இப்ப மெரட்டு பார்க்கலாம்.

மிகச்சமீபத்தில் ஆறுமாதங்களுக்கு முன் சொந்த ஊருக்குப் போயிருந்த போது நடந்த ஒரு சுவையான நிகழ்ச்சி இது.

அவர் வேணு மாமா. எனது வீட்டின் சுற்றிலும் அவர்தம் சொந்தங்களோடு வசித்து வருபவர். என் முன்னோர் என்பது வருடங்களுக்கு முன் அவர்களுக்கு சொந்தமான ஒரு வீட்டை விலைக்கு வாங்கி குடியிருந்து வருகிறோம், எண்பது வருடங்களாக. இரத்த சொந்தமில்லை, அனால் குடும்ப அளவில் உறவு முறை சொல்லி பழகும் அளவுக்கு நெருக்கம்.

சின்ன வயதில் தெருவளவுக்கு நானொரு சண்டியர். அம்மாவால் அடித்தோ, மிரட்டியோ, கொஞ்சியோ பணியவைக்க முடியாது. அதென்னமோ அம்மாவின் மிரட்டல்கள் எல்லாம் பாடல்களாவும், அடிகளெல்லாம் உடம்பை இதமாக பிடித்து விட்டது போலவே இருக்கும்.

சாதாரணமாகவே எட்டடி பாயும் புலிக்குட்டி, பாட்டும் – மிதமான பிடித்துவிடுதலும் நடந்தால் பதினாறடியை மிகச் சாதாரணமாகத் தாவிக்காட்டுமே, அதுதான் நான். அம்மாதிரியான சூழ்நிலையின் எனதம்மாவுக்கு உதவுவது வேணுமாமா தான்.



அவரின் வீட்டு வாசலில் தச்சுவேலை பார்த்துக் கொண்டிருக்கும் வேணுமாமாவிடம் என்னைத்தூக்கிக் கொண்டு போய் பஞ்சாயத்தை அம்மா ஆரம்பித்ததும், அவர் செய்து கொண்டிருக்கும் வேலையை போட்டுவிட்டு என்னை அப்படியே அள்ளிக் கொள்வார்.

பாசத்தாலல்ல, பயங்காட்ட. முதலில் அவரின் வைத்தியம் ஆட்காட்டி விரலை கத்திபோல் நீட்டி, “வயித்தைக் காட்டு குடலை எடுக்குறேன்” என ஆரம்பிப்பார். நான் ஓடி அம்மாவின் பின் ஒளிந்தாலும் விடாமல் துரத்தி, தூக்கி மீண்டும் மிரட்டி “சொன்ன பேச்சை கேக்குறயா? இல்லை குடலை எடுக்கட்டா?” என மிரட்டுவார். ஆனாலும் நான் உடலை முறுக்கி அவரிடமிருந்து தப்பிக்கத்தான் பார்ப்பேனே ஒழிந்து ”சொன்ன பேச்சை கேட்கிறேன்” என ஒப்புதல் வாக்குமூலம் மட்டும் தரமாட்டேன்.

அடுத்ததாக, அப்படியே தூக்கி குட்டையான அவரின் வீட்டு ஓட்டின் மேல் உட்கார வைத்துவிடுவார். ஐந்தடி உயரமேயானாலும் அந்த வயதை பயங்கொள்ள வைக்க அது போதுமே. அதனால பயத்தால் வாயில் அழுகையும், கண்ணில் நீர் எட்டிப்பார்க்கும் போதும் அவரின் கேள்வியும், எனது பதிலும் சப்பாணியைப் போலவே இருக்குமே தவிர “சொன்ன பேச்சை கேக்குறேன்” என தோல்வியை அடையமாட்டேனாக்கும்.

இது அவரின் தன்மானத்திற்கும் அந்த தெருவிலிருக்கும் அத்தனை குழந்தைகளை அவர்களின் அம்மாக்களுக்காக ”ஒட்டு மொத்தமான பூச்சாண்டி காட்டும் கௌரவ”த்திற்கும் இழுக்காக மாறிவிடும் போல இருப்பதால் தனது பிரம்மாஸ்திரத்தை எடுக்க எத்தனிப்பார். அது.,

வீட்டின் வடக்குப்புறமிருக்கும் இருபதடி ஆழமிருக்கும் தண்ணியில்லாத மொட்டைக்கேணிக்கு தூக்கிச் சென்று அவரின் இடுப்புயர கைப்பிடிக்கும் உள்ளே, கேணிக்குள் என்னை நீட்டி “இப்ப சொல், சொன்ன பேச்சை கேக்குறயா? இல்லையா?” என மிரட்டிக் கேட்ப்பார். அழுகையோடு, பயம் உச்சத்தை எட்டுவதால் கையை, காலை உதறி அழுது கண்ணீர் விட்டாலும் வாயிலிருந்து ”கேக்குறேன்” என்ற வார்த்தை மட்டும் வராது. ஆனாலும் அவரும் விடமாட்டார். அப்படியே வளைந்து கேணிக்குள் என்னை இறக்கி ”இப்ப என்ன சொல்ற?” எனக் கேப்பார். கண்ணுக்கு அவரைத் தவிர ஆகாசம் மட்டும் கொஞ்சமாய் தெரியும் கொடூர சூழல் அது. என்ன உதறினாலும், அழுதாலும் சரி விடமாட்டார். வானமே பாதியாகிப் போச்சு மானத்துக்கென்ன, ”சரி, அம்மா சொல்றதைக் கேக்குறேன்” என தனியே தோல்வியை ஒப்புக்கொண்டதும் தான் வெளியே எடுப்பார். உள்ளே போகும் போது ரெண்டு மூன்றாக இருக்கும் தலைகணக்கு வெளியே வரும் போது பத்து இருவதாகியிருக்கும். ஆனாலும், துக்கியபடியே எல்லோர் முன்னாலும் மீண்டும் ” அம்மா சொல்றதைக் கேக்குறேன்” எனச் சொன்னதும் தான் இறக்கி தரையில் விடுவார். அவமானமாக இருக்கும்.

ஒரு முறை வேணு மாமாவை வைத்து என்னை மிரட்டியதற்காக மூன்று மணி நேரம் தேம்பித் தேம்பி அழுததும், பின்னர் அப்பா வந்து ஆறுதல் + வடை, பஜ்ஜி வாங்கித்தந்த பின்னரே சமாதானம் ஆனதும் இன்னும் நினைவில் உள்ளது.

இப்பிடியாக ஆறாத வடுவுடனிருக்கும் அடிபட்ட புலி ஊருக்குப் போயிருந்த போது ஒருநாள், அதே வேணு மாமா அவரின் வீட்டுமுன் தச்சு வேலை பார்த்துக் கொண்டிருந்தார். வேண்டுமெனவே செருப்பு சர சரக்க நடந்து போய் அவரின் முன் நின்றுகொண்டு, “சின்ன வயசுல என்னய எப்பிடியெல்லாம் மிரட்டுன. எங்க இப்ப மெரட்டு பார்க்கலாம். எங்க தூக்கி ஓட்டுமேல வையி பாக்கலாம். கேணியும் இன்னும் மூடம தான் இருக்கு தூக்கி கேணியில போடு பார்க்கலாம். வா மாமா. என்னைய மெரட்டு பாக்கலாம்” என அவரின் கையைப் பிடித்து வேலைசெய்ய விடாமல் செய்யவும். “வம்பிழுக்காத மாப்புள, வேலை செய்யவிடு. அர்ஜண்டு வேலை” என் கூறியவரை நான் விடவே இல்லை. “அதெல்லாம் முடியாது. என்னைய பயங்காட்டு, நீதான் பயங்கரமா மெரட்டுவேல. என்னை இன்னைக்கு மெரட்டு பாப்போம்” என தொடர்ந்து வம்பிழுக்கவும், அவர் எனது சத்தமாக என் அக்காவின் பேரைச் சொல்லி கூப்பிடவும், வீட்டிலிருந்து அக்காவும், அம்மாவும் வந்து சேர்ந்தனர். அம்மா, “என்ன பண்ணிக்கிட்டு இருக்க நீ?” எனக்கேட்ட அம்மாவுக்கு பதில் சொல்லாமல்., அக்கா பக்கமாக திரும்பி, “சின்ன வயசுல நம்மயெல்லாம் மெரட்டுவார்ல, எங்க இப்ப என்னை மெரட்டச் சொல்லு பார்க்கலாம்” என அதே பல்லவியை நான் ஆரப்பிக்கவும், அக்கா எனக்கு சாதகமானார்.

இப்போ வேணு மாமா நிலைமை மிகுந்த மோசமானது. என் அம்மா சிரித்துக் கொண்டே ”டேய்., விடுடா பாவம் வேலை செய்யட்டும்” என்ற போதும் நான் அவரின் கைகளை விடவில்லை. அதே நேரத்தில் வேணுமாமாவின் மனைவியும் வெளியே வந்து நடக்கும் கூத்தை பார்த்து சிரிக்கலானார்களே ஒழிய அவரை விடச்சொல்லவில்லை. அய்யோ பாவம்.

எனக்கே சிரிப்பு தாளாமல் “ஏய் மாமா ஊருல இருந்து வந்திருக்கும் உம்மக வந்து, உன்னைய விடச் சொல்லட்டும் நான் விடுறேன்” எனச் சொல்லவும் அவரின் மனைவி அவர்களின் மகளை வெளியே அழைத்தார்கள். தன்னப்பனின் போதாத காலத்தை கண்ட அவரின் மகள், “ஏய் முருகா எங்கப்பாவை விடு” என உரிமையோடு பேரைச் சொல்லி விடச்சொன்ன போது, மனதுக்குள் எழுந்த எண்ண அலைகளால் எத்துனை இன்பம். ம்ம்ம்ம்கும்., கல்யாணம் ஆகி இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாகியிருந்தாலும் மாமன் மகள்களின் குரல்களுக்கென ஒரு இனிமை உண்டு.

இதற்கும் மேல் சொல்ல ஒன்னுமில்லை.... அதனால் எல்லாரும் வீட்டுக்குப் போகலாம்...

ஆயாக்களின் உலகம்

”கண்ணா, சூதாடலைன்னா சீனன் செத்துடுவான்,பேசலைன்னா தமிழன் செத்துடுவான்” என்றே ஒரு வரி புழக்கம் திரையில் கேட்டதாக ஞாபகம். அதில் தமிழனைப்பற்றிய வரி மிகச்சரி எனபதற்க்கு மிகப்பெரும் உதாரணம் பலஉண்டு. அதில் எனக்கும் ஒரு பங்குண்டு. ஆனால் சீனனைப் பற்றிய வரியை சமீபத்தில் தான் கண்டுணர்ந்தேன், பல லச்சங்களின் செலவில்.
பணியினினடிப்பையில் மலேயா தலைநகரத்தில் ஒரு வாரம் டாப் அடிக்கவேண்டியிருந்தது. சனிக்கிழமை வரை வேலைப் பார்த்தாயிற்று. ஞாயிறு வேலைகொடுப்பவர் வேலைக்கு வரமாட்டேன் என்றதும், சனியிரவு – ஞாயிறு எனும் பெரும்பொழுதை மன சஞ்சரங்களில்லாமல் கழிக்க வேண்டுமே. என்ன தான் நவீன நகரங்களில் ஒன்றாகயிருந்தாலும், சென்னை தோற்கும், நெரிசலில். அதைக்காரணமாக்கி உடனிருக்கும் அதிகாரிகள் ஊருக்குள் உலாவர பயங்கொண்டு, ஊருக்கு வெளியே குறைந்த தூரத்தில் எங்காவது போய்வரலாம், நம்மிடம் தான் கார் இருக்கிறதே என்றது எங்கள் கூட்டத்தின் பெரும் தலை.


மாலையைத் தாண்டிவிட்டதால், உணவெடுத்ததும் மலையேருவோம், ஒரு மணிநேரப்பயணம் தான் என திட்டம் தீட்டப்பட்டது. எண்ணம் போல் நால்வரும் ஆறுமணிக்குக் கூடி உணவுக்காக ஒரு கொரியன் (”ன்” தானே, இல்லை மரியாதைக்காக ”ர்” வேண்டுமா?) உணவுக்கூடத்தில் கூடி சுட்டுத்தின்னும் கறிவகைகளை பட்டியலிட்டு வாங்கி பல்வேறு சுவைகளை ஒன்றாக மென்று முடித்து ஒன்பதுக்கெல்லாம் கார் கிளம்பியது மலையை நோக்கி. இது, கோலாலம்பூரில் அருள் பாலிக்கும் பத்து மலை முருகன் கோவிலை நோக்கியல்ல, பண வசூலில் திருப்பதிக்கே லட்டு அல்லது அல்வா அல்லது பஞ்சாமிர்தம் தரத்தகுதி வாய்ந்த பெருங்கடவுள். நாளுக்கு ஐய்யாயிரத்திற்கும் மேலான மக்கள் மலையேறி தரிசிக்கும் ஆலயம். அது தான் ”கேசினோ டி ஜெண்டிங்”.


சராசரி நிலபரப்பில் இருக்கும் கோலாலம்பூருக்கு மிக சமீபத்திலேயே இருந்தாலும், பாதி தூரத்துலேயே கண்ணை மறைக்கும் இருட்டு. சாலையில் இருமறுகிலும் விளக்குகள் இருந்தபோதும், வெளிச்சம் போதவில்லை. வாகனத்தை செலுத்தும் நண்பரிடம் பேச்சுக்கொடுத்ததில் தான் தெரிந்தது, சாலையில் ஒட்டப்பட்டிருக்கும் ரிஃப்ளெக்டரின் வரிசையை மட்டும் நம்பி வாகனத்தை ஓட்டிக்கொண்டிருப்பதாகச் சொன்னார். ஆகா, என்ன நம்பிக்கை. மலையேறிக் கொண்டிருக்கும் போதே பேச்சில் வெற்றிபெரும் பெரும் நம்பிக்கைகள் சகுனத்தின் வாயிலாக வெளிப்பட ஆரம்பித்தன. பின்னே இருக்காதா? இரண்டு நிமிட பயணதூரத்தில் 2222, 3333, 4444 என ஒரே எண்களால் பதிவு செய்யப்பட்ட காடிகளைக் கண்ட பின் மனது முழுக்க கெவுளி கத்தத்தானே செய்யும்!


இரவு 10.30க்கெல்லாம், சம்பிரதாயங்களை முடித்து சூதாட்ட மைதானத்தில் ஆளுக்கொரு பக்கம் களம்புகுந்தோம், ஒன்றாக சூதாடினால் சரிவராது என்ற சூதாட்டவிதியின் படி. சீட்டுகட்டினை வைத்தும், தாயக் கட்டைகளை வைத்தும், நவீன தொழில்நுட்டத்தின் படியினால வீடியோ கேம்கள் என ம்ம்ம்ம் எத்துனை வகையான ஆட்டங்கள். அதுவும் மிகக்குறைந்த தொகைலிருந்து, மிகப்பெரும் தொகைவரை.


சுற்றிச்சுற்றி வந்து சூதாட்டத்தின் ஆரம்ப பாடங்களை படித்ததும், மூணு சீட்டு போக்கரின் விதிகளும், ஆட்ட நுணுக்கங்களும் எளிதாக இருப்பதினாலும், நான் துப்புபார்த்த மேசைல் பலர் வெற்றியைக் குவித்துக் கொண்டிருந்த்தாலும், ஏழுபேர் வரை ஆடும் மேசையில் ஒரு இடம் காலியானதாலும் பல லச்சங்களை அள்ளும் ஆவலில் பாய்ந்து இடத்தைப் பிடித்தேன். அடுத்த ஆட்டம் ஆரம்ப்பிப்பதற்குள் 200 ரிங்கிட் (மலேசிய பணம்) கொடுத்ததும், இருப்பத்திஐந்து ரிங்கிட் மதிப்புள்ள வில்லைகள் எட்டினைக் கொடுத்தார்கள். பணத்தை வாங்கி புற ஊதா(அட்ரா வைலட்) விளக்கினை வைத்து சரி பார்ப்பதும், சரியாக இருக்கும் பணத்தினை மேசையிலேயே இருக்கும் மிக்சிறிய நீளமான ஓட்டையின் வழியாக உள்ளே தள்ளும் போதே மனதுக்குள் எதிர் கெவுளி கத்தியது.


ஆனால், சூதாட்ட வில்லைகளை கையில் வைத்து நிமிந்து உட்கார்ந்து “கேசினோ ராயல்ஸ்”- ல் ஆடிய ஆட்டக்காரர்களில் தோரணையில் முகத்தை வைத்துக்கொண்டு நானும் இரண்டு வில்லைகளை வைத்து பெட்டிங்கை ஆரம்பித்தேன். எனக்கு வந்த சீட்டில் 7, 8, Q இருந்தது. ஒரு ஜோடி இருந்தால் வாய்ப்பதிகம், அடுத்ததாக பெரிய மதிப்புள்ள சீட்டிருந்தால் வெல்லும் வாய்ப்புள்ளதால் துணிந்து மேலும் ஒரு வில்லை வைத்து பேங்கரை ஆட அழைத்தேன். ஆடிய எழுவரில் இரண்டுபேர் சீட்டு சரியில்லாததால் ஆடவிருப்பமில்லாமல் சீட்டை வைத்ததும் பேங்கர் மொத்த வில்லைகளையும் எடுத்துக்கொண்டார். ஆனால், என்னிடம் தான் Queen இருக்கிறதே என தைரியமாக இருந்தேன். ஆட்டத்தை தொடர விரும்பும் எல்லோரும் வில்லைகளை வைத்து பேங்கரை ஆட அழைத்ததும், பேங்கர் தனது சீட்டினை திருப்புனார். 6, 2, 9 என மூன்றும் தனித்தனி சீட்டுகள். அப்பாடா, தோல்வி இல்லை ஆனாலும் வெற்றியும் இல்லை. நம்முடைய வில்லையை அப்படியே திரும்பக் கொடுத்துவிட்டார்கள்.

