வடிவேலின் இந்த காமெடிக்கும் கருணாநிதி உண்ணாவிரதிர்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

மீண்டும் சொல்கிறேன்,

வடிவேலின் இந்த காமெடிக்கும் கருணாநிதி உண்ணாவிரதிர்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
வடிவேலின் இந்த காமெடிக்கும் கருணாநிதி உண்ணாவிரதிர்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
வடிவேலின் இந்த காமெடிக்கும் கருணாநிதி உண்ணாவிரதிர்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
வடிவேலின் இந்த காமெடிக்கும் கருணாநிதி உண்ணாவிரதிர்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
வடிவேலின் இந்த காமெடிக்கும் கருணாநிதி உண்ணாவிரதிர்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

இலங்கைப் போரை நிறுத்திய கலைஞர் வாழ்க!!!

நன்றி...நன்றி...நன்றி...


இலங்கையில் போர் நிறுத்தம் அறிவித்த ராஜபக்‌ஷே அவர்களுக்கு முழு மனதான அப்பாவி தமிழர்களின் நன்றி.


போர் நிறுத்ததிர்க்காக பாடுபட்ட மற்றவர்களுக்கும் ஒரு சிறப்பு நன்றி..

தமழகத்திலிருந்து போர் நிறுத்ததிற்க்காக குரல் கொடுத்தவர்கள்

பழ. நெடுமாறன்.,

தா. பாண்டியன்.,

விஜயகாந்த்,

சீமான்.,

அமீர்.,

வை.கோ.,


ராம்தாஸ்.,

திருமாவளவன்.,

வரதராஜன்.,

ஜே. ஜெயலலிதா.,

கவிஞர் தாமரை...


தமிழகத்திலிருந்து போர் நிறுத்ததிற்க்காக உயிரைக் கொடுத்தவர்கள்

முத்துக்குமாரன்,

பள்ளபட்டி ரவி.,

ஸ்டீவன் ஜெகதீசன்.,

போன்றவர்களுக்கு மீண்டும் நன்றி....கடந்த ஆறுமாத காலமாக பலரும் குய்யோ முய்யோ என கத்தியும், தீக்குளித்து தற்கொலை செய்து செத்தும் முடிக்க முடியாத பிரச்சனையை அரைநாள் உண்ணாவிரத்தால் முடித்த தமிழின தலைவர் டாக்டர் . மு. கருணாநிதி அவர்களுக்கு ஒரு பெரும் நன்றி...


ஆதாரம் தினமலர் http://dinamalar.com/fpnnews.asp?News_id=3635&cls=row3

வாழ்க ஜனநாயகம்...


இன்று (ஏப்ரல் 23) தமிழ்கத்தில் ஆளும் கட்சியான தி.மு.க-வின் அழைப்பின் பேரில் பெரும்பாலான கூட்டணி கட்சிகளும், சில பல அமைப்புகளும் இந்த மாபெரும் பொது வேலை நிறுத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இதோ இன்னும் சில நிமிடங்களில் வேலை நிறுத்தம் ஆரம்பமாகப் போகின்றது.பொது வேலை நிறுத்தத்திற்கான காரணம், அழைப்பு விடுத்தவர் யார்? எப்படிப் பட்டவர்?, தமிழக தமிழர்க்காகவும், ஈழ தமிழ்ர்க்காவும் அவர் என்ன என்ன செய்துள்ளார் என்ற ஆராய்ச்சி ஒரு புறமிருந்தாலும், இன்றைய பொது வேலை நிறுத்தத்தால் அவர் யாரை துன்புறுத்தப் போகிறார்?

இலங்கை சிங்கள இனவாத அரசையா? இல்லை உள்குத்து காங்கிரஸ் மத்திய அரசையா? இல்லை. இல்லை. இல்லவே இல்லை...இது முழுக்க முழுக்க தமிழ்க வாழ் அப்பாவி தமிழ்ர்களின் ஒரு வேலைநாளை முடக்கவே இந்த ஏற்ப்பாடு. நானும் ரவுடிதான் என காண்பிக்க வடிவேல் காவல் வாகனத்தில் ஏறியது போல், நானும் ஈழ்த்தமிழார் ஆதரவாளர்தான் என காட்டத்தான் இந்த ஆளும் கட்சியின் முட்டாள்தனம்.ஏன் இந்த கோவம்? அதுவும் ஆளும் கட்சிக்கு எதிராக?அய்யா கனவான்களே, நீங்கள் அறிவித்துள்ள வேலை நிறுத்தத்தை தமிழ்கத்தில் உள்ள கையறு மக்கள் விதி!, எல்லாம் அவன் செயல்!, என மனதுக்குள் முனங்கி ஊர் மூலையில் முடங்கிக்கொள்வர். ஆளும்கட்சிக்கு எதிராக சாதாரண மக்களால் வேறு என்ன செய்ய முடியும்?.ஆனால், வெளிநாடுகளிலிருந்து இன்று பகல் பொழுதில் (அதாவது ஆளும்கட்சியின் பொது வேலைநிருத்தன்று), சென்னையிலோ, திருச்சியிலோ கோவையிலோ விமானம் மூலம் வந்திருக்கும் மக்களின் கதி என்ன?சுற்றுலாவுக்காக வந்திருந்ததால் கூட பகல் பொழுதை அந்தந்த விமான நிலையங்களிலேயே கழித்திடலாம்!, ஆனால் உறவினரின் மரணத்தின் பின்னான இறுதி உர்வலத்தில் கலந்துகொள்ள வந்திருந்ததால்? இல்லை வெளிநாட்டில் இருந்து வெறுப்பவர் தான் கொள்ளி வைக்க வேண்டியவராக இருந்தால் அவரின் மன நிலை எப்படி இருக்கும்?தமிழ்கத்தில் வேலைகிடைக்காத காரணத்தால் ஊர் உறவை விட்டு பிரிந்து வெளிநாடுகளில் வேலைசெய்வர்களுக்கு இது தான் நீங்கள் கொடுக்கம் ஆதரவா?இன்று பேருந்து, ஆட்டோக்கள் ஓடும் என்று தமிழ்க தலைமை செயலர் அறிவித்துள்ளதை காரணம் காட்டி சப்பை கட்டு கட்ட வேண்டாம், பேருந்துகளை ஓட்டப் போவதில்லை என தொ.மு.ச. அறிவித்துள்ளதை கவனிக்க வேண்டும் மக்களே.டிஸ்கி.


