கடந்த வாரம் வெளிவந்து சக்கைபோடு போட்ட முதல் பாகத்தை படிக்க.
என்னுடைய மலேசிய நண்பர்(முன்னொரு காலத்தில் சிங்கையில் பணிபுரிந்தவர். தற்பொழுது மலேசியாவிலேயே சுயதொழில் செய்து வருபவர்) நீண்டகாலமாக வீட்டுக்கு வரும்படி அழைப்புவிடுத்ததின் பேரில் இந்த தீபாவளியை நண்பரின் குடும்பத்தாருடன் அவருடைய சொந்த ஊரான பிணாங்கு மாகாணத்திலிள்ள கூலிமில் கொண்டாடுவது என முடிவெடுத்து திட்டங்களை செயல்படுத்த ஆரம்பித்தோம், நானும் நண்பர் முத்துவும்.
சனிக்கிழமை தீபாவளிக்கு, வெள்ளிக்கிழமையும் விடுப்பு வாங்கிக்கொண்டு வியாழன் மாலை ஆறுமணிக்கு வீட்டிலிருந்து கிளம்பி சிங்கை- மலேசியா இடையிலான தரைவழி சோதனைச் சாவடிக்கு போகும் போது, ஆத்திகர்கள் காட்டிய அனைத்து கடவுள்களையும், நாத்திகர்கள் சொல்லும் பட்டாம்பூச்சி விளைவினையும் சேர்ந்தொழுகிக்கொண்டே சிங்கையின் சாவடிக்குள் நுழைந்தேன். (ஒழுகக் காரணம், உலகிலேயே அதிகப்படியான மக்கள் தரைவழியாக தினமும் எல்லையைத் தாண்டுவதில் இந்த சோதனைச்சாவடி வழியாகத்தான் எனக் கேள்வி) அதுவும் பெருநாட்களில் சமீபத்திலானால் மைல் நீள வரிசையில் வால்பிடித்து, குறைந்தபட்சம் முக்கால் மணிநேரம் நிற்பது தவிர வேறு வழியிருக்காது.
ஆனால், நான் கும்பிட்ட கடவுளும், பட்டாம்பூச்சிகளும் என்னை காப்பாற்றினவோ, என்னவோ!!!. இருக்கும் இருபது வரிசையிலும் வரிசைக்கு நான்கைந்து பேர்மட்டுமே இருந்தனர். அழகான வரிசையைத் தேர்ந்தெடுத்து ஐந்தே நிமிடத்தில் சிங்கையைக் கடந்து சர்வதேச எல்லைக்குள் நுழைந்தோம்.(யாரும் சுடமாட்டார்கள், நம்பலாம், பாதுகாப்பான பகுதிதான்). சர்வதேச எல்லை ஐநூறு மீட்டரை பேருந்து மூலம் கடந்து, மலேசிய சாவடிக்குள் நுழைவதற்குள் 20 – 30 நிமிடமாகிவிட்டது, அவ்வளவு வாகனங்கள். மிகபிரமாண்டமான கட்டிடம். மீண்டும் கடவுள்களோ, பூச்சியோ என்னைக் காப்பாற்றியது. பத்தே நிமிடத்தில் சோதனைகளை முடித்து, கட்டிடத்தைச் சுத்திச் சுத்தி நடந்து டேக்ஸி பிடிக்க வெளியேற 20 நிமிடங்கள் ஆகிவிட்டது. அப்பாடா, கைபேசியில் ரோமராக இல்லாததால் மூர்ச்சையானது. இனி அது, மணிகாட்டவோ அல்லது படம் பார்க்கவோ - பிடிக்கவோ அல்லது பாடல் கேட்கவோ மட்டுமே ஆகும். மிகப்பெரும் விடுதலை. எனக்கும், என்னுடைய கைபேசிக்கும்.
