சாவோஸ் தியரியும், மாட்டு பொங்கலும்.

இந்த மாட்டு பொங்கலை(15.01.2009) நீண்ட நாட்களுக்குப் பின் வெகு சிறப்பாக, வெகு விமர்சயாக கொண்டாவது என்று முடிவெடுத்து, நமது அத்தையின் தோட்ட வீட்டிற்க்கு சென்றுவிட்டேன். (இம்ம்… நம்ம வீட்டும் ஒரு காலத்துல மாடு, கன்னு-னு இருந்த வீடுதான். நாம வளர.. வளர., வீட்டுக்கு ஒரு மாடு போதும்., அதை ஒழுங்கா வளத்தா போதும்முனு, வெல போகாத நம்மள வச்சுகிட்டு, நல்ல வெல போற நாலு காலு மாட்ட வித்துட்டாங்க. அதுல இருந்து மாட்டு பொங்கலுக்கு இப்பிடி அத்தை… மாமா வீடுன்னு போகவேண்டியதா போச்சு…)


மதியம் அம்மா கையில (ரொம்ப நாள் கழிச்சு) நல்லா சாப்பிட்டு, சும்மா நடக்க முடியாம, நலுக்… நெலுக்குனு மெதுவா ஒசக்க(மாடிக்கு) போயி அப்பிடியே புத்தகம் படிச்சுக்கிட்டே தூங்கி, மூணுமணிக்கி எந்திரிச்சு கெளம்பி வண்டியில டுர்ர்ருன்னு ரோட்டை (NH 47) தாண்டி தோட்டத்துல இருக்குற அத்தை வீட்டுல போயி, அத்தை, மாமா மற்றும் நம் உறவினர்கள் முன்னாடி, ஆஜர்

ரெண்டு வருசம் கழிச்சு பாக்குறதால, எல்லோருக்கும் ரொம்ப சந்தோசம்.
நல வெசாரிப்புல ஆரம்பிச்சு, அப்படியே ரெண்டு வருசத்துல யாரெல்லாம் செத்தாங்க, யாரு, யாரு என்னென்ன பேசுனானுங்க, என்னேன்ன செஞ்ஞாங்க, இப்ப எல்லாரும் என்ன செய்யுராகன்னு பேசிமுடிக்கவே மணி
நாலைத்தாண்டிருச்சு. பேச்சுக்கு யெடயில கொஞ்ஞம் சாப்பாடு, அப்பறம் காபி தண்ணினு வாயும் அடங்கல, வகுறும் கொறயல்ல. ஆனா, பேச்சுக்கு யெடயிலயே அத்தையும், மாமாவும் அவுக மயனும் (நிச்சயம் முடிந்து, கலயாணத்திற்க்கு காத்திருக்கும் மாப்பிள்ளை)


அத்தை, பொங்க வக்கிறதுக்கான பாத்திரத்தை அலசி, பொங்க சாமான் எல்லாத்தையும் எடுத்து தயாரா வச்சிக்கிட்டு இருந்துச்சு, மாமா, மாட்டை குளுப்பாட்டி, பல வண்ணத்துல பொட்டு வச்சு, கொம்புக்கு சாய பூசுறதும்னும், அம்ம புது மாப்பிள்ளை,அவுகம்மா கேட்ட சாமான வாங்க கடைக்கி ஓடுறதும், ஒடியாறதும்மா பின்ன தென்ன மரத்துல ஏறி தேங்கா புடுங்குறதுமா என்கூட பேசிக்கிட்டே, அவுகவுக வேலைகளை செஞ்ஞுக்கிட்டே இருந்தாக. நாம தான் பெரிய மனுசனாட்டம், பின்னாடி கையை கட்டிக்கிட்டு, அவுக சொல்லுறதுக்கெல்லாம் வெட்டி நாயம் சொல்லிக்கிட்டுருந்தோம்.

மணி ஆறாகவும், அத்தை, கூட்டி சுத்தம் பண்ணி, கோலம் போட்டு வச்சிருந்த்த மாடு கட்டுற கொட்டத்துல, வெளக்கி வைச்சிருந்த பொங்க பானையை அடுப்புல வச்சாங்க. பானை சரியான மட்டத்துல இருக்குறத சரி பாத்துட்டு, அடுப்புல நாலஞ்சு சூலத்தை வச்சு, நல்லா சத்தமா சாமியை கூப்பிட்டு கும்பிட்டு, சூடத்தை கொளுத்தி பின்ன வரிசயாய் விறகு குச்சிகளை அடுப்புல வச்சிச்சு, அத்தை.