அப்படி ஆரம்பித்த ஆட்டம் மெல்ல, மெல்ல சூடுபிடித்து வெற்றியும், தோல்வியும், கைகாசுமாக அரைமணிநேர ஆட்டத்திற்குப் பின் கையிலிருந்த வில்லையை எண்ணிப் பார்த்தால் 350 மலேசிய பணமாக இருந்தது. அரைகுறை ஆட்ட நுணுக்கத்திலேயே 150 ரிங்கிட் லாபம் பார்த்துவிட்டோமெனும் மிதக்கமும் நானும் ஒரு கேம்ளர் (சூதாடி) எனும் பெருமையும் மெதுவாய் தலைக்கேற, ஆட்ட முறையை தற்காப்பு ஆட்டத்திலிருந்து தாக்குதல் ஆட்டமாக மாற்றி விளையாட ஆரம்பித்தேன். அப்பப்போ பிளாஃப் ஆட்டமுமாக முரட்டுத்தனமாக ஆடிய அரை மணிநேரத்திலேயே கையிலிருந்த 300 ரிங்கிட்டும் போச்சு. ஆவ்வ்வ்வ், மீதமிருக்கும் 50 ரிங்கிட் வில்லையை வைத்து ஆடமுடியாததால், கடந்த ஒரு மணிநேரமாக உடனிருந்த இருக்கையை பிரிய மனமில்லாமல் இருந்தாலும், அதற்கும் மேல் அங்கிருக்க மனமும், மானமும் இடங்கொடுக்காத்தால், மெல்ல நகர்ந்து அப்பெருங் கூடத்தை சுற்ற பார்க்கலானேன்.


மனதின் மயக்கங்கள் கலைந்து போனதாலும், போனது இனி வாராதென்பதாலும் மெல்ல மனதை ஆறுதலடைய ஆரம்பித்தது. இனி கவனத்தை வேறுபக்கமாக்கினால் ஒழிய நேரத்தை கடத்த முடியாது. ஏனெனில் மீண்டும் நண்பர்கள் கூடும் நேரம் காலை மூணோ, நாலோவாகத்தானிருக்கும். அப்பெருமுகலகில் மெல்ல சுற்றிவரும் போதுதான் கவனித்தேன். ஆடும், சூதாடிகளில் பாதிக்கும் சற்றுமேலானோர் பெண்களே. அதுவும், அறுபதுக்கும் மேற்பட்டோரே அதிகம். ஆவல் தூண்ட கவணத்தை முழுக்க முழுக்க அறுபதுக்கும் மேற்பட்ட ஆயாக்களின் மேலே வைக்கலானேன். கைநிறைய வில்லைகளோ, அல்லது மலேசிய பணத்தோடோ ஓடி, ஓடி தேவையான மேசைகளை நிறைத்து பேங்கரோடு சவால்விட்டு ஆடலாகினர். சில ஆட்டங்களில் துணைவிதிகளின் படி, நம் கையிலிருக்கும் சீட்டும், பேங்கரின் சீட்டும் ஒரே பூ, ஒரே நம்பராக இருந்தால் நம் பெட்டிங் பணத்தைவிட பத்து மடங்கு அல்லது இருபது மடங்கோ கிடைக்கும் என்பது போன்ற சூழ்நிலையில், தன் கையிலிருக்கும் சீட்டையே பேங்கரும் திருப்பும் படி பெருங்குரலெடுத்து கத்துவதோடு, அப்படியே வந்துவிட்டால் பெரும் ஆர்ப்பாட்டமே கொள்கிறார்கள்.

பணம் போன துக்கத்தில், தூக்கம் தொலைந்தே போனது. கையிருக்கும் குறைந்த காசுக்கும் தேநீர் வாங்கிக் குடித்து பொழுதைப் போக்கி நாலுமணிக்கு நண்பர்களை தேடிப் பார்த்தால் எல்லோரும் தொங்கிய தலையோடே வெளியேற எத்தனித்தனர். என்ன ஆனதென்ற கேள்விக்கு துக்கமே பதிலானது. ஆழமான விசாரனையின் முடியில், முடிவேதுமில்லாமல் மலையில் அடியை நோக்கி கரும் இருளில் காரில் பாய ஆரம்பித்தோம். சீன நண்பரிடம் ஆயாக்களைப் பற்றி கேட்டதும், பெரும்பாலான ஆயாக்களுக்கு பிள்ளைகள் கொடுக்கும் மாதாந்திர செலவுக்கான பணத்தில் மிச்சத்தை இப்படித்தான் ஆடி விடுவார்கள் என்றார். அடப்பாவி பணத்தை விடுவதற்க்காக மட்டுமே மலையேறுவீர்களோ? வரும் போது பெரும் நம்பிக்கையோடு இருந்தீர்களே என வினவியதில், நம்பிக்கை தானே வாழ்க்கை என்ற பதில் மட்டும் கிடைத்தது. மேலே ஏதும் பேச விரும்பாமல் அமைதியானேன்.

எனக்குப் பிடிக்காதவர்கள்

அண்ணன் பித்தனின் வாக்கு சுதாகர் தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறார். கடந்த நான்கு நாட்களாகவே கடுமையான பணி, இன்னும் இரண்டு வாரங்களுக்கு இதே நெருக்கடி நீடிக்கலாமென வானி(பணி)லை ஆராய்ச்சி கூறுகிறது. சொந்த இடுகை எழுதவும் குறிப்பாய் பெரியோர்களின் இடுகைகளை படிக்கவுமே நேரமில்லை. ஆனால் இந்த தொடர் இடுகையினை எழுதுவது மிகசுலபமாதலால்(ஆமாம், கால காலமாக பிடிக்காதவங்களை சொல்ல என்ன சிரமம்?)உடனடி தொடர் இடுகை.

போவோமா ஊர்கோலம்!!!

1) அரசியல்

பிடித்தவர்(இறந்த காலத்தில் சொல்லும் போதும் ”பிடித்தவர்”ன்னு தானே வரும்?) :- கலைஞர்

பிடிக்காதவர் :- ஜெயலலிதா

2)எழுத்தாளர்

பிடித்தவர் : - பாலகுமாரன்,

பிடிக்காதவர் :- சாரு நிவேதிதா

3)திரைப்பட இயக்குநர்

பிடித்தவர்கள் :- மகேந்திரன், மணிரத்னம், மிஷ்கின், கமல்

பிடிக்காதவர்கள் : - ஷங்கர்

4) நடிகர்

பிடித்தவர் :- பிரகாஷ்ராஜ், கமல்

பிடிக்காதவர் :- விவேக்

5) பாடலாசிரியர்

பிடித்தவர்கள் :- கண்ணதாசன், பட்டுக்கோட்டையார், என்பதுகளில் எழுதிய பலர்

பிடிக்காதவர் :- பேரரசு (ஐய்யொ, ஐய்யோ)

6) திரைப்பட தயாரிப்பாளர்

பிடித்தவர்கள் :- ஷங்கர், பிரகாஷ்ராஜ்

பிடிக்காதவர் :- ஏ.வி.எம்

7) நடிகைகள்

பிடித்தவர் :- யாருமில்லை

பிடிக்காதவர் :- நயன்தாரா

8) காவல்துறை

பிடித்தவர் :- டி. ஜி. பி. நட்ராஜ்

பிடிக்காதவர் :- ஏகப்பட்ட”பேர்”கள்

9) ஆட்சியாளர்கள்

பிடித்தவர் :- நரேஷ் குப்தா

பிடிக்காதவர்கள் :- ஏகப்பட்ட”பேர்”கள்

10) பிடித்த திரைப்படங்கள்

பிடித்த படங்கள்:- கை கொடுக்கும் கை, முள்ளும் மலரும், அன்பேசிவம், விருமாண்டி, அஞ்சாதே, அலைபாயுதே, வசீகரா.


போதும், அவ்வளவுதான். தொடர் சங்கிலி இடுகையை எனக்குத் தெரிந்த அனைவரும் ஏற்கனவே கோர்த்துவிட்டதால் நான் யாரையும் அழைக்கவில்லை.(அண்ணன் மாதவராஜின் ஆசை இங்கே நிறைவேறியிருக்கலாம்)

தீபாவளி இன் மலேய்சியா!!! - பாகம் 2

கடந்த வாரம் வெளிவந்து சக்கைபோடு போட்ட முதல் பாகத்தை படிக்க.

என்னுடைய மலேசிய நண்பர்(முன்னொரு காலத்தில் சிங்கையில் பணிபுரிந்தவர். தற்பொழுது மலேசியாவிலேயே சுயதொழில் செய்து வருபவர்) நீண்டகாலமாக வீட்டுக்கு வரும்படி அழைப்புவிடுத்ததின் பேரில் இந்த தீபாவளியை நண்பரின் குடும்பத்தாருடன் அவருடைய சொந்த ஊரான பிணாங்கு மாகாணத்திலிள்ள கூலிமில் கொண்டாடுவது என முடிவெடுத்து திட்டங்களை செயல்படுத்த ஆரம்பித்தோம், நானும் நண்பர் முத்துவும்.

சனிக்கிழமை தீபாவளிக்கு, வெள்ளிக்கிழமையும் விடுப்பு வாங்கிக்கொண்டு வியாழன் மாலை ஆறுமணிக்கு வீட்டிலிருந்து கிளம்பி சிங்கை- மலேசியா இடையிலான தரைவழி சோதனைச் சாவடிக்கு போகும் போது, ஆத்திகர்கள் காட்டிய அனைத்து கடவுள்களையும், நாத்திகர்கள் சொல்லும் பட்டாம்பூச்சி விளைவினையும் சேர்ந்தொழுகிக்கொண்டே சிங்கையின் சாவடிக்குள் நுழைந்தேன். (ஒழுகக் காரணம், உலகிலேயே அதிகப்படியான மக்கள் தரைவழியாக தினமும் எல்லையைத் தாண்டுவதில் இந்த சோதனைச்சாவடி வழியாகத்தான் எனக் கேள்வி) அதுவும் பெருநாட்களில் சமீபத்திலானால் மைல் நீள வரிசையில் வால்பிடித்து, குறைந்தபட்சம் முக்கால் மணிநேரம் நிற்பது தவிர வேறு வழியிருக்காது.

ஆனால், நான் கும்பிட்ட கடவுளும், பட்டாம்பூச்சிகளும் என்னை காப்பாற்றினவோ, என்னவோ!!!. இருக்கும் இருபது வரிசையிலும் வரிசைக்கு நான்கைந்து பேர்மட்டுமே இருந்தனர். அழகான வரிசையைத் தேர்ந்தெடுத்து ஐந்தே நிமிடத்தில் சிங்கையைக் கடந்து சர்வதேச எல்லைக்குள் நுழைந்தோம்.(யாரும் சுடமாட்டார்கள், நம்பலாம், பாதுகாப்பான பகுதிதான்). சர்வதேச எல்லை ஐநூறு மீட்டரை பேருந்து மூலம் கடந்து, மலேசிய சாவடிக்குள் நுழைவதற்குள் 20 – 30 நிமிடமாகிவிட்டது, அவ்வளவு வாகனங்கள். மிகபிரமாண்டமான கட்டிடம். மீண்டும் கடவுள்களோ, பூச்சியோ என்னைக் காப்பாற்றியது. பத்தே நிமிடத்தில் சோதனைகளை முடித்து, கட்டிடத்தைச் சுத்திச் சுத்தி நடந்து டேக்ஸி பிடிக்க வெளியேற 20 நிமிடங்கள் ஆகிவிட்டது. அப்பாடா, கைபேசியில் ரோமராக இல்லாததால் மூர்ச்சையானது. இனி அது, மணிகாட்டவோ அல்லது படம் பார்க்கவோ - பிடிக்கவோ அல்லது பாடல் கேட்கவோ மட்டுமே ஆகும். மிகப்பெரும் விடுதலை. எனக்கும், என்னுடைய கைபேசிக்கும்.


பத்து மணி பேருந்துக்கு, ஒன்பது மணிக்கே வந்து இருக்கையின் இருப்பை உறுதிபடுத்துக் கொண்டபின் இரைப்பையின் இருப்பை உறுதிபடுத்துக்கொள்ள வேண்டியிருந்தது. சாம்பார் வாசமடிக்கும் தமிழ் கடை தேடி ஒரு வெங்காய தோசை, ஒரு மசாலா தோசையை நல்லா அகலமா, அகலமா என அழுத்திச் சொல்லி, உண்டுகளித்து பின் மறக்காமல் நீரிறக்கம் முடித்து மிகச்சரியாக பத்துமணிக்கு பேருந்து அருகே வந்து சேர்ந்தால், ஆகா,

ஜோகுர் பாருவிலிருந்து மலேசியாவின் பலபகுதிகளுக்கு போக தயாராக பல மிதவைப் பேருந்துகள் நின்றிருந்தன. எல்லாப் பேருந்தின் அருகிலும் என் மக்கள். தீபாவளியை சிறப்பாக கொண்டாட சொந்த ஊருக்கு சென்று கொண்டிருக்கும் நம் மக்கள். தலையை ஜெல்லி போட்டு சிலிப்பிவிட்டிருக்கும் சிறுவன் முதல் பல அக்காக்களும், அத்தைகளும் அவர்தம் அழகழகான, அழகழகான பெண் குழந்தைகளும் ஒருசில வயதொத்த நண்பர்களுமென முழுக்க முழுக்க தமிழ்நெஞ்சங்களோடு கிளம்பத்தயாரானது பேருந்து.

பேருந்தில் ஏறி என்னிடத்தை நிரப்பிய சிறிது நேரத்துக்கெல்லாம் படபடவென வெடித்துச்சிதறிய சத்தம் கேட்டு எட்டிப்பார்த்தால் பட்டாசே தான். வெடிபோட்டு மக்களை உற்சாகமாக அனுப்பிவைத்தனர் பேருந்தின் முகவர்.


மொத்தம் இருபத்து நான்கே இருக்கை கொண்ட பேருந்து, நகர எல்லையைத் தாண்டி பெருவிரைவுச் சாலையைத் தொட்டதும், சாலை வரி வாங்கும் சாவடி. சுங்கம் செலுத்தி சாலையைத் தொட்டு பேருந்து போய்க்கொண்டிருக்கையில் ”எண்ணூறு கி.மீ போகணுமே, ஏன் மெதுவாய் போகிறார் என எட்டிப்பார்த்தால், ஆவ்வ்வ்வ்வ்வ் பேருந்து 110கி.மீ வேகத்தில் போய்க்கொண்டிருந்தது பேருந்து. சாலையைக் கவனித்தால், மூன்றுவழிச்சாலை கண்ணுக்கெட்டிய தூரம்வரை வளைவுகள் இல்லாது, மேடுபள்ளம் இல்லாததால் பேருந்தின் உள்ளே சிறு குலுங்கள் கூடயில்லை. அறுபதுக்கே அதிரப்போய் தான் பழக்கமென்பதால் வந்த குழப்பமென உணர்ந்து அமைதியானேன். சிங்கையிலும் அந்த அனுபவம் வாய்க்காது, பெரும்பாலும் 70-80 கி.மீ வேகத்தில் தான் வாகனம் ஓட்டுவார்கள். அதற்கும் மேல் வேகமாகப் போனால் முப்பதாவது நிமிடத்தில் கடலில் தான் விழவேண்டியிருக்குமென, வேகிகளை எள்ளி நகைத்துக்கொள்வோம்.

தூங்கலாமென கண்களை மூடினால், “முருவா, யாரது?” என சற்றுமுன் நண்பரின் அலைபேசியில் கூப்பிட்ட போது தெரியாதது போல் கேட்ட மலேசிய பெரும் பதிவரின் முகம், மனதுக்குள் கோணல்(பளிப்பு) காட்டிக் கொண்டே இருந்ததால் தூங்க முடியவில்லை. சொ.செ.சூ -வாகிவிட்டதே? இதற்கா, அண்ணா, அண்ணாவென நாளிக்கிருமுறை மின்னாடினோம். ஆடியதும் வீண், அழைத்ததும் வீணோ? இருந்தாலும் பரவாயில்லை. விளக்கம் கொடுத்ததும், வீட்டுக்கழைத்த பாங்கு அவரின் அன்பை வெளிப்படுத்தியதால் மன்னித்து விட்டுவிட்டோம். ஆனாலும், தூங்க முடியவில்லை. இந்த வலையுலகத்திற்கு ஏதாவது செய்து நமது பேரை அதிரச்செய்ய வேண்டுமென சபதமேற்றபின்னரே நெஞ்சம், மஞ்சம் காண விளைந்தது. ஆனால் முடியுமோ? பயணிகளுக்கு அப்பப்போ வரும் கர்ணகொடூர அழைப்போசைகளுக்கிடையே தூங்க தனிதிறனிருக்க வேண்டும். எனக்கில்லை...எனக்கில்லை.

ஒளிவெள்ளத்திணூடே பயணிக்கும் பேருந்துக்குள்ளிருந்து, இருமறுகின் அழகை கண்டுகொண்டே மணிகளை கழித்துக்கொண்டிருக்கையில், நள்ளிரவின் குளிர் மெல்ல மெல்ல நெஞ்சத்தை ஆட்ட ஆரம்பிக்கவும், ஜாக்கெட்டில்லாக் குறையை போக்க தோள்பையை நெஞ்சோடு அணைத்துக்கொண்டிருக்கும் வேளையில் இரட்டைக் கோபுரங்கள் கண்களுக்குத் தெரிந்தது.


அருகிலுறங்கும் நண்பனை எழுப்பி, கோபுர தரிசனம் கோடி புண்ணியமென காட்டினால், ”ஓ, கே.எல் வந்தாச்சா? இன்னும் ஐந்து மணிநேரத்தில் கூலிம் போய்விடலாம்” என அனுபவத்தைக் காட்டினார். மலேசியாவில் எடுக்கப்பட்ட திரைபடங்களின் எல்லாக் காட்சியிலும் ஏதேனொரு மூலையில் இந்த கோபுரங்களைக் காட்டியேயிருப்பார்கள். ஏனெனில், அக்கோபுரங்களைச் சுற்றிய பத்து தெருக்கள் மட்டுமே பிரமாண்டமாக இருக்கும். மீதமெல்லால் சென்னைக்கு ஒப்பு என்பது தனிக்கதை.

ஆங்காங்கே கம்பொங் என மலாயில் அழைக்கப்படும் கிராமங்களும், தோட்டங்களும், திடீரென பெரிய கட்டிடங்களும், குறிப்பிட்ட தூரத்திற்கொரு கனரக வாகன நிறுத்துமிடங்களும் என கலந்துகட்டி முழு நாடாக கண்முன் தெரிந்த மலேசியாவைக் கண்ணில் உள்வாங்கியபடியே பயணிக்கையில் அதிகாலை மூன்று மணிக்கு சற்றும்மேல் பேருந்து சாலையோரத்தில் ஓரங்கட்டி மெல்ல நின்றது. ஓட்டுனர் இறங்கி பேருந்தின் இயந்திரத்திற்குள் தலையைவிட்டு பார்த்தவர், அலைபேசியெடுத்து அளவலாகினார். நாயும், பேயும் தூங்கும் நாலுமணிக்கு, திருடனா வரப்போகிறான் என்ற தைரியத்தில் ஓடாத பேருந்தில் குளிர்சாதனத்தின் உறுமலின் ஓசையில் நானும் தூங்க ஆரம்பித்தேன்.