பத்து மணி பேருந்துக்கு, ஒன்பது மணிக்கே வந்து இருக்கையின் இருப்பை உறுதிபடுத்துக் கொண்டபின் இரைப்பையின் இருப்பை உறுதிபடுத்துக்கொள்ள வேண்டியிருந்தது. சாம்பார் வாசமடிக்கும் தமிழ் கடை தேடி ஒரு வெங்காய தோசை, ஒரு மசாலா தோசையை நல்லா அகலமா, அகலமா என அழுத்திச் சொல்லி, உண்டுகளித்து பின் மறக்காமல் நீரிறக்கம் முடித்து மிகச்சரியாக பத்துமணிக்கு பேருந்து அருகே வந்து சேர்ந்தால், ஆகா,
ஜோகுர் பாருவிலிருந்து மலேசியாவின் பலபகுதிகளுக்கு போக தயாராக பல மிதவைப் பேருந்துகள் நின்றிருந்தன. எல்லாப் பேருந்தின் அருகிலும் என் மக்கள். தீபாவளியை சிறப்பாக கொண்டாட சொந்த ஊருக்கு சென்று கொண்டிருக்கும் நம் மக்கள். தலையை ஜெல்லி போட்டு சிலிப்பிவிட்டிருக்கும் சிறுவன் முதல் பல அக்காக்களும், அத்தைகளும் அவர்தம் அழகழகான, அழகழகான பெண் குழந்தைகளும் ஒருசில வயதொத்த நண்பர்களுமென முழுக்க முழுக்க தமிழ்நெஞ்சங்களோடு கிளம்பத்தயாரானது பேருந்து.
பேருந்தில் ஏறி என்னிடத்தை நிரப்பிய சிறிது நேரத்துக்கெல்லாம் படபடவென வெடித்துச்சிதறிய சத்தம் கேட்டு எட்டிப்பார்த்தால் பட்டாசே தான். வெடிபோட்டு மக்களை உற்சாகமாக அனுப்பிவைத்தனர் பேருந்தின் முகவர்.
மொத்தம் இருபத்து நான்கே இருக்கை கொண்ட பேருந்து, நகர எல்லையைத் தாண்டி பெருவிரைவுச் சாலையைத் தொட்டதும், சாலை வரி வாங்கும் சாவடி. சுங்கம் செலுத்தி சாலையைத் தொட்டு பேருந்து போய்க்கொண்டிருக்கையில் ”எண்ணூறு கி.மீ போகணுமே, ஏன் மெதுவாய் போகிறார் என எட்டிப்பார்த்தால், ஆவ்வ்வ்வ்வ்வ் பேருந்து 110கி.மீ வேகத்தில் போய்க்கொண்டிருந்தது பேருந்து. சாலையைக் கவனித்தால், மூன்றுவழிச்சாலை கண்ணுக்கெட்டிய தூரம்வரை வளைவுகள் இல்லாது, மேடுபள்ளம் இல்லாததால் பேருந்தின் உள்ளே சிறு குலுங்கள் கூடயில்லை. அறுபதுக்கே அதிரப்போய் தான் பழக்கமென்பதால் வந்த குழப்பமென உணர்ந்து அமைதியானேன். சிங்கையிலும் அந்த அனுபவம் வாய்க்காது, பெரும்பாலும் 70-80 கி.மீ வேகத்தில் தான் வாகனம் ஓட்டுவார்கள். அதற்கும் மேல் வேகமாகப் போனால் முப்பதாவது நிமிடத்தில் கடலில் தான் விழவேண்டியிருக்குமென, வேகிகளை எள்ளி நகைத்துக்கொள்வோம்.
