பத்தாண்டிற்கொரு பஞ்சம்!!!

பொருளாதார நெருக்கடி தரும் வேதனையைவிட, நெருக்கடி தீரும் வேளைப் பற்றி வரும் சேதிகள் பீதியைக் கிளப்பிய வண்ணமே இருக்கின்றன. இல்லாமல் இருக்குமா?, கடன் அட்டையை தேய்த்தும், எண்களை தட்டியும் வாங்கி, பிறர் புழுங்க, நாம் புழங்கிய பொருள்கள் ஊருக்குள் ஒரு தனி கவனத்தை நம்பக்கம் திருப்பியே இருக்கிறது.

இனி கால் தரையில் பட எங்காவது நடக்கமுடியுமா?, இருசக்கர வாகனத்தில் வந்தாலும், பொது பேருந்தில் வந்தாலும் ஏளனம் செய்ய ஒரு கூட்டம், நம்மிடம் வாங்கிகுடித்தே வாயும்-வயிறும் வளர்த்து காத்திருக்கிறது. மது குடித்தது தப்பா? இல்லை பிறர் குடிக்கக் கொடுத்தது தான் தப்பா? என்ற ஆராய்ச்சிக்கான நேரம் இது இல்லை. காத்திருக்கிறார்கள். சமாளிக்க வேண்டும். ஏனெனில், சாதித்தாலும் – சரிந்தாலும் வாழ்ந்தாக வேண்டுமே.

வேலையிடத்தில் வரும்படியை காரணம் பலகூறி குறைத்தாலும், தாராளமாய் செலவு செய்ய பழகிய மனதை, தடாலடியாக ஓர் இரவினில் மாற்ற முடியவில்லை. கடைத்தொகுதியை கடந்து வருகையில் கடையிலிருக்கும் பெண்களையும் தாண்டி, அவர்கள் தரும் அதிரடி விலைக்குறைப்புகள் சுண்டி இழுக்கின்றன.

பெண்களைப் பார்ப்பதர்க்காக கடைத்தொகுதியை சுற்றி, பணத்திமிரினால் பணப்பையை இளைத்து, கைப்பையை கொழுக்கி வலம் வந்த காலம் போய், முழுவிடுமுறை நாளிலும் முழுகைதியாய் வீட்டுசிறையினில் காத்திருக்கும் காலம் வந்ததே. எப்போதும் உடலினில் ஒரு மினுமினுப்பு, உடையினில் ஒரு பளபளப்பு, கைபேசியோ காலா காலத்திற்கும் புதுசு என சொகுசாய் வாழ்ந்த எங்கள் வாழ்வு, இன்று அரை(றை) இருட்டில், வலைவீச்சிலே(இணையம்) காலம் தள்ளும் படியானதே. வலைவீச்சில் தங்க மீன்கள் சிக்கினாலும், அதற்கு செலவு செய்யவேண்டுமே என்ற எண்ணமே கண்களை மங்க வைக்கிறது.

எங்கு?, எதனால்?, எப்படி ஆரம்பித்தது?, என்னிடம் எப்படி வந்தது? என எனக்கு தெரியவில்லை, கடைசியில் என்னையும் வந்து தாக்கிவிட்டது, இந்த பாழாய் போன பொருளாதார நெருக்கடி. வாரம் முழுதும் வேலை செய்துகொண்டிருந்தேன், இப்போது மூன்று நாள் வேலை,அடுத்த நான்கு நாட்களுக்கு விடுப்புவிட்டு வீட்டு சிறையில் வைக்கின்றனர்.

கைசமையலை மறந்து, கடைகளில் வாசம்பிடித்து மூக்கிற்கும், நாக்கிற்கும் அடிமையாய், சிறுவயதில் கஷ்ட்டப்பட்டு தேற்றிய நெஞ்சினையும் விட அகலம் அதிகமாகி கொண்டிருந்த வயிற்றை பற்றி கவலையில்லாமல் இருந்த என்னை, மீண்டும் எண்ணை வாசம் வீசும் சமையலைறைக்கு கொண்டுவந்து தள்ளியிருக்கிறது இந்த பொருளாதார நெருக்கடி.

