தம்பியும், எம்பேரனும் ஒரு வயசு.,

ரோட்டுல இருக்கிற புழுதியெல்லாம் கால்ல ஏறுமளவுக்கு ஓடியாடி விளையாடித்திரியும் போது, அஞ்சாறு சுள்ளானுங்களோட கரைச்சல் சத்தத்தையும் மீறி இதமா ஒரு சத்தம் சாயந்திர நேரத்துல அடிக்கடி கேக்கும். மனசுவந்து தேடிப்போயி அந்த மூலைவீட்டுல பாக்குறப்ப, இரும்பு அரம் வேலை செய்யுற தாத்தா வேலை போரடிக்கும் போது அப்பப்ப புல்லாங்குழல் வாசிப்பாரு. அதைக் கேட்டு நம்மை மறந்து நிக்கும் போது, அத்தனை பசங்களில் என்னை மட்டும் கூப்பிட்ட பாட்டி, பழனிப் பக்கமிருந்து வந்திருக்கும் அதோட மகவயித்து பேரனைக் காட்டி `தம்பி, நீயும் எம்பேரனும் ஒரு வயசு, அவனும் அஞ்சாவது தான் படிக்கிறான்`ன்னு சொல்லி இடுக்குன கண்ணோடு சிரிச்சது.

பாலிடெக்னிகில் சேர்ந்த்ததை பெருமையா நினைச்சு ஊருக்குள்ள நெஞ்ச நிமித்தி திரிஞ்ச காலத்துல ஒருநாள் ரோட்டுல என்னைப் பார்த்த கிழவி, `தம்பி, படிக்கிறயாப்பா?` -ன்னு கேட்டுட்டு, `தம்பி, நீயும் எம்பேரன் பாலசுப்ரமணியும் ஒரே வயசு, அவன் இப்ப பத்தாவது பாசாயிட்டான், ஆனா மேக்கொண்டு படிக்க வைக்கிறதா? இல்ல எங்க தச்சு வேலைக்கி அனுப்புறதான்னு தான் தெரியலை`ன்னு சொல்லீட்டு வழக்கமான இடுக்குன கண் சிரிப்போட போயிருச்சு கெழவி.

படிச்ச படிப்புக்கும், உள்ளூருலையே தேடுற வேலைக்கும் என்ன கலெக்டர் போஸ்டிங்கா கிடைக்கும்!, பக்கத்தூரு மில்லுல கிடைச்ச எலெக்ட்ரீசியன் வேலை - ரெண்டாயிரம் ரூவா சம்பளத்துக்கே ஊருக்குள்ள மப்பா நெஞ்ச நிமித்தி திரிஞ்ச காலத்துல ஒருநா கிழவி வீட்டு வாசலில் அப்பா இருக்கும் போது என்னய பாத்து `தம்பி, வேலைக்கிப் போறையாப்பா` -ன்னு கேட்டுட்டு எங்கப்பாட்ட `தம்பியும், எம்பேரன் பாலசுப்ரமணியும் ஒரே வயசு, அவன் எங்க தச்சு வேலைக்கிப் போயி ஒரு நாளைக்கி நூத்தி இருவது ரூவா வாங்குறான், கல்யாணத்துக்கு பொண்ணு தேடுறோம்ப்பா` ன்னு சொல்லீட்டு வழக்கமான சிரிப்போட போயிருச்சு கெழவி.

ரொம்ப நாள் கழிச்சு என்னய எங்கம்மா கூட வண்டியில போறப்ப பாத்த கிழவி `தம்பி, எங்கப்பா இருக்கன்னு` கேட்டதுக்கு நான், `வெளிநாட்டுல இருக்கேன் பாட்டி`ன்னு சொன்னதும், சந்தோசமா எங்கம்மாட்ட `தம்பியும், எம்பேரன் பாலசுப்ரமணியும் ஒரே வயசு, அவனுக்கு ஒரு பையனும், ஒரு பொண்ணும், பையன இந்த வருசம் பள்ளிக்கோடத்துல ஒன்னாவது சேக்கப் போறான்` ன்னு சொல்லீட்டு வழக்கமான சிரிப்போட போயிருச்சு கெழவி.