பாகம் பெரிதாக இருப்பதால் தொடர்ச்சி அடுத்த பாகத்தில்.

வெள்ளிக்கிழமை

செங்கொண்டைச் சேவல் கூவி ஆரம்பித்து வைக்கும் நாள், வெய்யக்காலத்தில் மட்டும் நீண்டு நெடியதாகத் தானிருக்கும். சேவலில் குரலைக் கேட்டு சோம்பல் முறிக்கும் பட்சிகள் மெல்ல மெல்ல கீச்சுக் கீச்சுவாகி மெதுவாய் கரைதலாக மாறும் வேளையில், தலைக்கணமேறி நிற்கும் வாலிப மனம் சிறிதாய் விழிப்பைப் பெறும். காலையில் தான் கடன்கள், பிரம்மத்திற்கில்லை என சோம்பல் மெல்ல, மெல்ல தன்வசத்திற்கு மனதைத் திருப்ப, காதலின் பால் கூட்டிச் செல்லும்.

நீண்டிருந்த உடலோ குறுகி, அணைப்பிற்கில்லாமையை வெளிக்காட்டாமல், போர்வையில் முடங்கி தன் காதலை அல்லது காதலின் தேடலை வெளிச்சொல்லும். ஏங்கி நிற்கும் எண்ணமெல்லாம், தப்பிநிற்கும் வரிசையில் மூளையின் திரையைத் தொட்டுத் தொட்டுச் செல்லும். கண்ட காட்சிகளெல்லாம் கனவாக நினைவலைப் பெட்டியில் பாதுகாப்பாக
பதுக்கி வைக்கப்படும். பதுக்கப் பதுக்க சொர்கமாக தெரியும் கனவுகளெல்லாம் இதழில் புன்னகையாக வெளியேறி விடுமோ, என்னவோ.

காகத்தில் கரைதலுக்கு, தூக்கமில்லா கனவான்களின் நடையோசைக்கும் அசையாத மனம், அந்த சல்,சல்,சல் என்று தெளிக்கும் நீரின் ஓசைக்கு மட்டும் இசைந்தா கொடுக்கும். அசைந்தும் கொடுக்காது, இசந்தும் கொடுக்காத மனதை அடுத்துவரும் சர்,சர்,சர் எனும் பெருக்கும் ஒலியோசை மட்டும் சலனப்படுத்தத் தான் முடியுமா?

ஒவ்வொரு கவிதையும், காதலும் கனவாக வெளிப்பட்டு காற்றில் கரைந்து காணாமற் போகும் போதும், உடலோ இழந்ததை தேடாது, இருக்கு இன்னும் பல என புரண்டு படுத்தே அடுத்ததைத் தேடும். வெட்கமில்லாத அவனிடம், வெட்கமே இல்லாத கனவும் தன் காதலின் அடுத்த பாகத்தை காட்ட ஆரம்பிக்கும். மனமொன்றி காதற்காட்சியில் கனவைக் நினைவாக்கிக் கொள்கையில், நாசிவழி வரும் காற்று சவ்வூடுபரவலில் தகவலாய் மாறி மூளையை எட்டும் போதுதான் தெரியும், அது சாணத்தின் மணமென்று! கூரிய மூக்கை அழுத்தித் துடைத்து, விலகிய போர்வையை முழுக்கப் பொத்தி விட்டதைத் தொடும் போது, கண்ட இன்பத்தில் பாதியைக் காணோம்.

வேதாளத்திடம் சிக்கிய விக்கிரமாதித்யன் இன்புற்றானோ?, துன்புற்றானோ? எனக்கென்ன? கனவுகளில் சிக்கி உழலும் நான் கண்டதெல்லாம் இன்பம், இன்பம், இன்பம் என மனம் கொக்கரிக்கும் வேளையில் சுள்ளென்று சிறு நீர்த் துளி குறிதவறாமல் முகத்தில் விழும்போது வரும் கோவம், மடைதிறந்த வெள்ளம் தான்.

என் இன்பத்தை தொலைப்பதில் யாருக்குப் புண்ணியமென நோக்க, போர்வை விளக்கி, முகத்தைத் துடைத்து, கண்ணைக் கசக்கிப் பார்த்தால் “வெள்ளிக் கிழமையும் அதுவுமா, எருமை மாடு எப்பிடி தூங்குது பாரு” எனச் சொல்லிக் கொண்டே அடுத்த மூலையில் பசுவின் கோமியத்தை தெளித்துக் கொண்டிருந்தால் வாயாடி அக்கா.

அப்போ...அப்போ... முகத்தில் பட்டது, பசு மாட்டின் ___________?(கோடிட்ட இடங்களை நிரப்புக)

தீபாவளி இன் மலேய்சியா!!!




நான் எப்பவும் தீபாவளியைப் பெரிதாக கொண்டாடியதாக ஞாபகம் இல்லை. அது ஏனோ தெரியலை சின்ன வயசுல இருந்தே அது அப்படித்தான். புது ட்ரெஸ் கண்டிப்பா போட்டிடுவேன், இல்லையானா வழியில் கேக்குறவங்களுக்கு பதில் சொல்ல முடியாது. என்னோட தீபாவளி எல்லாம் பெரும்பாலும் நண்பர்கள்...நண்பர்கள்...நண்பர்கள் தான்.


இங்க சிங்கப்பூர் வந்து இது ஆறாவது தீபாவளி. அதில் இது இரண்டாவது மறக்க முடியாத தீபாவளி. முதல் தீபாவளி எதுன்னா? என்னோட சிங்கையில் ரெண்டாவது தீபாவளி(2005) தான் அந்த முதல் தீபாவளி. நடுத்தரமான சம்பளத்தில் வந்து, கூடுதல் வேலை பெரும்பாலும் இல்லாது, வீட்டு வாடகை, சாப்பாடு, மின் - தண்ணீர் கட்டணம், கணிணி - கேபிள் இணைப்பு கட்டணத்திற்கு வாங்கும் சம்பளத்தில் பாதிக்கும் சற்று மேலேயே செலவாகும். கைச் செலவிற்கு கட்டாயம் கொஞ்சம் வேண்டும். திடிரென வரும் உல்லாச பயணம், கூட்டங்களுக்கு (உடன் பணியாற்றும் சீன, மலேய அத்தை, மாமா, பிகர்களுடன்) என கொஞ்சம் போக மிக, மிக சொச்சமே ஊருக்கு அனுப்பிய பொன்னான காலகட்டம் அது.

அப்போதைய தீபாவளியை மிகவும் சிறப்பாக கொண்டாடுவது என அறை நண்பர்களுடன் முடிவெடுத்து(எடுத்து தான் ஆகணும், ஏன்னா? ஒரு முழுவாரம் தீபாவளிக்கு கம்பேனி ஷட் டவுன்) (கார்க்கிக்கும் ஞாபகம் இருக்கலாம்) கொண்டாட்டத்தை ஆரம்பித்தோம். எப்படி தெரியுமா? தீபாவளிக்கு முந்தைய சனிக்கிழமை முஸ்தபா பேரங்காடிக்குப் போய் முன்னூறு சிங்கை வெள்ளிக்கு சிறப்பு உணவு பதார்த்தங்களுக்கான மூலப் பொருள்களின் தீபாவளி பர்சேஸ். எல்லாம் கட்டிக் கொண்டு கடைவாசலில் டேக்ஸி பிடித்து, “அங்கிள் பிளீஸ் ஒபென் த ட்ரன்க் டோர். ஐ நீட் டூ லோட் மை திங்ஸ்” எனக் கூறவும், டிரைவிங் சீட்டில் இருந்தபடியே கதவை திறந்துவிட்ட அங்கிள் வந்து பார்க்குமுன்னே எல்லாப் பைகளையும் லோட் பண்ணீட்டோம்.

வண்டியை பூன்லேக்கு செலுத்தச் சொன்னது, அங்கிளும் படுலாவகமாக கூட்டத்திலிருந்து இருபது நிமிடத்தில் வெளியேறி பெருவிரைவுச் சாலையைத் தொட்டு கூச்சமே இல்லாமல் 110 கிமீ வேகத்தில் வண்டியைச் செலுத்தினார். நாங்கள் மூன்று பேரும் கை, கால்களுக்கு வேலையில்லாத போது வாய்க்கு வேலை என தமிழரின் அறிய, அறிய கண்டுபிடிப்பின் படி உரை”ஆடி” க் கொண்டிருந்த வேலையில் அங்கிள் வண்டியை வேகமாக ஓரங்கட்டினார்.


“அங்கிள், வாட் ஹேப்பண்ட்?” என நம் தத்துபித்து கேட்க, “110 கிமீ வேகத்துல வந்தா? டி.பி ஓரங்கட்டியிருப்பாரு” என அடுத்த நண்பர் சொன்னது, நாங்கள் நகைத்தோம். ஆனால், அங்கிள் பதிலேதும் கூறாமல் வாகனத்தின் நான்கு டயர்களையும் சிறு கல்லை வைத்து தட்டிப்பார்த்தவர், திடீரென எங்களிடம் வந்து “ஹவ் மெனி கிலோஸ் யூ லோடேட் பிகைண்ட்?” எனக்க் கேட்டார். நான் உடனே “மே பி 50 – 60 கேஜி ஒன்லி அங்கிள்” எனவும், “ஓ, தட்ஸ் ஒய், ஐ ஃபீல் வேவி” எனச் சொல்லிவிட்டு வண்டியை செலுத்த ஆரம்பிதார். “உடனே, தத்துபித்து, “நல்ல வேளை, உள்ள அரிசியே ஐம்பது கிலோ இருக்குன்னு சொல்லை, சொல்லியிருந்தா, இடையிலேயே இறக்கிவிட்டிருப்பாரு” என தமிழில் சொல்லவும் எல்லோரும் சிரித்தபடி வீடு வந்து சேர்ந்தோம்.

தீபாவளிக்கு முந்தையநாள் மாலையிலேயே அடுப்பை பத்தவைத்தாயிற்று. முறுக்கு - மூணு கிலோ, சுழியம் – ரெண்டு கிலோ தத்துபித்துவின் பொறுப்பு. தனியாக ஒரு பர்னர் அவருக்கு, யாரும் தொந்தரவு படுத்தக்கூடாது, அதான் அவரின் கண்டிசன். அடுத்து, குளொப் ஜாமுன் மீடியம் சைஸ் – 150 உருண்டைகள் வெளியிலிருந்து அழைத்துவரப்பட்ட நண்பரின் (வெள்ளாடு, பலியாடு எனவெல்லாம் சொல்லக்கூடாது, ஏனென்றால் அவர் என் நண்பர்) மிக்சர் மூணுகிலோ கடையில் வாங்கியாயிற்று, அவசரத் தேவைக்கு கடைக்குப் போய்வர இரண்டுபேர், இரவு சாப்பாடு மற்றும் தேவையான பானங்களை கவனித்துக் கொள்ள இரண்டுபேர், மேலும் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் முழுபொறுப்பும் அடியேனுடையது.


முறுக்கை எப்படியோ முடித்து, சுழியத்திற்கான ஈரமாவை வைத்து அதிகாலை ரெண்டுமணி வரை ஏதோ செய்து கொண்டிருந்த தத்துபித்துவை, அன்பாக, அரவணைப்பாக வாயில் வந்தபடி வசைபாடி பின், “என்னடா, உன் பிரச்சனை?” என கேட்டதும், ”இல்லை, மாவு ரொம்ப ஈரமா இருக்கு, காஞ்ச மாவும் மிச்சம் இல்லை, என்ன செய்யுறதுன்னு தெரியலை” என்றதும்,
வீட்டில் இருந்த ஏழு பேரும் இடைவெளியில்லாமல் திட்டினோம். பின், சமையல்கலை நிபுணர்களான நாங்கள் ஆறுபேரும் சேர்ந்து, ஆனது ஆச்சு ஈரம் குறையுமளவுக்கு மட்டும் கடலைமாவைச் சேர்த்து சுழியத்தை சுட்டுடலாம் என்ற கூட்டு அறிக்கையின் படி சுழியத்தை சுத்தமாக முடித்தோம். கிட்டத்தட்ட மொத்தம் 200 துண்டங்கள், 20 நாட்கள் கழித்து போய் சேர்ந்த இடம்....., சரி வேண்டாம் விடுங்கள் படித்தால் தத்துபித்துவின் மனம் புண்படும்.



அடுத்தநாள் அதிகாலையில் ஒன்பது மணிக்கு எழுந்து எண்ணைக் குளியல் எடுத்து புத்தாடைகள் அணிந்து அனைவருமாக சேர்ந்து அருகிலிருக்கும் ஜுராங் ஈஸ்ட் முருகன் கோவிலில் பன்னிரெண்டு மணிக்கு ஆலய பிரவேசம், தரிசனம் முடித்து வீடு திரும்பி காலைப் பசியாற இட்லி சுட்டு உண்டோம். கொடூர பசியில் ஆளுக்கு 10 – 15 இட்லிவரை உண்ண, இட்லி சுட்டு, சுட்டு கைவலி கண்ட கிருத்துவ நண்பர் இதற்காகவே இந்து மதத்திற்கு தாவிவிடப்போவதாக எச்சரிக்கை விட(இந்து பண்டிகையின் போது கோவிலுக்கு போகும் நேரம் மட்டும் சமையல் கிருத்துவ நண்பர்களுடையது, அதே போல் கிருத்துவ பண்டிகைகளில் சமையல் இந்து நண்பர்களுடையது), காலைச் சாப்பாடான இட்லியை மதியம் இரண்டு மணிக்கு உண்டு களித்தோம்.

அன்று இரவுதான் சிறப்பு. ஆம், எங்களின் கம்பெனியில் உடன் வெவ்வேறு துறைகளில் பணியாற்றும் மொத்தம் இருபது நண்பர்களை வீட்டுக்கு அழைத்து விருந்து. சமையல் தடல்புடலாக நடந்த்து, தத்துபித்துவின் தலைமையில். வந்தவர்களுக்கெல்லாம் வயிறார சாப்பாடு. பெரும்பாலானோர், சாப்பிட்ட பின் தான் சாப்பிட்டோம். எல்லோருக்கும் ஒரு சுழியம் மட்டும் கட்டாயம். அதான் பழிவாங்கள்.

சாப்பாடு முடிந்ததும், ஏறியதெல்லாம் இறங்க, குத்தாட்டம் ஆடவேண்டும் என்பது எங்கள் அணியின் சர்வதேச சட்டம். அதனால் வந்திருந்தவர்கள் எல்லோரையும் ஆட அழைக்க, பலர் மறுக்க, அவர்களை வற்புறுத்தாமல் சிலர் மட்டும் ஆட ஆரம்பித்து, சூடேற ஏற ஆடாத ஆட்களையெல்லாம் உள்ளே இழுத்துப் போட்டு சூரியன் சரத்குமார் மாதிரியாவது ஆடவைத்து அனுப்பிக் கொண்டிருக்கையில் வீட்டின் அழைப்பு மணி இரண்டுமுறை அழைத்தது.

வீட்டின் மூத்த உறுப்பினர் என்ற வகையில் போய் கதவைத் திறந்தால், ஆவ்வ்வ்வ்வ்வ்வ்

சீருடையில் போலீஸ், ரெண்டு பேர் வாசலிலும், ரெண்டு பேர் லிஃப்டின் அருகிலும் நின்றிருந்தனர். அதிலொருவர், “ப்ளீஸ் டோண்ட் மேக் நாய்ஸ், யுவர் நெய்பர்ஸ் ஆர் கம்ப்ளைனிங். அண்ட் த டைம் ஆல்சோ 1 ஏ.ம்” என்றது. “இல்லீங்க, ஏட்டைய்யா, தீபாவளி கொண்டாட்டம். இங்கதான் பட்டாசு வெடிக்கக்கூடாதே, அதான் பேசிக்...கிட்டு இருந்தோம், இதோ, இதோ இப்ப படுத்திருவோம். நீங்க போய் வாங்க” என ஆங்கிலத்தில் சொன்னதும். “யெஸ், ப்ளீஸ் ஷட் ஆஃப் எவ்ரிதிங். அண்ட் கிவ் எனி ஒன் ஆஃப் யுவர் ஐ.சி” என்றதும், வேறென்ன செய்ய குடும்ப மூத்த உறுப்பினர் என்ற வகையில், எனது ஐ.சியை எடுத்து கொடுத்ததும், ஏட்டைய்யா, அதை குறிப்பெடுத்துக் கொண்டு திரும்ப கொடுத்துவிட்டார்(இதுவரை ஏழுமுறை, எனது ஐ.சி ஏட்டய்யாக்களிடம் குறிப்புக்காக போய் வந்திருக்கிறது).

அப்புறம் என்ன, நண்பர்களில் பலர் அதிரடியாக அவர்களின் வீட்டுக்கு கிளம்பிவிட்டனர். நாங்கள் அடுப்பை.. ச்சீ..சீ இல்லை விளக்குகளை அணைத்து படுத்துவிட்டோம்.

டிஸ்கி:-

1) என்னாடா, தீபாவளி இன் மலேய்சியான்னு போட்டுட்டு, பழைய கதையைச் சொல்ற? என கேட்பவர்களுக்கு.

இதன் தொடர்சியாக அடுத்த இடுகையில் நீங்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் தீபாவளி இன் மலேய்சியா வருகிறது.

2) அந்த 2005 தீபாவளியின் போது எடுத்த புகைப்படங்கள் மிகச்சிறப்பாக எங்களிடம் இருக்கிறது.(அனைவரும், சட்டையில்லாமல் குத்தவைத்தபடி(போலீஸ் ஸ்டேசன் ஸ்டைலில்) இருக்கும் படம் மிகபிரசித்தி பெற்றது)

ஆனால், சுயநலன் கருதி படம் வெளியிடவில்லை.

3) தீபாவளி பற்றிய தொடர் பதிவுக்கு அழைத்தை ஸ்ரீ அவர்களே., இது தான் அந்த தொடர் இடுகை எனக் கூறிக்கொள்கிறேன்.

தமிழ் தாத்தா

என்பத்தியாறு வயதிலும்,
எத்துனை உழைப்பு! உன்னில்
எத்துனை சிந்தனை!, உன்
எழுத்திற்கும், சொல்லிற்கும்
எத்துனையாயிரம் அர்த்தங்கள்.


