Saturday,Feb28,
இந்தியர்களின் புத்திசாலிதனம், இந்தியர்களுக்கு பயன்படாதா?
Thursday,Feb26,
ஏனிந்த முட்டாள்தனம்?
கல்தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தகுடி, சங்கம் வைத்து தமிழை வளர்த்த குடி, இன்று தமிழை வளர்த்த அரசர்களையும், அவர்கள் ஆசையாய் வைத்த ஊர் பெயர்களையும், இன்றய அரசாவணங்களில் நாம் வைத்திருக்கும் நிலையை பாரீர்.
வெள்ளைக்காரன் வரவில்லை என்பதர்க்காக வைத்தியிராப்பை - வார்ட்ராப் (Watrap) என்றான். ஆனால் வெள்ளையன் வெளியேறி அரைநூற்றாண்டுகளுக்குப் பின்னும் நாம் சோழனை - சோழா என்றும், தூத்துக்குடியை - டுடிகொரின் என்றும் அழைக்கலாமா? சிந்திப்பீர். அரசு(சை) மாற்றுவதர்க்கு முன் நாம் மாறுவோம் வாருங்கள்!
சில உதாரணங்கள்,
சோழன் - Chola
சேரன் - Chera
பாண்டியன் - Pandiya
தூத்துக்குடி- Tuticorin
வத்தியிராப்பு- Watrap
வத்தலகுண்டு- Bathalakundu
சேலம்- Salem
திண்டுக்கல் - Dindigul
பாண்டிசேரி - Pondy
சேப்பாக்கம் - Chepauk
எழும்பூர் - Egmore
சேத்துப்பட்டு - Chetput
திருவல்லிகேணி - Triplicane
ஆரணி - Arni
கிண்டி - Guindy
கீழ்பாக்கம் - Kilpauk
ஏற்காடு - yercaud
சீர்காழி - Sirkali
குற்றாலம் - Courtallam
சிவகங்கை - Sivaganga
தக்களை - Thuckalay
பின்குறிப்பு:-
மற்றவையெல்லாம் இருக்கட்டும், இந்த சேலத்தை ஏன் சலெம்(Salem) என்றழைக்கிறார்கள்? யாருக்காவது தெரியுமா?
Friday,Feb20,
ஓட்டு போடுவீங்களா?, மாட்டீங்களா? இதில் ஒட்டுப்போடுங்க!
இலங்கைப் பிரச்சனையில் தலையிடுவதும், யுத்தகளத்தில் சிக்கியுள்ள அப்பாவி தமிழரைக் காப்பாற்றுவதும் பற்றிய முடிவுகளை மாநில அரசு எடுக்கமுடியாது, மத்திய அரசு மட்டுமே எடுக்கமுடியும் என்று, மத்திய அரசின் தொங்குசதைகள் அறிவித்திருந்த நிலையில், பாராளுமன்றத்தில் “இலங்கை அரசை நாம் நிர்பந்திக்க முடியாது. அது எளிதான காரியம் அல்ல” என, பிரணாப் முகர்ஜி மிகத்தெளிவாக கைகளை சோப்பு போட்டு கழுவிய அன்றே, ”நேபாளத்தில் அமைதியான சூழ்நிலை ஏற்படத்தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா வழங்கும்” என நேபாளத்தில், இந்திய வெளியுறவுச்செயலர் சிவசங்கர் மேனன் அறிவித்ததைப் பார்த்தும் எதுவும் சொல்லாத நம் தமிழக அரசியல்வாதிகள்(கட்சி, கொள்கை வித்யாசமில்லாமல்) அனைவரும், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் ஓட்டு(பிச்சை) கேட்டு, உங்கள் வீடுதேடி வரும்போது, இலங்கை தமிழர் பிரச்சனையில் உதவாதது மட்டுமின்றி, அதைப்பற்றி பேசுவோர் மீது தே. பா சட்டம் பாயும் என்று அறிவித்து செயல்படுத்துபவர்களையும், இலங்கை இருக்க இஸ்ரேலுக்கு கண்டனம் தெரிவித்தவர்களையும் என்ன செய்யப் போகிறீர்கள்?
இலங்கை பிரச்சனையில் உதவாதவர்கள், நாடாளுமன்ற தேர்தலில் நின்று ஓட்டு கேட்டால்?
1) ஏதாவது ஒரு கொள்ளிக்கு ஓட்டுப் போடுவேன்.
2) ஓட்டுப் போடபோகாமல் வீட்டிலேயே இருப்பேன்,
3) போட்டியிடும் யாரையும் தேர்ந்தெடுக்க விருப்பமில்லை என 49 O -விற்க்கு ஓட்டுப் போடுவேன்.
ஏதாவது ஒரு கொள்ளிக்கு ஓட்டுப் போடுவேன்.
கரண்ட்டே இல்லையானாலும், கலர் டி.வி., கொடுத்ததின் நன்றிக் கடனாக, அல்லது, தாத்தா தான் இவ்வளோ கொடுத்தாரு, அடுத்து ஆத்தாவை தேர்ந்தெடுத்தால் நிறைய கிடைக்கும் என்ற ஆசையிலோ ஏதாவது ஒரு கொள்ளிக்கு ஓட்டுப் போடுவேன்.
ஓட்டுப் போடபோகாமல் வீட்டிலேயே இருப்பேன்,
வேலை நிமித்தம் வெளிநாட்டிலோ, வெளியூரிலோ இருக்கிறேன் என்று சொல்லியோ, கிடைத்த ஒருநாள் விடுமுறையை கறியை வதக்கி திண்பதற்க்கு செலவழிப்பதற்க்காகவோ, தேர்தல் அன்று வன்முறை நடக்க வாய்புள்ளது என்று வானிலை அறிக்கையை படித்து பயப்பட்டதால் ஓட்டுப் போடபோகாமல் வீட்டிலேயே இருப்பேன்.
போட்டியிடும் யாரையும் தேர்ந்தெடுக்க விருப்பமில்லை என 49 O -விற்க்கு ஓட்டுப் போடுவேன்.