தூங்கலாமென கண்களை மூடினால், “முருவா, யாரது?” என சற்றுமுன் நண்பரின் அலைபேசியில் கூப்பிட்ட போது தெரியாதது போல் கேட்ட மலேசிய பெரும் பதிவரின் முகம், மனதுக்குள் கோணல்(பளிப்பு) காட்டிக் கொண்டே இருந்ததால் தூங்க முடியவில்லை. சொ.செ.சூ -வாகிவிட்டதே? இதற்கா, அண்ணா, அண்ணாவென நாளிக்கிருமுறை மின்னாடினோம். ஆடியதும் வீண், அழைத்ததும் வீணோ? இருந்தாலும் பரவாயில்லை. விளக்கம் கொடுத்ததும், வீட்டுக்கழைத்த பாங்கு அவரின் அன்பை வெளிப்படுத்தியதால் மன்னித்து விட்டுவிட்டோம். ஆனாலும், தூங்க முடியவில்லை. இந்த வலையுலகத்திற்கு ஏதாவது செய்து நமது பேரை அதிரச்செய்ய வேண்டுமென சபதமேற்றபின்னரே நெஞ்சம், மஞ்சம் காண விளைந்தது. ஆனால் முடியுமோ? பயணிகளுக்கு அப்பப்போ வரும் கர்ணகொடூர அழைப்போசைகளுக்கிடையே தூங்க தனிதிறனிருக்க வேண்டும். எனக்கில்லை...எனக்கில்லை.
ஒளிவெள்ளத்திணூடே பயணிக்கும் பேருந்துக்குள்ளிருந்து, இருமறுகின் அழகை கண்டுகொண்டே மணிகளை கழித்துக்கொண்டிருக்கையில், நள்ளிரவின் குளிர் மெல்ல மெல்ல நெஞ்சத்தை ஆட்ட ஆரம்பிக்கவும், ஜாக்கெட்டில்லாக் குறையை போக்க தோள்பையை நெஞ்சோடு அணைத்துக்கொண்டிருக்கும் வேளையில் இரட்டைக் கோபுரங்கள் கண்களுக்குத் தெரிந்தது.
அருகிலுறங்கும் நண்பனை எழுப்பி, கோபுர தரிசனம் கோடி புண்ணியமென காட்டினால், ”ஓ, கே.எல் வந்தாச்சா? இன்னும் ஐந்து மணிநேரத்தில் கூலிம் போய்விடலாம்” என அனுபவத்தைக் காட்டினார். மலேசியாவில் எடுக்கப்பட்ட திரைபடங்களின் எல்லாக் காட்சியிலும் ஏதேனொரு மூலையில் இந்த கோபுரங்களைக் காட்டியேயிருப்பார்கள். ஏனெனில், அக்கோபுரங்களைச் சுற்றிய பத்து தெருக்கள் மட்டுமே பிரமாண்டமாக இருக்கும். மீதமெல்லால் சென்னைக்கு ஒப்பு என்பது தனிக்கதை.
ஆங்காங்கே கம்பொங் என மலாயில் அழைக்கப்படும் கிராமங்களும், தோட்டங்களும், திடீரென பெரிய கட்டிடங்களும், குறிப்பிட்ட தூரத்திற்கொரு கனரக வாகன நிறுத்துமிடங்களும் என கலந்துகட்டி முழு நாடாக கண்முன் தெரிந்த மலேசியாவைக் கண்ணில் உள்வாங்கியபடியே பயணிக்கையில் அதிகாலை மூன்று மணிக்கு சற்றும்மேல் பேருந்து சாலையோரத்தில் ஓரங்கட்டி மெல்ல நின்றது. ஓட்டுனர் இறங்கி பேருந்தின் இயந்திரத்திற்குள் தலையைவிட்டு பார்த்தவர், அலைபேசியெடுத்து அளவலாகினார். நாயும், பேயும் தூங்கும் நாலுமணிக்கு, திருடனா வரப்போகிறான் என்ற தைரியத்தில் ஓடாத பேருந்தில் குளிர்சாதனத்தின் உறுமலின் ஓசையில் நானும் தூங்க ஆரம்பித்தேன்.
பாகம் பெரிதாக இருப்பதால் தொடர்ச்சி அடுத்த பாகத்தில்.
மிச்சர்கடை
4 weeks ago
20 comments:
நீங்களும் பினாங்கு போய் வந்தீர்களா ?
அழகான தீவு !
நீங்களும் பினாங்கு போய் வந்தீர்களா ?
அழகான தீவு !