சிங்கையில் உடன் தங்கியிருந்த நண்பரின் தந்தை கடந்த திங்கள் இரவு காலமாகிவிட்டார். நண்பருக்கு அதிகாலையில் தகவல் கிடைத்து செவ்வாய் காலை 9 மணிக்கு வினானத்தில் இந்தியா சென்று இறுதி சடங்கில் கலந்து கொண்டார். தமிழ்க அரசியல் சூழ்நிலையையும் தாண்டி இறுதி சடங்கில் கலந்து கொண்டதால் அவர் புண்ணியவான் ஆகிவிட்டார்?இதேபோல் ஏதாவது ஒரு துரதிஸ்ட்டசாலி, புதனிரவு தகவல் கிடைத்து வியாழன் காலை கிளம்பி இந்தியா வந்தால், அவரின் நிலை? மனநிலை?????????????

தண்ணீர்… தண்ணீர்…


இது இயக்குனர் பாலச்சந்தரின் படத்தின் தலைப்பு மட்டுமல்ல… தமிழ்நாட்டின் முப்பதாண்டு காலமாகத் தணியாத தவிப்பின் ஒரு பகுதி மட்டுமே,

இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் பிறந்த இந்த குழந்தை, மதுரை, திண்டுக்கல், தூத்துக்குடி, போன்ற வறட்சியான மாவட்டங்களில் வளர்ந்து, காவிரி துள்ளிக் குதித்து ஓடிவரும் ஒக்கேனக்கல் வரை, அங்கு இங்கு எனாதபடி எங்கும் இருக்கும் தூசிக் காற்றைப் போல் தமிழகம் முழுதும் வியாபித்துள்ளது.

பாலச்சந்தரின் இந்த தண்ணீர்… தண்ணீர்… திரைப்படம் 1981 –ம் ஆண்டு, சரிகா, வீராச்சாமி, வாத்தியார் இராமன், இராதாரவி மற்றும் பலரின் நடிப்பில் வெளிவந்தது.

குடிதண்ணீரை கூட பக்கத்து கிராமத்திலிருந்து தலைச்சுமையாக எடுத்துவந்து குடிக்கும், தண்ணீர் தரித்திரம் பிடித்த கிராமம், தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலைசெய்யும் சிறுவர் – சிறுமியர், ஒரே ஒரு ஆசிரியர் மட்டும் இருக்கும் ஆரம்பப் பள்ளிக்கூடம், பேராசைக்கார கோவில் பூசாரி, இரட்டைக் கொலை செய்துவிட்டு, இந்த கிராமத்தில் தஞ்சம்புகும் போலீஸால் தேடப்படும் குற்றவாளி என பல வித்தியாசமான பாத்திரங்களும் படம் முழுவதும் குடிதண்ணீரையே சுற்றிவருகிறது.

மழையை எதிர்பார்த்து மக்கள் அன்னாந்து பார்த்தே நாட்களைக் கடத்துகையில், சுகந்திர வாழ்வின் அடையாளமாக, ஐந்தாண்டுக்கு ஒரு முறை வரும் திருவிழாவாக, தேர்தல் - தேவையில்லாமல் அந்த அப்பாவி கிராமத்துக்கு வினையாய் வருகிறது.

இந்திய தேர்தலின் சம்பிரதாயப்படி, தொகுதியில் பெரும்பான்மையான மக்களின் சாதியைச் சேர்ந்த வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர். நமது கிராமத்தில் ஒரு சாதியைச் சேர்ந்த மக்கள் மட்டுமே. எனவே சாதியின் பெருசுகளில் ஒன்று வாக்கு சேகரிக்க கிராமத்துக்குள் புகுந்ததில் ஆரம்பிக்கும் வினை!

தாங்கள் சார்ந்த சாதிக்காரனுக்கு வாக்களித்தால், ஊருக்குள் எல்லா வளத்தையும் கொண்டுவருவதாக சாதி பெருசு கூறவும், எல்லா வளமும் வேண்டாம், குடிக்க தண்ணீர் மட்டும் குழாயில் கொடுக்க வேண்டுமென கேட்கிறது மொத்த கூட்டமும். அதற்க்கு பெருசின் வாக்குறுதியோ “இதோ ஆறாவது ஐந்தாண்டு திட்டம் வரப்போகிறது, அதில் முக்கிய திட்டமே கங்கை – காவிரி இணைப்பின் மூலம் தமிழகத்தின் எல்லா கிராமங்களுக்கும் குடி தண்ணீர் கொடுப்பது தான், அதன்படி நம்ம கிராமத்துக்கும் குடிதண்ணீர் வரும். அதுக்கு நம்ம சாதிக்காரனுக்கு ஓட்டு போடுங்க”.

உடனே, வாத்தியார் (ராமன்) “போதும், இப்பிடியே கங்கையையும் – காவிரியையும் இணைக்கிறேன், இணைக்கிறேன்னு சொல்லியே அந்த ஆறுகளின் மேலான மரியாதையை குறைச்சுட்டீங்க, தயவு செஞ்சு விட்டுடுங்க” என்பார்.

அதற்கு, சாதி பெருசு. “டேய், எதிர் சாதியை சேர்ந்த இந்த ஒத்தை வாத்தியார் சொல்லுறத கேட்டு ஓட்டை, அந்த ஜாதிக்கு போட்டீங்க, உங்களுக்கு ஒன்னும் கிடைக்காது, நம்மாளுக்கு போட்டீங்கன்னா, நாளைக்கு நம்ம சாதிக்காரங்களுக்கு ஏதாச்சும் வேலையாச்சும் வாங்கித்தர முடியும்” என எச்சரித்தும், மக்கள் சாதி பெருசை அவமானப்படுத்தி அனுப்பியதோடு மட்டுமல்லாது, தேர்தலை ’பாய்காட்’ செய்ய மொத்த ஊர் மக்களும் முடிவு செய்கின்றனர்.

தேர்தலன்று காலை பத்துமணிக்கு ஊர் மொத்தமும், வாக்குச்சாவடி முன் கூடி நிற்கிறது. ஆனால், யாரும் வாக்களிக்க முன்வரவில்லை. வாக்குசாவடி அதிகாரி மக்களிடம் கெஞ்சி கூப்பிட்டதும், ஒரு ஆள் மட்டும் தைரியமாக ஊர் கட்டுப்படை மீறி வாக்குசாவடிக்குள் போகிறார். உள்ளே ராஜ வரவேற்ப்புடன் வாக்காளர் பட்டியலில் கையெழுத்து கேட்டதும், அந்த கிராமத்து ஆள் “ சார், கொஞ்சம் தண்ணி குடிச்சுக்கட்டா?” எனக்கேட்டு, பானையில் வைத்திருக்கும் குடிதண்ணீரை ஆசையோடு மூணு செம்பு குடித்துவிட்டு, பெருமையோடு வாகுச்சாவடியை விட்டு வெளியேறுவார். ஊர்கூடி அடிக்கவரும் மக்களிடம், “உள்ளே போய் நல்ல தண்ணீரை வயிறு நிறைய குடித்துவிட்டு, வாக்களிக்காமல் வந்ததை” பயம் கலந்த பெருமையோடு மக்களிடம் சொல்வார்.

கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்து சொந்த சாதிக்காரரை தோற்கடித்த ஆத்திரத்தில் கிராமத்திற்க்கு குடிதண்ணீர் வரும் மாட்டு வண்டியை அடித்து உடைப்பது,

குடிதண்ணீருக்காக பக்கத்து மலையை உடைக்க முற்படும் ஆளுக்கு (இரட்டைக் கொலைகாரன்) கிராமத்தினர் அனைவரும் சேர்ந்து கொடுக்கும் பெரிய மரியாதையான பழைய பட்டு துண்டு,

மலையை உடைப்பதை தடுக்கும் அரசு இயந்திரம், கட்டுப்படாத மக்களை சுட்டு தள்ளிய கணவனோடு(போலீஸ்) சேர மறுத்து வாழாவெட்டியாகும் சரிகா,

குடிக்க தண்ணீர் கிடைக்கும் வரை போலீஸ் கையில் சிக்காமலிருக்க தப்பித்து ஓடும் போது, கிராமத்துக்கே தண்ணீர் கொடுக்க முனைந்தவன் விக்கலெடுத்து தண்ணீரின்றி சாவது,

கொடுமைக்ளை பொறுக்க முடியாமல் நக்சலாகும் ஒருவர்,

என அதிகார வர்கத்தை எதிர்த்தால் சொந்த சாதிக்காரன் ஆனாலும் என்ன நடக்கும் எனபதை எதார்த்தமாக முடித்திருப்பார் பாலசந்தர்.


தேர்தல் நேர்த்தில் இந்த படத்தை பதிவுக்கு உதாரணமாக எடுக்க காரணம், இருபத்தி எட்டு ஆண்டுகளுக்கு முந்தைய தமிழகத்தின் அவலங்கள் இன்னும் மாறாமல் இருப்பதை சுட்டிக் காட்டவே.

அவற்றில் சில…


ஆறாவது ஐந்தாண்டு திட்டத்தில் தீட்டப்பட்ட கங்கை – காவிரி இணைப்பு திட்டம், நடப்பு பதினோராவது ஐந்தாண்டு திட்டத்திலுல் தொடங்கப்படாமல் இருப்பது,

இன்றய படித்தவரகளின் வீதம் அதிகமான நவீன காலகட்டத்திலும், தொகுதியில் இருக்கும் மக்களில், பெரும்பான்மையானோர் சார்ந்த சாதியை சேர்ந்த வேட்ப்பாளரையே அனைத்து கட்சிகளும் முன்னிருத்துவது மட்டுமின்றி சில இடங்களில் நேரடியாகவே சாதியைச் சொல்லி வாக்குகேட்பது,

போன்ற அவலங்களை இனியும் நாம் அனுமதித்தாலோ, அனுசரித்தாலோ., திரைப்படத்தில் கிராமத்திற்க்கு நேர்ந்த நிலைதான நாளை ஒட்டு மொத்த இந்தியாவிற்க்கும் நேரும் என்பது திண்ணம்.

என்ன செய்யப் போகிறோம்???

என்னைக் காதலி…

என்னைக் காதலித்த
மனைவியே!?…


உண்மையை உரை.,
நான் உனக்கு தகுதியானவன் தானா?


எனக்காக
உன் வாழ்விடத்தை
மாற்றிக் கொண்டாய்!,
தூக்க நேரத்தை
மாற்றிக் கொண்டாய்!.,


எச்சில் உணவையும்
சந்தோசமாய் கொண்டாய்!.,
நான் கேட்டதற்காக
மூன்றாவது சூல் கொண்டாய்!.,


குழந்தைகளுக்கு மேலும்
என்னையே கண் கொண்டாய்!.,
மனவிரிசலிலும் எனக்கான உணவை
மறுக்காமல் தயாரித்தாய்!.,


ஒவ்வொரு கணத்தையும்
எனக்காகவே செலவழித்தாய்.,
காதலில் துடித்த போதெல்லாம்
எனக்காக கனிந்தே இருந்தாய்!.,


உடலில் வலுவிருந்த வரை,
உன்னை நான், பொருட் -
படுத்தியது இல்லை.
ஆனால் நிறைய துன்ப -
படுத்தியே இருக்கிறேன்!.


அன்பே,
நான் உன்னை
உணராத காலத்திலெல்லாம்,
நான் உன்னை
உதாசீனப்படுத்திய காலத்திலெல்லாம்,
என்னுடனே இருந்தாய்!


ஆனால்.,
உதாசீனத்தின் கொடுமையை,
மருமகனிடம் நான் உணர்ந்த போது.,
கழிவறைக்கு போவதானாலும்
துணை வேண்டும் போது.,
உனக்கு நான் செய்த கொடுமைகளை
எண்ணி மனம் திருந்திய போது.,
உன்னை நான் என்
தாயாகவே உணர்ந்த போது.,

ஓர் இரவிலே
என்னை விட்டுப் போனாயே.
உடல் துடிக்க முடியாத நிலையிலும்
உள்ளம் துடி துடிக்குதே.


அய்யோ…
இனி நீயின்றி நானிருக்க முடியாது,
இனி நீயின்றி நான் இருக்கும்,
ஒவ்வொரு நொடித்துளியும்
உடல் தளர்ந்த எனக்கு,
பாடமல்ல,
தண்டனையே…


சன் டீ. வி பிறந்தநாள் (தமிழ் புத்தாண்டு) வாழ்த்துகள்
யப்பா, ஊரு உலகத்துல நாம்பேசுற அதே தமிழ பேசுற எல்லாருக்கும் அன்பு, மரியாத, பயங் கலந்த வணக்க(ம்). இன்னுங் கொஞ்ச நேரத்துல பங்குனி (முரசொலிக்கு மட்டும் சித்திரை) மாசம் முடிஞ்சி, சித்திரை (மன்னிச்சிக்கிங்க, முரசொலிக்கு என்னன்னு தெரியல, நாளக்கி இங்க போயி பாத்துக்கங்க) மாசம் பொறக்கப் போகுது.


சித்திர பொறப்பை எங்க ஊருல (சிங்கை) தமிழ் புதுவருச பொறப்புன்னு சொல்லி, ஒரு வாரத்துக்கு முன்னாடியிருந்தே ரேடியாவுலையும், டீ.வி. லையும் வாழ்த்து சொல்ல ஆரம்பிச்சுட்டாய்ங்க. இன்னிக்கி ராத்திரி விடிய, விடிய தமிழ்லயே எதையாச்சும் பேசி நம்மள குசி பண்ணிகிட்டே இருப்பாய்ங்க. நாமளும் இதுவரைக்கும் கேக்காத வார்தைகளையும் கேக்குறதுக்கு, அப்பப்ப வாய்ப்பு கிடைக்கும், நாமளும் அத விடாம கேட்டுக்க வேண்டியது தான். ஆத்தா, அப்பன் ஏதோ புண்ணியம் பண்ணியிருக்காக போலிருக்கு, இப்பிடி தமிழ ஒழுங்கா கேக்குறதுக்கு.