இலங்கைக்கும் – இந்தியாவிற்க்கும் இன்றய நிலையில் அரசியலில் என்ன உறவு?, எந்த வகையில் தொடர்பு? என்று தெளிவாகத் தெரிவிக்காத்தாலும், இலங்கைக்கு சென்றுவரும் தூதுவர் விமான நிலையத்தில் கொல்லைவாசல் வழியே தில்லி செல்வதன் மர்மம் புரியாத்தாலும், ஜனநாயகத்தில் எனது கடைசி மற்றும் முழு எதிர்ப்பைக் காட்ட தேர்தலில், போட்டியிடும் யாரையும் தேர்ந்தெடுக்க விருப்பமில்லை என 49 O -விற்க்கு ஓட்டுப் போடுவேன்.
உங்கள் மனதிற்க்கு சரியென்று பட்டதிற்க்கு வாக்களியுங்கள்.
உதவி வேண்டுவோர்க்கு உதவ, நியாயத்திற்க்கு வாக்களியுங்கள்.
எனது ப்ளாக்கில் வலது மேல் மூலையில் வைக்கப்பட்டிடுக்கும் கருத்துகணிப்பில் உங்கள் கருத்தினை பதிவிடுக! நியாத்திற்க்கு வலுசேருங்கள்!
Thursday,Feb19,
கை விலங்கு!?
(இந்த பதிவின் முதல் பாகத்தை http://abbaavi.blogspot.com/2009/02/blog-post_18.html -இல் படித்துவிட்டு தொடரவும்)
ஷ்… அப்பா இப்பவே கண்ணைக்கட்டுதே., ஏற்கனவே நம்மமேல பொகைஞ்சிட்டிருக்குறதுல கொஞ்சம் நெருப்பள்ளிப் போட்டுட்டு போறாரே மாமா என்ற கடுப்பிலும், மூணுபேத்துக்கு கத்திகுத்துண்ணாரே யாராயிருக்கும்? இப்ப எப்பிடி இருக்காணுங்களோ என்ற கவலையில் தூக்கம் வந்தும், வராமலும் புரண்டு படுத்தே விடியவைத்தாயிற்று.
காலை ஆறுமணிக்கில்லாம் கொல்லைக்குப் போவத்ற்க்காக சட்டை போடுவதைப் பார்த்து, ”எதுக்குடா வெளிய போற? உள்ளயே போகவேண்டியது தானே”, என்று கேட்ட அம்மாவிடம், “நம்ம காட்டுக்குத்தான் போறேன், இங்கிட்டுல்லாம் பிரச்சனையிருக்காது” எனக்கூறிய எனக்குத் தெரியாமலே விதி(சனி) என்னோடு விளையாட ஆரம்பித்தது.
வீட்டுல இருந்து வெளியே வந்து பார்த்தால், தெருமுக்கிலும் யாரும் இல்லை, டீக்கடையும் இல்லை. ”என்னடா இது, யாருகிட்டயாவது நிலவரத்தை கேக்கணும்னா ஒருத்தனையும் காணோம், ஆங்… எங்க இருந்தாலும் காலையில கொல்லைக்கு காட்டுக்குத்தான வரணும், அங்க வர்ரவன்கிட்ட கேட்டுக்கல்லாம்” என மனதுக்குள் நினைத்துக்கொண்டு ஊர் பாதையில் நடந்து வருகயில், மருந்து கம்பெனி வாசலில் ஒரு பொலீஸ்வேனின் பின்கதவு திறந்த நிலையில், உள்ளே இரண்டு பேர் கலர் சட்டை – காக்கி பேண்ட் போட்டு இருக்கையின் இருபுறமும் அமர்ந்திருந்தனர்.
“தம்பி, இங்க வாப்பா” என அன்யூனிபார்ம் பொலீஸ் என்னை சாஃப்ட்டாக கூப்பிட்டாலும், ”ஆஹா, வலைய விரிக்கிறாங்க, வாயக்குடுக்காம தப்பிக்கணும்” என்பதுபோல், யாரபத்தி கேட்டலும் தெரியாது, தெரியாதுண்னு சொல்லிட்டு வந்திடணும் என மனதுக்குள் நினைத்துக் கொண்டு வேன் பக்கத்தில் போனதும், அடுத்த போலீஸ் தடித்த குரலில் “வேன்ல ஏறுடா” என்றதும் குப்பென வியர்த்துவிட்டது.
“என்னய ஏன் சார் ஏறசொல்றீங்க, நான் டீசனுக்குப் போகணும்” என்று புளுகியதும், “டியுசனா? எத்திணாவது படிக்கிற?” எனக் கேட்ட சாஃப்ட் போலீசிடம், “பதிணொண்ணாவது எழுதியிருக்கேன், பண்ணெண்டாவதுக்கு டியுசன் போய்கிட்டு இருக்கேன்” என்றதும், ”டோய், ஊருக்குள்ள கலவரமாயிருக்கு, இன்னும் நாழு நாளைக்கு டியூசனுக்கெல்லாம் போகவேண்ட்டாம், ஒழுங்கா வீட்டுக்குப் போ, ஓடுரா” இது ரஃப் போலீஸ். அதுக்கு மேல நான் ஏன் அங்க நிக்கப் போறேன்.
மொத போணி மிஸ்ஸான கடுப்புல நம்ம ஸ்காட்லண்ட் யார்டு அந்த பக்கம் கக்காவுக்கு வந்த எல்லாரையும் வேன்ல ஏத்திட்டாங்க. அதுல எட்டாவதுல பெயிலானதால சேர் கம்பெனிக்கு வேலைக்கி போயிட்டு இருந்த மாப்பிள்ளை சுந்தரேசனும் மாட்டிகிட்டான். மாட்டுனவன் என்னா அழுதாலும் சரி, எனக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்லையின்னு சொன்னாலும் சரி நம்ம ஸ்காட்லாண்ட் யார்டு வெளிய விடலயே, புல்லாயிட்டதால வண்டி கெளம்பிருச்சு .
