்?

மீண்டும் விளக்கம்



`கவிஞர் தாமரைக்கு கடும் கண்டனம்` என்ற எனது முந்தய இடுகையில் கவிஞர் தாமரை அவர்களுக்கு எனது கண்டனத்தை தெரிவித்திருந்தேன். அதற்கு இரு வேறு விதமான கருத்துகளுடன் பல விமர்சனங்கள் வந்திருந்ததன், வந்து கொண்டிருக்கின்றன.

முதலில் எனது இந்த இடுகைக்கு `மிக நாகரீகமான முறையில் விவாதத்தில் கலந்து கொண்டு பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்`.

பின்னூட்டத்தில் எனது கருத்துகளை ஒத்துக்கொண்டவர்கள் எல்லாம் ஓரிரு வரிகளில் தங்களது ஆதரவைத் தெரிவித்துக் கொண்டனர். என்னுடன் முரண் கருத்து கொண்ட நண்பர்களெல்லாம் மிகப் பெரிய அளவில் தங்களது எதிர் கருத்தை பதிவு செய்தனர்.

சில ஆதரவு கருத்து கொண்ட இடுகைகளும், சில எதிர்ப்பு கருத்து கொண்ட இடுகைகளும் எழுதப்பட்டது, ஆனால் எல்லோருக்கும் முடிந்த அளவுக்கு பதில் சொல்லிவிட்டேன்.

பலர் ஏன், பாரதி கோபப்படவில்லையா?, பாரதிதாசன் கோபப்படவில்லையா?, ஏன், ஆழமான மனத்துயரில் இருந்த கண்ணகி சாபமிட்டது போல், அதனைவிட மோசமான மீளாத்துயரில் இருக்கும் நாங்கள் எங்களை இச்சூழ்நிலைக்குத் தள்ளியவர்கள் மேல் சாபம் இடக்கூடாதா?, எனக் கேட்டிருந்தனர்.

இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் போது, மக்களின் மனத்துயரை போக்கி மக்களை அடுத்த கட்டத்திற்கு இட்டுச் சொல்ல வேண்டிய கடமை தலைவர்களுக்கும், கலைஞர்களிக்குமே உள்ளது. இவர்களின் பேச்சுகளையும், உரைகளையும் கேட்க்கும் போதும், எழுத்துக்களை படிக்கும் போதும் ஏதாவது ஒரு வரியில் அல்லது ஏதாவது ஒரு வார்த்தை மக்களின் விடுதலை வேட்கை உணர்ச்சியைத் தூண்டி மக்களைச் சோர்விலிருந்து மீட்க வேண்டும்.

அதைவிடுத்து, தப்பான ஒரு வரியோ அல்லது ஒரு வார்த்தையோ, பறவைக் கூட்டத்தில் கல்லெறிந்து கலைப்பதைப் போல், சோர்ந்து கிடக்கும் மக்களை சிதறச் செய்யக்கூடாது என்பதே எனது எண்ணம்.

அதைத்தான் எனது முந்தைய இடுகையில் வெளிப்படுத்தியிருந்தேன், இந்த இடுக்கையிலும் அதையேத் தான் வெளிப்படுத்துகிறேன்.
நன்றி...நன்றி...நன்றி.

கவிஞர் தாமரைக்கு கடும் கண்டனம்.

நேற்று வலை சுற்றி வருகையில், சக பதிவர் ஒருவர் கவிஞர் தாமரையின் புதிய கவிதையை அடி பிறழாமல் எழுதியதுடன், அதற்கான மூலத்தின் இணைப்பையும் கொடுத்திருந்தார்.

கவிதையின் தலைப்பைப் பார்த்ததும் ஒரு சிறு குழப்பம் ஏற்பட்டது, அதை புறம் தள்ளி கவிதையை தொடரத் தொடர கோபம் கண்களைத் தாண்டி தன் கொடூர முகத்தை வெளிக் காட்டத்தொடங்கியது. ஓர் இரவைக் கடந்துவிட்டாலும், கோபம் எனும் சாத்தான் தான் ஏறிய இடத்தைவிட்டு இறவில்லை. இன்னும் உள்ளெயே வைத்திருந்தால் ஆபத்து, கொட்டிவிடுகிறேன்.


ஏன் கவிஞர் தாமரைக்குத் தான் கொந்தளிக்கத் தெரியுமா? நானும் பிறந்தது அதே தமிழ் மரபுதான், பாலுண்டதும் அதே தமிழச்சியின் மார்புதான்.

கோபம் இருந்தால், அதை முறையாக வெளிப்படுத்தும் நெஞ்சுரம் இருந்திருந்தால் கவிஞர் தாமரை, ஈழக்கொடுமைக்கான காரண, காரியகர்த்தாக்களின் பெயரைச் சொல்லி சாபமிட்டிருக்க வேண்டும். அது இலங்கையில் இருக்கும் இனப்புல்லுருவிகளில் ஆரம்பித்து பல ஆசிய ஐரோப்பிய நாடுகளைத் தொட்டு வெளிவந்திருக்கும். ஆனால், தாமரை சொல்லிச் சபித்திருப்பதோ என் நாட்டின் பேரைச் சொல்லி!