ஆக, இதுல இருந்து உங்களுக்கு சொல்லிக்கிறது என்னான்னா, இன்னிக்கி ராத்திரி எங்களுக்கு தமிழ் வருச பொறப்பு!. எப்பிடியும் ராத்திரி பதினொன்ரை மணிக்கி ஆரம்பிச்சு, விடிய விடிய பாசக்கார பயலுக ஃபார்வேர்டு எஸ்ஸமச அனுப்ப ஆரம்பிச்சுருவாய்ங்க. நமக்கும் வேறென்ன சந்தோசம், வந்ததை ஆளமாத்தி அனுப்பிக்கிட்டே இருக்க வேண்டியது தான்.ஆனா, கவனமா இருக்கணும். அனுப்புற மெஸ்ஸேசுல எதையும் தமிழ்நாட்டுக்கு அனுப்பீர முடியாது. அனுப்புனா, அரசாங்கத்தை எதுத்த மாதிரியாகிப் போகும். ஊருவழி போறன்னைக்கி ஆட்டோ வச்சி தூக்கிருவாய்ங்க. ஆத்தி, அம்மளால முடியாது. நமக்கு வேணாம் ஊர் வம்பு.ஆனாலும், வந்த மெஸ்ஸேசை பார்வேர்டு பண்ணி தமிழ் வருச பொறப்ப கொண்டாடாதவைங்கள வம்பிழுக்கணும், அடுத்து நாம சந்தோசமா இருக்குறத காட்டணுமேன்னு யோசிச்சதும்., பளிச்சுன்னு வந்து விழுந்த யோசனை தான் அம்ம சன் டீ. வி யோட பொறந்த நாளு. அதச் சொல்லியாவது அம்ம மக்களோட சந்தோசத்த பகுந்துக்க வேண்டியது தான்.அதனால தமிழ்நாட்டுல இருக்குற நீங்க, தமிழ் வருசப் பொறப்ப கொண்டாடுற எங்களுக்கு, தமிழ் வருச பொறப்பு எஸ்ஸமச அனுப்புங்க., ஊர் வழியில திரியிற நாங்க, தமிழ் நாட்டுல இருக்குற உங்களுக்கு, சன் டீ.வி பொறந்த நாள் வாழ்த்து எஸ்ஸமச அனுப்புறோம்.
மாமன் – மச்சானான நமக்குள்ள ஏதோ பொறந்த நாள் கொண்டாடுன சந்தோசம், ஆனா தமிழ் வருச பொறப்ப கொண்டாடுற நான் நாளைக்கி வழக்கம் போல எந்திரிச்சி வேலைக்கி போகணும். ஆனா சன் டீ. வி பொறந்த நாள கொண்டாடுற உங்களுக்கு நாளைக்கி அரசாங்க லீவுடியேய்.

சந்தோசமா இருங்கடி மாப்பிள்ளைகளா…

உணர்ச்சிப்பூர்வச் சிக்கலில், வாழ்வாதாரச் சிக்கலை மறக்காதீர் தமிழர்களே!!!
பேரன்பு கொண்ட தாய்மார்களே., பெரு மதிப்பு கொண்ட பெரியோர்களே., தேர்தல் தோறும் மறக்காமல் வாக்களித்ததும், வேட்பாளர் கொடுத்த வாக்குறுதிகளைத் தானே மறந்திடும் உண்மையான குடிமக்களே., எல்லோருக்கும் இந்த அப்பாவியின் வணக்கம்.

தொன்னுற்று ஆறு சட்டமன்றத் தேர்தலை, மக்கள் எந்தளவு ஆவலோடு எதிர்பார்த்தார்களோ, அதைவிட இருமடங்கு ஆவலோடு இன்றைய நாடாளுமன்றத் தேர்தலை தமிழக மக்கள் எதிர்பார்க்கின்றனர். அதற்கு முக்கிய காரணம்., இலங்கையில் நடந்துகொண்டிருக்கும் தமிழின அழிவு.

இயற்கையாகவே தமிழ்நாட்டிற்கு ஒரு கை போல் அமைந்திருக்கும் இலங்கையில் நடக்கும் போரால், இடது கையில் ஏற்பட்ட வலி, மிகுந்து (தமிழகத்திற்கும், இந்தியாவுக்கும்) மாரடைப்பாக மாறுமா? இல்லை, இது சாதாரண வலி தானா என்பதை நிர்ணயிக்கும் தேர்தல்.

ஈழத்தில் நடக்கும் அநியாயத்தை கண்டிக்கும் பொறுப்பில் இருக்கும் நாம், அதை வேடிக்கை மட்டும் தான் பார்க்கிறோமா!?, இல்லை மறைமுகமாக தமிழின எதிரியை வலுவாக்கினோமா(!?) என்பதெல்லாம் தேர்தலில் ஆளும் கூட்டணிக் கட்சிகளின் தோல்வியில் தான் உள்ளது.

மறுக்க முடியாத கவலை, மற்றும் காரணங்கள் இருந்தாலும், கவனமாய் இருக்க வேண்டிய காலம் தமிழகத்துக்கு. உணர்ச்சியைத் தூண்டி அரைமயக்கத்திலே வைத்திருக்கும் ஈழப் பிரச்சனையையும் தாண்டி, தமிழகத்தை கடந்த இருபது, முப்பது ஆண்டுகளாக மாறாமல் இருக்கும் பிரச்சனைகளை நினைவுபடுத்த வேண்டிய நேரமிது…

1) காவிரி நதி நீர் பங்கீடு.


கடந்த இருபது வருடங்களாக அரசியல், சமூக, சட்டம், நீதி என உச்ச நீதி மன்றத்தாலும் தீர்க்க முடியாதப் பிரச்சனை. மாநில முதல்வர் உண்ணாவிரதமிருந்தாலும் உள்ளூர் அரசியலைத் தாண்டி மக்கள், தேசிய அளவில் யோசித்ததும் இல்லை. மக்களை தேசிய அரசுகள் காத்ததும் இல்லை…

இந்த தேர்தல், தேசியத்திற்கான தேர்தல். வரக்கூடிய நாடாளுமன்ற உறுப்பினர்களாவது மக்களவையில் தமிழகத்தின் நியாயத்தை விருப்பு, வெறுப்பில்லாமல் எடுத்துக்கூறி, தமிழகத்திற்கு உரிய அருள்பாகத்தை பெற்றாகவேண்டிய இறுதிக்கட்டத்தில் இருக்கிறோம்.