நெருப்பாற்றில் நீந்திய நாட்களையும்.,
பாம்புகள் நெளியும் பயணங்களையும்.,
வஞ்சகமும், சூழ்ச்சியும் காற்றாயிருந்த காலங்களையும்
நீ மறந்தாலும் வரலாறு மறக்காது.

இடிபோல் இறங்கிய நாளினில்,
ஏழாமிடமிருந்து,
உம்தனித் திறமையால்
அளப்பறியா ஆற்றலால்
முதலிடமேற்றாய்*.

உன்னால்தான்
இங்கு தமிழ் மணக்கிறது.
உன் உத்திரவால் தான்
அரசு இயந்திரமெங்கும் தமிழுள்ளது**.

நீ வாழும் காலத்தில்
நான் வாழ்வது எனக்கு பெருமை.
உன்மேல் பட்ட தென்றல்
என்மேல் படுவது எனது புண்ணியம்.

பொறுப்புகளை மகனிடத்தே
கொடுத்திருந்தாலும், நீயில்லா
உலகு கற்பனையிலும்
கொடூரமாகவே உள்ளது***.

தனித்தமிழ்
செந்தமிழாகியிருக்கும்
இன்னாளில், பாவாலர் பலரும்
உன்னை மறக்கலாம்,
உன்புகழை மறைக்கலாம்

உன்னால் வாழும் தமிழுக்காக
உன்னை இனி நானழைப்பேன்
என தாத்தாவென
இல்லை இல்லை
எங்கள் இரண்டாம் தமிழ் தாத்தாவெனவே.

வாழ்க நீ பல்லாண்டு.,
வாழிய உன் புகழ் பலநூறாண்டு
வாழ்க வாழ்க
லீ குவான் யூ-வே.,
வாழ்க நீ பல்லாண்டு.



பின்குறிப்பு:-

* - 1965 ஆண்டு மலேசியா, சிங்கப்பூரை திடீரென தனிநாடாக பிரிந்து போக சொன்ன போது முழு பொறுப்புள்ள பிரதம மந்திரி ஆனார்.

** - தமிழ் சிங்கையின் ஆட்சிமொழியாக உள்ளது. இரண்டாவது மொழிப்பாடமாகவும் உள்ளது.

*** - இன்றய சிங்கபூரின் பிரதமர் லீ சியான் லூங், நமது தமிழ்தாத்தாவின் மகனாவார். தற்போதைய அரசாங்கத்தில் லீ குவான் யூ மதியுரை அமைச்சராக எல்லா பொறுப்புகளையும் பார்த்து வருகிறார்.



.

நானே விஷ்ணு!!!






காற்றுபுகா கருவறையில்,
கவலையில்லா நீர்நிலையில்,
உருவைப் பெருக்கும்
உயிர் தேடலில்
மச்சமாக வாழ்ந்திருந்தேனே...


பூவறைத் தாண்டி,
பூகோளம் தீண்டும் வேள்வியில்
ஊடகங்கள் கடக்க
கூர்மமாகவே வந்தேனே...

அன்னையின் அமுதும்,
ஆழ் உறக்கமும் அன்றி
வேறறியா வேளையில்,
அமுதரும் கிண்ணச் சேற்றில்
வராகமாக புரண்டிருந்தேனே...

உலகறியும் ஆவலில்
உலகறியா பிள்ளை.
உள்ளும், வெளியுமில்லாமல்
சிறைபட்ட போது
நரசிம்மம் போலாகியிருந்தேனே…

தமிழ்கூறும் நல்லுலகில்
முதல் முதலாக
மூன்றடி இசைத்த போது
வாமனன் போலாகினேனே…


தந்தையின் அரவணைப்பில்
தொழில் கற்று
வளர்ந்ததில்
பரசுராமன் போலாகினேனே…


வாலைப் பருவம் தேடும்
காளைப் பருவம் எய்ததும்,
பொருள் தேடி வெளிவந்ததில்
இராமன் போலாகினேனே…

சொல்லில் மென்மை,
செயலில் மேன்மை,
அனுபவத்தின் தன்னம்பிக்கையால்
கிருஷ்ணன் போலாகினேனே…

அனுபவத்தின் தழும்புகளாலும்,
காதோரத்தின் நரைகளாலும்,
காலத்தின் கட்டாயத்தாலும்
பலராமன் போலாகுவேனே…

ரௌத்திர பழக்கமும்,
உலகியல் முடுக்கமும்
உள்ளத்தின் புழுக்கமும்
கூடி, வெடிக்கையில்
கல்கியும் நானே தானோ?

முரண்

வாரமுழுவதும் மதுரையில் தனியார் பைனான்ஸ் கன்சல்டண்டிங் கம்பெனியில் வேலை செய்து, இரண்டு பஸ் மாறி வீடு திரும்பிக்கொண்டிருந்த சந்திரன் தெருவுக்குள் நுழைந்ததும், மற்ற தெரு நாய்களை குரைத்து வீதியை விட்டு விரட்டிக் கொண்டிருந்த கருப்பன் ஓடிவந்து சந்திரனிடம் குழைந்தது. பேருக்கு ஏத்தபடி, உடம்பு முழுக்க, முழுக்க கருப்பு மட்டுமே. அதை குட்டியிலிருந்து வளர்த்து வருவது சந்திரன் தான். சில நேரம் சந்திரனின் அப்பாவின் அதட்டலுக்கு கூட அடங்காத கருப்பன், சந்திரனின் ஒரு சிறு விசிலுக்கு அடங்கிவிடும். பின்னே, புதன், ஞாயிற்று கிழமைகளில் தனி எலும்பு வாங்கி வேகவைத்து கொடுப்பவனாச்சே. சந்திரன் வேலைக்கு போனதிலிருந்து தான் எலும்பு ஞாயற்றுகிழமை மட்டுமே என்றாகிப் போச்சு.


கருப்பனை திண்ணையில் உட்கார உத்தரவிட்டு, சுற்றும் முற்றும் பார்த்தவன் வீட்டுக்குள் நுழைந்தது வராண்டாவை தாண்டி முற்றத்துக்கு வருவதற்குள் “கீ…கீ…சந்திரா, சந்திரா…” என பேரைச் செல்லமாகக் கூப்பிட அம்மா, அப்பாவுக்கு அடுத்து உரிமையுள்ள மூன்றாவது ஜீவன் செல்லி(கிளி) தான். அடுப்படியிலிருந்து அம்மா எட்டிப்பார்த்து, “வா சந்த்ரா, சமைச்சுக்கிட்டு இருக்கேன், கொஞ்சம் பொறு அப்பா வந்ததும் சாப்பிடலாம்” என்று பதிலுக்கு காத்திராமல் அடுப்படிக்குள் போய்விட்டார்.




தோள்பையினை முற்றத்து திட்டில் வைத்துவிட்ட, வேகவேகமாக படுக்கை அறை வாசலில் இருக்கும் புஜ்ஜி(முயல்) கூண்டைப் பார்த்ததும் கோபம் தலைக்கேற, “ஏம்மா, கருப்பன், புஜ்ஜி இருக்குற இடத்தை சுத்தம் பண்ணல?” என வீதிக்கு கேக்குமளவுக்கு கத்தினான். சத்தம் கேட்டு வெளியே வந்த அம்மா, “டேய், தேனிக்கு ஒரு கல்யாணத்துக்கு போயிட்டு, இப்ப தான்டா வந்தோம். வந்ததும் உங்கப்பா பசிக்குதுன்னு சொன்னார். அதான் சமைக்கிறேன். அதை முடிச்சிட்டு சுத்தம் பண்ணுவேன்டா. அதுக்கு ஏன், இப்பிடி கத்துற” என பதிலுக்கு ஏற்ற இறக்கத்தோடு பேசி முடித்து மீண்டும் சமையலை கவனிக்கப் போய்விட்டார்.

”ஆமா, சாப்பாடு ரொம்ப முக்கியம் பாரு. பசின்னா, கடையில வாங்கி சாப்பிட வேண்டியது தானே. இப்பிடி அழுக்கா விட்டு, விட்டு தான் ரெண்டு முயல் செத்துப் போச்சு. உன்னையப் போய் பாத்துக்க சொன்னேன் பாரு” என கத்திவிட்டு, பேண்டை கழட்டாமல், மேலே மடக்கிவிட்டு அதிரடியாக புஜ்ஜியின் இடத்தை சுத்தம் செய்ய ஆரம்பித்தான்.

”டேய், நீ ஏன்டா செய்யுற, கொஞ்சம் பொறு நான் பாத்துக்கிறேன்” என அம்மா சொன்னதைக் காதில் வாங்கிக்கொள்ளாமல், புஜ்ஜி, , கருப்பன், செல்லி இருக்கும் இடம் மற்றும் கூண்டுகளை சுத்தம் செய்து எல்லா இடங்களிலும் டெட்டால் தெளித்த பின்னரே, கைப்பிடி சுவரின் மேலிருந்த தோள்பையை எடுத்து துண்டை எடுத்துக் கொண்டு குளிக்க போனான் சந்திரன்.

”சந்திரன் வந்துட்டானா?” எனக்கேட்ட அப்பாவிடம், அம்மா நடந்ததைச் சொல்வது குளியலறைக்குள் தெளிவாக கேட்டது.
அவரும், “சீக்கிரம் வந்துருவான்னு தெரிஞ்சிருந்தா, நான் கூட சுத்தம் பண்ணியிருப்பேன்” எனச் சொல்வதும் தெளிவாக கேட்டது. ஆனாலும் மனசு அடங்கவில்லை.

ஞாயிறு முழுவதும் வெறுப்பாகவே கழியவே, இருட்ட ஆரம்பித்ததும் சாப்பிட்டுவிட்டு, அம்மாவிடம் ”காலையில சீக்கிரம் வேலைக்குப் போகணும், அதனால இப்ப கிளம்புறேன்” என சொல்லிவிட்டு மதுரைக்கு கிளம்பிவிட்டான். அவன் கோவமாகவே இருப்பது தெரிந்ததும் அம்மாவும் “சரி பார்த்து போயிட்டு வா” என்பதோடு நிறுத்திக்கொண்டார்.

இரண்டு பஸ் ஸாண்டு மாறி, மூன்று பஸ் மாறி வியர்வையும், களைப்புமாக வேலையிடத்துக்கு பக்கத்தில் ஒரு உடன்வேலை செய்யும் நால்வருடன் பங்கிட்டுக் கொள்ளும் தனி வீட்டுக்குள் நுழைந்ததும், கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருந்த நால்வரில் ஒருவன், “என்ன, மாமா ராத்திரியே வந்துட்ட” எனக்கேட்ட ஒருவனிடம், ”காலையில கொஞ்சம் வேலையிருக்கு” எனமட்டும் சொல்லிவிட்டு, குளித்து களைப்பை விரட்டுவதற்காக குளியலறைக்குள் போய் இருபது நிமிடம் கழித்து வெளியே வந்த சந்திரன் மெதுவாக நால்வருக்கு அருகில் வந்து நிதானமாக,

“யேன், டாய்லெட்டை நாந்தான் கழுவனுமா, நீங்கள்ளாம் கழுவமாட்டீங்களா?, அடுத்து நீங்க கழுவலேன்னா, பரவாயில்லை ரெண்டு மாசமானாலும் அப்படியே இருக்கட்டும்” எனச் சொல்லிவிட்டு விருட்டென அறைக்குள் நுழைந்து கதவைச் சாத்திக்கொண்டான்,

.

ஏனென்றால் நானொரு பிளாக்கர்!!!




அறை நண்பர்களுடன் சாதாரணமாய்
பேசும் போதும் விவாதிப்பேன், ஏனென்றால்
நான் ஒரு பிளாக்கர்!

சாப்பிடும் போதொல்லாம்
குறை சொல்வேன், ஏனென்றால்
நான் ஒரு பிளாக்கர்!

வீட்டில், வேலையிடத்தில் யாருடனும்
சிரித்து பேசமாட்டேன், ஏனென்றால்
நான் ஒரு பிளாக்கர்!

எனக்கு பிடிக்காவன், நல்லது
செய்தாலும் சண்டை போடுவேன், ஏனென்றால்
நான் ஒரு பிளாக்கர்!

என்மேல் குற்றம் சாட்டினால்,
அழகாய் சமாளிப்பேன், ஏனென்றால்
நான் ஒரு பிளாக்கர்!

என்சுய விருப்பு-வெறுப்புகளையும் தாண்டி
என் இமேஜுக்காக பேசுவேன், ஏனென்றால்
நான் ஒரு பிளாக்கர்!

திரைப்படம் பார்க்கையில் தேடி
தப்புகளை பெரிதாக்குவேன், ஏனென்றால்
நான் ஒரு பிளாக்கர்!

ஒவ்வொரு வார்த்தை(வரியின்), உட்கருத்தின்
உட்கருத்தையும் கண்டுணர்வேன், ஏனென்றால்
நான் ஒரு பிளாக்கர்!

ஆகமொத்தம், நான் நிம்மதியாக இருக்கிறேனோ
இல்லையோ, அடுத்தவனை நிம்மதியாய்
இருக்க விடமாட்டேன், ஏனென்றால்
நான் ஒரு பிளாக்கர்!

உன்னைப் போல் ஒருவன் – என்னோட கவலை…


கடந்த ஒருவாரமாக கடுமையான ஆணிகளை புடுங்க வேண்டியிருந்ததாலும், ஆணிகளைப் புடுங்கும் போது உடம்பில் பல இடங்களில் ஆணிகள் கீறிவிட்டதாலும், இன்று ஓய்வுக்காக விடுப்பு எடுத்துவிட்டேன். நேற்றிரவு படுத்தவன் இன்று மதியம் ஒருமணிக்குத்தான் எழுந்தேன். எழுந்து பதிவுக கடமையை ஆற்றுகையில், உன்னைப்போல் ஒருவனுக்கு வந்திருக்கும் விமர்சங்களும், எதிர் – ஆதரவு வினைகளை அளவுக்கு அதிகமாக படித்ததன் விளைவாக, படத்தினை அரங்கில் காண அதிரடியாக கிளம்பி, பார்த்தாயிற்று.

படத்தைப் பற்றி பல விமர்சனங்கள் வந்துவிட்டதாலும், படத்தில் உள்ள உள்குத்து, வெளிக்குத்துகளைப் பற்றியும் அளவுக்கு அதிகமாக தேவையில்லாமல் வந்து விட்டதாலும் அவைகளைப் பற்றி பேசாமல், படத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும் போதே எனக்குத் தோன்றிய ஒரு கவலையை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன்.

நடிப்பு சிம்மங்களுக்கிடையே அற்புதமான நடிப்பு போட்டிக்குள் அசாத்திய உடல் வலிவுடன், காண்பவர் போறாமைப்படும் வண்ணமான கட்டுடலுடன் வந்த கணேஷ் வெங்கட்ராம் தான் என் கவலைக்கு காரணம்.


இத்துனை அபார உடலமைப்பும், நல்ல நடிப்பு திறனும் கொண்ட இவரை இனி இதுமாதிரியான ஆண்மையான பாத்திரத்தில் பார்க்க முடியுமா? இல்லை படம் முழுக்க நெஞ்சை நிமித்தியவாரு நடித்துவிட்டு கடைசியில் நோஞ்சான் கதாநாயகன் கையில் இரண்டே இரண்டு அடி மட்டும் வாங்கி மூர்ச்சையாகும் பாத்திரங்களில் தான் பார்க்க முடியுமா என்பது தான் என் கவலை. (ரியாஸ்கானுக்கு இந்த மாதிரியான பாத்திரங்களில் மட்டுமே கொடுக்கப்பட்டது)


(அப்பாடா, பதிவுலக கயமையை ஆத்து, ஆத்துன்னு ஆத்தியாச்சு)

எம் பேரு குமாரு இல்ல...

அதிகாலையில் பற்றவைத்த அடுப்பில், ஒன்பதரை மணிக்கும் மேலாகத்தான் தனலை குறைக்க முடியும், முடிந்தது. முகத்தை அலம்பிவிட்டு அம்மா கொண்டு வந்த எழுமிச்சை சாதத்திற்கு ஊருகாயும், கடையில் இருக்கும் பருப்பு வடையையும் வைத்து சாப்பிட ஆரம்பிக்கும், அதே நேரத்தில் அம்மாவும் தனது பாட்டை ஆரம்பித்த்து, “ஏன்டா, அந்த சோழவந்தான்காரன் இன்னிக்கி வந்தா புதுசா ஏதாவது மாப்பிள்ளை படம் இருக்குதான்னு கேட்டு வையி” என கல்யாண வயசில் பொண்ணை வச்சிருக்கும் அம்மாக்களின் பேச்சினை தாளம் தப்பாமல் பேசியது. தங்கச்சி கண்ணாலத்துக்கு அப்புறம் தான் அத்தை மகளை, எனக்கு பொண்ணு கேட்டு பேசவே முடியும்.




நாலுவாய் சாப்பிடுவதற்குள், வாசப் பக்கமிருந்து ஒரு சத்தம் ”யேய் குமாரு, ஏட்டையா வந்திருக்காரு பாரு. சீக்கிரம் வந்து டீயப் போட்டுகுடுடா” பாதியிலே எந்திரிச்சு, ”அய்யா, சாப்பிட்டுக்கிட்டு இருக்கேன், கொஞ்சம் பொறுங்க முடிச்சிட்டு வந்திடுறேன்” சொன்ன வேகத்தில் சாப்பாடை அள்ளித் தின்றுவிட்டு. அடுப்புக்கு வந்து பாலுக்கு சூட்டை அதிகப்படுத்திக் கொண்டே, ஏட்டய்யாவிடம் “என்னங்கையா இந்தப் பக்கம்?, ஏதும் பிரச்சனையா?” எனக் கேட்ட குமாருக்கு, ”ஒன்னுமில்லைப்பா, நம்ம ஒன்றியத்தை பாக்க வந்தேன்” என்றார்.


பயன்படுத்திக் கொண்டிருக்கும் தேயிலையை வைத்து இன்னும் நாலுபேருக்கு தேத்தண்ணி போட முடியும், இருந்தாலும் தேயிலையை மாற்றிவிட்டு, வென்நீரில் இரண்டுமுறை அலசி கொஞ்சம் இஞ்சியை தட்டி அதே கோப்பையில் வைத்து வேகவிட்டு, பாலை பக்குவமாய் ஆடையில்லாமல் எடுத்து தேயிலை நீர்விட்டு, ஏட்டையாவின் தேவைக்காக குறைவாக வெள்ளை சக்கரை விட்டு ’முறையாக’ ஆற்றி ஐய்யாவிடம் எடுத்து வந்தான் குமாரு.