தனிப்பகையோ, ராசதந்திரமோ குற்றம் புரிந்தது நான்கு பெரும் தலைகள் மட்டுமே. தலைமையின் மேல் குற்றமென்றால், கிழக்குக் கோடியில் இயற்கையைத் தவிர ஏதுமறியா வாழ்க்கை வாழும் அஸ்ஸாமியனும், மேற்கு கடைசியில் இந்து – முஸ்லீம் கலவரத்தில் கை கால் இழந்து பிச்சை புகும் குஜராத்தியனும், வாழ்வுக்கும், சாவுக்கும் நடுவே வெடிகுண்டுகளுக்கு வாழ்கைப்பட்டிருக்கும் காஸ்மீரியனும், இயற்கை வளங்களை சுரண்டக்கொடுத்தும், சுண்டக்கொடுத்தும், இயல் – இசை – நாடகம் எனும் முத்தமிழை ஒருங்கே இணைத்து திரையில் பார்த்து சுகித்து, உணர்ச்சி வற்றிப்போய் வாழ்க்கையை ஓட்டும், எந்த கட்சி ஆட்சிக்கும் பாரபச்சமில்லாமல் வாழப்பழகிக்கொண்ட தமிழனுக்கும் சேர்த்தே தாமரையின் சாபம் என்பதை ஒருநாளும் ஏற்றுக்கொள்ள முடியாது.

அப்படி சாபம்விட்டது எங்கள் தியாகத்தாய் மதிவதனியாக இருந்தால் கண்கள் கலங்க நெற்றி தரையில் பட கவிழ்ந்தே கிடந்திருப்போம். தனக்கு தெரிந்ததை, தனது தொழிலை மட்டும் கொண்டு, எழுத்தாலும், பேச்சாலும் மட்டும் ஆதரவை தெரிவித்துவிட்டு, இன்று தாமரை சாபமிடுவது சிறுபிள்ளைத் தன்மாகவே உள்ளது.

களம் கண்டு மாண்டவர்கள் ஒரு புறம், தாகத்தாலும், பட்டினியாலும் இறந்தவர்கள் மறுபுறமுமாக ஈடுகட்டமுடியாத இழப்புகளின் தழும்பை முழுதும் மறையவைக்க முடியாவிட்டாலும், மருந்திட்டு ஆறவைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் நாம், நமகுள் சண்டையிட்டுக் கொள்ளாமல் கடமையை செய்ய வேண்டிய நேரமிது.

மனைவியை இழந்த கணவனது துன்பத்திற்கு எந்தவிதத்திலும் குறைந்தில்லை அவளின் சகோதரனின் துன்பம் என்பதையும் உணர வேண்டும் கவிஞர் தாமரை அவர்கள்.

உணர்ச்சி கொந்தளிப்பில் முட்டாள் தனமாக
உயிரைத் துறந்த முத்துக்குமாரைப் போல்,
உறவுகளைத் தொலைக்காமல் இருக்கவேண்டும் கவிஞர் தாமரை,
என்பதே இந்த அப்பாவியின் ஆசை.



பின்குறிப்பு:-
கவிஞர் தாமரை உபயோகப்படுத்திய, என் மக்களுக்கெதிரான வார்த்தைகளை எனது தளத்தில் வைக்க விரும்பவில்லை. தேவைப்படுவோர், இங்கே சென்று பார்க்கவும்.

.

பள்ளி ஆசிரியர்கள்

இன்னிக்கி அதிகாலைல திடீர்ன்னு பயங்கரமான கனவு. கனவு பாதி போய்க்கிட்டு இருக்கப்பவே பயந்துபோய் எழுந்துட்டேன், எந்திரிச்சா உடம்பெல்லாம் வேர்த்துப்போய், இதயம் பவுண்ட் ஆகிக்கிட்டு இருந்தது. சுத்தும் முத்தும் பார்த்த பின்னாடி தான் கனவுன்னே தெரிஞ்சு அமைதியானேன். என்ன கனவுன்னா ஸ்கூல்ல எனக்கு பாடம் சொல்லிக்குடுத்த டீச்சர் எல்லாம் குச்சியோட வந்து ’ஏன்டா, ஏதேதோ எழுதுறியே, உனக்கு எழுத்துச் சொல்லிக்குடுத்த எங்களைப்பத்தி நல்லதா நாலு எழுதக்கூடாதா?’ ன்னு குச்சியை காமிச்சு மிரட்டி கேட்க்கவே நான் பயந்து எழுந்துட்டேன்.

ஆனா காலைக்கனவு பலிக்கணுமே(இது வாலுக்காக), அதான் உடனே இந்த இடுகையை எழுதுறேன். என்னோட பால்யம் கொஞ்சம் சுவாரஸ்யமாத்தான் இருக்கும்.

இப்ப என்னோட மூணு வயசுல இருந்து ஆரம்பம்.