இதற்கு மேலும் காவிரியை இழந்தால், தமிழகத்தை கடவுள் – தேவன் – அல்லா என யாராலும் காப்பாற்ற முடியாது. ஏனெனில் காவிரியின் தாக்கத்தால் வறண்டிருக்கும் தமிழகத்தின் பன்னிரண்டு மாவட்டங்களில் அழியாத தழும்புகள் பல உள்ளன.

2) முல்லைப் பெரியாறு அணை

கிழக்கிந்திய கம்பெனிக்கும் – திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்குமான 999 வருட ஒப்பந்தம்., கொள்ளையடிக்க வந்த ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது, சூரியன் மறையாத ஆங்கிலப் பேரரசு செலவைத் தாங்க முடியாமல் ஒதுங்கிய போதும்., இதனால் கிடைக்கப் போகும் பலனை உணர்ந்து பின்வாங்காமல், இங்கிலாந்திலுள்ள தன்மொத்த சொத்தினைத்தையும் விற்ற பென்னி குயிக் எனும் ஆங்கிலேயப் பொறியாளரால் கட்டப்பட்ட அணை.

மத்திய தமிழகத்தின் உயிர்நாடி, நான்கு மாவட்ட மக்களுக்குள்ள ஒரே நதி அல்லது ஆறு அல்லது கால்வாய். இந்த ஆறு வற்றும் போதெல்லாம் மறக்காமல் தலைதூக்கும் அதிசயம் தான், சாதிக் கலவரம். இது என்ன தொடர்பு என்பது, வைகையில் குளித்து மேலேறும் மக்களுக்கே புரியாத அதிசயம்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் படி அணையில் 142 அடிக்கு நீர் தேக்கலாம். ஆனால், கடந்த பல்லாண்டுகளாகவே 136 அடியிலேயே நிற்கிறோம். கேரளாவில் வீணாக கடலில் கலக்கும் தண்ணீர், லோயர் கேம்ப்பில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் பெரும் பகுதி கேரளாவிற்கே போகிறது., நெல் விளையும் தமிழ்நாட்டிலும் சரி, நெல்லே விளையாத கேரளாவிலும் சரி, ஒரே விலைக்கு விற்கப்படும் அரிசி!?.

என, பல சாதகங்களையும் தாண்டி, தமிழகத்தின் மேலும், தமிழர்களின் மேலும் கேரளா காட்டும் வெறுப்பு + பிடிவாத்திற்கு மருந்தாகும்? என, இந்த தேர்தலையே நம்பியுள்ள தேனி, திண்டுக்கல், மதுரை, இராமநாதபுர மாவட்ட மக்களுக்கு என்ன சொல்லப்போகிறோம்???

3) ஒக்கேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம்

திடீரென வெடித்து, உக்கிரத்தைத் தொட்டு, கர்நாடக சட்டசபை தேர்தலுக்காக சட்டென பின்வாங்கிய பிரச்சனை. ஒரு வருடத்திற்கும் மேலாகி விட்டது. ஒக்கேனக்கல் என்ற ஒரு ஊர் இருக்கிறதா?, இருந்தால், ஒக்கேனக்கலில் மக்கள் இருக்கிறார்களா?, அதற்கும் மேல் சுகாதாரமான தண்ணீரைத் தான் குடிக்கிறார்களா? என்பது அந்த கட்டுப்பாடுகளற்ற கருணாமூர்த்திக்கே வெளிச்சம்.


நதிக்கரைகளின் ஓரத்தில் தான் நாகரீகங்கள் தோன்றின., கல் தோன்றி மண் தோன்றா காலத்தே, நதிகள் தோன்றிய காலத்திலேயே தோன்றிய தமிழ் நாகரீகத்தை காப்பாற்றவும்.,

கடந்த அறுபத்தி ஓராண்டுகளாக, இந்தியா., இந்தியன், என்பதில் பெற்ற பெருமைகளை மேலும் தக்கவைத்துக் கொள்ளவும்.,

தமிழர்களான நமக்கு இருக்கும் கடைசி நம்பிக்கையான எதிர்காலத்தை, சரியாக நிர்ணயிக்கவேண்டிய தருணத்திலிருக்கும் நாம் செய்யவேண்டிய கடமையான வாக்களிப்பை சரியாக செய்யவும்,

எதிர் வரும் இந்தியாவிற்கு, தமிழனின் தார்மீக உரிமையை எடுத்து காட்டி நிலைநாட்டக் கூடிய திறமையானவர்களை, தகுதியானவர்களை தேர்ந்தெடுக்க வேண்டிய சூழ்நிலையிலிருக்கும் நாம்.,

ஈழதமிழர் பிரச்சனையில் அரசியல்வாதிகளின் மேல் எதிர்ப்பை காட்டும் நேரத்தில், தமிழகத்தின் வற்றாத நதிகளால் ஏற்பட்டிருக்கும், வற்றாத பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்

மறக்கமுடியுமா இல்லை மறுக்கமுடியுமா?

கவலை தரும் கட்டற்ற சுதந்திரம்!!!

மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தின் மீதான தாக்குதல் வழக்கம் போல், இணையம், தொலைபேசி, அலைபேசி, செய்தித்தாள், மற்றும் பல வழிகளில் தாத்தா, பாட்டி, அப்பா – அம்மா, அத்தை, மற்றும் பக்கத்து வீட்டு அக்காவின் கருவிலிருக்கும் குழந்தைவரை வந்து சேர்ந்துவிட்டது.


அந்த நிகழ்ச்சியைப் பார்த்ததாலோ., கேட்டதாலோ யாருக்கும் எந்த லாபமும் இருந்திருக்காது, ஆனால் கணக்கில்லாமல் காலம் விரயமாகி இருக்கும் நமக்கு. அந்த விரயத்தை பணமாக்கியிருப்பார்கள்., மீடியா முதலைகள். மக்களின் அவசரத்தை ஆதாயமாக்கிவிட்டார்கள். வாழ்க வளமுடன் (வேற என்ன பண்ணமுடியும்).


இந்த சம்பவத்தால் மானம் போனதாகவும், மரியாதை குறைந்துவிட்டதாகவும் குய்யோ முய்யோ என்று கும்பலாக குதிக்கிறார்கள். செய்த பாவமும், தேர்தல்கால பயமும், கண்முன் நிழலாடுகிறது. வினை விதைத்தவன், வினை அறுக்கிறான்.

செய்த தவறுக்கு தண்டனை கொடுக்க முடியாவிட்டாலும், கூட்டத்தில் வைத்து அவமானப் படுத்தியாயிற்று. பாதி கேணி தாண்டிய சந்தோசத்தில் பரிசு பணமெல்லாம் அறிவித்தார்கள்.
இது பழைய சம்பவங்களுக்கு முடிவாகுமா…. இல்லை இது புது சம்பவங்களுக்கோர் பிள்ளையார் சுழியா?… இந்திராகாந்திக்கும், குருநானக்கிற்கும் அடுத்த தலைமுறைக்குமே வெளிச்சம்!


