இப்ப மெரட்டு பார்க்கலாம்.

மிகச்சமீபத்தில் ஆறுமாதங்களுக்கு முன் சொந்த ஊருக்குப் போயிருந்த போது நடந்த ஒரு சுவையான நிகழ்ச்சி இது.

அவர் வேணு மாமா. எனது வீட்டின் சுற்றிலும் அவர்தம் சொந்தங்களோடு வசித்து வருபவர். என் முன்னோர் என்பது வருடங்களுக்கு முன் அவர்களுக்கு சொந்தமான ஒரு வீட்டை விலைக்கு வாங்கி குடியிருந்து வருகிறோம், எண்பது வருடங்களாக. இரத்த சொந்தமில்லை, அனால் குடும்ப அளவில் உறவு முறை சொல்லி பழகும் அளவுக்கு நெருக்கம்.

சின்ன வயதில் தெருவளவுக்கு நானொரு சண்டியர். அம்மாவால் அடித்தோ, மிரட்டியோ, கொஞ்சியோ பணியவைக்க முடியாது. அதென்னமோ அம்மாவின் மிரட்டல்கள் எல்லாம் பாடல்களாவும், அடிகளெல்லாம் உடம்பை இதமாக பிடித்து விட்டது போலவே இருக்கும்.

சாதாரணமாகவே எட்டடி பாயும் புலிக்குட்டி, பாட்டும் – மிதமான பிடித்துவிடுதலும் நடந்தால் பதினாறடியை மிகச் சாதாரணமாகத் தாவிக்காட்டுமே, அதுதான் நான். அம்மாதிரியான சூழ்நிலையின் எனதம்மாவுக்கு உதவுவது வேணுமாமா தான்.



அவரின் வீட்டு வாசலில் தச்சுவேலை பார்த்துக் கொண்டிருக்கும் வேணுமாமாவிடம் என்னைத்தூக்கிக் கொண்டு போய் பஞ்சாயத்தை அம்மா ஆரம்பித்ததும், அவர் செய்து கொண்டிருக்கும் வேலையை போட்டுவிட்டு என்னை அப்படியே அள்ளிக் கொள்வார்.

பாசத்தாலல்ல, பயங்காட்ட. முதலில் அவரின் வைத்தியம் ஆட்காட்டி விரலை கத்திபோல் நீட்டி, “வயித்தைக் காட்டு குடலை எடுக்குறேன்” என ஆரம்பிப்பார். நான் ஓடி அம்மாவின் பின் ஒளிந்தாலும் விடாமல் துரத்தி, தூக்கி மீண்டும் மிரட்டி “சொன்ன பேச்சை கேக்குறயா? இல்லை குடலை எடுக்கட்டா?” என மிரட்டுவார். ஆனாலும் நான் உடலை முறுக்கி அவரிடமிருந்து தப்பிக்கத்தான் பார்ப்பேனே ஒழிந்து ”சொன்ன பேச்சை கேட்கிறேன்” என ஒப்புதல் வாக்குமூலம் மட்டும் தரமாட்டேன்.

அடுத்ததாக, அப்படியே தூக்கி குட்டையான அவரின் வீட்டு ஓட்டின் மேல் உட்கார வைத்துவிடுவார். ஐந்தடி உயரமேயானாலும் அந்த வயதை பயங்கொள்ள வைக்க அது போதுமே. அதனால பயத்தால் வாயில் அழுகையும், கண்ணில் நீர் எட்டிப்பார்க்கும் போதும் அவரின் கேள்வியும், எனது பதிலும் சப்பாணியைப் போலவே இருக்குமே தவிர “சொன்ன பேச்சை கேக்குறேன்” என தோல்வியை அடையமாட்டேனாக்கும்.

இது அவரின் தன்மானத்திற்கும் அந்த தெருவிலிருக்கும் அத்தனை குழந்தைகளை அவர்களின் அம்மாக்களுக்காக ”ஒட்டு மொத்தமான பூச்சாண்டி காட்டும் கௌரவ”த்திற்கும் இழுக்காக மாறிவிடும் போல இருப்பதால் தனது பிரம்மாஸ்திரத்தை எடுக்க எத்தனிப்பார். அது.,