அடுப்பை பத்த வக்கிறதுக்கு முன்னயே, சாமி கும்புடுர இடத்துல ஒரு வாழ யெலய போட்டு அதுல, சாணில புடிச்ச புள்ளயாரு-அருகம்புல்லு கொண்டயோடயும், மஞ்சள்ள புடிச்ச மாரியம்மன்–மாயெலை கொண்டயோடயும், பக்கதுல பூசைக்கு தேவயான பூ,தேங்காய்-பழம், சூடம்-பத்தியெல்லாம் எடுத்து வச்சுட்டாங்க.

வடக்க யிருந்து காத்து நல்லா வழுவா அடிச்சிக்கிட்டேயிருந்த்தாலும், இப்பயெல்லாம் தோட்டத்தில கூட கேசு அடுப்புல தான் சமக்கிறதால, வெறகடுப்பு அனுபவம் கொறஞ்சுட்டதாலயும், பொங்க பான தண்ணி பொங்கி வர்ரதுக்கு கொஞ்சம் நேரம் அதிகமாவே எடுத்துச்சு. அந்த கேப்புல மாமா, மாட்டுக்கு எச்சி தெளிக்கத்தேவயான அஞ்சுபாத்திரம், அஞ்சு வகை திரவம் (பசும்பால், பசு கோமியம், சுண்ணாம்பு தண்ணி, அவுங்க நிலத்துமண் கலந்த தண்ணீ அடுத்து பொங்க ஒலை தண்ணி) அடுத்து அதை எடுத்து தெளிக்க மூணுவகை எலை (மா, வேப்ப மேலும் மூங்கில் இலைகள்) எல்லாத்தையும் எடுத்துவச்சிக்கிட்டு இருந்தாரு.

சுமார் ஆறரை மணிக்கு, பொங்க பானை பொங்கவும், பானையில பச்சரிசி, வெல்லம், முந்தரி- கிஸ்மிஸ் (உலர் திராச்சை), நெய், பசும்பால் எல்லாம் சரியான நேரத்துல, சரியான விகிதத்துல கலந்து பொங்கலை மணக்க, மணக்க தயாரிச்சுகிட்டுருந்தாங்க அத்தை. அவுங்க போட்டதுல ஒன்னை குறிப்பா கவ்னிச்சேன், அதென்னனா, உப்பு. போனவருசம் சிங்கப்பூருல, பொங்கலன்னைக்கி M.C எடுத்து இன்னைக்கி பசங்களுக்கெல்லாம் பொங்கல் செஞ்சுகுடுத்து அசத்திறனும்முனு தனியா பொங்கல் செஞ்சு சாப்பிடுபாத்தா, ஏதோ கொறயிது, ஒரு சுவையாவே வல்லயேன்ற கவலையிலயே பொங்கலுக்கு எடுத்த M.C வீணாபோச்சு. சாயந்திரம் வேல விட்டு வந்த கார்த்தி, ”நீ, பொங்கல் செய்றப்ப உப்பு போட்டிருக்க மாட்ட, அதான் சருயில்ல”ன்னான். நாம எவ்வளோ பெரிய சமயல்காரன், நமக்கு தெரியாதா. ”போடா, எங்க வீட்டுல பொங்கல் செய்றப்ப உப்பெல்லாம் போடமாட்டாங்க”-ன்னு பெரிய உதார் விட்டது ஞாபகத்துக்கு வந்தது.

பொங்கல் மற்றும் இதர பூசை சாமானெல்லாம் தயாரானதும், மாட்டயெல்லாம் வரிசயாய் கட்டி,மாடுகளுக்கு எச்சி தெளிப்பு (திருஸ்டி கழிப்பு) ஆரம்பமாயிட்ரு., மாமா சொல்ல, சொல்ல நான், மாப்பிள்ளை மற்றும் இருவர் மாமாவின் பாட்டுக்கு பின் பின் பாட்டு பாடினோம்.,

பால் பொங்க,

பட்டி பெருக,

பாத்திரம் வெடிக்க,

நோயிம், பிணியும்

தெருவோட போக


இதே பாட்டை திரும்ப திரும்ப மூணு தடவை சொல்லனும்.
சொல்றப்ப., அந்த அஞ்சு வகை திரவத்தை., மூணுவகை இலையில தொட்டு மாடுகள் மேல தெளிக்கணும். இந்த பாட்டு எனக்கு சின்ன வயசுலயே
அத்துபடி.