பலபேர் அலசி காயப்போட்ட, இந்த சம்பவத்தை வெவ்வேறு ஆட்கள் மீண்டும், மீண்டும் அலசுவதால் அழுக்கு போகுமோ இல்லையோ கிழிந்து நார், நாராகத் தொங்கப்போவது நிச்சயம். பாவம், பலவண்ணங்களைக் கொண்டும், பல்வேறு வகையான நூல்களைக் கொண்டும், சில இடங்களில் பளபளப்பும், பல இடங்களில் வண்ணம் மங்கியும், கண்ணுக்குத் தெரியாத சிறு பொத்தல்களையும், கிழிசலையும் கொண்ட நீளமான சேலை அது. வேலைப்பாடு அதிகமாக இருந்தாலும், வயதாகிவிட்டதால் கையாளுகையில் கவனம் சிறிது குறைந்தாலும், துண்டு, துண்டாக் கிழிவதற்கு முழு காரணமும் நாமாகிவிடும் அபாயமிருக்கிறது. எச்சரிக்கை எல்லோருக்கும் வேண்டும்!

ஈராக்கில், அமெரிக்க அதிபருக்கு எதிராக கையாளப்பட்ட நூதன அவமானப்படுத்தல், சீனாவைத் தொட்டு இந்தியாவிலும் அடி(!?)யெடுத்து வைத்துள்ளது. ஆனால் அமெரிக்க அதிபர் காட்டிய வேதனையில் துளிக்கூட அமைச்சரின் முகத்தில் இல்லை. அவமானகரமான சூழ்நிலையிலும் அமைதியாய் இருந்தது ஆச்சரியகரமானது. அவமானப்படுத்த நினைத்தவனை, ஆன் த ஸ்பாட்டில் மன்னித்து அழிவில்லாப் புகழ் பெற்றார் அமைச்சர்.

அரசியல்வாதிகளைப் பொது இடத்தில் எல்லோர் முன் அவமானப்படுத்தும் தந்திரம் இதுவென நினைத்த அப்பாவி பொதுஜனமோ, அமைச்சரின் நடவடிக்கையால் மனமுடைந்து போவான். ஏனெனில் இந்திய அரசியல்வாதிகள் பயின்ற பாடங்கள் அப்படி. கட்சி கூட்டங்களிலும், சொந்தத் தொகுதிலும் அடிபட்டாலும், மிதிபட்டாலும் வலியை முகத்தில் காட்டாமல் புன்னைகைத்தவர்கள் தானே!!

ஆனால், நடந்த சம்பவங்களையும், நடக்கும் சம்பவங்களையும் நேரடி ஒளிபரப்பில் தொடங்கி, மறு ஒளிபரப்பு வழியாக பார்க்காதவனுக்கு, செய்திகளின் ஊடே ஸ்லோமோசனில் மீண்டும், மீண்டும் காட்டப்படும் காட்சிகளால், தவறுகளைப் பிரித்து ஒதுக்கும் பாமரனுக்கு குழப்பத்தை உண்டாக்கி, தவறான நடவடிக்கைகளைச் சரியென ஆக்கும் வேலையை மிகச்சரியாக ஊடகங்கள் உருவாக்கி வருகின்றன.


அண்டை நாட்டில் நடக்கும் கொடுமையை, களத்தில் பலியான வீர மறத்தாயை, காமுகன் ஆடை களைவதை பார்த்ததும் மார்பு புடைக்க, ரத்தம் கொதிக்க, கைகால்கள் வெடவெடத்து, ஏதும் செய்ய முடியாத கையறு நிலையால், கண்ணில் நீர் வற்றும் வரை அழுத நான், அடுத்து, தலையில்லாத பிஞ்சுகளைப் பார்த்தாலும் சிறு மன இறுக்கத்தோடு அடுத்த வேலைக்கு போகும் படி ஆகிவிட்டது. கண்ணீர்த் துளி கூட இல்லை.

நான் ஏன் மாறிப்போனேன்?, ஏன் என் மனம் மரத்துப் போனது, என எண்ணிப் பார்க்கையில், நான் உணர்ந்த காரணம் தான் என்ன?

இது போன்ற படங்களை, ஊடகங்கள் வழியாக நாள் தோறும் பார்த்ததினால் வந்த பாதிப்பு. ஆனால், மோசமான பாதிப்பு. பிஞ்சுகள் கூட தமிழன் என்ற காரணத்திற்காக பலியாவதை கண்டும், காணாமல் போகுமளவுக்கு என்னுள் வறட்சியை ஏற்படுத்தியுள்ளன இந்த ஊடகங்கள்.


என்னை, என் இயல்பை என் கண்முன்னே மாற்றிவிட்டனர் இந்த ஊடகவியலாளர்கள்.

தப்பான கலாச்சாரத்தைப் பயின்றதால், எல்லா விதத்திலும் இழப்பு என்னவோ அப்பாவிகளுக்கு மட்டுமே!.,

தப்பான கலாச்சாரத்தைப் பயிற்றுவித்ததால், எல்லா விதத்திலும் லாபம் என்னவோ ஊடகங்களுக்கு மட்டுமே!உண்மையை அறிவீர்!.,

உணர்ச்சிகளை சரியாக, சரியான நேரத்தில் வெளிப்படுத்துவீர்!!

மனிதனாக வாழ்வீர்!!!
பின்குறிப்பு:-

தொலைத்தொடர்பு வளர்சியினால் நாமடைந்த துன்பங்களைப் பற்றி படைக்கு எனது முந்தைய பதிவுக்கு வழிச்சுட்டி---->மீடியா மெஸ்மரைஸம்...

தமிழின தலைவர் கலைஞரின் புரட்சி தொடர ஆதரவு தாரீர்!!!

பேரன்புகொண்ட பெரியோர்களே, பெருமதிப்பு கொண்ட தாய்மார்களே., மாசற்ற மாணிக்கங்களே, தரம் குறையா தங்கங்களே., மாற்றங்களை எதிர்பில்லாமல் ஏற்றுக்கொள்ளும் தமிழின தாரகைகளே., நீங்கள் உங்களின் நடவடிகைகளால் எனக்குள் எப்போதும் வற்றாத ஊற்றாக உங்களுக்கு பணிபுரிய எனக்கு இட்ட கட்டளைகளில் ஒரு பகுதியாக,


தமிழ் வருடபிறப்பை சித்திரை ஒன்றிலிருந்து, தை ஒன்றுக்கு மாற்றியதை எதிர்பில்லாமல் ஏற்றுக்கொண்டதன் தொடர்சியாக, பங்குனி மாதமிருக்க வேண்டிய இடத்தில் சித்திரை மாதத்தை மாற்றி வைத்துள்ளேன். மே மாதம் அடிக்கவேண்டிய வெயில் மார்ச் 15 முதல் ஏப்ரல் 15க்குள் அடித்துவிடும், இதனால் உடன்பிறப்புகள் தேர்தல் திருவிழாவில் களைப்பில்லாமல் கலந்துகொள்ளலாம்.