சமைப்பது போரல்ல(Bore), சுவாரஸ்யம் தான். ஆனால், நானே சமைத்து, நானே சாப்பிடுவது என்பது பெரும் முரண் எனக்கூறி விட்டுவந்த சமையலறை, விட்டுப்போன கணவன் வீடு வந்ததைக் கண்ட மனைவிபோல், மீண்டும் பாசமாய் ஒட்டிக்கொண்டது. சொந்த சமையலில் ருசிக்கும் குறைவில்லை, அளவும் மிஞ்சவில்லை, ஹும் தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்.

கையில் காசில்லை என்றாலும், காலத்தை விட மனசில்லை. சுதாகரிக்க வேண்டும், உடம்பையாவது காப்பாற்ற வேண்டும். ஆடும் வரை ஆடியாயிற்று. மார்பளவை விட வயிற்றளவு பெரிதாகிப் போனது. சிக்ஸ் பேக்ஸ் (Packs) போய், சிக்ஸ் பேக்ஸ் (Bags) தொங்கும் உடம்பானது. சொகுசு வாழ்க்கையில் உடலை சிதைத்தாயிற்று.

பத்தாண்டிற்கொரு பஞ்சத்தில் வாழ்ந்த என பாட்டன், பூட்டனுக்கு சொல்லாமலே கொடுத்த கொழுப்பை சேமிக்கும் சூச்சமத்தை, பாழாய் போன சந்ததி சரடு(ஜீன்) என்னிடமும் தந்திரமாய் வைத்திருக்கிறது. என் பாட்டன் தான் பஞ்சத்திலே வாழ்ந்தான், பழுத்திருக்கும் காலத்திலும் நாளுக்கிருவேளைக் கஞ்சி என்றால், பஞ்சம் வந்த காலத்தில்? அவனுக்கு தான் கொழுப்பை சேமிக்கவேண்டும்.

நான் என் பாட்டன் – பூட்டன் போல் இல்லையே!., அன்றாடம் மூன்று வேளை உணவு, தனியே எண்ணையில் பொறித்தவையும் கொறிப்பதற்க்கு உணவில் உண்டு. எனக்குத்தான் பஞ்சம் வராதே, எனக்கேன் கொழுப்பை உடலில் சேகரிக்கும் பழக்கம்? என்றிருந்தேன்.

உணவுக்கு வந்தால் தான் பஞ்சமா? இன்று என் பொருள் ஈட்டலுக்கு வந்ததே பஞ்சம்!. படித்ததில் நல்லவைகளை நடைபடுத்தும் நேரமிது. மீண்டும் நான், நானாகும் நேரமிது. போனதைப் பற்றி பேசியும் பலனில்லை, நடப்பதைக் கண்டு புழம்பியும் பலனில்லை. பொன்னான காலம் கனிந்திருக்கிறது, எனக்கே எனக்காக வாரத்தில் நான்கு நாட்களிருக்கின்றன.

என் உடம்பிற்க்கு, என் சூழலுக்கு எது நல்லதோ, எதை என் சந்ததி சரடு (ஜீன்) ஒத்துக்கொள்ளுமோ, அதை மட்டும் நடைமுறை படுத்த வேண்டும். இந்திய உடலுக்கு ஒவ்வாத இந்த மேற்கத்திய உணவு கலாச்சாரத்தை விடுத்து, ”தேவைக்கேத்த உணவு - சரியான நேரத்தில். தேவையான உடலுழைப்பு, மார்பின் சுற்றுளவை விட சிறிய வயிற்றின் சுற்றளவுக்காக” என்பதை தாரகமாக்கி, உடைக்க முடியாத சூச்சம சரடு உடன் ஒன்றி வாழ்க்கையை இனிமையாக்கிட வேண்டும்.

பழுத்த காலத்தில் ஏறிய கொழுப்பை, இயற்கையாய் வந்த உணவு பஞ்ச காலத்தில் கரைத்த என் பாட்டனைப் போல், நம் உடலில் ஏறியிருக்கும் கொழுப்பை, இந்த பொருளாதார நெருக்கடி காலத்தில் கரைத்தால், வந்திட்ட பஞ்சம் கூட ஒருவகையில் வளமே.

.14 comments:

கோவி.கண்ணன் said...