தம்ளரின் அடிபாகத்தில் தண்ணீரில்லாமல் துடைத்து, காலை தினதந்தியில் மூழ்கியிருந்தரை ’ஐய்யா டீ’ என கூப்பிட்டு கொடுத்துவிட்டு, கடைக்குள் வந்து வீச்சு வீச்சென கத்திக்கொண்டிருந்த வானொலி பெண்ணின் சத்ததை அளவாக வத்துவிட்டு மீண்டும் ஐய்யாவிடம் வந்து சேர்ந்தான்., தனது சந்தேகத்தை தீர்ப்பதற்காக.



”ஐய்யா, போனவாரம் திண்டுக்கல்ல இருந்து வந்த எங்க பெரியப்பா மகன், என்னைய அவங்கூட வியாபாரத்துல சேந்துக்கச் சொல்றான். அது ஏதோ புது கம்பெனியாம். அதான், அதைப் பத்தி உங்ககிட்ட கேட்டிட்டு சேரலாம்ன்னு இருக்கேன். நீங்க தான் விசாரிச்சு சொல்லணும்” என்ற குமாரை, மேலும் கீழுமாய் பார்த்துவிட்டு, “அவன் உன்னோட சொந்தக்காரன் தானே, நம்பி சேந்துக்க வேண்டியது தான” என்ற அய்யாவுக்கு தன்னோட கேள்வியை விளக்க ஆரம்பித்தான் குமாரு



“அதில்லைங்கைய்யா, அதென்னவோ பதினஞ்சாயிரம் ரூவா கட்டி சேர்ந்தா, ஒரு காந்த கடியாரம் தருவாய்ங்களாம். அடுத்து நாம் ரெண்டு ஆளுகளைச் சேர்ந்து விட்டால் நம்க்கு கொஞ்சம் காசு தருவாய்ங்களாம், அவிய்ங்க ஆளுக்கு ரெண்டு பேர சேத்துவிட்டா, அதுக்கும் நம்க்கு காசு தருவாய்ங்களாம். இதே போல நாம சேர்த்து விட்ட ஆளுகளுக்கு கீழ யார் சேர்ந்தாலும் நமக்கு காசு வருமாம். ஒரு தடவை பதினஞ்சாயிரம் ரூவா கட்டுறதும், ரெண்டு பேர சேர்த்துவிடுறது தான் நம்ம வேலையாம். அடுத்து மாசா மாசம் நமக்கு பணம் வருமாம். அதான் சேர்றதுக்கு முன்னாடி, அந்த கம்பேனியைப் பத்தி உங்க யார்கிட்டயாவது விசாரிச்சுட்டு சேரலாமுன்னு தான் கேக்குறேன். உங்களுக்கு அந்த கம்பனியைப் பத்தி தெரியுமா?, நல்ல கம்பனி தானா? நம்பி சேரலாமா?” ஒரே மூச்சில் ஒப்பித்த குமாரை மேலும் கீழுமாக பார்த்த ஏட்டய்யா,




“குமாரு,. அந்த கம்பனியப் பத்தி யாராச்சும் கொறை சொல்லியிருந்தாதான் எங்களுக்கு தெரியும், அப்பிடி யாரும் சொல்லாத வரைக்கும் இதெல்லாம் போலீஸுக்கு தெரியாதுப்பா. நீயி ஒஞ்சொந்தக்காரன் மேல நம்பிக்கை இருந்தா மட்டும் சேரு. இல்லாட்டி விட்டிரு” என நழுவிய ஏட்டய்யாவை விடவில்லை குமாரு“சொந்தக்காரன் மேல நம்பிக்கை இருக்கு, நெறையா பணம் வர்றதா அவன் சொல்றதக் கேக்க ஆசையாவும் இருக்கு. ஆனா, பணத்தை மோசடி பண்ணிட்டான்னு அடிக்கடி டீ.வில ஆளுக அழுகுறதப் பாத்தாலும் பயமாவும் இருக்கு. அதான் போலீசுல தெரிஞ்ச ஆளுக இருக்கும் போது விசாரிச்சுக்கிட்டு சேரலாமுன்னு இருந்தேன், ஆனா, நீங்க தெரியலைன்னு சொல்றீங்க, என்ன பண்ணுறதுன்னு தெரியலை”



“இல்லை குமாரு, அந்த கம்பெனி உண்மையிலயே இருக்குதான்னு பத்திர ஆபீஸ்ல சரி பார்க்கலாம். நீ வேணும்ன்னா திண்டுக்கல் பத்திர ஆபீசுக்கு போய் அந்த கம்பெனி பேரைச் சொல்லி கேட்டுப்பாரு, எனக்கு வேலையிருக்கு நா வர்றேன்” என வழிகாட்டிப் பிள்ளையாராக எழுந்து போய்விட்டார், ஏட்டைய்யா.



தன் முயற்சியில் சற்றும் மனந்தராத நம்ம குமாரு, பத்திரபதிவு ஆபீசுக்குப் போய் ப்யூனை ஓரங்கட்டி, சரி கட்டியதில், ப்யூன் ஒரு மேசைக்கு வழி காட்டினார். அங்கே அந்த கம்பெனியின் பேரைச் சொல்லி கேட்டதும், தலையணை அளவு பேரேட்டில் தலையைவிட்டு குடைந்து “ஆமா, அப்பிடி ஒரு கம்பெனி போன வருசம் பதிஞ்சிருக்காங்க. நீ எதுக்கு இதை பாத்துக்கிட்டு இருக்க? என கேட்ட அபீசரிடம், மேலே ஏட்டய்யாவிடம் சொன்ன அனைத்தையும் சொல்லவும், கொட்டாவி விட்டபடியே, தம்பி, பதினஞ்சாயிரத்துக்கு இவ்வளவு கேள்வி?, இவ்வளவு அலைச்சலா? இதவிட சேல்ஸ் டேக்ஸ் ஆபீஸ் போய் கேட்டீங்கன்னா, போன வருசம் எவ்வளவு டேக்ஸ் கட்டினாங்கன்னு பார்த்தீறலாம், அதுல இருந்து கம்பெனியோட நடவடிக்கை தெரியும், போ..போ”.என கேலியாக விரட்டினார்.



லேசா கண்ணைக் கட்டின மாதிரி இருந்த்து. ஆனாலும் விட முடியாதுல்ல. நம்ம சொந்த ஊருக்குள்ல இந்த தகவலைக் கூட சேகரிக்க முடியலைன்னா, இத்தினி வருசம் பொழச்ச பொழப்புக்க அர்த்தமில்லாமையில போயிடும். நாலு நாள் இடவெளியில குமாரு ஆணீயடிச்ச மாதிரி போய் நின்ன இடம், அதான், அதே தான்…




வருமான வரித்துறை அலுவலகம். அங்கேயும் அதே மாதிரி ப்யூன் – மேசை – ஆபீசர் – அதே கேள்வி – அதே மாதிரியான பதில் – ஆபீசரின் அதே கேள்வி – அதே முழு விளக்கம் – அதே மாதிரியான நக்கலுடன், தம்பி இதை நீங்க சென்னையில இருக்குற ரிசர்வ் பேங்க் ஆபீஸுல போய் கேட்டீங்கன்னா, அந்த கம்பெனியோட முழு வரவு – செலவயும் பார்த்து சொல்லிடுவாங்க. நீங்க நம்பிக்கை வந்துச்சுன்னா முதலீடும் பண்ணலாம், என நக்கலாக முடித்தார். இதுக்கு மேலயும் இது ஆகாது, மனம் சொங்கித்தான் போனான் குமாரு.




ஒரு வாரத்திற்கு பின் அதே காலை நேரம், கடைக்கு வந்த ஏட்டைய்யாவைப் பார்த்த்தும் நடந்த்து நடந்து போச்சு. இவரை எப்பிட்யாவது சரிகட்டணும் என மனதுக்குள் நினைத்திருந்த குமாரைடம், ”என்ன குமாரு, பத்திர ஆபீஸுல போய் கேட்டீயா? என்ன சொன்னாய்ங்க” என்றதும்.



அதுக்கெல்லாம் எங்கங்க நேரமிருக்கு, என் தம்பி வந்தான் நான் பதினஞ்சாயிரம் பணத்தை குடுத்து சேந்துட்டேன். எனக்கு அந்த காந்த கடியாரமும் தந்துட்டாய்ங்க, நானும் ஒரு ஆளா நம்ம சைக்கிள் கடை முருகனை சேர்த்துட்டேன், ரெண்டாவது ஆளு தான் வேணும், நீங்க சேர்றீங்ளா ஏட்டைய்யா, இந்த காந்த கடியாரம், சக்கரை நோயாளிகளுக்கு ரத்த அழுத்ததை கட்டுப்படுத்துமாம், ராத்திரிக்கு நல்லா தூக்கம் வருமாம்...” என பல்லவி பாடி முடிக்கும் முன்...

“ஏன்ய்யா, இந்த மாதிரி அடையாளமில்லாத கம்பனிகளை நம்பி பணத்தை கட்டுறீங்க. நாளைக்கி ஏதாச்சும் ஒன்னுன்னா, போலீஸ் சரியில்லை, ஒழுங்கா வேலையே செய்யுறதில்லைன்னு கூட்டம் போட்டு அழுதுகிட்டே, டீ.விக்கி பேட்டி குடுக்க வேண்டியது. உங்களை மாதிரி ஏமாற ஆளுக இருக்குது வரைக்கும் ஏமாத்துறவன் இருக்கத்தான் செய்வான்” ன்னு கத்திவிட்டு மோட்டார் சைக்கிளில் போன ஏட்டைய்யாவைப் பார்த்து வாய்பிளந்து நின்றிருந்தான் குமாரு.



ஆனால், குமாரின் மனசு பேசியது என்னவாக இருந்தது?,

ஏன்ய்யா முதல்லயே கேட்டாலும், விசாரிச்சு சொல்ல மாட்டீங்க. புகார் குடுத்தாலும், ஆளை புடிக்க மாட்டீங்க. ஆனா, இளைச்சவன் சிக்கினா மட்டும் அலையவிடுவீங்க. அதானால, நான் சேக்க வேண்டிய இன்னொரு கிளைக்கு உங்கள மாதிரி அரசங்க ஆளுகளைச் சேர்த்து, எனக்கு நட்டம் வந்தா அது உங்களுக்கும் தான்னு ஆக்கலை, எம்பேரு குமாரு இல்ல...

நாங்களும் எம். எல். எம் கம்பெனில நாலு நாள் கோர்ஸு படிச்சிட்டு தான் வந்திருக்கேன்டியேய்...

மசுரு – உசுரு



கடந்த இரண்டு நாட்களாக வலையுலகை சுற்றிவரும் இந்த காணொளிக்காக பதிவர்கள் கொதித்துப்போயுள்ளதை பல்வேறு இடுகைகள் காட்டுகின்றன.

அதிலும் குறிப்பாக கோவி அண்ணன், ஒரு நிதர்சனத்தை கொஞ்சம் அதிகமாகவே கூறியுள்ளதாகவே கருதுகிறேன். நாம் நாம் வலையுலகை நம்முடைய சொந்த மனவெளிப்பாட்டிற்கான இடமாகத்தான் பாவித்துக் கொண்டிருக்கிறோம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

இலங்கைத் தமிழர்களுக்கு கடந்த ஒரு வருடமாக நேர்ந்து கொண்டிருக்கும் உச்சபட்ச அவலத்தை வலையுலகில் கூவிக்கூவி கூறினாலும், அது சென்றடைந்தது தரையிலிருந்து பத்தடி உயரத்தில் அண்டவெளியில் வாழும் பதிவர்களுக்கு மட்டுமே.

சுயவிருப்பம் இல்லாமல் கூட, இன்றய சமுதாய ஓட்டத்திற்கு ஈடுகொடுக்கவேண்டி சொந்த ஊரிலிருந்து பிடி மண்கூட இல்லாமல் ஏதோ ஒரு ஊரிலோ, நாட்டிலோ பணி செய்து அண்டிப் பிழைத்து வருகிறோம்.

உணவு, உடை, உறைவிடம் போன்ற மனித அடிப்படைத் தேவையைக் கூட தன் சொந்த உழைப்பில்லாமல் பெற்றுவாழும் ஒட்டுண்ணி வாழ்க்கையை வாழபழகி அதில் இன்புற்று வாழ்ந்து வருகிறோம்.

இனி, இனம், மொழி, சமூகத்திற்காக களத்தில் இறங்கி, மாற்று கருத்துடையோர், அரசு இயந்திரம், அரசின் கொள்கைகளை எதிர்த்து பணியாற்றத் துணிவோர் எண்ணிக்கை, விரல்களின் எண்ணிக்கையைத் தாண்டுமா என்பது சந்தேகமே!

ஆனால், அதே சுகவாசி பதிவுலகம் தான் தனி மனிதனின் உடல்நிலையை மேம்படுத்த தன்னாலான உதவியை தாராளமாக வழங்கியது என்பதும் கண்கூடு. தேனீக்கள் கூடிக்கட்டிய தேன்கூடு.

மொத்த தொகையை முதலில் கேட்டதும், அதிர்ச்சியடைந்த தனியுள்ளங்கள் கூட தன்னாலான சிறுதுளிகளை சேகரிக்க ஆரம்பித்ததும், அதே சிறு சிறு துளிகளே இரண்டே வாரத்தில் பெரும் வெள்ளமானதையும் கண்டோம். இதை நிறைவேற்றியதில் பெரும் பங்கு பதிவர்களே சொந்தம்.

ஆக, இந்த இரண்டு சம்பவங்களையும், பதிவர்களின் செயற்பாட்டையும் ஒப்பு நோக்குகையில் தானாக ஒரு உண்மை வெளிவரும். அது,

ஆழமான, நீளமான கடலாக இருந்தாலும் நீந்தி கடக்க பதிவர்கள் தயார் தான். ஆனால், அதிலிருக்கும் திமிங்களங்களும், சுறாக்களும் தன்னை சூறையாடாது என்ற குறைந்தபட்ச உயிர் உத்திரவாதத்தினை எதிர்பார்க்கிறார்கள் நம் பதிவர்கள்.

இதை தவறெனக் கூற எந்த முகாந்திரமும் இல்லை. ஒரு கொடூர நிகழ்ச்சியால் தன் இனம் அழிவதைக் கண்டு கொதிக்கும் நண்பர்கள், அடுத்தவரில் உதவியை எதிர்பார்க்கும் முன், தான் களத்தில் இறங்கிய பின் மற்றவர்களை அழைத்தால் தான் அந்த போராட்டம் வெற்றியை நோக்கி நகரும்.

அது இல்லாத பட்சத்தில் வார்த்தைப் போருக்கு குறைவேதும் இராது!!!

கொடைக்கு – கொடையா?

வரிசைக்கு ஐந்தான படுக்கை

வரிசையில் நேரெதிர் படுக்கையில்

கால்களுக்கு போர்த்தியிருந்த யுவதியும்,

காலாட்டிக்கொண்டிருந்த யுவனையும், தாண்டி

இன்னும் கொஞ்சநாளில் தள்ளாடப்போகும்

பாட்டியும் இடம் பிடித்திருந்தார்!



மூவரும் நடக்கும் வேலையில்

முகம் கொடுக்காது,

பாட்டி புத்தகத்திற்கும்,

யுவன் கையடக்க இசை வட்டிற்கும்,

யுவதி கண்ணாடியில் அழகு முகத்தைப் பார்ப்பதிலும்

கவனத்தை பிடித்து வைத்திருந்தனர்.

பறக்கும் ரயிலில் பயணிப்பதாய் நினைப்போ, என்னவோ...



முழுதும் படுக்காமல், சாய்ந்தேஆசுவாசமானேன்.

டக் டக் என்ற சத்தத்துடன்

அருகே வந்தவளுக்கு நாற்பதிருக்கலாம்.

'எல்லாம் தயார்,இடதா? வலதா?’

என்றவளிடம்,வலது வேண்டாம்,

’சோறு தின்ன வேண்டும்’என்றதும்,

க்ளுக் என்று சிரித்ததில்

பயம் பாதியாக குறைந்தது.



இடது கையை பிடித்துக் கொண்டு,

‘Look at the other side’

என்ற கட்டளைக்குபணியாமல், அத்தையையே

பார்த்துக்கொண்டிருக்கும் போது,

தடியான குழலை

கண்ணிமைக்கும் கணத்தில்

கைநரம்பினுள் நுழைத்தாள்.


சுறுக்கென்ற சிறுவலிக்கு

முகம் சுளிக்கும் முன்,

பாவாடையான போர்வையை

விலக்கி யுவதி,

குட்டைப் பாவாடையில்

அன்னநடை பயின்றாள்.

வலி மறந்து, பார்வையால்

வாசல்வரை வழியனுப்பி

திரும்பியதிலொரு சந்தோச

ஊற்று உள்ளமெங்கும் பரவியது.

அதற்குள் கையெங்கும் பிளாஸ்திரி...


எத்தனை குழந்தைகள்,

அதில் எத்தனை பெண்?

என்ற எனது கேள்விக்கு,

’ஒரே பெண், வயது மூன்று’

என புன்முறுவலில் பதிலளித்ததும்

‘அப்போ, இன்னும் பதினைந்து வருடம்

காத்திருக்கணும், நாம் சொந்தமாக’

வார்த்தையைக் கேட்டதும்,

அடுத்த பிளாஸ்டர் வாயிக்குத்தான்

என்பதை கைநடிப்பில் காட்டவும்,

புன்னகை தான் முகங்களெங்கும் பரவியதே...




அடுத்த அவுட்பாஸ் பாட்டிக்கு...

அறுபது வயதிருக்கலாம்

ஆசை விடவில்லைபோலும்!.





எல்லாம் முடிந்து கைக்கட்டுகளை

பிரித்து வெளியேரும் போது

அத்தை மறக்காமல்

ஆளுக்கொரு பரிசு கொடுத்தது.

பிரித்துப் பார்த்தால்,

தங்கமாய் மின்னுது

‘Be positive(B+)’ பதக்கம்.



கொடைக்கு கொடையா?

"குருதி கொடை”க்கு

பதக்கம் கொடையா?




கேள்வியெழுப்பாமல்,

பாட்டிவழி பாரில்

காபி மட்டும் குடித்து

மன நிறைவோடு

வீடு வந்து சேர்ந்தேன்.

சிங்கையில் டாஸ்மாக்-கின் கிளை!?

நண்பர் ஒருவரின் திருமண வரவேற்ப்பு நிகழ்சியில் கலந்து, மிக அருமையான உணவினை உண்டு விழாவினை சிறப்பித்துவிட்டு!? தேக்காவினுள் இருக்கும் ஒவ்வொரு குறுக்குச் சந்தாக சுற்றி வரும்போது கண்ணில் கண்டது தான் இந்த டாஸ்மாக் கடை.





