கலவரம்



எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு, அப்ப நான் பதினொண்ணாவது படிச்சுக்கிட்டு இருந்தேன், உலகத்தில் கோடை, கார், குளிர், இலையுதிர் மற்றும் வசந்த காலங்கள் முறையாக இருந்தது போல், எங்க ஊருல வருசம் தவறாம, ஏப்ரல் – மே மாச வாக்குல சாதிக் கலவரம் நடந்துக்கிட்டிருந்த (கொலையுதிர்) காலகட்டம்.

காலையில பளிச்சுன்னு பள்ளிக்கூடம் வந்தோமா, நாழு பீரியட் முடியுறதுக்குள்ள நாப்பது பிள்ளைகளோடும் பேசுனோமா, மதியம் வீட்டுக்கு ஓடி சாப்பிட்டு வந்தோமா, மதிய கெறக்கத்திலேயே பிராக்டிகல் க்ளாசை முடிச்சு, பிள்ளைகளையெல்லாம் பத்திரமா அஞ்சாதே குருவி மாதிரியான ஆளுகளோடு வீட்டுக்கு அனுப்பிவச்சுட்டு, நிம்மதியா நாம வீட்டுக்கு ஓடி டீ – ஸ்நாக்ஸ் இருந்தா சாப்பிட்டு, மூஞ்சியை கழுவி, உடுப்பை மாத்தி, புத்தகத்தையும் – சைக்கிளையும் எடுத்துக்கிட்டு செவுத்துல அடிச்ச பந்து மாதிரி திரும்பவும் பள்ளியோடத்துக்கே வந்து, வெளிச்சமிருக்குற வரை கிரவுண்டுலயும், வெளிச்சம் போறப்ப ஆபீஸ் கட்டிடத்து முக்குல குப்பத்தொட்டியில சாஞ்சு ஒக்காந்து (ஏன்னா அங்கதான் டீப்புலைட்டு வெளிச்சமிருக்கும்) பேசிக்கிட்டே… இருந்திட்டு ஒம்போது மணிக்கு வீடு திரும்புறது எங்க டீமோட வழக்கம்.

(அப்ப படிப்பு?, அட, அது பரிச்சைக்கு பத்து நா முன்னாடி படிச்சா பத்தாது! அப்புறம் ஏண்டா டெய்லி புத்தகம் எடுத்திட்டுப் போறீங்க? அப்பத்தான வீட்டுல செலவுக்கு காசு தருவாய்ங்க!)

இப்படியே ஜாலியா நாளை உருட்டிக்கிட்டு இருந்த நேரத்துல ஒரு நா சாயந்திரம் வீட்டுல சைக்கிள் இல்லாத்தால நடந்தே அப்பு வீட்டுக்குப் போய் அவனை பிக்கப் பண்ணிகிட்டு நானும், அப்பும் ஸ்கூல சுத்திவந்தப்ப, பார் கம்பில இருந்த ஆளைப்பாத்து, அப்பு “உடம்புன்னா இப்பிடி இருக்கணும், நெஞ்சும்-கையும் பெரிசா, வயிறே இல்லாம, காலு சூம்பின மாதிரி, மொத்ததுல “V” Shapela இதேமாதிரி இருக்கணும்” –ன்னு அப்பு சொல்லி முடிக்குமுன், நான் அந்த ஜாம்பவானை “ வா கொமாரு, என்ன இந்த பக்கம்?” என்றதும், “சும்மா, பார் அடிக்க வந்தேன்” –ன்னு சொன்ன கொமாருட்ட சும்மா பேசிட்டு, மெரண்டு நின்ன அப்புகிட்ட, ”சொந்தக்காரன் தான்” –ன்னு சொல்லிட்டு, காலையில பள்ளியோடத்து மரம், கட்டிடமெல்லாம் சரியா இருந்துச்சே, இப்ப சரியா இருக்கான்னு பாக்க அப்புவைக் கூப்பீடு நான் அந்தப்பக்கமா போயிட்டேன்.