சரி... மலேசியால எல்லா பஸ்ட்டாண்டும் ஒரே மாதிரி இருக்குமாமே?
அடுத்த இடுகையில் கூலிம் பஸ்ஸாண்டின் படம் வருகிறது. பொறுமை.
விக்கி எங்கிட்ட சொல்லவேயில்லயே!
அப்புறம் நளினாவை காட்டினாரா!?
மலேசியா வந்தீங்களா??
சொல்லவே இல்லை????
விக்கி எங்கிட்ட சொல்லவேயில்லயே!
அப்புறம் நளினாவை காட்டினாரா!?//
விக்கியையே பார்க்கலை, அப்புறம் எங்க??
ஆமா, யாரந்த நளினா???
________________________________________
//என். உலகநாதன் said...
மலேசியா வந்தீங்களா??
சொல்லவே இல்லை????//
இல்லைண்ணே,
இது முழுக்க முழுக்க நண்பரோட திட்டம்.
எப்படியும் இன்னும் ரெண்டு வாரத்தில் கே.எல் வருவேன். முடிந்தால் சந்திக்கலாம். விக்கியையும் தான்
ஆரு அந்த டெரரு.....
உலகநாதன் நீங்கள் எங்கு இருக்கிறீர்கள்...
யாருங்க அந்த கொயந்த.. வேஷ்டி கட்டிகினு?
யாருங்க அந்த கொயந்த.. வேஷ்டி கட்டிகினு?
அப்பாடா, லாங் சாட்டில் போட்டோ எடுத்ததால் வயது தெரியவில்லை. தேங் காட்.
நான் முதல் மலேசிய பயணம் சென்ற இடம் பினாங் ( ஜே.பியை எல்லாம் கணக்கில் வைத்துக்கொள்வது இல்லை ) -:)
விக்கி,
கடந்த 12 வருடங்களாக கெமாமனில் இருக்கிறேன். இது என்னுடைய 13வது வருடம்.
மாப்ள போட்டோ போட்டாச்சு ...
வெயிட் ஃபார் நெக்ஸ்ட் பாகம்.
//கருத்துசொல்லும் விதத்தில் இடுகைகள் இடுவதில்லை. திருவள்ளுவர் முதல் சாக்ரடீஸ்,அரிஸ்டாட்டில், பெரியார் என பலர் சொன்ன கருத்துக்களுக்கே விடை இல்லாத போது, புதிதாய் என் கருத்து எதற்கு? எல்லா இடுகைகளும் உங்களின் சொந்த கருத்துகளுக்கே!
//
இதுவே ஒரு கருத்துதானேன்னு ஒரு பத்து பேராச்சும் சொல்லியிருப்பாங்களே....
ம்ம்ம் நல்லா இருக்கு..தீபாவளி டிரஸ் எல்லாம் போட்டு அழகா போஸ் கொடுத்து இருக்கீங்க பாஸ்.
நிறைய நகைச்சுவை கலந்து எழுதிய கட்டுரை போல் இருந்தது.
எல்லாருக்கும் அந்த நளினா யார் என்று தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறார்கள் போல. ஏன் நானும்தான்..... :)
பதிவுலகில் ஏதாவது செய்து கொண்டே இருக்கவேண்டும் என்ற உங்களின் தீராத் தாகத்தினை நினைத்து கண்கள் பனித்தன.
நல்ல கட்டுரை போருந்து வேகத்தில் பயணிக்க ஆரம்பித்து விட்டேம். நல்ல நடை முருகு.
சொல்லிய விதம் மிக நன்றாக இருந்தது.
ஹலோ என்ன தீபாவளி கொண்டாடினா நாங்க விட்டுருவமா, உங்களை தொடர் பதிவில் அழைத்துள்ளேன். படிக்க எழுதவும். நன்றி.
Post a Comment
உடுக்கை இழந்தவன் கைபோல், ஆங்கே
இடுக்கைக்கு பின்னூட்டுவதாம் பண்பு.
- புதுக்குறள்.