வண்டியில இருந்த சுந்தரேசன் சும்மா இல்லாம, வழியில போன அவுங்கப்பாவைப் பார்த்து அழுதுகிட்டே கையைகாட்டவும், அவரு ஓடிவந்து வண்டியை மறிச்சு, “ஏன் சார் எம்மகனை கூட்டிகிட்டு போறீங்க” என்றவரை “மகனா? அதெல்லாம் சொல்லாத நீயும் ஏறு” –ன்னு அதட்டி கூட்டிட்டுப் போயி எல்லார் மேலயும் கலவரம் செஞ்சதா கேஸப் போட்டு, கோர்ட்ல ஆஜர் பண்ணி, கேள்வியே கேக்காம ரிமாண்டுல மதுரை ஜெயிலுல போட்டுடாங்க.
ரிமாண்டு முடிஞ்சு திண்டுக்கல் கோர்ட்க்கு, மதுரையில இருந்து வர்ரப்ப சுந்தரேசனுக்கும், அவுங்கப்பாவுக்கும் ஒரே கைவிலங்கு. திண்டுக்கல் பஸ்ஸாண்டுல இருந்து கோர்ட்க்கு போறவழியில தெரிஞ்சவுங்க யாராவது பாத்து, “யோவ், என்னய்யா மகன்கூட விலங்குமாட்டி கோர்ட்க்குப் போற, ஏதாவது கொலக்கேசா?” என்று கேட்டால் போச்சு, சுந்தரேசனின் அப்பா, சுந்தரேசனைப் பார்த்து “#@$%% ^&*^^$$ @$$%% ##$%^%&^ $#%$^^%(கெட்ட, கெட்ட வார்த்தையால் வாயிலேயே வயலின்), நீ மாட்டுனா, நீ பாட்டுக்கப் போகவேண்டியது தான்டா, ரோட்டுல போன என்னய கூப்பிட்டு என்னயையும் சேத்து மாட்டிவிட்டுடயே, இப்ப எல்லாரு என்ன கேக்குராய்ங்க பாரு” (ஒரு கையில் விலங்கிருப்பதால் அடிக்க முடியவில்லை).
இது மாதிரி மூன்று முறை மதுரைக்கும், திண்டுக்கலுக்கும் கைவிலங்கோடு அலைந்தப்பின், பெயிலுக்கு போட்டால் கிடைத்தது கண்டிஷன் பெயில், “கோயமுத்தூர் போலீஸ் ஸ்டேசனில் காலை பத்து மணிக்கும், மாலை ஆறு மணிக்கு இருவரும் ஒரு மாசம் கைழுத்து போடவேண்டும்”. (என்ன கொடுமை சார்?). வீட்டுல கூலி வேலை பாத்து சம்பாரிக்கிற ரெண்டு பேருமே செய்யாத ஒன்னுக்காக மாட்டி, நாப்பதஞ்சு நாள் ஜெயிலுல இருந்தது மட்டுமில்லாம, கண்டிஷன் பெயிலுக்காக கோயமுத்தூர்ல ரூம் மாதவாடகைக்கு எடுத்து வேலையேதும் செய்ய முடியாம, அந்த (ரிசர்வ் பேங்க் கவர்னர்)கையெழுத்தைப் போட்டு, ஒரு மாசம் கழிச்சு நார்மல் பெயில் கெடைச்சு, நாழு வருசம் கேசுக்காக அலைஞ்ச பின் “குற்றவாளியில்லை” என்ற தீர்ப்பிற்க்குப் பின் இப்போது சுந்தரேசன்(மனைவி + இரண்டு குழந்தைகளுடன்) நிம்மதியாக இருக்கிறார்.
ஆனால்,
அந்த கைவிலங்கு,
ஜெயில் குழாயில் தண்ணி வரவில்லையினாலும் சரி,
ரோட்டுல யாராவது பாத்து விசாரித்தாலும் சரி,
கோயமுத்தூர்ல சொந்தமா சமைச்சு சாப்பிடுறப்ப சாப்பாட்டுல உப்பு கம்மியா போனாலும் சரி,
‘!@#$#$ @#$$$# @#$&*&&* &^$$##%$ உன்னால தாண்டா இப்பிடி” என்று சுந்தரேசன் வாங்கிய திட்டுக்கள், காற்றோடு போகவேண்டியது தானா?
பின்குறிப்பு:-
என்னிடம் ’நாழு நாளைக்கு டியூசனுக்கு போகாத” என்று அந்த ரஃப் பொலீஸ் அங்கிள் சொன்னதால டியூசனுக்கு போகாமல் ஒருமாசம் கழித்து போனதும், “பாதி போர்சன் முடிச்சாச்சு, நீ வேர இடம் பாத்துக்க” என டியூசன் டீச்சரும் தொரத்திவிட்டுடாங்க. அப்புறம் எங்கப்பாவை கூப்பிட்டுப் போய் பஞ்சாயத்து பண்ணுனதுக்கப்புறம் ”பாதி பாடம் மட்டும்தான் நடத்துவேன்” –ன்னு சொல்லீட்டு சேத்துகிட்டாங்க. நானும் பண்ணெண்டாவதுல்ல பாதி மட்டும் தான் படிச்சேன்.
Wednesday,Feb18,
கலவரம்
எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு, அப்ப நான் பதினொண்ணாவது படிச்சுக்கிட்டு இருந்தேன், உலகத்தில் கோடை, கார், குளிர், இலையுதிர் மற்றும் வசந்த காலங்கள் முறையாக இருந்தது போல், எங்க ஊருல வருசம் தவறாம, ஏப்ரல் – மே மாச வாக்குல சாதிக் கலவரம் நடந்துக்கிட்டிருந்த (கொலையுதிர்) காலகட்டம்.