0 (பாலர் விடுதி):- ஒன்றை வருசம், (ஆயா பேர் – முகம் நியாபகம் இருக்கு ஆனால் பெயர் மறந்து போச்சு)

ஐய்யோ... வாழ்க்கையில் ரொம்ப சந்தோசமா இருந்த நினைவுகளில் பாலர்விடுதிக்கு (எங்கூருல பால்வாடின்னு தான் சொல்வோம்) ரொம்ப முக்கிய இடம் இருக்கு. அம்மாவால என்னைய வீட்டுல வச்சு சமாளிக்க முடியலைன்னும், அடுத்த வருசம் ஒன்னவதுக்கு அனுப்புறதுக்கு ஒரு பிராக்டிஸா இருக்கட்டும்ன்னும் தான் முதன் முதல்ல பால்வாடில கொண்டுபோய் விட்டாங்க. ஆரம்பத்துல அம்மாவை விட்டு பிரிய பயமா இருந்ததுனால பயங்கரமா அழுதேன், ஆனா அங்க இருக்குற ஆயா இதுமாதிரி அழுது அடம்பிடிக்கும் ஆயிரம் தலையை பாத்திருப்பனதால ரொம்ப ஈஸியா மெரட்டி சமாளிச்சு உக்கார வச்சுட்டாங்க. அப்புறம் பழக்கமாயிடுச்சு. ’நெறைய கேர்ள் பிரண்ட்ஸ் கிடைச்சது’.


காலையில கொஞ்ச நேரம் பாட்டு கத்துக்கணும், அம்மா பதினோரு மணிப்போல வந்து தந்திட்டு போன சாப்பாட்டை மதியம் சாப்பிட்டுட்டு, அப்பிடியே ஒரு தூக்கம் மூணு மணிவரைக்கும். கண்டிப்பாய் தூங்கிதான் ஆகணும், தூங்கலைன்னா அடி விழும். தூங்கி எந்திரிச்சதும் மூணு மணிக்கு வீட்டுக்குப் போயிடலாம். அப்புறம் என்ன ஜாலிதான்.

ஆயா மெரட்டி உக்கார வச்சாங்களேத் தவிர மத்தபடி ரொம்ப நல்லவங்க. விளையாட நிறைய பொருள்கள் கொடுப்பாங்க. ரொம்ப நல்லவங்க. ஆனா நான் பத்தாவது படிக்கிறப்ப நோய்வாய்ப் பட்டு இறந்துட்டாங்க. வருத்தமாப் போச்சு.


1 வகுப்பு, (டீச்சர் பேர் – சரோஜினி டீச்சர்)

அய்யோ., அய்யோ. நான் ஒன்னாவது படிச்ச கதை ரொம்ப பெரிய கதை. டீச்சர் ரொம்ப நல்லவங்கதான், யாரையுமே அடிக்க மாட்டாங்க. ஆனா என்னைய முத வாரத்துலையே வெளுத்து விட்டுட்டாங்க. ஆமா, நாம ஒழுங்கா பள்ளிக்கூடம் வந்தாத்தானே. மொதோ நாளு அம்மா வந்து டீச்சர்கிட்ட சொல்லி விட்டுட்டு போனதும், கொஞ்ச நேரத்துலையே டீச்சருக்கு தெரியாம ஸ்கூலை விட்டு வெளியேறி வீட்டுக்குப் போற கடைத்தெருவில(சுப்ரமணியபுரம் படத்துல, ஜெய்யும், சசியும் ரிக்‌ஷாகாரங்களோட சண்டை போடுவாங்களே, அதே தெருதான்) எங்கயாச்சும் ஒக்காந்துக்குவேன். கடைக்கு வந்த யாராச்சும் பார்த்திட்டு போய் எங்கம்மாட்ட சொல்றதும், எங்கம்மா வந்து என்னைய கூட்டிகிட்டு போய் 11 மணிக்கு பள்ளிக்கூடத்துல திரும்ப விடுறதும் ஒரு மாசமா நடந்தது. அப்புறம் தான் டீச்சர் நம்மளை முன்னாடி உக்கார வச்சு அப்பப்ப இருக்கானான்னு பாத்துக்குவாங்க.

டீச்சர், க்,ங்,ச் சொல்லிக்குடுத்தது லைட்டா ஞாபகத்துல இருக்கு. (பிரம்புல அடிச்சதை தவிர நல்ல டீச்சர் தான்)

2 வகுப்பு, ( டீச்சர் யார், என்ன படித்தோம் என்பது ஞாபகத்தில் இல்லை)(அசிங்கமா போச்சு)

3 வகுப்பு, (டீச்சர் பேர் – ஜெசிந்தா மேரி டீச்சர்)