அதே வியாபாரம், அதே சரக்குகள், அப்படியே டிட்டோ. நம்பாதவர்கள் படத்தினை கிளிக்கி பெரிதாக்கி சந்தேகத்தை தீர்த்துக் கொள்ளவும்.





நீ ஏண்டா அந்தக் கடைக்கு போனாய்? என கேட்பவர்களுக்கு நான் என்ன சொன்னாலும் நம்மப் போவதில்லை. அதனால் சுயவிளக்கம் இல்லை.

தமிழ் வலையுலகம்


வலை உலகம், ஒரு
மாய உலகமென்றே
இதுவரை நம்பியிருந்தேன்..

அறிவாளிகளும், அறிவாளிகளும்
வார்த்தை ஜாலங்களால்
விவாதித்து, களத்தை வெறுமனே
சூடாக்கும் இடமிதுவெனவே எண்ணியிருந்தேன்

நல்ல கருத்துகளுக்கு, கடும் எதிர்ப்பும்,
அஜல்-குஜால் கருத்துகளை
ரத்தின கம்பளத்தோடு வரவேற்கும்
உலகிதுவெனவே வெறுத்திருந்தேன்.

எல்லாம், நேற்றுவரை தான்.
எல்லாம் மாறிற்று. என்
எண்ணங்களும் மாறிற்று.

ஆங்கே ஒருவருக்கு ஆபத்து,
உதவி செய்வோம் வாருங்கள்
என்ற ஒற்றை வரிக்கு,
எத்தனை மடல்கள்?, எத்தனை இடுகைகள்?,
எத்தனை, எத்தனை உதவிக்கரங்கள்!?

உலகமுழுமைக்கும் தமிழில் பரப்பியதும்,
உடனடியாக கூட்டங்கள் நடத்தியதும்,
பணப்பரிவர்த்தனைகளின் விளக்கங்களும்,
இலக்கின் நிர்ணயமும்-நடப்பும்
என அத்தனையும் நடந்தது
ஓர் இரவும், ஓர் பகலுக்குள்.

நம்பிக்கைத் துளிர் விட்டதோடில்லாமல்
கிளை விட்டும் பரவுகிறது.
பரவுவது, பரப்பியதும்,
உதவியதும், உதவி கேட்பதும்
தமிழ் பதிவர்கள் தான்.

என் எண்ணத்தை மாற்றிய
தமிழ் பதிவர்களுக்கு,
நன்றி சொல்வதோடில்லாமல்
நானும் இணைந்தேன், உங்களோடு
என பெருமை கொள்கிறேன்.


உதவ விரும்புவோரின் தொடர்புக்கு:

சிங்கை செந்தில்நாதனுக்காக கூடிய பதிவர்கள் / நண்பர்கள் கூட்ட முடிவுகள்

பதிவர் சிங்கை நாதனுக்கு உதவுங்கள் - Very Urgent


.

சூடான பதிவுலகம்

இன்றய பதிவுலக்கத்தில் சில தலைப்புகளைத் தொட்டாலே போதும் ரெண்டு நாளுக்கு மொத்த பதிவர்களையும் சூடாக்கி சுகமாக குளிர்காயலாம். சும்மா, சாதாரணமாக திரியைக் கொளுத்திப் போட்டால் போதும் அது பாட்டுக்கு பின்னூட்டத்தில் சரஞ்சரமா வெடித்து தூசியைக் கிளப்பி எல்லோர் மேலும் வெறும் புழுதியைப் படியவைக்கலாம். சர்ச்சையின் முடிவில் எழுதியவரோ அல்லது எதிர்த்தவரோ துளியளவுக்கும் மாறியிருக்க மாட்டார்கள்,. என்பதுதான் அதன் தனிப்பெரும் சிறப்பு.

1) கடவுள் நம்பிக்கை சரியா? தவறா?

மனித இனம் தோன்றிய காலம் தொட்டு இருந்து வரும் பழக்கம், இறை தொழல். மொழி தோன்றி எழுதப் படிக்கத் தொடங்கிய காலம் முதல் அதிகாரப்பூர்வமாகவே இருந்து வரும் கேள்வி! லெமூரியா கண்டத்திலிருந்து சிதறி ஓடும் போதும், பிடிமண்ணாக தான் போன பக்கத்திற்கெல்லாம் கொணர்ந்து ஏதேணும் ஒரு கடவுளுக்கு அடிபணிந்தே வாழ்ந்து வருகிறான். கடவுள் நம்பிக்கை இல்லாத கண்டமும் இல்லை, நாகரீகமும் இல்லை, மொழியும் இல்லை என்பதே உண்மை.


பல்லாயிரம் அறிஞர்கள் பல நூற்றாண்டுகளாக வாத, விவாதம் புரிந்தும் முடிவுக்கு வர முடியாமல் நீண்டு கொண்டே இருக்கும் அனகோண்டா தான் இந்த இறை நம்பிக்கை. ஆனால், அவர்களுக்கு கிடைக்காத அற்புதம் ஒன்று இந்த நூற்றாண்டு மனிதனுக்கு கிடைத்துள்ளது. அது ”அறிவியல்”. எனும் தொலைநோக்கு கண்ணாடி.

வெறும் வாத, விவாத்தில் மட்டும் ஈடுபட்டு நேரத்தை வீணடிக்காமல், அறிவியலைக் கொண்டு கடவுளை இருவருமே ஆராயலாமே. வாத, விவாத்தால் மட்டும் கடவுள் நம்பிக்கையை ஒரு சார்பாக மாற்ற முடியாது என்பது வரலாறு. அப்பன், பாட்டனின் தோளில்(அறிவியல்) வசதியாக உட்கார்ந்து கொண்டும் வெறும் பேச்சளவில் மட்டும் இருப்பது, அறிவார்ந்தவர்களுக்கு ஒரு வகையான தோல்வியே!!!

இருப்பாதக் கூறும்போதோ அல்லது இல்லை என்பதைக் கூறும்போதோ தவறான அல்லது கடுமையான ஒரு வார்த்தையைக் கூட புழங்கினாலும் சொல்ல வந்த கருத்தே பாழ்பட்டுவிடும். எதிர் தரப்பினரை திருத்த வேண்டும் என்ற நல்லெண்ணம் உள்ளவராக இருந்தால் பெருமளவில் பொறுமையும், சகிப்புதன்மையும் கொண்டிருக்க வேண்டும். அது இல்லாதவர்கள் வாத, விவாத்தில் ஈடுபடாமல் இருப்பதே மற்றவர்களுக்கு நலம்.

அடுத்து, பதிவுலகத்தில் வாதிப்பவர்கள் இருவருமே ஒரே மொழி மற்றும் கலாச்சார சூழலிலிருந்து வந்தவர்கள் என்பதையும் மறக்கக்கூடாது. மேற்கோள்களும் நமது சூழலை ஒத்ததைக் கொண்டதாக இருப்பதும் முக்கியம். ரத்தமும், சதையும் தந்த அம்மாவிடம் பிணைப்பாக இருப்பதோடு மட்டுமில்லாது, அவர் அறிமுகப்படுத்திய சகோதர – சகோதரிகளிடமும் கடைசிவரை பாசமாக இருக்கும் நாம், இருபது வயதுக்குமேல் பெற்றோரையும் விட்டுவிலகி மனம் போன போக்கில் வாழ்க்கை நடத்தும் மேல்நாட்டவரின் கூற்றுக்களை அப்படியே முழுவதுமாக ஏற்றுக்கொள்ள முடியாது என்பதையும் உணரவேண்டும்.
*******

இடுகையின் நீளம் கருதி, மற்ற தலைப்புகள் பின்வரும் இடுகைகளில் காணலாம்.

எங்கே கடவுள்?

ஆத்தீகனும் தேடுகிறார்,

நாத்தீகனும் தேடுகிறார்.

போற்றியும், திட்டியும்

சகஸ்ரநாமம் பாடுகிறார்.




உள்ளென்றும், இல்லென்றும்

உதவிகள் பல செய்கிறார்,




உள்ளென்றவர் இல்லெனவும்,

இல்லென்றவர் உள்ளெனவும்

உறுத்தலில்லாமல் மாறுகிறார்.



அங்குமில்லாமல், இங்குமில்லாமல்

நடுவில் அப்பாவியாக நின்றாதால்

இருவரும் பெற்ற பெரும்பேர்

எனக்கில்லாமல் போகுமோ?




உள்ளென்பதோ, இல்லென்பதோ

இன்றே தெரிந்தால்,

போற்றியோ, திட்டியோ

சகஸ்ரநாமம் பாட

நானும் தேடுகிறேன்

எங்கே கடவுள்?

காக்கை நேசம்

சோறைப் பங்கிடும் போது
பொங்கிடும் நேசம்,

பீரைப் பங்கிடும் போது
குறைகிறதே நேசம்!?




சிகரெட்டைப் பங்கிடும் போது
பரவிடும் நேசம்,

நான் பார்க்கும் பெண்ணையே, அவனும் பார்க்கும் போது
குறைகிறதே நேசம்!?




கையிலிருக்கும் காசெல்லாம் கொடுத்து பஸ்ஸேத்திவிடும் போது
கலங்கிடும் நேசம்,
கொடுத்த காசைக் கேட்கும்போது
கலங்கிடுதே நேசம்!?




சாதனை புரிந்தான் என் நண்பன் என
மார்தட்டும் நேசம்,

சீரழிந்த பழைய நண்பனைக் கண்டதும்
ஒளிந்திடுதே நேசம்!?




காக்கையும், குருவியும் என் ஜாதி
என்றிடும் நேசம்,
தன் ஜாதிப் பெண்ணைக் காதலித்தால்
அரிவாள் எடுக்கிறதே நேசம்!?




பச்சை வரிகள் மட்டுமே நான்,
என்றிடுமே என் நேசம்.,

சிவப்பு வரிகள் என் நண்பர்களாக் கூடாது
என்றிடுமே என் நேசம்!!!




என் இதயத்தில் நிறைந்திருக்கும் நண்பர்கள் அனைவருக்கும்,

நண்பர்கள் தின வாழ்த்துகள்!!!

எண்ண வித்யாசம்?


ஒரு கண்டத்திலிருந்து
கிளம்பிய கூட்டத்தில்
ஒருவன் அமெரிக்காவை கண்டான்,
ஒருவன் ஐஸ்லாந்தைக் கண்டான்,
ஒருவன் அம்புலியைக் கண்டான்.

ஒரு குண்டின் வெடிப்பிலிருந்து
கிளம்பிய ஆணிகளில்
ஒன்று எதிர் கமெண்டரின் காலைத்துளைத்து,
ஒன்று பள்ளிப் பேருந்தின் ஓட்டுனரைத் துளைத்தது,
ஒன்று குடும்பத் தலைவனைத் துளைத்தது.

திசைகள் வேறாயிணும்,
குறிகள் வேறாயிணும்,
வெற்றியும், வீழ்ச்சியும்
ஒன்றுக்கொன்று வேறுயில்லை.
ஒன்றுக்கொன்று சளைத்ததில்லை!

ஆனால், ஒரு குடும்பத்தில்
ஒருவன் விவசாயியானால்,
ஒருவன் அரசு அதிகாரியானால்.
ஒருவன் கணிணி பொறியாளனானால்
வெற்றியும் மகிழ்ச்சியும்
ஒத்ததாக்க மனம் ஒப்புமா???

இதில்
என்ன வித்தியாசம்?
எண்ண வித்தியாசம்!!

புதுசு + சுவாரசியம்



புது டெம்ப்ளேட் மாற்றியாயிற்று. பதிவெழுத ஆரம்பித்து எட்டு மாதங்களுக்குப் பின் டெம்ப்ளேட்டை மாற்றியுள்ளேன். கலர்ஃபுல்லாக ஆகவேண்டும் என்பதற்காகவே சட்டையை மாற்றியுள்ளேன். ஆனால், முகத்தை மாற்ற மாட்டேன்(காரணம் அடுத்து வருகிறது) . நான் யார்?, என் அடையாளம் என்பது தெள்ளத்தெளிவாக எனது நண்பர்களிடம் பதிந்துவிட்டது. மாற்றமாட்டேன். மாற்றமுடியாது.

டெம்ப்ளேட் மாற்றத்தில் வருகைப் பதிவை (ஹிட்ஸ் கவுண்ட்) எடுத்துவிட்டேன். ஏதாவது ஒரு பெரிய தலைப்பைத் தொட்டு எழுதும் போதும், இரு சாரரும் கடைசியாக “நீ ஹிட்ஸ்க்காக எழுதுகிறாய்” என மட்டமான குற்றச்சாட்டைச் சொல்கிறார்கள். இதில் எனக்கு உடன்பாடில்லாததால் எனது பதிவில் இருந்த ஹிட்ஸ் கவுண்டரைத் தூக்கிவிட்டேன். (இப்ப மனசுக்கு சரின்னு பட்டதை எந்த தயக்கமும் இல்லாம எழுதுவோம்ல)

********************

இன்றய வலைச்சர தொகுப்பில் அண்ணன் ஞானசேகரன், எனது வலைப்பூவை மிக உயர்வாக எழுதியுள்ளார்.

“இவர் தமிழ் ஆர்வமும் முற்போக்கு சிந்தனையும் கொண்ட நண்பர், சிங்கபூரில் வேலை செய்கின்றார். இவரை சிங்கை பதிவர் சந்திப்பில் பார்த்தும் பேசியும் இருக்கின்றேன். இவரின் எழுத்துகளில் தமிழ்பால் கொண்ட அன்பும் மதிப்பும் தெரிகின்றது. அவர்தான் அப்பாவி முருகேசன், இவரின் தளம் அப்பாவி. இவரின் தளத்தைப் பார்க்க படத்தின் மேல் தட்டவும்...அவரின் சில இடுக்கைகள் பார்வைக்கு...

1.புறடையாளங்கள் !
2.கழுதை, நாய், குரங்கு சேர்ந்தது தான் மனிதன்!!
3.கவிஞர் தாமரைக்கு கடும் கண்டனம்!!
4.பிரபாகரனை கொன்னது சரிதானா?


இதுவரை சமூகம் பற்றிய இடுகைகளையே எழுதி வந்துள்ளேன். நான் வந்த பாதை சரிதான் என்பதற்கான சான்றிதழாலவே அண்ணன் ஞானசேகரின் வார்த்தைகளை பார்க்கிறேன். ஆக, பாதை மாறாமலேயே பயணிக்கலாம்….


*******************************

பதிவுலகில் இருக்கும் நுண்ணரசியலுக்கு மத்தியில், பதிவுலகை சாந்தம் பண்ணும் விதமாக விருதுகளை பெற்று பகிர்ந்து கொள்ளும் விளையாட்டும் ஓடிக்கொண்டிருக்கிறது. எல்லோருக்கும் பிடித்தமான விளையாட்டு ஆரம்பித்து வைத்த செந்தழல் ரவி அவர்களுக்கு நன்றி.

இந்த சுவாரசிய பதிவர் விளையாட்டில் இரண்டு பேர் என்னைத் தொட்டு சுவாரசிய பதிவர் எனும் விருதைக் கொடுத்துள்ளனர். தம்பி சுரேஸ் குமார் (எழுவது எல்லாம் எழுத்தல்ல) , அவர்கள் மட்டுமல்லாது, எதிர்பாராவிதமாக அண்ணன் அறிவிலி (கிறுக்கித் தள்ளு) அவர்களும் கொடுத்துள்ளார்.


இதை நான் ஆறு பதிவுலக நண்பர்களுக்கு பிரித்துக் கொடுக்க வேண்டும். சட்டதிட்டங்களை மீறாமல் எனக்குத் தெரிந்த, எனக்கு சுவாரசியமான அறுவரை தொடுக்கிறேன்…
1) பழமைபேசி
2) வால்பையன்
3) தீப்பெட்டி
4) சோம்பேறி
5) வாழ்க்கை பயணம்
6) வேடிக்கை மனிதன்

என்னால் முடிந்தளவுக்கு சுவாரசியமானவர்களைத் தொகுத்துவிட்டேன். அவர்களும் சுவாரசியம் குன்றாமல் தொகுப்பார்கள் எனவே நம்புகிறேன்.

குறைந்து வருகிறதா தேசிய உணர்வு?


வெளிநாட்டிலிருந்தும், இராணுவத்திலிருந்தும் விடுமுறை அல்லது ஓய்வு பெற்று வருபர்களிடம் ஒரு நல்ல பழக்கமிருக்கும்!?, அது, நான் அங்க ஒழுக்கமா இருப்பேன், அமைதியாய் இருப்பேன், காலையில நாலு மணிக்கெல்லாம் எந்திருச்சுருவேன், ஆனா இங்க நீங்க அப்படி இருக்கிறதில்லை. இது தப்பு இதை மாத்தணும், நீங்களெல்லாம் திருந்தணும் என்று விடாமல் நாள்கணக்கில் பேசிக்கொண்டே இருப்பார்கள்.


இப்படி இருக்கும் கலாச்சார சூழ்நிலையில், மும்பையில் பணிபுரிந்து விடுமுறைக்காக வந்திருக்கும் ஒரு மத்திய பாதுகாப்பு படை வீரரும் (A REAL HERO), சிங்கையிலிருந்து விடுமுறைக்காக சொந்த ஊர் வந்திருக்கும் வாய்சொல் வீரரும் சந்த்தித்தால், உடனிருந்தவர்களின் நிலை?


அவர் நமது நாள்பட்ட நண்பனின் தங்கையின் கணவன். அவர்களின் திருமணத்தின் போது சிங்கையிலிருந்ததால், அவருடன் நேரடி பழக்கமில்லை. அவர் என்னுடய ஊருக்கு வந்திருப்பது தெரிந்ததும் நேற்று அவர்க்காகவே நண்பனின் வீட்டிற்க்கு சென்று, சுயஅறிமுகம் செய்துகொண்டோம். மாமா நல்ல உடல்வாகு, பார்த்தாலே “ஏட்டய்யா” (ஒசந்த அதிகாரி ) என்பது தெரிகிறது.


தங்கையின் முகத்தில் குடிகொண்டிருக்கும் சந்தோசத்திலேயே மாமா எவ்வளவு நல்லவர் என்பதை உணர்ந்துகொண்டேன். வழக்கமான குசல விசாரிப்புகளுக்கு பின், நமது தனிப்பட்ட கேள்வி தொகுப்பிலிருந்து பல கேள்வி கணைகள் பாதுகாப்பு படை வீரரை நோக்கி பாய்ந்த்து.