காலையில பளிச்சுன்னு பள்ளிக்கூடம் வந்தோமா, நாழு பீரியட் முடியுறதுக்குள்ள நாப்பது பிள்ளைகளோடும் பேசுனோமா, மதியம் வீட்டுக்கு ஓடி சாப்பிட்டு வந்தோமா, மதிய கெறக்கத்திலேயே பிராக்டிகல் க்ளாசை முடிச்சு, பிள்ளைகளையெல்லாம் பத்திரமா அஞ்சாதே குருவி மாதிரியான ஆளுகளோடு வீட்டுக்கு அனுப்பிவச்சுட்டு, நிம்மதியா நாம வீட்டுக்கு ஓடி டீ – ஸ்நாக்ஸ் இருந்தா சாப்பிட்டு, மூஞ்சியை கழுவி, உடுப்பை மாத்தி, புத்தகத்தையும் – சைக்கிளையும் எடுத்துக்கிட்டு செவுத்துல அடிச்ச பந்து மாதிரி திரும்பவும் பள்ளியோடத்துக்கே வந்து, வெளிச்சமிருக்குற வரை கிரவுண்டுலயும், வெளிச்சம் போறப்ப ஆபீஸ் கட்டிடத்து முக்குல குப்பத்தொட்டியில சாஞ்சு ஒக்காந்து (ஏன்னா அங்கதான் டீப்புலைட்டு வெளிச்சமிருக்கும்) பேசிக்கிட்டே… இருந்திட்டு ஒம்போது மணிக்கு வீடு திரும்புறது எங்க டீமோட வழக்கம்.
(அப்ப படிப்பு?, அட, அது பரிச்சைக்கு பத்து நா முன்னாடி படிச்சா பத்தாது! அப்புறம் ஏண்டா டெய்லி புத்தகம் எடுத்திட்டுப் போறீங்க? அப்பத்தான வீட்டுல செலவுக்கு காசு தருவாய்ங்க!)
இப்படியே ஜாலியா நாளை உருட்டிக்கிட்டு இருந்த நேரத்துல ஒரு நா சாயந்திரம் வீட்டுல சைக்கிள் இல்லாத்தால நடந்தே அப்பு வீட்டுக்குப் போய் அவனை பிக்கப் பண்ணிகிட்டு நானும், அப்பும் ஸ்கூல சுத்திவந்தப்ப, பார் கம்பில இருந்த ஆளைப்பாத்து, அப்பு “உடம்புன்னா இப்பிடி இருக்கணும், நெஞ்சும்-கையும் பெரிசா, வயிறே இல்லாம, காலு சூம்பின மாதிரி, மொத்ததுல “V” Shapela இதேமாதிரி இருக்கணும்” –ன்னு அப்பு சொல்லி முடிக்குமுன், நான் அந்த ஜாம்பவானை “ வா கொமாரு, என்ன இந்த பக்கம்?” என்றதும், “சும்மா, பார் அடிக்க வந்தேன்” –ன்னு சொன்ன கொமாருட்ட சும்மா பேசிட்டு, மெரண்டு நின்ன அப்புகிட்ட, ”சொந்தக்காரன் தான்” –ன்னு சொல்லிட்டு, காலையில பள்ளியோடத்து மரம், கட்டிடமெல்லாம் சரியா இருந்துச்சே, இப்ப சரியா இருக்கான்னு பாக்க அப்புவைக் கூப்பீடு நான் அந்தப்பக்கமா போயிட்டேன்.
எல்லாம் சரியாயிருக்கிற சந்தோசத்துல அப்பு கூட பேசிக்கிட்டே, ”இருட்டாகுது சீக்கிரம் வா, நம்ம இடத்தை பிடிக்கணும்” -ன்னு வேகமா நடந்து, நாம எப்பவும் ஒக்காருற குப்பத்தொட்டிகிட்ட வந்தா, வெளிச்சத்துல நம்ம கொமாரு நாழுபேத்த அடிச்சு மண்டிபோட வச்சிருந்தான். ”என்ன கொமாரு, எதுக்கு?”-ன்னு கேட்டதும். ”காலையில நம்ம செல்வத்தை வம்பிழுத்தாணுங்களாம், அதான்” –ன்ன குமாருட்ட, “ஏன்யா, அதுக்கு அவிய்ங்க தான அடிக்கணும்” –ன்னு சொல்லிகிட்டே, உக்காற எடம் போன வருத்தத்தில் பத்தடி நடந்து போனதும், ஏதோ சத்தம் கேக்குதேன்னு பின்னாடி திரும்பி பாத்தா, மண்டிப்போட்டு ஒக்காந்திருந்தவனோட சொந்தக்காரனுங்க அம்பது பேரு இருட்டுல இருந்து குப்பத்தொட்டியப் பாத்து நம்ம கொமாருக்காக ஓடி வந்தாணுங்க.
நா ஏன் அங்க இருக்கப்போறேன், ஒரு ஒட்டம், ஒரு ஜம்ப் காம்பவுண்டைத்தாண்டி ரோட்டுக்கு வந்து அடுத்த அஞ்சாவது நிமிசத்துல வீட்டுக்கே வந்திட்டேன். அடுத்த அரைமணி நேரத்தில் வீட்டுக்கு வந்த அப்பா, “ ------ல கலவரமாம், நீ அங்க போனியா?” என்று நேரடியாக கேட்டார், “சைக்கிள் இல்லாததால இன்னைக்கி நா அங்க போகல, இங்க நம்ம தெருவுல தான் இருந்தேன்” என்று பொய்யைச் சொல்லி படுத்துவிட்டேன்.
பின்குறிப்பு:-
அந்த சின்ன சம்பவம், பெரிய கலவரமாகி பத்து நாள் ஊரில் நடமாட்டமில்லாமல் போனது. ஊரில் நடக்கும் பத்து நாள் சித்திரை திருவிழாவும், அந்த வருஷம் மட்டும் மூன்று நாட்களாக சுருங்கிப் போனது.
சம்பவ இடத்தில் தப்பித்தது ஒருபுறமிருக்க, காலையில் நம்ம ஸ்காட்லாண்டு யார்டு போலீசிடம் மீண்டும் தப்பித்ததும், நம் மாப்பிள்ளை குடும்பத்தோடு லோல் பட்டதும் அடுத்த பாகத்தில்.
Monday,Feb16,
அண்ணன் பாலாவுக்கு ஒரு திறந்த கடிதம், மற்றும் அன்பே சிவம் – நான் கடவுள் சிறு ஒப்பீடு.