மூணாம் வகுப்புல என்ன படிச்சோம், என்ன செஞ்சோம் என எதுவுமே ஞாபகம் இல்லை. ஆனா, இந்த டீச்சர்கிட்டயும் சேட்டை பண்ணி பிரம்புல கை மாத்தி – மாத்தி பத்து அடி வாங்குனதும், டீச்சர் அவுங்களோட மூணு வயசு பொண்ணு(பேர் ’டால்’) கிளாஸுக்கு கூட்டிட்டி வந்ததும் நல்லா ஞாபகத்துல இருக்கு.
(பிரம்புல அடிச்சதை தவிர நல்ல டீச்சர் தான்)

4 – 5 வகுப்பு, (டீச்சர் பேர் – சரஸ்வதி டீச்சர்)

சரஸ்வதிங்கிற பேருக்கு ஏத்த மாதிரியே ரொம்ப நல்லா பாடம் சொல்லித்தருவாங்க, அப்ப அப்ப கதைகளும் சொல்லுவாங்க (அலிபாபாவும், நாற்பது திருடர்களும் படக்கதையை மெகா சீரியல் மாதிரி மூணு நாள் தொடர்ந்து சொன்னாங்க)

நாலாவது படிக்கிறப்ப Butterfly-க்கு ஸ்பெல்லிங் சொல்ல தெரியாததால கொண்டைக்காலுல வரி வரியா அடிச்ச அடி இன்னும் ஞாபகத்துல இருக்கு.
(பிரம்புல அடிச்சதை தவிர நல்ல டீச்சர் தான்)


தனிப்பட்ட முறையில் எனக்கு ஒரு வருத்தம், “எனக்கு கஷ்ட்டப்பட்டு சொல்லிக்குடுத்த எந்த டீச்சருக்கும் நல்லாசிரியர் விருது வாங்காமலையே ரிட்டயர் ஆகீட்டாங்களே” என்ற கவலை மட்டுமே.

ஆகா, என்னோட ஸ்கூல் டீச்சர்ஸ் கேட்டதை எழுத்தினதே இவ்வ்ளோ சுவாரசியமாய் இருக்கே, இதை அப்படியே தொடர் இடுகை ஆக்கி எல்லோரையும் உண்மையை எழுதச்சொன்னா எவ்வ்ளோ ஜாலியா இருக்கும்.

அதனால் நான் இதை பள்ளி ஆசிரியர்கள் என்ற தலைப்பில் தொடர் இடுகை ஆக்கி மூன்று பேரை தங்களது சுய சரிதையை எழுத அழைக்கிறேன். அவர்கள்...

1) கோவி. கண்ணன் (காலம்).,
2) கார்க்கி (சாளரம்).,
3) சரவணன்(வேடிக்கை மனிதன்)

மூணு பேருமே எந்த பாலாக இருந்தாலும் கோல் போடும் ஆசாமிகள். அதனால் மழுப்பாமல் சங்கிலித் தொடர் இடுகைக்கு புது வளையம் கோர்க்குமாறு அழைக்கிறேன். சட்ட திட்டமெல்லாம் முன்னர் வந்த சங்கிலி தொடர் இடுகைகளில் இருந்தவை தான் + உண்மையை(சொல்ல முடிந்ததை) மட்டும் சொல்ல வேண்டும்.

தாய் - சேய்

மனிதன் முதலில் கற்றுக்கொள்ளும் பாடம் அழுகை, அதுவும் பிறந்த சில நொடிகளிலேயே ஆரம்பித்த அந்த அழுகைக்கு உடனடி பலன் எப்போதும் இருக்கும். பசியை ஆற்றுவது முதல் உடல் சூட்டை தக்கவைக்கத் தேவையான அணைப்பு வரை தாயின் மூலம் கிடைத்து விடும்.

ஆனால் தாயுக்கும் சேயுக்குமான இந்த உறவு, குழந்தையின் முதல் அழுகைக்கும் பல மாதங்கள் முன்னரே ஆரம்பித்துவிடுகிறது. பிறந்த பின் தன்னையே அறியாத சூழ்நிலையிலும் தன் தாயை அறிந்திருக்க வேண்டிய கட்டாயத்தை குழந்தையின் அந்த சின்னஞ்சிறு மூளையில் பதிந்துள்ளது பரிணாமம். தாயோடு தன் உதடுகளில் தோன்றும் வார்த்தைகளால் தொடர்பு கொள்ளும் முன்னரே, உணர்வுகளால் தொடர்பு கொள்ளும் வித்தையையும் தான் பரிணாமம் சொல்லிக்கொடுத்துள்ளது.



அதன் விளைவே, தன் தாயின் கருப்பையிலிருந்து நெளிவு சுழிவோடு, தெளிவாக தான் வெளியேரும் வழியை, வேறு யாரும் கற்றுக் கொடுக்காமலேயே தன்வழியை தானே தேர்ந்தெடுத்து தாயின் உளப்பூர்வமான ஒத்துழைப்போடு இந்த (சிக்கல் மிகுந்த) வெளியுலகை வந்து சேர்கின்றது குழந்தை.