வீட்டின் வடக்குப்புறமிருக்கும் இருபதடி ஆழமிருக்கும் தண்ணியில்லாத மொட்டைக்கேணிக்கு தூக்கிச் சென்று அவரின் இடுப்புயர கைப்பிடிக்கும் உள்ளே, கேணிக்குள் என்னை நீட்டி “இப்ப சொல், சொன்ன பேச்சை கேக்குறயா? இல்லையா?” என மிரட்டிக் கேட்ப்பார். அழுகையோடு, பயம் உச்சத்தை எட்டுவதால் கையை, காலை உதறி அழுது கண்ணீர் விட்டாலும் வாயிலிருந்து ”கேக்குறேன்” என்ற வார்த்தை மட்டும் வராது. ஆனாலும் அவரும் விடமாட்டார். அப்படியே வளைந்து கேணிக்குள் என்னை இறக்கி ”இப்ப என்ன சொல்ற?” எனக் கேப்பார். கண்ணுக்கு அவரைத் தவிர ஆகாசம் மட்டும் கொஞ்சமாய் தெரியும் கொடூர சூழல் அது. என்ன உதறினாலும், அழுதாலும் சரி விடமாட்டார். வானமே பாதியாகிப் போச்சு மானத்துக்கென்ன, ”சரி, அம்மா சொல்றதைக் கேக்குறேன்” என தனியே தோல்வியை ஒப்புக்கொண்டதும் தான் வெளியே எடுப்பார். உள்ளே போகும் போது ரெண்டு மூன்றாக இருக்கும் தலைகணக்கு வெளியே வரும் போது பத்து இருவதாகியிருக்கும். ஆனாலும், துக்கியபடியே எல்லோர் முன்னாலும் மீண்டும் ” அம்மா சொல்றதைக் கேக்குறேன்” எனச் சொன்னதும் தான் இறக்கி தரையில் விடுவார். அவமானமாக இருக்கும்.

ஒரு முறை வேணு மாமாவை வைத்து என்னை மிரட்டியதற்காக மூன்று மணி நேரம் தேம்பித் தேம்பி அழுததும், பின்னர் அப்பா வந்து ஆறுதல் + வடை, பஜ்ஜி வாங்கித்தந்த பின்னரே சமாதானம் ஆனதும் இன்னும் நினைவில் உள்ளது.

இப்பிடியாக ஆறாத வடுவுடனிருக்கும் அடிபட்ட புலி ஊருக்குப் போயிருந்த போது ஒருநாள், அதே வேணு மாமா அவரின் வீட்டுமுன் தச்சு வேலை பார்த்துக் கொண்டிருந்தார். வேண்டுமெனவே செருப்பு சர சரக்க நடந்து போய் அவரின் முன் நின்றுகொண்டு, “சின்ன வயசுல என்னய எப்பிடியெல்லாம் மிரட்டுன. எங்க இப்ப மெரட்டு பார்க்கலாம். எங்க தூக்கி ஓட்டுமேல வையி பாக்கலாம். கேணியும் இன்னும் மூடம தான் இருக்கு தூக்கி கேணியில போடு பார்க்கலாம். வா மாமா. என்னைய மெரட்டு பாக்கலாம்” என அவரின் கையைப் பிடித்து வேலைசெய்ய விடாமல் செய்யவும். “வம்பிழுக்காத மாப்புள, வேலை செய்யவிடு. அர்ஜண்டு வேலை” என் கூறியவரை நான் விடவே இல்லை. “அதெல்லாம் முடியாது. என்னைய பயங்காட்டு, நீதான் பயங்கரமா மெரட்டுவேல. என்னை இன்னைக்கு மெரட்டு பாப்போம்” என தொடர்ந்து வம்பிழுக்கவும், அவர் எனது சத்தமாக என் அக்காவின் பேரைச் சொல்லி கூப்பிடவும், வீட்டிலிருந்து அக்காவும், அம்மாவும் வந்து சேர்ந்தனர். அம்மா, “என்ன பண்ணிக்கிட்டு இருக்க நீ?” எனக்கேட்ட அம்மாவுக்கு பதில் சொல்லாமல்., அக்கா பக்கமாக திரும்பி, “சின்ன வயசுல நம்மயெல்லாம் மெரட்டுவார்ல, எங்க இப்ப என்னை மெரட்டச் சொல்லு பார்க்கலாம்” என அதே பல்லவியை நான் ஆரப்பிக்கவும், அக்கா எனக்கு சாதகமானார்.

இப்போ வேணு மாமா நிலைமை மிகுந்த மோசமானது. என் அம்மா சிரித்துக் கொண்டே ”டேய்., விடுடா பாவம் வேலை செய்யட்டும்” என்ற போதும் நான் அவரின் கைகளை விடவில்லை. அதே நேரத்தில் வேணுமாமாவின் மனைவியும் வெளியே வந்து நடக்கும் கூத்தை பார்த்து சிரிக்கலானார்களே ஒழிய அவரை விடச்சொல்லவில்லை. அய்யோ பாவம்.