இதுவரை சினிமா பற்றிய பதிவு எழுதக்கூடாது என்றிருந்தேன், எல்லாம் நான் கடவுள் திரைப்படம் பார்த்தவரையில் தான். எழுதினாலும், நிச்சயம் படத்தின் கதையைப் பற்றி விமர்சனம் எழுதமாட்டேன். அப்படியே எழுதினாலும் நான் ரசித்த, எனக்கு மிக மிக பிடித்தப் படங்களைப் பற்றி பாராட்டி எனது சந்தோசத்தை வெளிப்படுத்துவேனே ஒழிய, தோழ்விப் படங்களையோ, சுமாரான படங்களை பற்றி எழுதி நிலவரத்தை – கலவரமாக்க மாட்டேன். ஏனெனில் அது தயாரிப்பாளர், இயக்குனர், கதாநாயகன் – நாயகி என தொடங்கி திரையரங்கில் டிக்கெட் கிழிப்பவர் வரை பலரின் வாழ்க்கை, அவர்களின் வாழ்க்கை நன்றாக இருக்கவேண்டுமென்ற அக்கறை நம்மை விட அவர்களுக்குத் தான் மிக அதிகமாக இருக்க வேண்டும். இருக்கிறதா? இல்லையா? என்ற கேள்வியின் பதிலை அவர்களிடமே விட்டுவிடுவோம்.
நான் கடவுள் – பாலாவிடம் என்ன எதிர்பார்த்து போனோமோ, அது கிடைத்தது. என்ன வழக்கம் போல் கொஞ்சம் Hevy Doss. உடம்பும், மனதும் அதை ஏற்றுக்கொள்ள சிறிது நேரமல்ல, சில நாட்களே ஆகும். அது தான் பாலா என்றாகி விட்டது.
பாலா அண்ணே, அந்த காவல் நிலைய M. G. R., சிவாஜி, ரஜினி, நயன் காட்சியில், நயனின் ஆட்டம் ”டிட்டோ”., அடுத்து அந்த ஏட்டய்யா சொல்வது எந்த ஹீரோவை?, அது போன்ற அடையாளத்துடன் நாலைந்து பேர் தமிழ் சினிமாவையும், தமிழ் மக்களையும் காப்பாற்றிக் கொண்டிருப்பதாக அவர்களாகவே சொல்லித்திரிகிறார்களே அதில் யாரவர்?
ஆனாலும், பாலா அண்ணே நீங்க கல்லை இனம்பிரிச்சு பல சிலை செஞ்சவர்., உங்க வாயால அவங்களை திட்டாதிங்க. அது உங்களுக்குத்தான் சிறுமை, விட்டுடுங்க அவுங்களை மக்கள் பாத்துக்குவாங்க. –அப்பாவியின் வெளிமனது.
அடுத்துண்ணே, உங்க வீட்டுக்கு இல்ல, இல்ல உங்க படத்துக்கு வந்தா, ஏதோ எழவு வீட்டுக்கு போன பீலிங் வந்திருதுண்ணே. காரியமெல்லாம் முடிஞ்சு வந்தாலும் ரெண்டு நாளக்கி யாருக்கிட்டயும் பேச முடியல, அப்புறம் எங்கிட்டு சிரிக்கிறது?. இந்த மாதிரி படங்களும் வரணும்னாலும், நீங்க மட்டும் தொடர்ந்து இப்பிடி படமா தர்ரப்ப., உங்க வீட்டுக்கு வர்ரதுணாலே, ஏதோ எழவுனா மட்டுந்தா வர்ர மாதிரி ஆயிப்போச்சு. எழவுக்கு மட்டுமே போறது எங்களுக்கே கஷ்ட்டமா இருக்குண்ணே.
அடுத்தவிய்ங்க எல்லொரும், அதுலயும் பெரிய, பெரிய ஆளுக கூட பிரமாண்டம், காமடி, பொம்பள, பாட்டு, யீரோ சும்மா கையை காலை ஆட்டிக்கிட்டு இருக்குறப்ப ஆடத்தெரிஞ்ச கூட்டமும் அதே மாதிரி கையை காலை ஆட்டுற மாதிரி டான்ஸுன்னு மசாலா மணக்க, மணக்க பிரியாணியாப் போட்டுகிட்டு இருக்குறாங்க. ஆனா, நீங்க மட்டும் எழவு வீட்டுல, அடுத்தநா செத்தவனைக் கும்பிட்டு குடிக்கிற உப்பில்லாத காணைகஞ்சியும் – சுட்ட வரமொளகாவை மட்டும் தான் எங்களுக்குத் தர்ரீங்க.
எங்களுக்கு பிரியாணியெல்லாம் வேண்டாமிண்ணே, உங்களுக்கு ரொம்ப நல்லா காமெடி வரும்கிறது எங்க எல்லொருக்கும் நால்லாத் தெரியும், அதுகூட யதார்த்ததை லைட்டா கலந்து (குறிப்பு:- கெவி டோஸ் உடம்புக்கு கெடுதி), ஒரு தடவயாச்சும் கல்யாண சாப்பாடு போடுங்ண்ணே. நாக்கெல்லாம் செத்துப் போச்சு, ஒரு சாம்பார் சாதத்தையாச்சும் உங்களிடம்(பாலாவிடம்) எதிர்பார்க்கும் –அப்பாவியின் உள்மனசு.
அன்பே சிவம் – நான் கடவுள் ஒப்பீடு
அன்பே சிவம்:-
இந்த படத்துல கமல், உடல் ஊனமுறவரா வந்து, உடம்பு நல்லா இருக்கவுங்களுக்கு கூட எல்லோரும் நல்லா இருக்கணும் என்கிற உயந்த எண்ணத்தால் அவரால முடிந்த எல்லா உதவியும் செய்து எல்லோரையும் வாழவைத்து, அடுத்தவுங்களுக்கு உதவி செய்ய மனசு இருந்தால் “நானும் கடவுள்”- தான் என்பார்.
நான் கடவுள்:-
உடம்பு நல்லா இருக்குற அகோரி, உடல் ஊனத்தால வாழ கஷ்ட்டப் படுறவங்களை கொடூர கொலை செய்து அவர்களின் துன்பத்துக்கு முற்றுப் புள்ளி வைக்கிறதால “நான் கடவுள்” என்கிறார்.