//பழுத்த காலத்தில் ஏறிய கொழுப்பை, இயற்கையாய் வந்த உணவு பஞ்ச காலத்தில் கரைத்த என் பாட்டனைப் போல், நம் உடலில் ஏறியிருக்கும் கொழுப்பை, இந்த பொருளாதார நெருக்கடி காலத்தில் கரைத்தால், வந்திட்ட பஞ்சம் கூட ஒருவகையில் வளமே//

:) கொழுப்பு ஏறிய குண்டர்கள் வேண்டுமானால் அப்படி நினைக்கலாம். நம்ம ஞானசேகர் போன்ற ஆசாமிகள் பாவம் இல்லையா ? அவரு ஏற்கனவே ஒத்த நாடியாக இருக்கார்

நட்புடன் ஜமால் said...

நல்லா சொல்லிக்கீறீங்கோ ...


எல்லாவற்றிலும் ‘நல்லவை’களை தேடல் இதுதான் பெரும் ஆரோக்கியம்

வால்பையன் said...

காலை உணவிற்கு சாப்பாடு ஆக்க வேண்டாம்.
அல்லது பழயது சாப்பிடும் பழக்கமிருந்தால் அதுவும் தயிரும்.
அதைவிட பெட்டர் சில பழங்கள்.

மதியத்திற்கு ஆக்கி கொள்ளுங்கள், சாதம் தான் பெட்டர், குறைந்த செலவில் வயிற்றை நிரப்ப தென் இந்தியன் கண்டுபிடித்தது,

இரவிற்கு சப்பாத்தி அல்லது குக்கரில் செய்த இட்லி, கிரேவி செய்ய கஷ்டமாக இருந்தால் இட்லிபொடி,
ஒருவேளை அங்கே கிடைக்கவில்லையென்றால் சொல்லுங்கள், ரெசிப்பி வாங்கி தருகிறேன்!இரவு வந்தால் பகலும் வரும்,

”இதுவும் கடந்து போகும்” என்ற மந்திரத்தை மனதில் வையுங்கள்!

உங்கள் ராட் மாதவ் said...

உங்கள் தலையில் ஒரு செல்லமாக ஒரு சபாஷ் கொட்டு.
அருமை, அருமை, அருமையான வெளிப்படுத்தல்.
நண்பரே கலங்க வேண்டாம். ஒட்டு மொத்த உலகமே குலுங்கிப்போயிருக்கின்றது.
இந்த வருட இறுதியோடு எல்லாம் சரியாகும் என்று எல்லாரும் நம்புவோம்.

இதுவும் நமக்கு ஒரு பாடமே.

ஆ.ஞானசேகரன் said...

//இப்போது மூன்று நாள் வேலை,அடுத்த நான்கு நாட்களுக்கு விடுப்புவிட்டு வீட்டு சிறையில் வைக்கின்றனர். //


அய்யோ நீங்களுமா?

ஆ.ஞானசேகரன் said...

// கோவி.கண்ணன் said...

//பழுத்த காலத்தில் ஏறிய கொழுப்பை, இயற்கையாய் வந்த உணவு பஞ்ச காலத்தில் கரைத்த என் பாட்டனைப் போல், நம் உடலில் ஏறியிருக்கும் கொழுப்பை, இந்த பொருளாதார நெருக்கடி காலத்தில் கரைத்தால், வந்திட்ட பஞ்சம் கூட ஒருவகையில் வளமே//

:) கொழுப்பு ஏறிய குண்டர்கள் வேண்டுமானால் அப்படி நினைக்கலாம். நம்ம ஞானசேகர் போன்ற ஆசாமிகள் பாவம் இல்லையா ? அவரு ஏற்கனவே ஒத்த நாடியாக இருக்கார்//

அங்க இங்க போயி கடைசில நம்மல கடையில வச்சி புட்டீங்க சார்....

அப்பாவி முரு said...

நன்றி அண்ணன்ஸ்...

வாலை சிங்கை கூப்பிட்டு வந்து ஒருவாரம் வச்சு(சமைக்கச் சொல்லி) அழகு பார்க்கலாம் போலிருக்கே,,,,

சி தயாளன் said...