எனக்கே சிரிப்பு தாளாமல் “ஏய் மாமா ஊருல இருந்து வந்திருக்கும் உம்மக வந்து, உன்னைய விடச் சொல்லட்டும் நான் விடுறேன்” எனச் சொல்லவும் அவரின் மனைவி அவர்களின் மகளை வெளியே அழைத்தார்கள். தன்னப்பனின் போதாத காலத்தை கண்ட அவரின் மகள், “ஏய் முருகா எங்கப்பாவை விடு” என உரிமையோடு பேரைச் சொல்லி விடச்சொன்ன போது, மனதுக்குள் எழுந்த எண்ண அலைகளால் எத்துனை இன்பம். ம்ம்ம்ம்கும்., கல்யாணம் ஆகி இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாகியிருந்தாலும் மாமன் மகள்களின் குரல்களுக்கென ஒரு இனிமை உண்டு.

இதற்கும் மேல் சொல்ல ஒன்னுமில்லை.... அதனால் எல்லாரும் வீட்டுக்குப் போகலாம்...

21 comments:

Raju said...

தோல்வி....!

வரதராஜலு .பூ said...

:))

Rajeswari said...

ம்..கலிகாலம்!!

வால்பையன் said...

இதுக்கு மேல சொல்லாட்டி தான் சிக்கல்!
ஆ ளா ளுக்கு ஒரு கத எழுதுவா(னு)ங்க!

vasu balaji said...

இவ்வளவு அழிம்பு வெச்சிகிட்டு அப்பாவின்னு தானே போட்டுகிட்டாதான் உண்டு. நடக்கட்டு:))..

cheena (சீனா) said...

அன்பின் முரு
80 ஆண்டுகளாக ரத்தசொந்தமில்லாத போதும் - இரண்டு குழந்தைக்கு அம்மாவான - மாமன் மகள் எலே முருகா - விடுடா ன்னு சொன்னா காதிலே தேன் வந்து பாஞ்சுதோ - ம்ம் அதான் உறவு

நல்லாருக்கு கத - நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா

அப்பாவி முரு said...

♠ ராஜு ♠ said...
தோல்வி....!

ஆமாம் தோல்விதான்.

*************************************

//வரதராஜலு .பூ said...
:))/

:)
:)

*********************************


//Rajeswari said...
ம்..கலிகாலம்!!//


ஹி ஹி...

*********************************


//வால்பையன் said...
இதுக்கு மேல சொல்லாட்டி தான் சிக்கல்!
ஆ ளா ளுக்கு ஒரு கத எழுதுவா(னு)ங்க!//

இல்லைண்ணே., நம்மாளுங்க எல்லாம் அப்பிடிப் பட்ட ஆளுக இல்லைண்ணா....

************************************

//வானம்பாடிகள் said...
இவ்வளவு அழிம்பு வெச்சிகிட்டு அப்பாவின்னு தானே போட்டுகிட்டாதான் உண்டு. நடக்கட்டு:))..//

அதான் அப்பாவி
:)

********************************


//cheena (சீனா) said...
அன்பின் முரு
80 ஆண்டுகளாக ரத்தசொந்தமில்லாத போதும் - இரண்டு குழந்தைக்கு அம்மாவான - மாமன் மகள் எலே முருகா - விடுடா ன்னு சொன்னா காதிலே தேன் வந்து பாஞ்சுதோ - ம்ம் அதான் உறவு//

ஆமாம் ஐய்யா...

நிஜமா நல்லவன் said...

:))

ISR Selvakumar said...

அசத்துறீங்க முருகன்.

தத்துபித்து said...

நாட்டுல _______தொல்லை தாங்க முடியலடா சாமி ..

பித்தனின் வாக்கு said...

இப்பத்தான் இப்படின்னு நினைத்தேன் ஆனா எப்பவுமே இப்படித்தானா? சரி சரி.

பதிவ வீட படம்தான் டாப்பு. சூப்பர் செலக்ஷன். நல்லாயிருக்கு.

வேடிக்கை மனிதன் said...

எண்ணமோ போங்க, எப்படி பதிவு எழுதுன நீங்க இப்படி அயிட்டிங்க. பதிவுல மங்கி மதிரி இருக்கும் அந்த அங்கில் போட்டோ தான் நல்லா இருக்கு.

கோவி.கண்ணன் said...

//“சின்ன வயசுல நம்மயெல்லாம் மெரட்டுவார்ல, எங்க இப்ப என்னை மெரட்டச் சொல்லு பார்க்கலாம்”//

:)

நான் சிறுவனாக இருந்த போது எங்க வீட்டுக்கு பக்கத்துவீட்டில் இருக்கும் ஒரு பெண் மணி 'மாப்ளே....' ன்னு தான் கூப்பிடுவார், அவருக்கு என்னைவிட இளைய வயது மகளும், இரு மகன்களும் இருந்தனர்.