நம்ம இந்து மதத்தில், ஏற்கனவே முப்பத்தி முக்கோடி கடவுள்கள் இருக்கயில, மேலும் நம்மிடையே புதிதாய் வந்துள்ள இந்த இரு, “நானும் கடவுள் (அன்பே சிவம்) – நான் கடவுள் (நான் கடவுள்)” கடவுள்களில் எந்த கடவுள், நல்ல கடவுள் – நாணயமான கடவுள் – இன்றய நிலையில் நமக்கெல்லாம் தேவயான கடவுள் என்று சிந்தித்து, ஒரு நல்ல கடவுளை தேர்ந்தெடுத்து எல்லோரும் நலமாக வாழ, வாழ்த்துவதால் “நானும் கடவுள்” தான். உண்மைதானே!?
Saturday,Feb14,
அதிர்ச்சி தரும் வசனங்கள் (சமீபத்தில் கேட்டது, பார்த்தது மற்றும் பட்டது)
1) ஏண்டா டோய், ஓம்பொண்டாட்டிய பாக்காம என்னால இருக்க முடியுமாடா?
2) அவரு கையெழுத்தே போடவா?
3) தற்க்குறிகளை, தற்க்குறிகளாகத்தான் வச்சிருக்கணும்!.
1) ஏண்டா டோய், ஓம்பொண்டாட்டிய பாக்காம என்னால இருக்க முடியுமாடா?
இரண்டு குழந்தைகளுக்கு தாயான மனைவியை, க.காதலனோடு இருக்கும் தொடர்பை விட்டுவிடசொன்ன கணவனிடம், அடுத்த வந்த நாளில் வீட்டுக்கே வந்த க. காதலன் “யோவ், ஓம்பொண்டாட்டிகிட்ட என்னய பாக்கக் கூடாதுன்னு சொன்னயாமுல்ல, ஏண்டா டோய், ஓம்பொண்டாட்டியப் பாக்காம என்னால இருக்க முடியுமாடா? அதனால் இந்த மெரட்டுர வெலையெல்லாம் விட்டுடு, என்ன தெரியுதா?” – இது ஊரில் சமீபத்தில் நடந்த கசமுசா பிரச்சணையில் வீசப்பட்ட வாக்கியம்.
2) அவரு கைழுத்தைப் போடவா?
தம்பிக்கு D. D எடுக்க S. B. I -ன் கிளைக்கு சென்று வரிசை எண் எடுத்து காத்திருந்த நேரத்தில் திடிரென cash counter-இல் சிறு சப்தம், casher அக்கா- வரிசையில் இருந்த அக்காவிடம் “இல்லம்மா, அப்படியெல்லாம் செய்யக்கூடாது, எங்க அவரு?
வரிசை அக்கா “இல்லங்க, அவரால முடியாது(தொடைப் பகுதியை தொட்டுக் காண்பிக்கிறார்), அக்கவுண்ட் ஆரம்பிக்கிற அன்னைக்கி கூட கார்ல தான் கூட்டிட்டு வந்தோம்” உடனே casher அக்கா, “அப்படின்னா, நூறு லீப் இருக்குற செக் புக் வாங்கிக்கிங்க” என அவர்களின் பேச்சு போய்க்கொண்டிருந்தது. உடனே கவனத்தை தம்பியிடம் திருப்பி பேசிக்கொண்டிருக்கயில் மீண்டும் cash counter-பக்கம் சிறு சப்தம் வரவே, திரும்பினால், கேசியர் அக்கா ஒரு பெரிய லெட்ஜரை தூக்கி கையெழுத்து கேட்க்கவும், வந்த அக்கா “அவரு கையெழுத்தைப் போடவா?” என்று மிக சாதாரணமாக கேட்டார், கேசியர் அக்கா மிக, மிக சாதாரணமாக “இல்லை, இல்லை உங்க கையெழுத்தைப் போடுங்க” என்றார்.
அடுத்தவர் கையெழுத்தைப் போடுவதைப் பற்றி, ஒரு பேங்க்கில் அவர்கள் இருவரும் சாதாரணமாகப் பேசிக்கொண்டிருக்காங்க. வந்த அக்காவுக்கு அது தப்புன்னு தோணலை, கேசியர் அக்காவும் அது தப்புன்னு விளக்கம் சொல்லலை.
எனக்குத்தான் எட்டாவது படிக்கிறப்ப எங்கப்பாட்ட, அஞ்சு காசு சீட்டு அட்டையில என் நண்பன் பொய்யா கையெழுத்து போட்டதுக்கு அடிவாங்குனதும், ரெண்டு பாடத்துல பெயிலான ரேங்க் கார்டை கையெழுத்துக்கு நீட்டி அடிவாங்குனதும், ஏனோ ஞாபகத்துக்கு வந்தது.
3) தற்க்குறிகளை, தற்க்குறிகளாகத்தான் வச்சிருக்கணும்.
நாம மொத, மொத வேலை செஞ்ச இடத்துல கூட வேலை செஞ்சவரு, நமக்கு குருநாதர் மாதிரியான அண்ணனுடன், அபியும், நானும் படம் பாத்திட்டு, ரொம்ப மெதக்கமா, ”என்னமோ சார், படத்துல எல்லாமே சரியா, நிறைவா இருக்கு, ஆனால், திரிஷாவை மட்டும் தான் அந்த சின்ன பொண்ணு கேரக்டர்ல ஏத்துக்க முடியல, அதுக்கு காரணம் அந்த பிள்ளைய, பல படங்கள்ள, பல விதம்மா பாத்துட்டமா, அதனால ஒத்துக்க முடியல, உள்ள ஏதோ நெறடுது.” என்றேன். உடனே அவர், “அந்த கேரக்டருக்கு ஒரு புது சின்னபிள்ளையா போட்டிருந்தா உனக்கு ஏதும் தோணிருக்காது, நீயும் ஜொள்ளு விட்டுப் போயிருப்ப. திரிஷாவை ”அந்த” படத்துல பாத்த பாதிப்புல இருந்து நீ இன்னும் வெளியவல்லை, அதான் பிரச்சனையே! அதனால படத்துல ஒரு புதுபிள்ளையாப் போட்டு உன்னய மாதிரி தற்க்குறிகளை, தற்க்குறிகளாகத்தான் வச்சிருக்கணும், மாத்தி யோசிக்கிற மாதிரியெல்லாம் உங்களையெல்லாம் வைக்கவேக் கூடாது”
உச்சி தலையில ஆணியடிச்ச மாதிரி கிர்ருன்னு இருந்தது.