தற்போது நாட்டு நடப்பு எப்படி இருக்கிறது?


இப்ப, நாட்டுமக்கள்கிட்ட விழிப்புணர்வு சுத்தமா இல்லை. என்ன தான் பாதுகாப்புக்கு போலீசை குவிச்சுவைச்சாலும் மக்களோட ஒத்துழைப்பில்லாமல், மக்களிடமிருந்து தகவல் இல்லாம போலீசால ஒண்ணும் பண்ண முடியாதுன்னு தெரியமாட்டேங்குது.


மக்கள் நடமாட்டம் அதிகமான ரயில்வே ஸ்டேசன், கடைதெரு, கோவில்களுக்குப் போற மக்கள், அவுங்க பாட்டுக்கு கோவிலுக்கோ, கடைக்கோ கூட்டத்தோட கூட்டமா உள்ள போயிட்டு வெளிய வந்திடுறாங்க. சுத்துமட்டத்துல, என்ன நடக்குதுன்னு பாக்குறதே இல்லை, யாராவது வித்தியாசமா நடந்துகிட்டாக் கூட அதைப் பத்தி எந்த விழிப்பும் இல்லாத்தால, போலீசுக்கு தகவல் சொல்லாம அந்த இடத்தை விட்டு வந்திடுறாங்க.


அப்புறம் ஏதாவது நடந்த பின்னாடி, போலீஸ் சரியில்லை, போலீஸ் சரியா வேலைசெய்றதில்லைன்னு சொல்லுறாங்க. என்னதான் போலீஸ் பவரோட இருந்தாலும், எந்த முன் தகவலும் இல்லாம எப்படி கெட்ட சம்பவங்களை நூத்துக்கு நூறும் தடுக்க முடியும்? அடுத்த கேள்வி,


இப்ப ராணுவத்தில் சேர்வது குறைந்திருக்கிறதா?


அதெல்லாம் ஒண்ணுமில்லை. அந்தந்த பிராந்தியத்துக்கு எவ்வளவு ஆள் எடுக்கணுமோ, அது சிப்பாயிலிருந்து – ஆபிசர்க்கு ஆளெடுக்கும் போதும் ஒவ்வொரு முறையும் நிறைஞ்சுடுது. ராணுவத்துக்கும், போலீசுக்கும் ஆள் வர்ரது எள்ளவும் குறையவேயில்லை.


ஆனா ஒரு சிலர் டாக்டர், எஞ்சினியர், சாஃப்ட்வேர் வேலையில்லாம் நாட்டுக்குள்ள செஞ்சாத்தான் நல்லாஇருக்கும்முனு நினைச்சுக்கிட்டு இருக்காங்க. ஆனா உண்மையில, மெடிசின், எஞ்சினீரிங், சாப்ட்வேர் எல்லாத்திலும், புது கண்டுபிடிப்புகள் மிலிடரில்ல பயன்படுத்துன பின்னாடிதான் நாட்டுக்குள்ள வருது என்பதை மறந்துடுங்றாங்க. அப்ப உண்மையான “challenging job, thrilling life” எங்கே இருக்குன்னு தெரிஞ்சுக்கங்க.


அடுத்து ராணுவத்துல சேர்ந்தா உயிருக்கு உத்திரவாதமில்லைன்னு படிச்சவங்க மத்தியில நினைச்சுக்கிட்டு இருக்காங்க. இன்னைக்கு நிலையில இது முட்டாள்தனமாயிடுச்சு. எப்படின்னா, சமீபத்துல நடந்த தீவிரவாதி தாக்குதல் எங்க நடந்துச்சுன்னு யோசிச்சு பாருங்க,பெங்களூருல்ல சாஃப்ட்வேர் கம்பனிகளை குறிவச்சும், பாம்பேல பொது மக்கள் புழங்குற ரயில்வே ஸ்டேசன்லயும்- பெரிய மனுசனுங்க புழங்குற தாஜ் ஹோட்டலையும், அடுத்து காயம் பட்டு அரை குறை உசுரோட வர்ற மக்களை குறிவச்சு ஆஸ்பத்திரிகளிலும் தானே குண்டு வச்சாங்க.


தீவிரவாதிகளுக்கு எந்த சட்ட திட்டமில்லாததால, பொதுமக்களுக்கு எங்கேயும் நூறு சதவீத பாதுகாப்பில்லை என்பதே உண்மை. தீவிரவாதத்தால ராணுவத்துல சாகுறவுங்க சதவீதமும், பொதுமக்கள் சாகுறதோட சதவீதமும் சமமாகிட்டு இருக்கு.


இதனால திறமைசாலிகள், அவுங்களோட திறமை அவுங்க வீட்டுமட்டுமில்லாது, நாட்டுக்கும் பயன்படனும்ன்னு நினைக்கணும்.அடுத்த முக்கிய கேள்வி,


மக்களிடையே தேசிய உணர்வு குறைந்து வருகிறதா?


நீண்ட யோசனைக்குப் பின் அவர் சொன்னது“இந்தியாவில் சுகந்திரமடைந்த போதிருந்த தேசிய உணர்வு இன்றும் வடக்கில் குறையவில்லை, ஆனால் தெற்க்கில் குறைந்துவிட்டது (கவனிக்கவும் கடந்த காலம்)”எனக்கூறி அவர் முடித்துக் கொண்டார்,


ஆனால் எனக்குள் பத்திக்கொண்டது?


உண்மையா?

சித்திரம் பேசுதடி...


முன்னொரு காலத்தில், இருங்க, இருங்க ரொம்பப் பின்னாடி போயிராதீங்க, மார்ச் 2006 போல நடந்த சுவாரசியமான சம்பவம். சிங்கையில 1000பேர் வேலைசெய்யும் ஒரு பெரிய கம்பெனிக்கு வேலைக்கு வந்து கிட்டத்தட்ட ரெண்டு வருசமாச்சு. மொத மொத வந்தன்னிக்கி எப்பிடி இருந்தோமோ, அப்பிடியே இருந்தோம். போரடிக்க ஆரம்பிச்சுருச்சு. வாழ்க்கையில இன்னும் முன்னேறனுங்கிற வேட்கை கொழுந்து விட்டு எரிய ஆரம்பிச்சு, சூடு தாங்க முடியாமல் பார்ட் டைம் கோர்ஸ் எடுத்து படிக்க ஆரம்பிச்சோம்.



ஏப்ரல் மாசம் கோர்ஸ் முடிந்து, மூன்று நாட்களுக்கு பரிச்சை. முதல் நாள் தியரி. சூஸ் த பெஸ்ட் ஆன்சரிலிருந்து, ரைட் த ஆன்ஸர் வித் சர்க்யூட் டைகிரம், பத்து மார்க் கேள்வி வரை மூணு மணிநேரம் எழுத வேண்டிய பரிச்சை. படிக்கணும், பாசாகணும். படிக்கணும், பாசாகணும்ன்னு மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்லித் திரிந்தாலும், படிக்க நேரமே கிடைக்கலை.


ஏன்னா, எப்பவாவது பிக்கப் ஆகி சக்கை போடு போடும் செமிகண்டக்டர்(வேஃபர்) பிஸினஸ், அந்த ஜனவரி – மார்ச் குவாட்டரில் படு பயங்கர ஆர்டர். காலை எட்டு மணிக்கு உள்ளே போனா ராத்திரி பதினோரு மணிவரைக்கும் வேலை பார்த்தே ஆகணும். வேலை பார்த்துக்கிட்டு இருக்கப்பவே சூப்பர்வைசரிலிருந்து, என்ஜினியர், புரொடெக்சன் இன்சார்ஜ், டிபார்மெண்ட் மேனேஜர் வரை யாரவது புரொடெக்சன் ஸ்டேடஸ் கேட்டுக்கிட்டே இருப்பாங்க. அவங்களையும் எண்டெர்டெயின் பண்ணி குஷியாக்கிட்டே இருக்கணும்.


இந்த லச்சணத்துல இன்னும் இருபது நாள்ல பரிச்சை, எலெக்ட்ரானிக்ஸ் பாடத்துல! படிக்கணும், ஆனா ராத்திரி பதினோரு மணிவரைக்கும் முடியலை. ஆனா, வேற வழி இல்லை, அதுக்கப்புறமாச்சும் ஒக்காந்து படிக்கணும். மூணு பேரா சேந்து குரூப்பா படிக்க ஆரம்பிச்சோம். பத்து நிமிச படிப்பிலேயே எலெக்ட்ரானிக்ஸ் பாடத்துல வர்ர எலெக்ட்ரானெல்லாம் சாதா கண்ணுக்கேத் தெரிய ஆரம்பிச்சுடும். இதை இதோட விடக்கூடாது, புரோட்டானையும், நியூட்ரானையும் பாத்திட்டு தான் தூங்கணும்ன்னு ஒரு வெறி,


ஆனாலும் வேட்கை தான் கொழுந்துவிட்டு எறியுதே, அதனால ராத்திரி 11.15க்கு வந்ததும், மசாலாப் பால் போட்டு குடிச்சோம்ன்னா அடுத்த ஒரு மணிநேரத்துக்கு தூக்கம் வராது, எப்பிடி வரும்?. மஞ்சள், மிளகு, சக்கரைப் போட்டு கலந்த மசாலாப்பால் வயித்துக்குள்ள எறியுறது, வேட்கையா மாறி புத்தியில இருக்கும்.


புத்தகத்தை எடுத்து பிரிச்சு பத்து நிமிசம் ஒழுங்காப் போகும், அப்ப நம்ம தத்துபித்து மெதுவா சன் டி.வி –யைப் போடுவாரு, ஏன்னா, ராத்த்ரி 11.30க்கு அவங்க ஊர் பொண்ணு ஹேமா, சன் மியூசிக்கில் காம்பயரிங் பண்ணும் லைவ் புரோகிராம் வந்துடும். சவுண்டு கம்மியா வச்சு பாத்துக்கிட்டே படிக்கலாம்னு நினைச்சால், அடுத்த பத்து நிமிசம் நல்லாத்தானிருக்கும், பாட்டுக் கேட்டுக்கிட்டே படிக்கிறதுக்கு.


அப்ப புரோகிராம் பாத்துக்கிட்டு இருக்கிற எங்களுக்கு ஒரு திடீர் பரபரப்பு வந்திடும். நாங்க எதிர்ப் பார்த்த அந்தப் பாட்டு வந்திட்டா, உடனே போனெடுத்து நம்ம நண்பருக்கெல்லாம் போன் பண்ணி சொல்லணும், “மாமா பாட்டு வன்ந்திடுச்சு”, “மச்சான் நம்ம பாட்டு போட்டுட்டாணுங்க”, “சித்தப்பா, இன்னேரமே தூங்கி அசிங்கப்படுத்துறீயே, நம்ம பாட்டு போட்டுட்டாங்க பாத்துட்டு தூங்கு” ன்னு, கூட வேலை செய்யும் எல்லா தமிழ் நண்பர்களுக்கும் போன் பண்ணி எழுப்பிவிட வேண்டியது, பாடம் படிக்கிற எங்களது கடமை ஆக்கிட்டாங்க நம்ம நண்பர்கள்.


ஊருல இருக்குற ஆளுகளையெல்லாம் நாங்க எழுப்பிவிட்டா, எங்க வீட்டுல தூங்குற மத்த மூணுபேரை, அவிய்ங்க போனடிச்சு எழுப்பி விட்டுருவாங்க. நாம் நேர எழுப்பினா, மூஞ்சியக் உர்ருன்னு காமிச்சிறக் கூடாதுன்னு அடுத்தாளை வச்சி எழுப்பிவிடுறது!. எப்பூடி!!!


அடுத்த வந்த நாளுலயெல்லாம் பசங்களுக்கு போன் அடிச்சா லைன் கிடைக்காம பிஸி டோன் கேக்கும், அப்பிடின்னா, வேற யாரோ போனடிச்சு சொல்லுறாங்கன்னு அர்த்தம். எப்பிடியோ, எங்க கம்பெனியில வேலை செஞ்ச 40 தமிழ் பசங்களுக்கும் போன் போட்டு எழுப்பி அந்த குறிப்பிட்ட பாட்டை பார்க்க வைக்கிறத ஒரு பொழுது போக்காகவே செஞ்சோம்.


அடுத்த நாள் டீ பிரேக் டைமில் பாக்கும் போது ஹேமாவை பத்தி பேசிட்டு அந்தப் பாட்டைப் பத்தி பேசுறதுக்குத்தான் நேரமிருக்கும். அதுவே தனி எனர்ஜி குடுக்கும், ஏன்னா? அந்தப் பாட்டும், அதுல் வரும் மியூசிக்கும், வரிகளும், குறிப்பா அதுல ஆடும் அந்தப் பிள்ளையோட ஆட்டமும் ஒரே குஷியா எனெர்ஜிடிக்கா இருக்கும்ல.


சரி, சரி அப்பிடி எந்த பாட்டடா பாத்தீங்கன்னு கேக்குறது, கடல் தாண்டியும் கேக்குது, அந்தப் பாட்டு “சித்திரம் பேசுதடி” படத்தில் வரும் வாழமீனுக்கும், விலங்கு மீனுக்கும்’ பாட்டுதான், (நல்ல பாட்டுல்ல!!!)


நண்பர் கார்க்கிக்கும் இந்த அனுபவம் இருந்திருக்கும்ன்னு நினைக்கிறேன். என்ன சகா இருந்திச்சா?

என்னருமைக் காதலியே!!!


என் வாழ்க்கையை
மாற்ற வந்த வசந்தம் நீ...

வண்ணங்களின் வண்ணங்களைக்
எனக்கு முழுதாய்க் காட்டியவள் நீ...

இயற்கையின் அழகுகளை
அள்ளி, அள்ளிக் கொடுத்தவள் நீ...

உலகத்தை மிக நெருக்கத்தில்
காட்டியவள் நீ...

உறவுகளின் உணர்ச்சிகளை
உண்மையாகக் காட்டியவள் நீ...

திரையின் பிம்பங்களையும் மிகத்
தெளிவாகக் காட்டியவள் நீ...

வைகரையின் அழகினையும், அந்தி வசந்தத்தையும்
விளிம்பு வரைக் காட்டியவள் நீ...

என் அருமைக் கண்ணாடியே.,
உன்னைப் பெற எத்துனைப்
புண்ணியம் செய்தேனோ நான்!!!



.

கழுதை, நாய், குரங்கு சேர்ந்தது தான் மனிதன்!!!

லாங் லாங் அகோ., சோ லாங் அகோ கடவுள் ஒரு அழகிய சாயந்திர வேளையில், நாமளும் வேலையில்லாம சும்மாதான இருக்கோம், இந்த பூமியும் சும்மாதான் இருக்கு. இதை இப்பிடியே விடக்கூடாது, சில பல உசுருகளைப் படைச்சு பூமியில விட்டா, எல்லாருக்கும் போரடிக்காம சுறுசுறுப்பா இருக்கும்ன்னு அதிரடியா முடிவெடுத்து வரிசையா எல்லாத்தையும் படைச்சுக்கிடே வந்தார்.


அமீபா, நண்டு, நரி, யானை, மரம், செடி – கொடி என படைச்சுக்கிட்டு வந்தவரு அடுத்ததா கழுதையைக் கூப்பிட்டு, “கழுதை, கழுதை, நீயும் எத்தினி நாளாத்தான் இங்க என்னைய உதைச்சுக்கிட்டே இருப்ப, நீ போயி பூமிலையும் கொஞ்ச நாளைக்கி இரு. அங்க உனக்கு வேலை என்னன்னா? பொதி சொமக்குறது தான் உனக்கு அங்க வேலை. உனக்கு 60 வருசம் ஆயுள். அதை முடிச்சுட்டு நீயி இங்க வந்து சேர்ந்துக்கலாம். அதனால கெளம்பு, கெளம்புன்னு கெளப்பி விட்டாரு கடவுள்.

அதைக்கேட்ட கழுதை “சாமி, சாமி என்னால 60 வருசமெல்லாம் இருக்க முடியாது. பயங்கரமா போரடிக்கும். அதனால எனக்கு 30 வருச ஆயுளே போதும்” அப்படின்னுச்சு.

உடனே சாமியும் “அப்பிடியா, சரி நீ 30 வருசத்திலையே திரும்பிரு”ன்னு சொல்லீட்டு, அடுத்தா நாயைக் கூப்பிட்டார் கடவுள்.

“நாயி, நாயி. நீ ரொம்ப நல்லவன், என்னோட காலுக்குள்ளயே சுத்திக்கிட்டு இருக்காம, நீ கொஞ்ச நாளைக்கி பூமியில போய் இரு. அங்க மனிசன்னு ஒருத்தன் வருவான். அவங்கூட ப்ரண்டா இருந்து அவனோட வீட்டைக் காவல் காத்து பொழச்சுக்க. உனக்கு 40 வருச ஆயிசு” அப்பிடின்னாரு கடவுள்.

அதைக் கேட்ட நாயி, “சாமி, என்னால மனிசன் கூடயெல்லாம் 40 வருசம் குப்பை கொட்ட முடியாது. அதனால எனக்கு 20 வருசம் போதும்” அப்பிடின்னுச்சு.

அதைக்கேட்ட சாமி “அட, நீ சொல்றதும் சரிதான். மனிசன் ரொம்ப மோசமானவன், உனக்கு 40 வருமெல்லாம் சோறு போடமாட்டான், அதனால நீ 20 வருசம் மட்டும் இருந்துட்டு வந்திரு” வாழ்த்தி அனுப்புனாரு கடவுள்.

அடுத்து குரங்கை கூப்பிட்டு, “குரங்கு, குரங்கு, என்னால உன்னைய வச்சு சமாளிக்க முடியலை. அதனால நீ பூமிக்கு போயி 20 வருசம் வாழ்ந்திட்டு வா” அப்பிடின்னாரு கடவுள்.

அதைக்கேட்டு ஷாக்கான குரங்கு, “சாமி, சாமி என்னால 20 வருமெல்லாம் உங்களை விட்டு பிரிஞ்சு இருக்கமுடியாது. ஏதோ நீங்க சொன்னதால பூமிக்கு போறேன், ஆனா 10 வருசம் போதும் எனக்கு” அப்பிடின்னுச்சு குரங்கு.

அதைகேட்ட கடவுள், “ஆமாம், குரங்கு. என்னாலையும் உன்னை பார்க்காம இருக்க முடியாது. அதனால நீ சீக்கிரமே 10 வருசத்துல வந்திடு” சொல்லி கண்கலங்குன படியே அனுப்பி வச்சாரு கடவுள்.