தன் உயிரை தானே காப்பாற்றிக்கொள்ள கட்டாயமுள்ள இரு ஜீவன்கள் தங்களது சக ஒத்துழைப்பால், மூன்றாவது ஆள் உதவி இல்லாமலேயே, தங்களது ஆழ்மனதில் பதிந்திருக்கும் பாடத்தின் வெளிப்பாடாய், தாயின் முக்கலிலும் – சேயின் முண்டலிலும், பிண்டத்திலிருந்து மனித குழந்தையாக மாறும் அந்த கடைசி நேர நிகழ்வில்(பிரசவத்தில்) தான் தாயுக்கும் – சேயுக்குமான மன ஒற்றுமையும், சொல்லில் அடங்கா சக ஈர்ப்பும் உருவாகிறது. அதுவே யாராலும் விளக்க முடியாத தாய் - சேய் பாசமாகிறது.

சுகபிரசவம் ஆனால் மட்டுமே உயிர், என்று இருந்த கடந்த தலைமுறை மக்களைப் பாருங்கள். மூன்று அல்லது நான்கு வயது வரை தாய்ப்பாலுண்டு, தாயிடமிருந்து உணவை எடுப்பதை நங்குணர்ந்த பின்னரே பால்குடி மறந்த நம் தந்தை தலைமுறையினர் தாயுடன் நடந்து கொண்டதற்கும், சுகப்பிரசவம் ஆகி, ஆறு மாதம் அல்லது ஒரு வருடத்திற்குள் தாயின் முகம் உள்ளத்தில் பதியும் முன் பால்குடி மறந்து வாழும் நம் தலைமுறையினர் தாயிடம் நடந்தது கொள்வதற்கும் உள்ள பெரும் வித்தியாசத்தை ஒப்புக்கொள்ளத் தான் வேண்டும்.

பெற்றோரைப் பிரியாமலே வாழ்ந்த நம் முன் தலைமுறை புண்ணியசாலி மக்கள் எங்கே?, வெறும் பணத்திற்காக தாய், தந்தையரை பிரிந்து வாழும் நாம் எங்கே?. தாயைப் பணத்திற்காக, எந்த வருத்தமும் இல்லாமல் பிரிய மனம் வந்ததன் காரணத்தை தேடி மனதினுள் ஓடினால், நமக்கே தாய் என்பவள் அக்கா, அண்ணன் போல் ஒரு உறவுமுறையாக மட்டுமே அறிமுகமாகி நினைவில் நிற்கின்றனர். இதற்கான காரணம், நினைவு தெரிவதற்கு முன்னரே தாய்ப்பாலை நிறுத்துவது தானாக இருக்குமோ?

இன்றைய வேகஉணவு கலாச்சாரத்தில் சுகபிரசவம் பார்க்கத் தேவையான அளவு உடலிலும், மனதிலும் உறுதி இல்லாமல் போனதால் அறுவை சிகிச்சை மூலம் மட்டுமே குறுக்கு வழியில் குழந்தைகள் பிறப்பதையும், அவர்கள் வெகு சில மாதங்கள் மட்டுமே தாய்ப்பால் குடிப்பதையும் பார்க்கையில் நம் குழந்தைகள், குடும்பத்துடன் செலவழிக்க நேரமில்லாத நம்மிடம் எப்பிடி வளரப்போகிறார்களோ?, கடைசி காலத்தில் எப்படி நடத்தப்போகிறார்களோ? என எண்ணிப்பார்க்கவே முடியவில்லை.

பணத்தால் எல்லாவற்றையும் வாங்க முடியுமா!?

தம்பியும், எம்பேரனும் ஒரு வயசு.,

ரோட்டுல இருக்கிற புழுதியெல்லாம் கால்ல ஏறுமளவுக்கு ஓடியாடி விளையாடித்திரியும் போது, அஞ்சாறு சுள்ளானுங்களோட கரைச்சல் சத்தத்தையும் மீறி இதமா ஒரு சத்தம் சாயந்திர நேரத்துல அடிக்கடி கேக்கும். மனசுவந்து தேடிப்போயி அந்த மூலைவீட்டுல பாக்குறப்ப, இரும்பு அரம் வேலை செய்யுற தாத்தா வேலை போரடிக்கும் போது அப்பப்ப புல்லாங்குழல் வாசிப்பாரு. அதைக் கேட்டு நம்மை மறந்து நிக்கும் போது, அத்தனை பசங்களில் என்னை மட்டும் கூப்பிட்ட பாட்டி, பழனிப் பக்கமிருந்து வந்திருக்கும் அதோட மகவயித்து பேரனைக் காட்டி `தம்பி, நீயும் எம்பேரனும் ஒரு வயசு, அவனும் அஞ்சாவது தான் படிக்கிறான்`ன்னு சொல்லி இடுக்குன கண்ணோடு சிரிச்சது.