அடுத்து, மாடுகளை அவுத்து ஒரு சுத்து வரணும். (வீடு ஊருக்குள்ள இருந்தா, ஊரை சுத்தி வரலாம், ஒத்தை தோட்டம்கிறதால அங்கனையே ஒரு சின்ன சுத்து). நான் ஒரு பசு மாட்டை அவுத்து கயில புடிச்சு சுத்திவந்து கட்டிட்டுடேன். ஆருன பொங்க சோத்தை எடுத்து ஒரு கன்னுகுட்டிக்கு குடுத்தா, அது பயந்துகிட்டு சாப்பிடல. ஆம விடுவோமா? கன்னுக்குட்டி வாய தொறந்து நல்லா நாக்குல படுறமாதிரி வக்கவும், கன்னுக்குட்டிக்கு இனிப்பு பிடிச்சுபோயி அடுத்து அதே நக்கி சாப்பிட்டுச்சு. கன்னுக்குட்டியோட சொர, சொரன்ன நாக்கு கயில படவும் ஒருமாதிரி சந்தோசமா இருந்தது.

சரி மாட்டுக்கு எல்லாம் சரியா செஞ்சதும், அடுத்து நமக்கு தான. கையை கழுவிட்டு, நமக்கு பக்தியுடன் பரிமாறப்பட்ட பிரசாதங்களை சாப்பிட்டு, பார்சல் கட்டி, வண்டியை கிளப்பியதும், மாமாவும், அத்தையும் கோரசாக
“யப்பா, ரோட்டை மெதுவா, ரெண்டு பக்கமும் பாத்து சூதானமா தாண்டிப் போகனுப்பா”(தங்க நாற்கரம் திட்டத்தில் NH-7-னை, நான்கு வழிச்சாலையாக்க மொத்த பாதையையும் கொத்தி, குதறி போட்டிருந்தனர்)-ன்னு சொன்னதும், நமக்கு மனசுக்குள், “ரோடு சுமாராக இருந்த எழுவருடங்களுக்கு முன், NH-7-ல் ஒருமுறை புதையல் எடுத்து, எழும்பு முறிவு டாக்டருக்கு இரண்டுமுறை பங்கு கொடுத்து ஞாபகத்துக்கு வந்தது”.


எப்படியோ ஐந்து வருடஙளுக்குப் பின், நம்முடைய இடத்தில் பொங்கல், அதுவும் நமக்கு பிடித்த விவசாய நண்பன்-மாடுகளுடன் கொண்டாடியதில் ஒரு ஆத்ம சந்தோசத்தை தருகிறது.

சாவோஸ் தியரிபடி,

இந்த சந்தோசத்தை தந்த பொருளாதார நெருக்கடிக்கும் ஒரு சிறப்பு நன்றி.
மொதல்ல சிவப்பு...

அடுத்து கருப்புன்னு நினைசீங்க்களா., இல்லை பச்சை!

அவரு வேலை செய்வாரு, இவரு பஞ்சாயத்து பண்ணுவாரு!மரத்து மேல கல்யாண மாப்பிள்ளை
பொண்ணுக்கு ஒரு கிலோ போடுறாங்களாம்!?அத்தை அடுப்பு பத்தவிக்கிறாங்க,
பொங்க பானை பொங்கீருசு...நம்ம போன் காமெராவுக்கு மாலைக்கண் நோய் இருப்பதால் இதற்குமேல் படமெடுக்க முடியவில்லை.
பின்குறிப்பு:-
என்னுடைய கிராமத்தில் இணையத்தள இணைப்பு பழுதடைந்து இருப்பதால், மதுரை வந்து இப்பத்திவை இணைக்கிறேன்.
தாமதத்திற்கு மன்னிக்க வேண்டுகிறேன்.


2 comments:

சி தயாளன் said...

அருமையான கிராமத்து பொங்கல்...

:-)

இராகவன் நைஜிரியா said...

ரொம்ப லேட்டா பின்னூட்டம் போடுவதற்கு முதலில் மன்னிப்பு கேட்டுக் கொள்கின்றே.

பதிவை படித்த பின் நாட்டில் பொங்கல் கொண்டாடிய சந்தோஷம் எப்படி இருக்குமோ அப்ப்டி இருந்தது.

Post a Comment

உடுக்கை இழந்தவன் கைபோல், ஆங்கே
இடுக்கைக்கு பின்னூட்டுவதாம் பண்பு.

- புதுக்குறள்.

 
©2009 அப்பாவி | by TNB