வழக்கமாக எனக்கு நீங்கள் கொடுத்து வரும் பேராதரவினை, இந்த மாதங்களின் மாற்றத்திற்கும் கொடுத்து, வழி வழியாக இருந்து வரும் தலையாட்டும் வழக்கததை தொடர்வீர், தன்மானமிக்க தமிழன் என்பதை மீண்டும் நிருபிப்பீர்...ஆதாரத்திற்க்கு இங்கே சுட்டவும்.

மகனே முத்துக்குமரா....மணி, மணியாய் இருவரைப் பெற்று
கொள்ளை விபத்திற்கு ஒருவனையும்.,
கொள்கை மானத்திற்கு ஒருவனையும்.,
தூக்கிக்கொடுத்து அனாதையாக
நிற்கும் அப்பன் நானடா...


மகனே, இருபத்தியோராம் நூற்றாண்டு தமிழனின்
இரு கைகள், பெட்ரோலுக்கொன்றும்,
தீப்பட்டிக்கு ஒன்றுமாய் இல்லை.
வாயையும், _____தையும் பொத்திக்கொள்ளத் தானென்று
உன் இழ(ற)ப்பிற்கு பின் புரிந்துகொண்டேனடா...


சிறப்பாகப் பாடம் பயின்றாய், பதக்கங்கள் பெற்றாய்.,
புத்தகங்கள் பல படித்தாய்., ஒய்வில்லாமல் எழுதினாய்.,
எந்த புத்தகத்தைப்பார்த்து அப்பனுக்கு முன்,
உனக்கு நீயே கொள்ளி வைத்துக்கொண்டாய்?

உடல்வேதனையாக இருந்தால்
வெந்நீரால் போக்குவேன்.,
மனவேதனையாக இருப்பதை
எந்நீரால் போக்குவேன்???


உன் தகனமேடையில் சூளுரைத்தவனெல்லாம்
திசைக்கொருவனாய் சிதறி விட்டார்கள்.,
அவர்கள் ஓடி சேர்ந்ததெல்லாம்
எதிரியின் கூடாரம்., உன் எதிரியின் கூடாரம்...
”என் பிணத்தை புதைக்காமல்,
துருப்புச்சீட்டாக வைத்திருந்து,
போராட்டத்தை கூர்மைபடுத்த” – கேட்டாய்,
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே
புத்திசாலிக்கூட்டம் என்பதை, உன் இறப்பை
ஒட்டிய போராட்டத்தை ஒடுக்கி, நிரூபித்தார்கள்
அரசியல்வாதிகளும், ஆளும் கூட்டத்தாரும்.மகனே நீயில்லாமல்
வாழவும் வழியில்லை.,
உன் கடைசி ஆசையை
நிறைவேற்றவும் முடியவில்லை.,கையறு நிலையிலிருக்கும்
நான் என்னசெய்வேன்?
என் கையை அறுத்தவர்களை
நான் என்னசெய்வேன்???அவசரப்பட்டுவிட்டாய் மகனே,
போலித் தலைவர்களையும்.,
போலியான தமிழர்களையும் நம்பி
அவசரப்பட்டுவிட்டாய்.,
தலைவர்கள் உன்னை ஏமாற்றலாம்!?,
தமிழர்களும் உன்னை ஏமாற்றலாமா?உன்னை இழந்து அனாதையானது,
நான் மட்டுமல்ல, உன் ஆசைகளும் தான்.
தேர்தல் சூதாட்டத்தில் உன்னையும், உன் ஆசைகளையும்,
தன் சூளுரைகளையும் மறந்தவர்களுக்கு
பாடம்புகட்டுபவர்கள் யார், யார்?
பாடம் படிக்கப்போவது யார்? யார்?
உன்னைப் போன்ற கொள்கை தற்கொலையால்
நாட்டை திருத்துபவனா?
இல்லை, கடைசி நேர சூழ்ச்சி கூட்டணியால் தேர்தலில்
வெல்லும் அரசியல்வாதிகளா?
இந்த தேர்தலில்
பாடம் படிக்கப்போவது யார்?

ஜாதி, ஜாதி எனது ஜாதி

ஜாதி, ஜாதி என்கிறார்களே, இந்த ஜாதி – என்னுடைய ஜாதி, எனக்குத் தெரிந்து தான் என்னுள் புகுந்ததா? இல்லை எனக்குத் தெரியாமலே என்னுள் புகுந்ததா?. இந்த கேள்விக்கான விடையை தேடி தனியே பின்னோக்கிய எனக்குள்ளான பயணத்தில், நான்கைந்து சம்பவங்களை வரிசைப் படுத்தியதும் கிடைத்தது பதில். ஆனால் அந்த விடையினால் நான் அடைந்தது உயர் மின்சாரத்தின் அதிர்ச்சி மட்டுமே.

ஐந்தாம் வகுப்பை உயர்தரமாக முடித்து, வெற்றிகரமாக வெளியேறும் போது, தலைமையாசிரியர் தனிப்பட்ட முறையில் தந்தையின் காதைக்கடித்து “இவனை முடிந்தால், சைனிக்(இராணுவ) பள்ளிக்கூடத்தில் சேர்த்துவிடுங்கள். அவர்களாவது இவனது வாலை நறுக்குகிறார்களா? எனப் பார்ப்போம்” என கூறியது மட்டுமில்லாது, வழக்கமான முடுக்கத்தில் தலையில் குட்டியது வழக்கம் போல் மூளைவரை வலித்தது. அடுத்து, மாற்றுச் சான்றிதழில் (T. C ) ஜாதிப் பெயரை எழுதும் முன் கனமான கோபுர முத்திரை கொண்ட பழுப்பேறிய புத்தகத்தை பக்கம் பக்கமாய் புரட்டி, இந்த மாவட்டத்தில் எனது ஜாதி பிற்படுத்தப்பட்ட பிரிவா? இல்லை மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் வருகிறதா என துல்லியமாய் ஆராய்ந்து, கவனமாக எழுத்து பிழையில்லாமல் எழுதிக்கொடுத்தது மட்டுமில்லாது, அடுத்த பள்ளிக்கூடத்தில் கேட்டால் எப்படிச் சொல்வது என எனக்கு சொல்லிக்கொடுத்தது தான், என்வாழ்வில் முதல் நிகழ்ச்சி.