பாலிடெக்னிகில் சேர்ந்த்ததை பெருமையா நினைச்சு ஊருக்குள்ள நெஞ்ச நிமித்தி திரிஞ்ச காலத்துல ஒருநாள் ரோட்டுல என்னைப் பார்த்த கிழவி, `தம்பி, படிக்கிறயாப்பா?` -ன்னு கேட்டுட்டு, `தம்பி, நீயும் எம்பேரன் பாலசுப்ரமணியும் ஒரே வயசு, அவன் இப்ப பத்தாவது பாசாயிட்டான், ஆனா மேக்கொண்டு படிக்க வைக்கிறதா? இல்ல எங்க தச்சு வேலைக்கி அனுப்புறதான்னு தான் தெரியலை`ன்னு சொல்லீட்டு வழக்கமான இடுக்குன கண் சிரிப்போட போயிருச்சு கெழவி.

படிச்ச படிப்புக்கும், உள்ளூருலையே தேடுற வேலைக்கும் என்ன கலெக்டர் போஸ்டிங்கா கிடைக்கும்!, பக்கத்தூரு மில்லுல கிடைச்ச எலெக்ட்ரீசியன் வேலை - ரெண்டாயிரம் ரூவா சம்பளத்துக்கே ஊருக்குள்ள மப்பா நெஞ்ச நிமித்தி திரிஞ்ச காலத்துல ஒருநா கிழவி வீட்டு வாசலில் அப்பா இருக்கும் போது என்னய பாத்து `தம்பி, வேலைக்கிப் போறையாப்பா` -ன்னு கேட்டுட்டு எங்கப்பாட்ட `தம்பியும், எம்பேரன் பாலசுப்ரமணியும் ஒரே வயசு, அவன் எங்க தச்சு வேலைக்கிப் போயி ஒரு நாளைக்கி நூத்தி இருவது ரூவா வாங்குறான், கல்யாணத்துக்கு பொண்ணு தேடுறோம்ப்பா` ன்னு சொல்லீட்டு வழக்கமான சிரிப்போட போயிருச்சு கெழவி.

ரொம்ப நாள் கழிச்சு என்னய எங்கம்மா கூட வண்டியில போறப்ப பாத்த கிழவி `தம்பி, எங்கப்பா இருக்கன்னு` கேட்டதுக்கு நான், `வெளிநாட்டுல இருக்கேன் பாட்டி`ன்னு சொன்னதும், சந்தோசமா எங்கம்மாட்ட `தம்பியும், எம்பேரன் பாலசுப்ரமணியும் ஒரே வயசு, அவனுக்கு ஒரு பையனும், ஒரு பொண்ணும், பையன இந்த வருசம் பள்ளிக்கோடத்துல ஒன்னாவது சேக்கப் போறான்` ன்னு சொல்லீட்டு வழக்கமான சிரிப்போட போயிருச்சு கெழவி.


கெழவி ஒவ்வொரு தடவையும் ஒரேமாதிரி கண்ணை இடுக்கி வெள்ளந்தியாத் தான் சிரிக்குது, ஆனா நான் தான் ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு மாதிரி தலையச் சொறிஞ்சுக்கிட்டு கேண சிரிப்பு சிரிக்கிறேன்.

-சிறுகதை.


'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது. போட்டியின் இணைப்பு



.

32 கேள்வி பதில்கள் - தொடர் சங்கிலி இடுக்கை

இந்த தொடர்பதிவை ஆரம்பித்த நிலாவும் அம்மாவும் அவர்களுக்கும், தொடர்ந்த பதிவுலக நண்பர்களுக்கும், இந்த தொடர் ஆரம்பமான காலத்திலேலே அண்ணன் இராகவன் நைஜீரியா, என்னைக் கேட்டு நேரமில்லாத காரணத்தால் மறுத்த பின்னரும் காலைச்சுற்றிய பாம்பாக, என்னிடம் நண்பர் தீப்பெட்டி கணேஸ் மூலமாக வந்து சேர்ந்த இந்த கேள்விகளுக்கு பதிலளிக்க துணிந்து விட்டேன். இனி ஆட்டம் ஆரம்பம்.

1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

வீட்டில் ஆண்குழந்தை வேண்டி பழனி முருகனிடம் ஸ்பெசல் வேண்டுதலில் பிறந்த தவக்குழந்தையாதலால் அந்த லார்ட் முருகனின் பெயரையே நாமகரணம் பண்ணிவிட்டார்கள்.

சின்ன வயசுல ”என்னடா, நெறைய ஆளுக்கு இருக்குற பேரை வச்சுட்டாங்கன்னு கோவம் இருந்தது. இப்ப போயிருச்சு, ஏன்னா, ஏதாவது கோணாங்கி தனம் பண்ணி வீட்டுல மாட்டிக்கிட்டா, ஆமா முருகன் சாமி பேரை வச்சா, அந்த முருகன் சாமி புத்திதான இருக்கும்ன்னு சொல்லி தப்பிக்க முடியுது. அதனால என்ன அப்பப்ப காப்பாத்துற லார்ட் முருகனுக்கு ”ஸ்பெசல் தேங்க்ஸ்”.

2. கடைசியாக அழுதது எப்பொழுது?

காதலியின் திருமணத்தன்று. ஆச்சு அஞ்சு வருசம்.