Friday,Feb13,
மாப்புள்ள நீயெல்லாம் குதி(டி)க்காத.,
வழக்கம் போல் காலை ஏழு மணிக்கெல்லாம் தயாராகி, நண்பரின் வீட்டுக்குப் போகும் எண்ணத்துடன்,
தெருமுக்கு டீ கடையை( முன்னொரு காலத்தில் நான் டாப் அடிக்கும் இடம், பல பஞ்சாயத்துகளில் வேண்டியவை ரகசியமாய் தீர்த்தும், வேண்டாதவை பெரிதாக்கப்படுமிடம்) கடந்து செல்கையில், ஏதோ வித்யாசமாய் பட்டது. நிதானமாய் பார்த்தும் யாரென்றுத் தெரியவில்லை. நெருங்கிப் பார்த்ததும் தான் தெரிந்தது, இது நம்ம ”கட்டை கணேசன்” மாமா.
ஆள் கொஞ்சம் தடித்திருக்கிறார், வலது கை கொஞ்சம் மடங்கி இருந்தது, இடது கையிலும், கால் முட்டிகளிலும் பல தழும்புகள், முகத்தில் வாய் சிறிது கோணியுள்ளது, மற்றும் பக்கத்தில் கைத்தடி. என்ன மாமா எப்படி இருக்கீங்க, எப்படி இப்படியாச்சு? என்றது. ”ஏய், மாப்புள்ள…, நீ… நீயா? ஒக்காலி(லி Or ழி?) அதயா…ளமே தெரியல, நீ…நீ எப்பிடி இருக்க?” என்று ஆர்வத்துடன் எதிர் கேள்வி கேட்டார். ”நான் நல்லா இருக்கேன் மாமா, நீங்க எப்படி, இப்பிடி ஆனீங்க?” என மீண்டும் கேட்க்கவும், பக்கத்திலிருந்தவர்,
”மூணு வருசத்துக்கு முன்னாடி ஒரு நா காலையில நாழுமணிக்கி ஆத்தூர் டேம்முல மீன் பிடிக்க வண்டியில போயி, டேம்க்குள்ள விழுந்ததுல மூணுமாச கோமா, ஒரு வருச ஆஸ்பத்திரில இருந்து நாழு, அஞ்சு லச்ச ரூபா செலவழிச்சதுனால ஆள் பொழச்சு வீடுவந்தான், ஆன, கூடப் போன குவேந்திரன்(அவரோட மச்சான்) ஸ்பாட்லயே காலி. இப்பத்தான் கொஞ்சம், கொஞ்சம் நடமாட்டமா வெளியவர்ரான்” என்று முடித்தார். கேட்டதுக்கே தலை சுத்திது…
”மாப்புள்ள, எப்படியோ தப்பிசுத்தேன். மாப்பிள்ள, நீ நல்லா இதுக்கணும், நீயல்லாம் தண்ணி குதிக்காத(குடிக்காத), அதனாலதா நா இப்பதியாயித்தேன். அதனால நீயெல்லாம் குதிக்காம நல்லா இருக்கணும்”, என்றார். பேசும்போது ட-எல்லாம் த-வாகத்தான் வருகிறது, மூளையில் அடிப்பட்டதால் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு பேச்சில் அது எதிரொலிக்கிறது.
அவரிடமிருந்து விடைப்பெற்று வந்த பின்னும், அவரைப் பற்றிய நினைவுகள் பல சுற்றி வந்தது. நல்லா இருந்த காலத்தில், ஆள் பயங்கர சேட்டை. தப்பிதவறி அவரிடம் சிக்கிவிட்டால் அவ்வளவு தான், சாயும் வரை ஊறுகாய் தான்.
ஒரு முறை நம்ம ஏரியாவுக்குள் ஒரு சாவு, ஏரியாவே களைகட்டியிறுந்தது. சாவுக்கு தப்பு அடிப்பவர்கள், அவர்களின் வேலையை சிறப்பாக செய்து கொண்டிருக்கையில், அதிலிருவரை கூப்பிட்டு, ஆளுக்கொரு பாக்கெட் சாராயம் + பத்து ரூபாய் கொடுத்து, குடித்ததும், இப்ப நான் சொல்லுறத அப்படியே தப்புல அடிக்கணுமென்று, “சஞ்சணக்கும், சஞ்சணக்கும், சண்ஞ்” என்றார். தப்படிக்கையில் இப்படித்தான் சப்தம் வரும். எனவே தப்படிப்பவர்கள் சந்தோசமாய் அடித்துக் காட்டயில், இல்ல, இல்ல சத்தம் சரியாவல்ல, நான்சொன்ன மாதிரி அடி, சரியாவல்ல, நான்சொன்ன மாதிரி அடியென்றே நாள் முழுக்க இழுத்து, அந்த இருவரை கதறவிட்டது ஞாபகத்துக்கு வந்தது. இன்று அவரால் அவர் நினைத்ததை உச்சரிப்பு சுத்தமாகப் பேச முடியவில்லை.