அடுத்து மனிசனைக் கூப்பிட்டு, “மனிசா, மனிசா. நீ ரொம்ப புத்திசாலி. அதனால பூமிக்குப் போயி இந்த எல்லா மிருகத்தையும் விட நல்லா, சுகமா 20 வருசம் வாழ்ந்திட்டு வந்திடு” அப்பிடின்னார் கடவுள்.

உடனே மனிசன், “சாமி, சாமி. ரொம்ப அழகா இருக்குற பூமியை எனக்கு ரொம்ப பிடிச்சுப்போச்சு. நான் அங்க அதிக நாள் வாழணும்ன்னு ஆசைப்படுறேன். அதனால, கழுதை வேண்டாமுன்னு சொன்ன 30 வருசத்தையும், நாயி வேணாமுன்னு சொன்ன 20 வருசத்தையும், குரங்கு வேணாமுன்னு சொன்ன 10 வருசத்தையும் எனக்கே குடுங்க. நான் அதை வச்சு 75 வருசம் ஜாலியா இருந்துட்டு வர்றேன்” அப்பிடின்னான்.

அதைக் கேட்டதும் கடவுளுக்கு சிரிப்பு வந்திருச்சு. சிரிச்சுக்கிட்டே, “சரி, அப்பிடியே எடுத்துக்க” –ன்னு சொல்லீட்டு, ”முதல் 20 வருசம் எந்தக் கவலையும் இல்லாம, குழந்தையாட்டம் சந்தோசமா இரு, அடுத்த 30 வருசம் உன் குடும்பத்துக்காக கழுதை மாதிரி வேலை செய். அதுக்கடுத்த 20 வருசம் நாய் மாதிரி உன் வீட்டைக் காவல் காக்கப்ப, உன்னோட கடைசி பத்து வருசத்துக்கு உன்னோட குழந்தைகளால, குரங்கு மாதிரி இங்கேயும் – அங்கேயும் மாறிக்கிட்டே இருப்ப. போயி அனுபவிச்சுட்டு வா” சொல்லி சந்தோசமா அனுப்பி வச்சாரு.

இதுதான் மனிசனோட வாழ்க்கை. (எங்கேயோ படிச்சது)
.

புற அடையாளங்கள்!?

மனித உயிர் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தான் இந்த உலகில் பிறவி எடுக்கிறது. அதன் பின்தான் அவனுக்கு இதுதான் உன் ஜாதி என்ற சின்ன வட்டத்திலிருந்து, இனம், மொழி, நாடு என்ற பெரிய, பெரிய வட்டங்கள் வரைந்தது மட்டுமில்லாது அதற்குள் அடைத்தும் வைக்கின்றோம். தானே தேடி எடுத்துக்கொள்ளாத இந்த அடையாளங்களைச் சொல்லிச் சொல்லி எத்தனை, எத்தனை கொடுமைகளை இந்த உலகம் செய்திருக்கிறது, செய்து கொண்டும் தானிருக்கிறது.


அறியாமைக்கும், மத மூடக் கோட்பாடுகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து, மனித குலம் கடந்த காலங்களில் செய்த தவறுகளை வரலாறுகளாகப் படித்து விசனப்பட்ட நாம், மீண்டும் அதே தவறுகளை வர்ணம் பூசிச் செய்யும் காலத்தில் தான் இருக்கிறோம். அன்று அரசன், இன்று அரசாங்கம். அவ்வளவே வித்தியாசம்!


நாகரீகம் வளர்ந்துதான் என்ன பயன்?, கலாச்சாரங்கள் கலந்துதான் என்ன பயன்? விஞ்ஞானம் வளர்ந்துதான் என்ன பயன்? தகவல் தொழில் நுட்பம் வளர்ந்துதான் என்ன பயன்?


மேலே சொன்னவைகளில் மனித குல முன்னேற்றத்திற்கு பயன்பாட்டில் இருப்பது அதிகபட்சம் ஐம்பது சதவீதம் மட்டுமே. மீதமிருக்கும் ஐம்பது சதவீதங்கள் ஆளும் வர்க்கத்தின் கடைசி நேர – அவசரகால முட்டாள் தனத்திற்கும் தான் பயன்படுகிறது.


ஆக்க சக்திகளில் பெரும்பாலும் அழிவு சக்த்திகளாகவே பயன்படுத்தப் படுகின்றன. இதற்கு எந்தத் தவறும் செய்யாத, எந்த கலகத்திலும் ஈடுபடாத அல்லது ஈடுபட முடியாத தனிமனிதனும் செயற்கை அடையாளங்களான ஜாதியின் பெயரைச் சொல்லியோ, இல்லை இனத்தின் பெயரை சொல்லியோ, இல்லை மொழியின் பெயரைச் சொல்லியோ ஒரே ஒரு அப்பாவி மனிதனைக் கூட நசுக்கினாலோ அல்லது அழித்தாலோ அது, நாகரீகங்களின் உச்சத்தில், விஞ்ஞானத்தின் விளிம்பில் வாழும் நாகரீகக் காட்டுமிராண்டிகள் தான், நாம்.


மனிதனை மனிதன் அழிப்பதற்குத்தான் இந்த புற அடையாளங்களா? புற அடையாளங்களைக் கொண்டு மனிதனை எடை போடுவது குறைந்து, அக அடையாளங்களைக் கண்டுணரும் சக்தியை என்று நாகரீகமோ, விஞ்ஞானமோ எல்லோருக்கும் கொடுக்கிறதோ அதுதான் மனிதன் மனிதனாக வாழப்போகும் காலம்!


அந்தக் காலம் நம் தலைமுறைக்குள் வருமா?

.

காலையிலையேவா...

`நாடோடிகள்` படம் ரிலீஸ் ஆகி ஒருவாரத்துக்கும் மேலாகி போச்சு., அம்ம வலையுலக பெரியாளுக எல்லாம் படத்தை, ஆஹா., ஓஹோன்னு நல்லபடியா எழுதியிருக்காங்களே, இந்த வார இறுதிய இந்தப் படத்தைப் பார்த்து சூப்பரா இல்லைன்னாலும் சுமாராவாச்சும் முடிச்சு வச்சிரலாம்ன்னு முடிவெடுத்து, கூட்டாளிகளுக்குத் தகவல் குடுத்தா, ஆளாளுக்கு ஒவ்வொன்னு சொல்றாய்ங்க.


எனக்கு வேலையிருக்குன்னு ரெண்டுபேரு சொல்ராய்ங்க, நான் சனிக்கிழமைக் காலையில(11 மணிக்கி) எந்திரிச்சதும் கோயிலுக்குத்தான் போவேன்னு ஒராளும், காலையிலயேவா....ன்னு ஒராளும் ஆளுக்கொன்னா பேசவும், சரிடா எல்லாத்துக்கும் பொதுவா ராத்திரி 9 மணி ஆட்டத்துக்கே போவோம்ன்னு முடிவெடுத்தாச்சு.


ஆனா, படம் நல்லா இருக்குன்னு எல்லாத்துக்கும் தெரிஞ்சி போச்சு, அதனால கூட்டம் கும்மியடிக்கும். சாயந்திரம் சாவகாசமாப் போனால் டிக்கெட் கிடைக்காமக் கூடப் போயிரும். அதனால நாம் போயி ரிசர்வ் டிக்கெட் எடுத்துவாறேன்னு கிளம்பி தியேட்டர் இருக்குற மாலுக்குப் போனா,

மாலுக் கட்டிடத்தை இப்பதான் புதுசா எஸ்டென்ட் எல்லாம் பண்ணியிருக்காய்ங்க, அதனால் தியேட்டருக்குப் போற வழியில கடையெல்லாம் புதுசு, புதுசா...கலர்க் கலரா இருக்கு. வழியத் துலாவிகிட்டே போனா ஒரு எடத்துல கும்பலா ஆளுக வழிய மறிச்சி நிக்கிறாய்ங்க, அப்ப இது தாண்டா தியேட்டருன்னு முடிவெடுத்து நானும் நின்னுட்டேன்.






என்னடா காலையிலையே தியேட்டர் வாசல்ல கூட்டமா, அதுவும் சீன, மலாய் ஆளுகளுக்கு மத்தியில ஒரு வெள்ளக்கார தொரையும் கூட கூட்டத்துல முண்டியடிசிக்கிட்டு நிக்கிது.

ஆஹ்ஹா... தமிழ்ப் சினிமா உலகத்தரத்துக்கு உசந்திருச்சுப் போலிருக்கு, எல்லா பாசைப் பேசுற ஆளுகளும் வந்திருக்காய்ங்களேன்னு கூட்டத்துக்குப் பின்னாடி அமைதியா நின்னுகிட்டேன். நம்மாளுகளா இருந்தா தலைமேல ஏறிப் போயாச்சும் டிக்கெட்டை எடுத்திருவேன் (அப்பிடி இல்லைன்னா மருதைக்காரன்னு சொல்லிக்க முடியாதுல்ல). ஆனா அசலூரு ஆளுகளும் படம்பார்க்க வந்திருக்காய்ங்க அவுகளுக்கு மரியாதைக் குடுப்பமேன்னு தான் பின்னாடி நின்னுக்கிட்டேன்.


மணி காலையில 11 ஆகப்போகுது, உள்ள எல்லா லைட்டையும் போட்டுட்டாய்ங்க. கண்ணாடிக்கதது மெதுவாத் தொறக்கவும், எல்லா ஆளுகளும் திமுதிமுன்னு உள்ளாரக்க ஓடுராய்ங்க. எனக்கு ஆச்சரியமாப் போச்சு, ஏன்டா, சிங்கப்பூருல இருக்குற மனிசன் கூட சினிமான்னா நம்மூருப் போலவே வரிசையில நிக்காம கூட்டங்கூடி உள்ள ஓடுறாய்ங்களேன்னு பின்னாடி தள்ளி நின்னு அவிய்ங்க உள்ளப் போற அழகப் படம் பிடிச்சுக்கிட்டேன்.
எல்லாரும் உள்ளப் போனப் பின்னாடிதான் தெரிஞ்சது, நான் வந்தது சினிமாத் தியேட்டர் இல்ல, லைப்ரரின்னு.

காலையில 11 மணிக்குத்தான் லைப்ரரியைத் தொறப்பாங்க. அதுக்கு முன்னாடியே வந்து வாசல்ல காத்துக்கிடக்கு அப்புட்டு கூட்டமும். ஆனா, நானு சினிமா டிக்கெட் எடுக்குறதுக்காக கூட்டத்துப் பின்னாடி காத்துக்கிடந்தேன்....

பத்தாண்டிற்கொரு பஞ்சம்!!!

பொருளாதார நெருக்கடி தரும் வேதனையைவிட, நெருக்கடி தீரும் வேளைப் பற்றி வரும் சேதிகள் பீதியைக் கிளப்பிய வண்ணமே இருக்கின்றன. இல்லாமல் இருக்குமா?, கடன் அட்டையை தேய்த்தும், எண்களை தட்டியும் வாங்கி, பிறர் புழுங்க, நாம் புழங்கிய பொருள்கள் ஊருக்குள் ஒரு தனி கவனத்தை நம்பக்கம் திருப்பியே இருக்கிறது.

இனி கால் தரையில் பட எங்காவது நடக்கமுடியுமா?, இருசக்கர வாகனத்தில் வந்தாலும், பொது பேருந்தில் வந்தாலும் ஏளனம் செய்ய ஒரு கூட்டம், நம்மிடம் வாங்கிகுடித்தே வாயும்-வயிறும் வளர்த்து காத்திருக்கிறது. மது குடித்தது தப்பா? இல்லை பிறர் குடிக்கக் கொடுத்தது தான் தப்பா? என்ற ஆராய்ச்சிக்கான நேரம் இது இல்லை. காத்திருக்கிறார்கள். சமாளிக்க வேண்டும். ஏனெனில், சாதித்தாலும் – சரிந்தாலும் வாழ்ந்தாக வேண்டுமே.

வேலையிடத்தில் வரும்படியை காரணம் பலகூறி குறைத்தாலும், தாராளமாய் செலவு செய்ய பழகிய மனதை, தடாலடியாக ஓர் இரவினில் மாற்ற முடியவில்லை. கடைத்தொகுதியை கடந்து வருகையில் கடையிலிருக்கும் பெண்களையும் தாண்டி, அவர்கள் தரும் அதிரடி விலைக்குறைப்புகள் சுண்டி இழுக்கின்றன.

பெண்களைப் பார்ப்பதர்க்காக கடைத்தொகுதியை சுற்றி, பணத்திமிரினால் பணப்பையை இளைத்து, கைப்பையை கொழுக்கி வலம் வந்த காலம் போய், முழுவிடுமுறை நாளிலும் முழுகைதியாய் வீட்டுசிறையினில் காத்திருக்கும் காலம் வந்ததே. எப்போதும் உடலினில் ஒரு மினுமினுப்பு, உடையினில் ஒரு பளபளப்பு, கைபேசியோ காலா காலத்திற்கும் புதுசு என சொகுசாய் வாழ்ந்த எங்கள் வாழ்வு, இன்று அரை(றை) இருட்டில், வலைவீச்சிலே(இணையம்) காலம் தள்ளும் படியானதே. வலைவீச்சில் தங்க மீன்கள் சிக்கினாலும், அதற்கு செலவு செய்யவேண்டுமே என்ற எண்ணமே கண்களை மங்க வைக்கிறது.

எங்கு?, எதனால்?, எப்படி ஆரம்பித்தது?, என்னிடம் எப்படி வந்தது? என எனக்கு தெரியவில்லை, கடைசியில் என்னையும் வந்து தாக்கிவிட்டது, இந்த பாழாய் போன பொருளாதார நெருக்கடி. வாரம் முழுதும் வேலை செய்துகொண்டிருந்தேன், இப்போது மூன்று நாள் வேலை,அடுத்த நான்கு நாட்களுக்கு விடுப்புவிட்டு வீட்டு சிறையில் வைக்கின்றனர்.

கைசமையலை மறந்து, கடைகளில் வாசம்பிடித்து மூக்கிற்கும், நாக்கிற்கும் அடிமையாய், சிறுவயதில் கஷ்ட்டப்பட்டு தேற்றிய நெஞ்சினையும் விட அகலம் அதிகமாகி கொண்டிருந்த வயிற்றை பற்றி கவலையில்லாமல் இருந்த என்னை, மீண்டும் எண்ணை வாசம் வீசும் சமையலைறைக்கு கொண்டுவந்து தள்ளியிருக்கிறது இந்த பொருளாதார நெருக்கடி.

சமைப்பது போரல்ல(Bore), சுவாரஸ்யம் தான். ஆனால், நானே சமைத்து, நானே சாப்பிடுவது என்பது பெரும் முரண் எனக்கூறி விட்டுவந்த சமையலறை, விட்டுப்போன கணவன் வீடு வந்ததைக் கண்ட மனைவிபோல், மீண்டும் பாசமாய் ஒட்டிக்கொண்டது. சொந்த சமையலில் ருசிக்கும் குறைவில்லை, அளவும் மிஞ்சவில்லை, ஹும் தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்.

கையில் காசில்லை என்றாலும், காலத்தை விட மனசில்லை. சுதாகரிக்க வேண்டும், உடம்பையாவது காப்பாற்ற வேண்டும். ஆடும் வரை ஆடியாயிற்று. மார்பளவை விட வயிற்றளவு பெரிதாகிப் போனது. சிக்ஸ் பேக்ஸ் (Packs) போய், சிக்ஸ் பேக்ஸ் (Bags) தொங்கும் உடம்பானது. சொகுசு வாழ்க்கையில் உடலை சிதைத்தாயிற்று.

பத்தாண்டிற்கொரு பஞ்சத்தில் வாழ்ந்த என பாட்டன், பூட்டனுக்கு சொல்லாமலே கொடுத்த கொழுப்பை சேமிக்கும் சூச்சமத்தை, பாழாய் போன சந்ததி சரடு(ஜீன்) என்னிடமும் தந்திரமாய் வைத்திருக்கிறது. என் பாட்டன் தான் பஞ்சத்திலே வாழ்ந்தான், பழுத்திருக்கும் காலத்திலும் நாளுக்கிருவேளைக் கஞ்சி என்றால், பஞ்சம் வந்த காலத்தில்? அவனுக்கு தான் கொழுப்பை சேமிக்கவேண்டும்.

நான் என் பாட்டன் – பூட்டன் போல் இல்லையே!., அன்றாடம் மூன்று வேளை உணவு, தனியே எண்ணையில் பொறித்தவையும் கொறிப்பதற்க்கு உணவில் உண்டு. எனக்குத்தான் பஞ்சம் வராதே, எனக்கேன் கொழுப்பை உடலில் சேகரிக்கும் பழக்கம்? என்றிருந்தேன்.

உணவுக்கு வந்தால் தான் பஞ்சமா? இன்று என் பொருள் ஈட்டலுக்கு வந்ததே பஞ்சம்!. படித்ததில் நல்லவைகளை நடைபடுத்தும் நேரமிது. மீண்டும் நான், நானாகும் நேரமிது. போனதைப் பற்றி பேசியும் பலனில்லை, நடப்பதைக் கண்டு புழம்பியும் பலனில்லை. பொன்னான காலம் கனிந்திருக்கிறது, எனக்கே எனக்காக வாரத்தில் நான்கு நாட்களிருக்கின்றன.

என் உடம்பிற்க்கு, என் சூழலுக்கு எது நல்லதோ, எதை என் சந்ததி சரடு (ஜீன்) ஒத்துக்கொள்ளுமோ, அதை மட்டும் நடைமுறை படுத்த வேண்டும். இந்திய உடலுக்கு ஒவ்வாத இந்த மேற்கத்திய உணவு கலாச்சாரத்தை விடுத்து, ”தேவைக்கேத்த உணவு - சரியான நேரத்தில். தேவையான உடலுழைப்பு, மார்பின் சுற்றுளவை விட சிறிய வயிற்றின் சுற்றளவுக்காக” என்பதை தாரகமாக்கி, உடைக்க முடியாத சூச்சம சரடு உடன் ஒன்றி வாழ்க்கையை இனிமையாக்கிட வேண்டும்.

பழுத்த காலத்தில் ஏறிய கொழுப்பை, இயற்கையாய் வந்த உணவு பஞ்ச காலத்தில் கரைத்த என் பாட்டனைப் போல், நம் உடலில் ஏறியிருக்கும் கொழுப்பை, இந்த பொருளாதார நெருக்கடி காலத்தில் கரைத்தால், வந்திட்ட பஞ்சம் கூட ஒருவகையில் வளமே.

.



 
©2009 அப்பாவி | by TNB