3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

கையெழுத்துல என்ன இருக்கு. உள்ள இருக்குற விசயத்துக்கு தான உண்மையான் மதிப்பு இருக்கு. (கோழி கிண்டும் கையெழுத்தை வச்சே எல்லாப் பரிச்சையிலும் பாஸ் பண்ணி வந்தவனாக்கும்)

4. பிடித்த மதிய உணவு என்ன?

ஒரு அவியல், ஒரு பொரியல் இருக்குற நல்ல மணக்கும் சாம்பார் + ரசம் சாதம் போதும். (ஆனா கிடைக்க மாட்டேங்குதே. ஆங்ங்ங்ங்ங்ங்)

5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

முகத்துக்கு நேரா இருக்கவுங்ககிட்ட(அதாவது கூட இருப்பவங்ககிட்ட) உடனே நட்பு வச்சுக்குவேன்.

6. கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

அருவி தான் முதல் சாய்ஸ். (அருவி வேகமா விழுது, தண்ணிக்குள்ள போக முடியலன்னு சொன்ன நண்பன்கிட்ட சவால்விட்டு வேகமா உள்ளே போய் பாறையில் முட்டுன கதையெல்லாம் உண்டு)

7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

தூரத்தில இருந்தா அவுங்களோட நடவடிக்கை,

பக்கத்துல இருந்தா அவுங்களோட முகம்.

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

பிடிச்ச விசயம் : நண்பர்கள் கிட்ட ஈகோ பார்காதது.

பிடிக்காத விசயம் : நண்பர்களுக்கு அடிக்கடி போன் பேசாதது.

9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

எனக்கான சரி பாதியை முழு மூச்சாய் தேடிக்கிட்டு இருக்கேன். பாத்ததும் சொல்றேன்.

10. யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?

சொந்த ஊர்ல இல்லாம் இருக்குறதுக்கு வருத்தமா இருக்கு.

11. இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?

சிவப்பும், கிரீம் கலரும் இருக்கும் பெரிய கட்டம் போட்ட சட்டை, டார்க் புளூ பேடர்டு ஜீன்ஸ் பேண்ட், பச்சைக் கலர்ல பெல்ட், ப்ரௌன் கலர் ஷூ.
(யூத் லுக்கிங்)


12. என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

கம்யூட்டரிலிருந்து வரும் ஸ்ஸ்ஸ்ஸ் சப்தம்.

13. வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

ப்ளூ... (நான் கொஞ்சம் ப்ளூங்கோ ஆசாமி)


14. பிடித்த மணம்?

மல்லிகைப் பூ வாசம் ரொம்ப பிடிக்கும். சீக்கிரம் பிடிக்கணும்.


15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

கடந்த இருபது நாட்களாக வலையுலகில் இல்லாததால், யார் எழுதலைன்னு தெரியாததால இந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாத நிலையில இருக்கேன். (யாரையும் கோர்த்து விடாததால புண்ணியம் கிடைக்குமா?)


16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்பிடித்த பதிவு ?

என்னை இந்த தொடர் கேள்வி – பதிலுக்கு கூப்பிட்டது மட்டுமில்லாம, என்னைப் பத்தி தெரிந்து கொள்ள ஆசைப்பட்ட கணேஸ்குமாரின் 32 கேள்வி பதில் பதிவுதான்.

17. பிடித்த விளையாட்டு?

சீட்டுக் கட்டுல 18 சீட்டுப் போட்டு பெணாத்தல்ன்னு ஒரு ஆட்டம். சூப்பரா இருக்கும். காசு வக்காமலேயே ஆடலாம்.

18. கண்ணாடி அணிபவரா?

ஆமாங்க. இப்ப தான் மூணு மாசமா (கம்ப்யூட்டரைப் பார்த்தே கண் அவிஞ்சு போச்சு)


19. எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?

பழைய படம், புதுப் படம், கருத்து சொல்லும் படம், காமெடிப் படம், திகில் படம், சண்டைப் படம் எதுவா இருந்தாலும் சரி, திரைக்கதையில நொள்ளை இல்லாத எல்லாப் படமும் பிடிக்கும்.


20. கடைசியாகப் பார்த்த படம்?

பசங்க.

21. பிடித்த பருவ காலம் எது?

இன்னைக்கு மட்டும் தான்.

22. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

ராஜேஸ்குமாரின் – நீயும் பொம்மை, நானும் பொம்மை!

சித்தர், சித்த வைத்தியம் கலந்த திகில் கதை.


23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

என்னோட அடுத்த சூப்பர் ஸ்டில் கிடைச்சதும்.

24. பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

பிடிச்ச சத்தம் : குழந்தைகளோட சிரிப்பு

பிடிக்காத சத்தம் : குழந்தைகளோட அழுகை.

25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

சிங்கப்பூர் (பஞ்சம் பொழைக்கும் இடம்)

26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

நல்லா சமாளிப்பேன்.(இந்த கேள்வியை இல்லை)

27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

நாம தான் செய்யணும்ன்னு தெரிஞ்ச பின்னாடியும் செய்யாம இருக்கும் சோம்பேறித்தனத்தை.

