இந்த வார்த்தைகளைச் சொல்லி மனிதன் தன் சக மனிதனைச் கேலிபேசும் போதெல்லாம், எனக்கு கடுமையான கோபம் வருகிறது. எங்கெல்லாம் இந்த வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்கள? யார், யாரெல்லாம் இந்த வார்த்தையை பயன்படுத்துகிறார்கள்?, என பார்த்தால் உணர்ச்சியுள்ளவர் எவருக்கும் கோபம் வரத்தான் செய்யும்!
வாடகைக்கு வீடு தேடும்போது., வீட்டுக்காரன் கேட்ட வாடகையை விட சிறிது அதிகமாக கொடுத்து வாடகைக்கு வீடெடுத்தவன் – சொல்லும் போதும்,
அவசரத்திற்க்கான கடைசி நேர தொடர் வண்டி பயணத்தில், முன்பதிவற்றவர்களுக்கான பெட்டியில், முதல் ஆளாக ஏறி (அல்லது சுமைதூக்கும் தொழிலாளிக்கு கொடுத்த கையூட்டின் பலன்) பொதி வைக்கும் பலகையில் உரிமையோடு கால் நீட்டி படுத்துக்கொள்பவன் – சொல்லும் போதும்,
நிரந்தரமான குண்டு, குழியுடைய சாலையின் வலதுபக்கம் முழுவதும் வாய்பிளந்து கிடக்கையில், எதிர்வரிசையில் வண்டியோட்டி வந்து, சாலையின் வலப்புறத்தில்(நமது இடப்புற பாதி(தை)யில்) நாம் வருவதற்கு முன் அதிரடியாக புகுந்து வெளியேறியவன் – சொல்லும் போதும்,
மாநகராட்சி முதல், கிராம நிர்வாக அலுவலகம் வரை, மின்சார துறை முதல், வேலைவாய்ப்பு அலுவலகம் வரை, வரிசையிலிருக்கும் மக்களைத் தாண்டி, உள்ளே புகுந்து காரியம் நிறைவேற்றி வெளியேறும் கரை வேட்டி கட்டிய நரிகள் – சொல்லும் போதும்,
ஒவ்வொரு தேர்தலின் போதும், ஆளும் கூட்டணியிலிருந்து பதவிகளின் முழூ……. (எழுத்து பிழை அல்ல) பலாபலனையும் ஒட்டுண்ணியாய் உறிஞ்சி கொழுத்து, கடைசி நேரத்தில் சப்பையான காரணங்களை கூறி எதிர் கூட்டணிக்கு தாவுபவன் – சொல்லும் போதும்,
இதுவரை நடந்த தேர்தல்களில் நான் இருந்த கூட்டணிதான் வெற்றி பெற்றுள்ளது என இறுமாப்பில் இருக்கும் கயவாளி – சொல்லும் போதும்,
இந்த மாதிரியான ஆட்கள் அந்த கேவலமான வேலையை செய்தது மட்டுமல்லாது, வரிசையிலிருந்தும், வாக்களித்தும் ஏமாந்த அப்பாவியிடம் “தகுதியுள்ளவை, தப்பி பிழைக்கும்” என, கேலிபேசும் போதெல்லாம் எனக்கு கடுமையான கோபம் தான் வருகிறது.
ஆடு, மாடு, மனிதன், குரங்கு, சிங்கம், புலி, கழுகு, பன்னி, மலைப்பாம்பு என வெவ்வேறு வகை குணங்கொண்ட எல்லாவகை உயிரினமும் ஒட்டுமொத்தமாய் கூடி கும்மியடித்த அடர்ந்த கானகத்தில் தான் “தகுதியுள்ளவை, தப்பி பிழைக்கும்” - “தனியா சிக்குனா வயித்தில் கிடக்கும்” என்ற வாசகங்கள். அங்கே வாழத்தான் ஒவ்வொரு உயிருக்கும் தனித்தனியான தற்பாதுகாப்பு குணாதிசயம் வேண்டும். இல்லையெனில் அடுத்த இனத்தின் பசிக்கு மட்டுமல்லாது, சில நேரங்களில் தன் இனத்தின் பசிக்கும் – ருசியாகி, மண்டையோடாக காலமெல்லாம் பல் இளித்து கிடக்க, கடவது தான்.
ஆனால், புவியில் வாழ்ந்த அநேக உயிர்களில் சிலவற்றை அடியோடும், சிலவற்றை வேரடி மண்ணோடும் அழித்துவிட்டோம். இனி மீதமிருப்பது மனிதன் மட்டுமே என்றிருந்த வேளையில், இல்லை இல்லை நாங்கெல்லாம் மனிதன், மனிதன், மனிதன், மனிதன் என எங்களுக்குள் பல வேற்றுமைகள் உண்டு என்றும்,
உடன் விளையாட மிருங்களற்ற சூழ்நிலையில், திறமையை வளர்க்கவும், உயிர் வாழும் தகுதியை இழக்காமலிருக்கவும், மனிதர்களுக்குள்ளே பல விசித்திரங்ளைப் புகுத்தியது மட்டுமல்லாது, சந்ததியை கூட மதிக்காத வினோதங்களை அமல்படுத்துகிறவனும் கூட, அலுக்காமல் சொல்லும் வார்த்தையாகிப் போனது இந்த வாசகம்.

அன்னையிடம் உடலைப் பெற்று, காட்டில் வாழும் ஆண்சிங்கம், புலி, காட்டெருமை, பன்னி, நரி போன்றவற்றிடம் குணத்தைப் பெற்று, நாட்டுக்குள்ளே - காட்டை கொண்டு வந்ததோடு மட்டுமல்லாது, சராசரி மனிதனிடம் கூசாமல் கூறும் வெறிநாய்களே, எச்சத்தின் மிச்சத்தை உண்ணும் நரிகளே, உங்களுக்குத் தான் “தகுதியுள்ளவை, தப்பி பிழைக்கும்” என்ற பழமொழி,
எங்களிடம் அமல்படுத்த முனைந்தால், இனி உங்களின் நிலை?