வாழ்வின் முக்கிய தருணங்களில் அதிமுக்கியமானது பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிந்து வரும் விடுமுறை. நல்லமுறையில் தேர்வு எழுதி நுழைவுத்தேர்வுக்கு தயாரானவர்களும், வெற்றியைப் பற்றி கவலையில்லாமல் காலை, மாலை வெவ்வேறு வகையான பயிற்சிகளில், உடலை வளர்த்தவர்களும், ஒருங்கே கூடி முடிவெடுத்து போன இடம், கிராம நிர்வாக அலுவலகம், ஜாதி சான்றிதழ் வாங்க.


நான்கு பக்கத்திற்கு அச்சிட்ட மனுவில் ”கட்டம் காலிவிடாமல்” நிரப்பியது மட்டுமல்லாது, இரண்டு பெரிய மனிதர்கள், நான் இந்த ஜாதிதான் மற்றும் இந்த முகவரியில் தான் வசிக்கிறார்’ என சான்றளித்துள்ளதை வாங்கி உறுதிப்படுத்திய அலுவலர், கையெழுத்திட்டு சொன்ன வார்த்தை, “தம்பி, தாலுகா ஆபீஸில் கம்யூனிட்டி சர்டிபிகேட் வாங்குறப்ப, ஜாதிப்பேரை ஸ்பெல்லிங் மிஸ்ட்டேக் இல்லாம எழுதியிருக்கான்னு பாத்து வாங்கிகங்க, இல்லன்னா ரொம்ப சிரமப்படணும்” என மிரட்டி என் ஜாதியை எழுத்துப்பிழை இல்லாமல் இருக்க என்னுள் ஊட்டியது தான், என்வாழ்வின் இரண்டாம் நிகழ்ச்சி.

காலம் காலமாக கனியாத பழம், தானாகக் கனிந்து வாசம் வீசியதை உணர்ந்தவுடன், தவற விட மனமில்லாமல் ஆட்(டு)களோடு ஆட்(டு)களாக, நானும் தமிழ்நாடு பொது தேர்வு கழக, நான்காம் நிலைக்கு தேர்வுக்கு மனுப்போட்டேன். வரைவோலை அனுப்பி காத்திருந்த நேரத்தில், பெயர் பொறித்த ஓலை வந்தது. கடிதத்தின் கனத்தினையும், அதிலிருந்த கத்தையான காதிதங்களைக் கண்டதும், ஆகா, நம் திறமையை தெரிந்து தேர்வில்லாமல் நேரடியாகவே தேர்ந்தெடுத்தார்களோ? என மனப்பாலை சப்பி, சப்பி குடித்தபடியே கடிதத்தைத் திறந்து பார்த்தேன்.

மனப்பாலைக் குடித்ததாலோ என்னவோ, மயக்கமே வந்தது. காரணம் வழக்கம் போல்., ஜாதிதான்….

நிரப்பி அனுப்பவேண்டியது இரண்டு பக்கங்கள் கொண்ட ஒரு தாள் மட்டும் தான். மீதமிருந்த்த கத்தையான காகிதங்களெல்லாம், குப்பையில்லை. தமிழ்நாட்டிலிருக்கும் ஜாதிகளும், அதற்கான விளக்கங்கள்,.. விளக்கங்கள்.., விளக்கங்கள் மட்டுமே. பொதுப் பிரிவில் வரும் ஜாதிகள், பிற்படுத்தப்பட்ட பிரிவில் வரும் ஜாதிகள், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் வரும் ஜாதிகள் / சீர் மரபினர், மற்றும் தாழ்த்தப்பட்டவர்கள் / மலைஜாதியினர் என நான்கு பிரிவுகளில் தலைப்பிட்டு, ஒவ்வொரு பிரிவிலும் நூற்றுக்கணக்கான ஜாதிகள். அடேயப்பா… சில ஜாதிகளைத் தாண்டி, மற்ற அனைத்து ஜாதிகளும், அன்று தான் முதன் முதலில் கேள்விப்படுகிறேன்.

என் தமிழ் மக்களை, இந்த சின்னஞ்சிறிய தமிழ்நாட்டிற்குள்ளேயே எத்தனை, எத்தனை பிரிவாக பிரித்துவைத்துள்ளார்கள் என்ற வருத்தம், என்னுள் மின்னலாக மின்னியது. ஆனால், அந்த மின்னல் அழகாக இல்லை.

சில ஜாதிகள் இரண்டு பிரிவுகளிலும் இருந்த்து. நாகபதனி – நாகப்பதனி (நன்றி, 23ம் புலிகேசி) போல ”ப்பன்னா” வித்தியாசமோ என்று பார்த்தால், நான் இரண்டிலும் பார்த்த ஜாதிக்கு ”ப்பன்னாவே” இல்லை. என்ன கொடுமை சரவணா???

என உற்று நோக்கினால், நோக்கியா இல்லாமலே வித்தியாசம் ஒன்று தெரிந்த்தது. ஒரு ஜாதியைச் சேர்ந்தவர் திருநெல்வேலியில் வாழ்ந்தால் அவர் மிகவும் பிற்படுத்தப்பட்ட ஜாதியை சேர்ந்தவர் என்றால், அதே ஜாதியைச் சேர்ந்தவர் விழுப்புரத்தில் வாழ்ந்தால் பிற்படுத்தவர் மட்டுமே. இந்தவகையில் பல ஜாதிகள் பல பக்கங்களை அலங்கரித்து கொண்டிருந்தது.

மயக்கம் தெளிந்து, எனது ஜாதி, எனது மாவட்டத்தில் எந்த நிலையில் இருக்கிறது என்று சரியாக பார்த்து, எழுத்துப்பிழை இல்லாமல், மனுவில் சரியாக எழுதி முடித்தும், இரண்டு நாட்கள் உறக்கமில்லாமல், புரண்டு, புரண்டு படுக்கவேண்டி இருந்தது. ஏனென்றால்.,

ஜாதிகள், இரண்டொழிய வேறில்லை, என பாடப் புத்தகங்களை புரட்டி, புரட்டி படித்து வளர்ந்தாலும், அரசாங்கத்தின் பெரும்பாலான விண்ணப்பங்களில் என்ன ஜாதி? என்ற கேள்விகளும், ஜாதியை தவறாக எழுதினால் கடுமையான தண்டனை என்ற எச்சரிக்கையும்!,

இவையனைத்தும் இருக்கும் காலம் வரை ஜாதிகள் இருக்கும்!!! ஜாதி வன்கொடுமைகளும் இருக்கும்!!!

என்றே நான் கருதுகிறேன்.

இதில் மாற்று கருத்து ஏதும் உண்டா?

 
©2009 அப்பாவி | by TNB