கெழவி ஒவ்வொரு தடவையும் ஒரேமாதிரி கண்ணை இடுக்கி வெள்ளந்தியாத் தான் சிரிக்குது, ஆனா நான் தான் ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு மாதிரி தலையச் சொறிஞ்சுக்கிட்டு கேண சிரிப்பு சிரிக்கிறேன்.

-சிறுகதை.


'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது. போட்டியின் இணைப்பு



.

9 comments:

கோவி.கண்ணன் said...

//கெழவி ஒவ்வொரு தடவையும் ஒரேமாதிரி கண்ணை இடுக்கி வெள்ளந்தியாத் தான் சிரிக்குது, ஆனா நான் தான் ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு மாதிரி தலையச் சொறிஞ்சுக்கிட்டு கேண சிரிப்பு சிரிக்கிறேன்.
//

வாழ்க்கைச் சூழலில் படித்தவர்களுக்கு எதுவும் நேரத்துடன் நடக்காது போலும் !
:)

பழமைபேசி said...

அட, இப்பெல்லாம் எங்கயும் இதானா? காலா காலத்துல கல்யாணத்தைப் பண்ணி 40+ல எல்லாம் பெத்த குழந்தைகளுக்கு பந்தக்கால் போடுங்க அப்பு...உங்களுக்கு போட்டுகிட்டு இருக்காதீங்க!

பழமைபேசி said...

கிழவியோட பேச்சு யதார்த்தமா நல்லா இருக்கு...

வால்பையன் said...

மனசுகுல்ல கல்யாணம் இன்னும் ஆகலைன்னு வருத்தமா இருக்கா!

நான் வேணும்னா பொண்ணு பாக்கட்டா, கிழவிகிட்ட சொன்னா கண்ண இடுக்கி சிரிச்சிகிட்டே சொல்லுமே எங்க பொண்ணு இருக்குன்னு!

தீப்பெட்டி said...

அங்கயும் இதே கத தானா...
அதுக்கெல்லாம் கொடுப்பினை வேணும்.

நல்ல இயல்பான சிறுகதை..

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்..

cheena (சீனா) said...

அன்பின் முரு

அருமையான கதை - சிந்தனை நன்கு செல்கிறது - கிழவியின் பேரன் வாழ்க்கைப்பயணத்தில் அடி மேல் அடி வைக்கிறான். கதாநாயகனோ பல்வேறு சிந்தனைகளில் - பல்வேறு பிரச்னைகளில் - வேறு திசையில் முன்னேறிக்கொண்டிருக்கிறான். தவறில்லை. நடக்க வேண்டியவை நடக்க வேண்டிய நேரத்தில் நடக்கும்.

நல்வாழ்த்துகள்

நட்புடன் ..... சீனா

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

ஒன்னும் கவலைப் படாதே ,சீக்கிரம் கல்யாணம் ஆயிடும் .இதுக்கெல்லாமா அழுகறது.
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.நல்ல வேளை நானெல்லாம் போட்டில கலந்துக்கல.கதை நல்லாருக்கு.

வேடிக்கை மனிதன் said...

திருமணங்கள் அவரவர் குடும்ப சூழல் பொருளாதாரம் சார்ந்து சிலருக்கு சீக்கிரமாவோ, சிலருக்கு தாமதமாகவோ அமையும். என்ன ஜாதகத்தை சொல்லி தாமதப்படுதுவதுதான் என்னைப் பொருத்தவரை மன்னிக்கமுடியாத ஒன்று.

கதை நன்றாக உள்ளது

கார்க்கிபவா said...

சகா. எப்படி இது வெறும் கதை தானா?

Post a Comment

உடுக்கை இழந்தவன் கைபோல், ஆங்கே
இடுக்கைக்கு பின்னூட்டுவதாம் பண்பு.

- புதுக்குறள்.

 
©2009 அப்பாவி | by TNB