நான் பெரியவனாகி, வேலைக்குச் சென்ற பிறகு, அவர் மகளுக்கே திருமணம் ஆகி நாட்கள் ஓடி யிருந்தது, ஒரு முறை ஊருக்குச் சென்ற போது எதிரே பார்த்த போது நலம் விசாரித்தார். 'என்ன அன்பு அம்மா.....இப்பெல்லாம் தம்பி தம்பீங்கிறிங்க என்னை மாப்பிளே... ன்னு கூப்பிட மாட்டேன்கிறீர்களே...' என்றேன்.

'அப்ப நீங்க சின்னப் புள்ள...இப்ப அப்படி கூப்பிட முடியாதே' என்று சிரித்துக் கொண்டே சொன்னார்

வயதானால், வளர்ந்தால் அந்நியம் ஆகிப் போய்விடுகிறோம்

அப்பாவி முரு said...

//r.selvakkumar said...
அசத்துறீங்க முருகன்.//

நன்றிண்ணா.,

************************************
//தத்துபித்து said... //

என்ன சார் அடி வேணுமா???

************************************

பித்தனின் வாக்கு said...
இப்பத்தான் இப்படின்னு நினைத்தேன் ஆனா எப்பவுமே இப்படித்தானா? சரி சரி.

பதிவ வீட படம்தான் டாப்பு. சூப்பர் செலக்ஷன். நல்லாயிருக்கு.//

ஓ, படமா?

பூச்சாண்டின்னு தலைப்பிட்டு கூகுள் இமேஜில் தேடிய போது நாலாம் பக்கத்தில் இருந்த இந்தபடம் என்னையையும் வெகுவாக கவர்ந்தது.

அப்பாவி முரு said...

//கோவி.கண்ணன் said...

'அப்ப நீங்க சின்னப் புள்ள...இப்ப அப்படி கூப்பிட முடியாதே' என்று சிரித்துக் கொண்டே சொன்னார்

வயதானால், வளர்ந்தால் அந்நியம் ஆகிப் போய்விடுகிறோம்//

ஆமாங்க கோவிஜி...

இப்ப நான் கூட உங்களை மாப்பிள்ளைன்னு கூப்பிட முடியாது... ஏன்னா, உங்களுக்கு வயசாகிடுச்சு...

இஃகிஃகிஃகிஃகி....

ஜோசப் பால்ராஜ் said...

வேணு மாமா ஊர்ல இருந்து உங்க பொண்ணு வந்துருக்கே கூப்புடுங்க நானு பார்கனும்னு சொன்னா மாமா கூப்புட்டுருக்க போறாரு. அதுக்கு போயி என்னென்னா டகால்டி வேலையெல்லாம் செஞ்சுருக்கீரு நீரு , என்னக் கொடுமை சாமி இது.

பெசொவி said...

எனக்கும் இதுபோல் நடந்திருக்கு. குளத்துக்கு செல்லுபோது ஒருவர் என்னை ரொம்ப மிரட்டுவார். பின்னாளில் அவர் மகன் அதே குளத்துக்கு அவரோடு வரும்போது அவர் மகனை மிரட்டுவேன், அப்போது அவரிடம் "என்னை சின்ன வயசில எவ்ளோ மிரட்டிநீங்க, ...) என்பேன், அவர் சிரிப்பார். அவரே பின்னாளில் "உன்னை மாதிரி உருப்படற வழியை என் பையனுக்கு சொல்லிக் குடுடா..." என்று சொல்லும்படி வளர்ந்ததற்கு இம்மாதிரி ரத்த சம்பந்தம் இல்லாத பெரியவர்களின் உதவியும் ஒரு காரணமோ?

hayyram said...

///மிகச்சமீபத்தில் ஆறுமாதங்களுக்கு முன்/// நீங்க என்ன சின்ன டோண்டுவா

priyamudanprabu said...

சின்ன வயதில் தெருவளவுக்கு நானொரு சண்டியர்.


ஹ ஹாஅ

priyamudanprabu said...

மனதுக்குள் எழுந்த எண்ண அலைகளால் எத்துனை இன்பம். ம்ம்ம்ம்கும்., கல்யாணம் ஆகி இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாகியிருந்தாலும் மாமன் மகள்களின் குரல்களுக்கென ஒரு இனிமை உண்டு.
/.......


ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

பழமைபேசி said...

நவ 30க்கு பின்னாடி ஒன்னுமே இல்லையா? அவ்வ்வ்... பேசுறதுக்கே நேரம் போறாது... அப்பறம் எங்க இடுகை போடுறது? இஃகி! வாழ்த்துகள்!!

Post a Comment

உடுக்கை இழந்தவன் கைபோல், ஆங்கே
இடுக்கைக்கு பின்னூட்டுவதாம் பண்பு.

- புதுக்குறள்.

 
©2009 அப்பாவி | by TNB