எல்லாம் சரியாயிருக்கிற சந்தோசத்துல அப்பு கூட பேசிக்கிட்டே, ”இருட்டாகுது சீக்கிரம் வா, நம்ம இடத்தை பிடிக்கணும்” -ன்னு வேகமா நடந்து, நாம எப்பவும் ஒக்காருற குப்பத்தொட்டிகிட்ட வந்தா, வெளிச்சத்துல நம்ம கொமாரு நாழுபேத்த அடிச்சு மண்டிபோட வச்சிருந்தான். ”என்ன கொமாரு, எதுக்கு?”-ன்னு கேட்டதும். ”காலையில நம்ம செல்வத்தை வம்பிழுத்தாணுங்களாம், அதான்” –ன்ன குமாருட்ட, “ஏன்யா, அதுக்கு அவிய்ங்க தான அடிக்கணும்” –ன்னு சொல்லிகிட்டே, உக்காற எடம் போன வருத்தத்தில் பத்தடி நடந்து போனதும், ஏதோ சத்தம் கேக்குதேன்னு பின்னாடி திரும்பி பாத்தா, மண்டிப்போட்டு ஒக்காந்திருந்தவனோட சொந்தக்காரனுங்க அம்பது பேரு இருட்டுல இருந்து குப்பத்தொட்டியப் பாத்து நம்ம கொமாருக்காக ஓடி வந்தாணுங்க.

நா ஏன் அங்க இருக்கப்போறேன், ஒரு ஒட்டம், ஒரு ஜம்ப் காம்பவுண்டைத்தாண்டி ரோட்டுக்கு வந்து அடுத்த அஞ்சாவது நிமிசத்துல வீட்டுக்கே வந்திட்டேன். அடுத்த அரைமணி நேரத்தில் வீட்டுக்கு வந்த அப்பா, “ ------ல கலவரமாம், நீ அங்க போனியா?” என்று நேரடியாக கேட்டார், “சைக்கிள் இல்லாததால இன்னைக்கி நா அங்க போகல, இங்க நம்ம தெருவுல தான் இருந்தேன்” என்று பொய்யைச் சொல்லி படுத்துவிட்டேன்.


அடுத்த அரைமணி நேரத்தில் TVS50 –ல் வந்த மாமா, ”-----ல கலவரமாம், நம்ம பயலுக மூணுபேத்துக்கு கத்தி குத்தாம், எல்லோரையும் ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோயிட்டாங்க, ஊருக்குள்ள 144 போட்டுடாங்க” என்றவர், என்னை சுட்டி “இவனை எங்கயும் போகவிடாம பாத்துக்கங்க” என ஏற்கனவே வீட்டில் நம்மீது இருந்த பாசகட்டினை படுமுடுச்சாக்கிவிட்டுப் போனார்.

பின்குறிப்பு:-


அந்த சின்ன சம்பவம், பெரிய கலவரமாகி பத்து நாள் ஊரில் நடமாட்டமில்லாமல் போனது. ஊரில் நடக்கும் பத்து நாள் சித்திரை திருவிழாவும், அந்த வருஷம் மட்டும் மூன்று நாட்களாக சுருங்கிப் போனது.


சம்பவ இடத்தில் தப்பித்தது ஒருபுறமிருக்க, காலையில் நம்ம ஸ்காட்லாண்டு யார்டு போலீசிடம் மீண்டும் தப்பித்ததும், நம் மாப்பிள்ளை குடும்பத்தோடு லோல் பட்டதும் அடுத்த பாகத்தில்.

Just Wait Please.

0 comments:

Post a Comment

உடுக்கை இழந்தவன் கைபோல், ஆங்கே
இடுக்கைக்கு பின்னூட்டுவதாம் பண்பு.

- புதுக்குறள்.

 
©2009 அப்பாவி | by TNB