மற்றொரு முறை, காலைக் காட்சியாக ஜாக்கி ஜான் படம் பார்க்க உள்ளூர் தியேட்டருக்குப் போயிருக்கையில் பக்கத்து சீட்டாளுடன் ஏதோ சண்டை. நம்ம மாமா முதலில் அடிக்கவும், எதிரி கராத்தே ஸ்டைலில் ஸ்டெப் வத்து அடித்துவிட்டான், நம்மாளுக்கு அவமானமாபோயிற்று. உடனே, பாதிபடத்தில் வெளியே வந்த மாமா, நேராக தோட்டத்துப் பக்கம் போய் கருவேல மரத்தில் நேரான அஞ்சடிக் குச்சியை வெட்டியெடுத்து கைபிடிக்குமிடத்தில் மட்டும் முள்ளில்லாமல் சீவிக் கொண்டு, உடனே, படம் விடுவதற்க்கு முன் தியேட்டர் வாசலுக்கு வந்து விட்டார். மாமாவை அடித்தது + ஜாக்கி ஜான் படம்பார்த்த முறுக்கில் வெளியே வந்தவனை, முள்ளுக்குச்சியில் வாங்கு-வாங்கு என்று வாங்கிவிட்டார். கராத்தே தெரிஞ்சவன் கையைத்தூக்கி விட்டுவிட கேட்ட பின்னும் விளாசிவிட்டார், பல வீச்சுகளுக்குப் பின் உடம்பெல்லாம் ரத்தம் ஒழுகுவதைப் பார்த்த பின்னர் தான் சந்தோசத்தில் அவனை விட்டார். ஆனால் இன்று, நாற்பதுக்குள் நடப்பதற்க்கே கையில் தடி எடுக்க வேண்டியிருக்கிறது.
முன்னொரு காலத்தில், திடீரென தோட்டம்காட்டில், கிடாவெட்டு விசேசங்களில் ஆடு-கோழியடித்து பலே, பலே சமையலுடன் பார்ட்டி நடக்குமிடத்துக்கு நான் போனால், என்னைப் பிடித்துக் கொண்டு ”மாப்புள்ள நீயெல்லாம் தண்ணியடிக்கக் கூடாது. மாமா(எங்கப்பாவை) ரொம்ப நல்லவரு, அதுபோல நீயும் நல்ல பேரெடுக்கணும், அதனால நீ எப்பயும் தண்ணியடிக்கக் கூடாது”. என்பவர் உடனே சத்தம் கம்மியாக ”நீயும் குடிச்சா அப்புறம் எங்களுக்குப் பத்தாதில்ல” என்று கூறி சப்த்தமாக சிரிப்பார். இன்றும் ”மாப்புள்ள நீயெல்லாம் எப்பவும் குதிக்கக் கூதாது, நாலாம் குதிச்சதுனால தான் இப்பதியாயித்தேன்” ஏனெனில் அவர் தப்பு செய்த போதெல்லாம் குடித்திருந்தார். இன்று குடிக்கவில்லை கிட்டத்தட்ட அதே வசனம், ஆனால் அதில் அனுபவங்கள், காயங்களாக உடம்பெல்லாம் ஏறி உட்கார்ந்திருக்கிறது. நமக்கு மது வேண்டாமே!
பின்குறிப்பு:-
மூத்த மகன் குடிபோதையில் விழுந்து கிடக்கும் போதும், நமக்கெல்லாம் ஊத்திக் கொடுக்கும் தமிழ் தாத்தாவை, தயவுசெய்து உதாரணமாகப் பார்க்காமல்,
குடிபோதையால், விபத்தில் சொந்தத்தை இழந்து, மருத்துவ செலவுக்காக் சொத்தை இழந்து, இன்று நம்மிடம் இருக்கும் இவரை, குடிப்பழக்கத்தின் கேட்டிற்க்கு உதாரணமாக எடுத்துக் கொள்ள பழகவேண்டும். பழகினால் நாடும், வீடும் தன்னாலே நலமாகும்.
Saturday,Feb7,
கலை வளர்க்கும் தமிழகம், பாகம் II
தொடர்ச்சி...(படத்தை தெளிவாக பார்க்க படத்தை சுட்டி பெரிதாக்கிப் பார்க்கவும்)
விளக்க பலகை
நான் சென்ற போது நான்குபேர் மாளிகை மேட்டினை எதோ தோண்டிக்கொண்டு இருந்தார்கள். யார் அவர்கள் தெரியவில்லை? அவர்களிடம் ஏதேனும் கிடைத்தால் யாரிடம் கொடுப்பார்கள் என்றும் தெரியவில்லை.
Tuesday,Feb3,
கலை வளர்க்கும் தமிழகம் - பாகம் -I
என்னுடைய நீண்ட நாள் ஆசையை தீர்ப்பதற்காக தமிழகத்தில் ஒரே மாமன்னன் ராஜா ராஜா சோழனின் அருந்தவர் புதல்வன், ராஜேந்திர சோழனின் தலைநகரம் மற்றும் தஞ்சை பெரிய கோவிலின் மறு பதிப்பான கங்கை கொண்ட சோழபுரம் சென்றிருந்தேன். கோவிலை தரிசிப்பதற்கு முன் ராஜேந்திர சோழன் கட்டி வாழ்ந்த அரண்மனையை காண சென்று விசாரித்ததில் அதன் தற்ப்போதைய பெயரான மாளிகை மேடு - க்கு வழிகாட்டினார்கள். கண்டவற்றை புகை படத்தில் காண்க,
எழுத்தாளர்கள் , நடிகர்கள் என கலை சம்மந்தப் பட்டவர்கள் மட்டுமே ஆண்டுவரும் தமிழகத்தில், தமிழகத்தில் ஒரே ஒரு மாமன்னன் (ராஜா ராஜன்) மற்றும் அவனது மகன் வளர்த்த சிற்ப கலையின் எச்சம், கொள்ளை போனதின் மிச்சம் எப்படி பாதுகாக்கப் பட்டு வருகிறது என்று காணீர்.
இந்த தகவல் தொடர்பு யுகத்திலும், ஆயிரமாண்டு வரலாற்று கலை பாதுகாப்பாக? வைக்கப் பட்டிருப்பதை காணீர்.
வாழும் வள்ளல்களுக்கு வைக்கும் கட்-அவுட்டிற்கும,
வளர்மதி வயதுக்குவந்தற்கு அடிக்கும் போஸ்டர்க்கும்,
ஒரு சத வரி விதித்திருந்தாலே வரலாற்றை காக்கலாம்,
ஆனால் முடியாது,
ஏனெனில் நாமிருப்பது தமிழ்நாட்டில் !