//கடையிலிருக்கும் பெண்களையும் தாண்டி, அவர்கள் தரும் அதிரடி விலைக்குறைப்புகள் சுண்டி இழுக்கின்றன
//

இஞ்ச தான் நான் வித்தியாசப்படுகிறேன். அவர்களுடன் போய் கடலை போட்டு, இல்லாத உடை அளவை கேட்டு அவர்களை மேன்மேலும் தேட வைத்து மேன்மேலும் அவர்களுடன் கடலை போட்டு விட்டு, அந்த அளவு கிடைத்தால் மீண்டும் நாளை வருவதாக கூறி விட்டு கழன்று விடுவேன்...:-))))))

சி தயாளன் said...

ஞானசேகரனை கோவியார் வாரியதில் நுண்ணரசியல் இருக்கு போல தெரியுது...:-)

பீர் | Peer said...

என்னைப் பொருத்தவரை சமைப்பது போரல்ல(bore) அது ஒரு போர் (war).
மற்றபடி சுவைக்கு குறைவில்லை, ஆனால் ஒற்றை ஆளுக்காய் சமைப்பதால் ஒரு நாளில் கூட அளவோடு சமைத்ததில்லை.

வேடிக்கை மனிதன் said...
This comment has been removed by the author.
வேடிக்கை மனிதன் said...

//பழுத்த காலத்தில் ஏறிய கொழுப்பை, இயற்கையாய் வந்த உணவு பஞ்ச காலத்தில் கரைத்த என் பாட்டனைப் போல், நம் உடலில் ஏறியிருக்கும் கொழுப்பை, இந்த பொருளாதார நெருக்கடி காலத்தில் கரைத்தால், வந்திட்ட பஞ்சம் கூட ஒருவகையில் வளமே.//

அண்ணே உங்களுக்கு ரொம்ப தான். நீங்களாக வாயை கட்டியோ அல்லது உடற்பயிற்சி செய்து கொளுப்பை குறைக்க மாட்டிங்க, பஞ்சம் வந்துதான் கொழுப்பை குறைகனும்னு நினைக்கிறீங்களே அடடா .........

அப்பாவி முரு said...

’டொன்’ லீ said...


இஞ்ச தான் நான் வித்தியாசப்படுகிறேன். அவர்களுடன் போய் கடலை போட்டு, இல்லாத உடை அளவை கேட்டு அவர்களை மேன்மேலும் தேட வைத்து மேன்மேலும் அவர்களுடன் கடலை போட்டு விட்டு, அந்த அளவு கிடைத்தால் மீண்டும் நாளை வருவதாக கூறி விட்டு கழன்று விடுவேன்...:-))))))//

ஊரிலிருந்து திரும்பியவுடன் லீ-யிடம் தனி பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

**********************************

பீர் | Peer said...
என்னைப் பொருத்தவரை சமைப்பது போரல்ல(bore) அது ஒரு போர் (war).
மற்றபடி சுவைக்கு குறைவில்லை, ஆனால் ஒற்றை ஆளுக்காய் சமைப்பதால் ஒரு நாளில் கூட அளவோடு சமைத்ததில்லை.

பேச்சிலர் வாழ்கையில் இதெல்லாம் ஜகஜம் தான் நண்பரே!!

*******************************


வேடிக்கை மனிதன் said... //

சொல்றதெல்லாம் இருக்கட்டும், ஏன் எல்லா இடுகையின் பின்னூட்டத்திலும் கமெண்ட் போட்டு அழிக்கிறீர்?

நீங்களே போடுவீங்க...

அடுத்து நீங்களே அழிப்பீங்களா?

அடடே...
(எப்பிடி நம்ம பதிலு?)

Rajeswari said...

வால்பையன் said... //இரவு வந்தால் பகலும் வரும்,

”இதுவும் கடந்து போகும்” என்ற மந்திரத்தை மனதில் வையுங்கள்!//

நான் சொல்ல நினைப்பதுவும் அதுவே..

Post a Comment

உடுக்கை இழந்தவன் கைபோல், ஆங்கே
இடுக்கைக்கு பின்னூட்டுவதாம் பண்பு.

- புதுக்குறள்.

 
©2009 அப்பாவி | by TNB