28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

நாலஞ்சு பேர் இருக்கனுங்க, அதுல யாரைச் சொல்ல???

29. உங்களுக்கு பிடித்த (சுற்றுலா) தலம்?

எல்லாத்தையும் பார்த்த பின்னாடி தான் சொல்லுறேன், எல்லாமே கிடைக்கும் சிங்கப்பூர் தான்.

30. எப்படி இருக்கணும்னு ஆசை?

அடுத்த ஆளுக்கு தொந்தரவு இல்லாம இருக்கத்தான் ஆசை, ஆனா....?

31. மனைவி(கணவன்) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

அந்தம்மா வந்த பின்னாடிதான அவுகளுக்கு எது பிடிக்காதுன்னு பாத்து, அதைத் தனியாப் போய்ச் செய்ய வேண்டியது தான்.

32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

நல்லா வேலை செய்யுற வால்(ழ்)வை, நாம தான் தப்பா பயன்படுத்தி துருப்பிடிக்க வச்சுடுறோம்.

.

ஐ அம் பேக்...

”இந்த சரித்திரம் நமக்கு சொல்லிக் குடுத்ததைப் பாத்தோம்ன்னா, நாம வாழ்றதுக்காக என்ன வேணும்னாலும் செய்யலாம், எத்தனைப் பேரை வேணும்னாலும் கொல்லலாம். Can… can....” - இது ஒரு திரைப்பட வசனம்.

தமிழ்நாட்டு மக்களின் மனநிலை மேலே படித்த வசனத்துடன் மிக அருகாமையில் ஒத்துப்போகிறது என்றால் மிகையல்ல என்றே நினைக்கிறேன். இந்திய தேர்தலையும், அதன் முடிவுகளையும் பற்றித் துளிகூட கவலையில்லாமலே தனது நாட்களை நகர்த்துகிறார்கள். மத்திய அமைச்சர் ப. சி யின், 100 சி + 400 சி வெற்றியைக்கூட சந்தோசமாகப் பேசி சிலேகித்துத் தான் போனார்கள்.

அருகிலிருக்கும் நாட்டில் நடக்கும் அபாயகரமான அழிவுகளை பெரும்பாலான ஊடகங்கள் உண்மையாக வெளியிடவில்லை. அப்படி வெளியிட்ட ஊடகங்களும் மக்களை உண்மையில் போய் சேரவில்லை. தகவல் கிடைத்த மக்களும் அழிவிற்காக கவலைப்படவும் இல்லை என்பது தேர்தல் முடிவு வெளிச்சம் போட்டு காட்டிவிட்டன.

அடுத்ததாக சாலைப் போக்குவரத்தில் நம் மக்களின் நாசகர நடவடிக்கைகளைப் பார்த்தால் உள்ளம் பதறிப்போகிறது. வெளியூர் பயணங்களுக்கு, பெரும்பாலும் நான் தேர்ந்தெடுத்து கொண்டது அரசு போக்குவரத்து கழக பேருந்துகளையே. ஏனெனில், அப்பேருந்துகளில் வேகம் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளதால் 50-60 கிமீ வேகத்திலேயே பாதுகாப்பாக பயணிக்கின்றன. எல்லோருக்கு அதுதான் தேவையானாலும், உடன் பயணித்தவர்கள் ஒத்துக்கொள்ளவில்லை, அரசு பேருந்து ஓட்டுனர்களை திட்டி தீர்க்கிறார்கள்.

கடைசியாக ஊர் திரும்ப சுமோ காரெடுத்து விமான நிலையம் நோக்கி வரும்வழியில் சுமோ டிரைவர் இடது காலை மடித்து வைத்துக்கொண்டு ஒற்றைக்கால் கிளட்ச்சை பயன்படுத்தாமலேயே 80-120 கிமீ வேகத்தில் வண்டியோட்டினார். அவரை இரண்டு கால்களிலும் வண்டியோட்டச் செய்ய ’கால்’மணி நேரம் மண்டையைக் கழுவ வேண்டியிருந்தது.

இந்த மாதிரியான சம்பவங்களை தொகுத்து மொத்தமாகப் பார்க்கையில், மக்களின் மன ஓட்டத்தை மிக நுட்பமாக கவனித்தே இந்த வசனத்தை எழுதி, படித்து பயன்படுத்தியுள்ளனர். ஆனால் இந்த ஆபத்தான அட்வன்சரிஸ்ட் வாழ்க்கை வாழ்ந்து வயதாகி மடிந்தாலும், பிணத்தைப் புதைக்கையில் போட்டிருக்கும் துணி புதிதாக இருந்தால் அதைக் கிழித்தே புதைப்பார்கள் என்பதை மறந்துவிடுகிறோம். போகும் போது நல்ல துணியோடு கூட போக முடியாத போது தேவையா?, இந்த வீணான அட்வன்சர் வாழ்க்கை?

 
©2009 அப்பாவி | by TNB